திங்கள், 29 ஏப்ரல், 2013

KASI YATHRA ...PART 8., காசியில் கோயில்கள் தரிசனம் (காசி யாத்திரை...பகுதி 8).

முந்தைய பதிவின் தொடர்ச்சி....

அன்றைய தினம் மாலை சுமார் 5 மணி அளவில் கோவில்கள் தரிசனம் செய்யப் புறப்பட்டோம்.

காசி மாநகரத்திற்குள் நுழைபவர்கள் அனைவருமே இறைவனால் தேர்வு செய்யப்பட்டவர்கள் என்று புராணங்கள் கூறுகின்றன.  இத்தலத்தின் பெருமைகள் சொல்லில் அடங்காது. காசி மாநகருக்கு 'வாரணாசி' என்ற மற்றொரு பெயரும் உண்டு. அதுவே இன்று பொதுவாக வழங்கப்படுகிறது. கங்கையின் கிளை நதிகளான வருணா, அசி என்ற இரு நதிகளின் சங்கமத் தலம் ஆதலால், இது வாரணாசி எனப் பெயர் பெற்றது. 

காசியில் நாம் பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம். வேக வேகமாகப் பார்ப்பதானாலும் ஒரு முழு நாள் தேவைப்படும். எங்களுக்கோ அரை நாளுக்கும் குறைவான பொழுதே கிடைத்தது. முக்கியமான சில கோயில்களுக்கு மட்டுமே சென்று வர முடிந்தது. 

யாத்ரீகர்களுக்கு உதவும் பொருட்டு, காசி நகரத்தின் மேப் தொடர்பான லிங்க் கீழே கொடுத்திருக்கிறேன். 


காசியில் நாங்கள் முதலில் சென்றது, கால பைரவர் ஆலயத்திற்கு. காசி செல்பவர்கள் அனைவரும் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில் இது. இங்கே காசியின் சிறப்புகளுள் ஒன்றான 'தண்டம்' வழங்கப்படுகிறது. தண்டம் என்பது ஒரு நீண்ட கோல். அதைப் பக்தர்களின் தலையில் வைத்து ஆசீர்வதிக்கிறார்கள். இதனால், பக்தர்களின் பாவங்களை கால பைரவர் ஸ்வீகரித்து அழிப்பதாக ஐதீகம்.

காலபைரவர் கோயிலிலேயே காசிக் கயிறுகள் வாங்க வேண்டும். சின்ன சைஸ் , பெரிய சைஸ் கயிறுகள், மற்றும் ப்ரேஸ்லெட் போன்ற டைப்பில் தடிமனான கயிறுகள் என பலவிதம் கிடைக்கிறது. போகும் முன்பே எவ்வளவு வேண்டும் என்று கணக்குப் போட்டுக் கொண்டுவிட்டோம். யாத்ரீகர்கள் அனைவரும் சேர்ந்து மொத்தமாக வாங்கும் பட்சத்தில் நன்றாக பேரம் பேசலாம். 

காசியின் பெரும் சிறப்புப் பெற்ற புராதனமான ஆலயங்கள் பலவும் சிறு சிறு சந்துகளின் ஊடேயே அமைந்திருக்கின்றன. மிக நன்றாக வழி தெரிந்தவர்கள் துணை கொண்டே சென்று வர இயலுகிறது.

கால பைரவர் ஆலயமும் அவ்வாறே அமைந்திருக்கிறது. வெளியிலிருந்து பார்த்தால் மிகச் சாதாரணமான தோற்றமுடையாத இருக்கிறது. உள்ளே நுழைந்ததும், சிறு மண்டபம் போன்ற அமைப்பில், காலபைரவர் கொலுவிருக்கிறார். என்னவோர் ஆகர்ஷண சக்தி!!!. அவர் விழிகளை விட்டு நம் கண்களை எடுக்க இயலவில்லை.  மெய்மறந்து தரிசித்திருந்தோம். அதன் பின் பிரகாரம் சுற்றி வந்து நமஸ்கரித்தோம். காசிக் கயிறுகளை வாங்கிக் கொண்டோம். அதன் பின், அருகிலேயே மற்றொரு பைரவர் திருக்கோவிலும் இருக்கிறது. அங்கும் பைரவர் அழகுடன் கொலுவிருக்கிறார். அவருடைய திருநாமம் 'தண்டபாணி பைரவர்'. அருகில் நாகருடன் கூடிய லிங்கத் திருமேனிகள். மஹரிஷிகள் பிரதிஷ்டை செய்த சிறிய அளவிலான லிங்கங்கள் எல்லாவற்றையும் தரிசித்தோம்.

சின்ன சின்ன கன்ஸீல்ட் கவர்களில், அங்கு கொடுக்கப்பட்ட பஸ்மம், விபூதி முதலியவற்றைச் சேகரித்துக் கொண்டோம்.

அடுத்ததாக நாங்கள் சென்றது ஆஞ்சநேயர் கோவில். சங்கட மோசன் ஆலயம் என்று வழங்கப்படுகிறது. நம் சங்கடங்களைத் தீர்ப்பவராதலால், ஸ்ரீஹனுமாருக்கு இந்தத் திருநாமம்.மகான் ஸ்ரீதுளசி தாசர் அமைத்த திருக்கோவில் இது. மிகப் பெரிய சுற்றளவில் அமைந்திருக்கிறது அஞ்சனை மைந்தனின் ஆலயம். உள்ளே மிகுந்த சாந்நித்யத்துடன் ஸ்ரீராம தூதன் அருள்பாலிக்கிறார். அருகே, லிங்கத் திருமேனியும் இருக்கிறது. ஸ்ரீஆஞ்சநேய சந்நிதிக்கு எதிர்ப்புறத்தில், ஸ்ரீஸீதா, லக்ஷ்மண ஹனுமத் சமேத ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்கும் சந்நிதானம் இருக்கிறது. மிக அதிகக் கூட்டம் இருந்தது. வரிசையில் நின்று தரிசனம் செய்தோம். அங்கேயே பிரசாத ஸ்டால் இருக்கிறது. அநேகமாக அனைவரும் வாங்குகின்றனர். ஆனால் கவனமாக வெளியே தூக்கி வர வேண்டியிருக்கிறது. எக்கச்சக்க குரங்குகள்!!!. கோவிலுக்குள் நுழையும் இடத்திலிருந்து எல்லா இடத்திலும் 'குடுகுடுவென' ஆனந்தமாக ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. அதனால் இதைச் செல்லமாக MONKEY TEMPLE  என்றும் அழைக்கிறர்கள்.

பிறகு, துளசி மானஸ மந்திர், துர்காதேவி அம்மன் ஆலயம் ஆகியவற்றையும் தரிசனம் செய்தோம்.   ஸ்ரீதுளசி தாசர், இராமபிரானின் திவ்ய சரிதமான இராமாயணத்தை, ஸ்ரீராமசரிதமானஸ் என்ற திருநாமத்துடன் இந்தி மொழியில் எழுதிய இடமே 'ஸ்ரீதுளசி மானஸ மந்திர்'. மிகுந்த கவனத்துடன் பராமரிக்கப்படுகிறது இந்தக் கோவில்.

துர்காமாதாவின் ஆலயத்தில், அம்பிகையின் சாந்நித்யம், ஒரு 'பிண்டியில்' ஆவாஹனம் ஆகியிருக்கிறது. அங்கும் கூட்டம் மிகுதியாக இருந்தது.

பின், புகழ்பெற்ற விஸ்வநாதர், விசாலாக்ஷி ஆலயம். காசியின் பலனே ஸ்ரீவிஸ்வநாதர்  தரிசனம் தானே!!!.  குறுகலான தெருக்களின் ஊடே சென்று முதலில் விசாலாக்ஷியை தரிசித்தோம். தனிக்கோவிலில் கொலுவிருக்கிறாள் அம்பிகை. இது நகரத்தாரின் பராமரிப்பிலேயே உள்ளது. சுற்றுச் சுவர்களில் தமிழ் எழுத்துக்களைக் காண முடிகிறது. இக்கோவிலின் அர்த்தஜாம பூஜை,  இன்றளவும் நகரத்தார் பெருமக்களாலேயே சிறப்புற நடத்தப்படுகிறது.

விசாலாக்ஷி அம்பிகையின் சந்நிதி ஒரு சக்தி பீடமாகும். அம்பிகையின் திருச்செவிகளிலிருந்த தோடுகள் விழுந்த இடமாகக் கருதப்படுகிறது. சாந்த ஸ்வரூபிணியான அம்பிகை.

கோயிலில் அவ்வளவாகக் கூட்டம் இல்லை. வெள்ளிக் கவசத்தில், சாந்தமான திருமுகத்துடன், கருணை பொங்கும் திருவிழிகளுடன் அம்பிகை கொலுவிருக்கிறாள். அம்பிகையின் திருமுன் பூர்ணமகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. அனவரதமும் குங்கும அர்ச்சனை செய்த வண்ணம் இருக்கிறார்கள். அம்பிகையின் திருவுருவத்தின் பின்புறம் சக்தி பீடம். அம்பிகையின் அருட்சக்தி, ஒரு சிறு பீடத்தில் ஆவாஹனமாகியிருக்கிறது. கேட்பவர்களுக்குக் காண்பிக்கிறார்கள்.

அம்பிகையின் அருட்கடாக்ஷம் பொங்கும் திருவிழிகளைப் பார்த்தவாறே இருந்துவிடலாம் எனத் தோன்றுகிறது.  கனிவான திருமுகம், மிகுந்த பரிவோடு, 'வா, என்ன வேண்டும் உனக்கு' என்று வினவும் காருண்யம் மிகுந்த பார்வை. விவரிக்க வார்த்தைகளில்லை!!!. எத்தனை துன்பங்கள் இருந்தாலும், அம்பிகையைப் பார்த்த மாத்திரத்திலேயே அவை பறந்து, மறந்து போய் விடுவது உறுதி. மிக நெருக்கமான ஒருவரைப் பார்த்த உணர்வே ஏற்படுகிறது.

பிரகாரம் சுற்றி வந்து, நமஸ்கரித்தோம். அருகிலேயே நவக்கிரக சந்நிதி இருக்கிறது. அங்கேயே ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று மேல்நோக்கிப் பார்த்தால் தங்கக் கோபுரம் தெரிகிறது. மிகுந்த பக்தியுடன் வணங்கினோம்.

அஷ்ட விநாயகத் தலங்களில் ஒன்று காசி. டுண்டி விநாயகர், இத்திருத்தலத்தில் அருள் பாலிக்கிறார். காசி விஸ்வநாதர் கோவில் முன்பாக, டுண்டி விநாயகரைத் தரிசித்தோம். அதன் பின், காசி விஸ்வநாதர் சந்நிதிக்குச் சென்றோம். வழியில், ஒரு மண்குடுவையில், பாலில் ஊமத்தம்பூ முதலியவை  போட்டு விற்கிறார்கள். இதை விஸ்வநாதருக்கு அபிஷேகிக்கலாம். ஆளுக்கு ஒன்று வாங்கிக் கொண்டோம். நல்ல கூட்டம். வரிசையில் நின்றோம். சந்நிதியை நெருங்க நெருங்க ஒரு வித பரபரப்பு தொற்றிக் கொண்டது.

சந்நிதியை அடைந்தோம். நம் பிறவிப் பயனே விஸ்வநாதராக அமர்ந்து அருள்பாலிக்கின்றது என்பதே உணர்வாக இருந்தது. ஆனந்தமான தரிசனம். எல்லாம் முடிந்து, பிரகாரம் சுற்றி வந்தோம். விஸ்வநாதர் சந்நிதி அருகில் நின்ற திருக்கோல அன்னபூரணி தேவி அருள்புரிகிறாள். மகாலட்சுமி, பல்வேறு மஹரிஷிகள் பிரதிஷ்டித்த லிங்கத் திருமேனிகள் என்று தரிசித்தோம். அதன் பின் தனிக்கோவில் கொண்டருளும் அன்னபூரணி அம்பிகை சந்நிதி அடைந்தோம். பளிங்குக் கோவிலில் குடிகொண்டருளுகிறாள் பாரிலுள்ளோர் பசி தீர்க்கும் பரதேவதை. அழகு கொஞ்சும் தங்கமுக மண்டலம். நல்ல தரிசனம் கிடைத்தது. இங்கும் பிரகாரத்தில் மந்திரித்த கயிறு தருகிறார்கள். அரிசியும் பிரசாதமாகக் கிடைக்கிறது. வீட்டுக்கு எடுத்து வந்து அரிசிப்பானையில் சேர்க்கலாம்.

கோவிலை விட்டு வெளி வந்தோம். அடுத்ததாக, சோழி அம்மன் சந்நிதி. அதற்குக் கொஞ்ச தூரம் காரில் பயணித்தோம். வாசலிலேயே, சிறு மண் சட்டிகளில் சோழிகள் விற்கிறார்கள். வாங்கிக் கொண்டோம். விற்பனை செய்யும் சிறுவனே, கூட வந்தான். அம்பிகையின் சந்நிதியை அடைந்ததும் நன்றாகத் தரிசித்து, சோழிகளைச் சமர்ப்பித்தோம். கூட வந்த சிறுவன், சில மந்திரங்கள் சொல்லி, எங்களைத் திருப்பிச் சொல்லச் சொன்னான். நிறைவாக, மழலைத் தமிழில், 'காசி புண்ணியம் எனக்கு, சோழி புண்ணியம் உனக்கு' என்று சொல்லி முடிக்கச் சொன்னான். செய்தோம்.

அதன் பின் கங்கா மாதா ஆரத்தி பார்க்கக் கிளம்பினோம். கங்கையில் கொஞ்ச தூரம் படகில் பயணிக்க வேண்டும். நிறையப் பேர் பயணம் செய்கிறார்கள். ஆரத்தி நடக்கும் இடத்திற்கு எதிர்ப்புறமாக, படகுகள் வரிசையாக நிறுத்தப்படுகின்றன. அங்கிருந்து தரிசிக்கலாம். இரண்டு இடங்களில் அழகாக ஆடை அணிந்த பண்டாக்கள் அற்புதமாக கங்காமாதாவுக்கு ஆரத்தி காண்பிக்கிறார்கள். தூபம் , தீபம், அடுக்கு ஆரத்தி என அத்தனையும் காணக் கண் கோடி வேண்டும். ஆரத்தி எடுக்கும் இடத்தின் அருகிலும் ஏகக் கூட்டம்.  அந்த இடத்தில், ஆங்காங்கே டி.வி. வைத்துக் காண்பிக்கிறார்கள். படகுகளின் ஊடே, ஒரு சிறுவன் வந்து தட்டுக்களில் வைத்திருந்த தீபங்களை விற்கிறான். ஒரு சிறு தொன்னையில் இரு அகல் தீபங்கள் மற்றும் பூக்கள். வாங்கி, நாமும் ஆரத்தி சமயத்தில் கங்கையில் மிதக்க விட்டு வழிபடலாம். அனைவரும் தீபங்கள் ஏற்றி கங்கைத் தாயை வணங்கினோம்.

காசியின் பிரசித்தி பெற்ற பூஜைகளில் ஒன்றான சப்தரிஷி பூஜை, சுமார் ஏழரை மணிக்கு ஆரம்பிக்கிறது. ஆரத்தி ஏழு மணிக்கு ஆரம்பித்து எட்டு மணி சுமாருக்கு முடிகிறது. ஒரு நாளில் ஏதேனும் ஒன்றை மட்டுமே தரிசிக்க இயலும். நாளை சப்தரிஷி பூஜையைப் பார்க்கலாம் என நினைத்துக் கொண்டு புறப்பட்டோம்.(தொடரும்...)

சிவனருளால்,
வெற்றி பெறுவோம்!!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

KASI YATHRA..... PART 7, காசி வந்தாச்சு...(காசி யாத்திரை.. பகுதி 7).முந்தைய பதிவின் தொடர்ச்சி....

சித்ரகூடம், நைமிசாரண்ய யாத்திரை மிக அதிக தகவல்களை உள்ளடக்கி இருப்பதால், அதை பின்னொரு சமயம் தனித் தொடராகத் தருகிறேன். இந்தப் பதிவில் நாம் நேரடியாகக் காசிக்குச் சென்று விடலாம்(ஓகேவா எஸ்.வி.இராமகிருஷ்ணன் சார் !!!).

காசி மாநகரம்....

இப்படித்தான் எனக்கு வர்ணிக்கத் தோன்றுகிறது. நான் படித்த புத்தகங்கள், பார்த்த திரைப்படங்கள், புகைப்படங்கள் இவற்றிலிருந்தெல்லாம், நான் காசி நகரைப் பற்றிய வேறொரு பிம்பத்தையே என் மனதுள் உருவாக்கி வைத்திருந்தேன். அவையெல்லாம், காசி மாநகரை அடைந்த உடனேயே மாறிப் போயின.

இதிகாசம், புராணம், சரித்திரம் இவற்றிலெல்லாம் போற்றிப் புகழப்படும் மிகப் புராதானமான, தெய்வீகம் வாய்ந்த் காசிமாநகரை நாங்கள் அடையும் போது நள்ளிரவு இரண்டு மணி. நேராக, நாங்கள் தங்க வேண்டிய இடம் சென்றோம். அழைப்பு மணியை அழுத்தி விட்டுக் காத்திருந்தோம். கதவு திறந்தது.  திறந்த நபர்... வேறு யாருமில்லை. என் கணவரேதான். சென்னையிலிருந்து நேராக காசிக்கு வந்தவர், எங்களுக்கு முன்பாகவே வந்து விட்டிருக்கிறார்.

உடனடியாக, மறு நாள் 'ப்ரோக்ராம்' எங்களுக்கு அறிவிக்கப்பட்டது. 6 மணி சுமாருக்கு எழுந்து, குளித்து, தயாராக வேண்டும். ரூமிலேயே குளிக்க விரும்பினால் குளிக்கலாம். 8 மணிக்கு, சாஸ்திரிகள் வீட்டுக்குப் போக வேண்டும்.

இருந்த அசதியில், எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளை விரைவாக அடைந்து உறங்கத் தொடங்கினோம்.

மறுநாள் காலை.

காசியின் தெருக்களில் ஒன்று.
வெளிச்சத்தில், காசி மாநகர் மிக அழகாகவே தெரிந்தது. தொண்ணூறு சதவீதம் நகர் அமைப்பு மதுரையை ஒத்திருக்கிறது. 'சந்து சந்தா இருக்கும், கொஞ்சம் தவறினா வழி தெரியாது, ஒரே மாடு, சாணி' என்றெல்லாம் எனக்குத் தெரிவிக்கப்பட்ட தகவல்களில் உண்மையிருந்தாலும், நகர் மொத்தமும் அதுவல்ல. நேர்க்கோட்டில் பிரியும் தெருக்கள், ஒவ்வொரு தெருவிலும், மிக உயரமான நேர்த்தியான கட்டிடங்கள், தெருவுக்கு இரண்டு கோயில்கள் என எல்லாமும் இருந்தன.

நாங்கள் தங்கியிருந்த இடத்துக்கு அருகில் இருந்த டீக்கடையில், மிக அன்பாகத் தேநீர் தந்தார்கள். காபியும் உண்டு. மண் குவளையில் காபி, டீ கேட்டால் அதுவும் உண்டு. 'பை டூ' கேட்டதற்கும் கோபித்துக் கொள்ளவில்லை. மழலைத் தமிழில் பேசி அருமையாக உபசரித்தார்கள். நாம் ஏதேனும் தகவல் கேட்டாலும் தருகிறார்கள்.

நாங்கள் டீ சாப்பிடுவதைப் பார்த்து, பின்னாலேயே ஒரு சாமியார் வந்து, 'எனக்கும் டீ சொல்லு' என்றார். காசியில் இது சகஜம். சொன்னோம். குடித்து விட்டு,  ஒரு பாட்டுப் பாடி(என்ன பாஷை?) வாழ்த்தி விட்டுச் சென்றார்.

அறையில் குளிப்பவர்கள் அறையில் குளித்துத் தயாராக, நான் என் கணவர் சொற்படி கங்கையில் குளிக்கத் தயாரானேன். சின்ன மஞ்சள் பொடி டப்பா, துண்டு சகிதம் கிளம்பினோம். டீக்கடையில் வழி கேட்டுக் கொண்டோம். சின்னச் சின்ன சந்துகளின் வழியாக குமரகுருபர ஸ்வாமிகள் மடத்தை அடைந்து, அங்கிருந்து கங்கையை அடைந்தோம்.

முதன் முதலில் கங்கையைப் பார்த்த போது நிஜமாகவே பிரமிப்பாக இருந்தது. அகன்று விரிந்த கங்கை!!!! . நீர் கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. பாவங்கள் போக்கும் கங்கா மாதாவைப் பார்த்த மாத்திரத்திலேயே மனம் பரிசுத்தமானது போல் இருந்தது. கங்கைவார் சடையோன் எனப் போற்றப்படும் சிவனாரின் சிரத்திலிருந்து பூமிக்குப் பாய்ந்தோடி வந்து, நம் ஜென்ம ஜென்மாந்திரப் பாவ மூட்டைகளை க்ஷணத்தில் அடித்துச் செல்லும் கங்கா மாதாவின் பெருங்கருணையிலும் மேலானதொரு பொருளில்லை என்று தோன்றியது.

'கேதார் காட்' (ஒவ்வொரு படித்துறைக்கும் இவ்வாறு பெயர் உண்டு. மொத்தம்   64 ஸ்நான‌ கட்டங்கள் ) படிகளில் இறங்கினேன். பெரிய பெரிய அகன்ற படிகள். வயதானவர்கள் இறங்கவென, ஓரங்களில் கொஞ்ச தூரம் வரை இரும்புக் கைப்பிடி போட்டிருக்கிறார்கள். மெல்ல இறங்கி  நீரில் காலை வைத்ததும் ஆனந்தமாக இருந்தது. கங்கை!!!. கொஞ்ச தூரம் இறங்கிச் சென்று, நானும் என் கணவருமாக ஸ்நானம் செய்தோம்.    பிறகு நான் மெல்ல படிகளின் மேலேறி நின்று சுற்றிலும் பார்த்தேன்.

கொஞ்ச தூரத்தில், பெண்கள் மட்டும் குளிக்கவென தனியிடம் கயிறுகள் மூலம் பிரிக்கப்பட்டிருப்பது தெரிந்தது. அந்த இடத்தின் பக்கங்களில் போட் வைத்து மறைத்திருந்தார்கள்.  அங்கே கொஞ்சம் பேர் குளித்துக் கொண்டிருக்க, ஓடிப் போய் அவர்களுடன் குளிக்க ஆரம்பித்தேன். மனதில் இருந்த மகிழ்ச்சி மீதுற 'திவ்ய கங்கா தீர வாஸா' எனப் பாடியபடியே குளித்திருந்தேன். நேரம் போனதே தெரியவில்லை.  திடீரென ஒரு மூதாட்டி, 'அம்மாடி, செத்த மேல வந்துரு....அங்க பாரு என்னமோ மொதந்து வரது' என்றார். கொஞ்ச தூரத்தில், முழுக்க துணியால் போர்த்தப்பட்ட 'ஒன்று' மிதந்து வந்தது.  சட்டென்று படியேறினேன்.

மற்ற இடங்களில் பார்த்திருந்தால் என்ன தோன்றியிருக்குமோ தெரியாது. ஆனால் காசியில் பார்த்த போது மனம் சஞ்சலப்படவேயில்லை. பொதுவாக, காசிக்கென்று சில விதிகள் உண்டு.

காசியில்,பூ மணக்காது, பிணம் நாறாது, பல்லி கௌளி சொல்லாது, காக்கை கரையாது, கருடன் வட்டமிடாது. நாம் நடக்கும் போது கூடவே இறுதி ஊர்வலங்கள் வருவதும் போவதும் சகஜம். நம் மேல் பட்டால் கூட தோஷமில்லை  என்று பிற்பாடு  சாஸ்திரிகள் சொன்னார்.

ஸ்நானம் முடிந்து மேலேறி வந்தால் எல்லாரும் எனக்காக வெயிட்டிங்... சின்ன லெவலில் அர்ச்சனை வாங்கிக் கொண்டேன்.

ஒரு முக்கியமான விஷயம் இங்கு சொல்லியாக வேண்டும். காசியில் பித்ருகடன்கள் நிறைவேற்றும் தினங்களில் சாப்பாடு குறைந்தது மதியம் இரண்டு மணிக்குத் தான். வயதானவர்கள்,பசி தாங்காதவர்களானால், கையோடு க்ளூகோஸ் வைத்துக் கொண்டு கரைத்துக் குடிக்கலாம். ப்ளாஸ்க் இருந்தால் கடைகளில் வெந்நீர் வாங்கிக் கொண்டு, அதில் ஹார்லிக்ஸ் சேர்த்துக் குடிக்கலாம். கைக்குத்தல் அரிசியை வறுத்து மாவாக்கி, அதில் பால், சர்க்கரை சேர்த்துக் குடிக்கலாம். வேறு வித சத்து மாவானாலும், கஞ்சி மாவானாலும், இன்ஸ்டன்டாக, வெந்நீரில் கரைத்துக் குடிக்கக் கூடிய விதத்தில் பக்குவம் செய்து, ஏர் டைட் கன்டெய்னரில் எடுத்துச் செல்லவும்(எறும்புகள் வராமல் இருக்கும்). இவற்றைக் கரைக்கப் பாத்திரங்கள் ஒன்றிரண்டு, டிஸ்போஸபிள் டம்ளர்கள் முதலியவற்றை எடுத்துச் செல்லவும்.

சாஸ்திரிகள் வீட்டில் எல்லாம் தயார் நிலையில் இருந்தன. வரிசையாகத் தம்பதிகள் அமர்ந்திருக்க, என் மாமனார் மாமியாரும் அவர்களுடன் சென்று அமர்ந்தனர். ஒவ்வொருவர் முன்னாலும் கலசம், பஞ்ச பாத்திரம் முதலானவை வைக்கப்பட்டிருந்தன. தான சாமான்கள்(பஞ்ச தானம், தச தானம் முதலானவை) ஒரு புறம் செட் செட்டாக வைக்கப்பட்டிருந்தன.

எல்லாவற்றையும் விட என் கவனத்தை ஈர்த்தது ஒரு விஷயம். நான் இது வரையில், தம்பதிகளாக அல்லது ஆண்கள்  மட்டுமே பித்ரு கடன்களை நிறைவேற்ற இயலும் என்று நினைத்திருந்தேன். ஆனால், அங்கு ஒரு பெண்மணி தனிமையாக அமர்ந்து சங்கல்பம் செய்து கொண்டிருந்தார். பிற்பாடு மெல்ல விசாரித்த போது, அந்த பெண்மணியின் கணவர் மறைந்து விட்டாரென்றும், ஒரே  பையனும் வெளிநாட்டுப் பெண்ணை மணந்து அங்கேயே செட்டிலாகி விட்டாரென்றும் தெரிந்தது. 'எங்காத்துக்காரர் இருக்கச்சேயே, பல தரம் சொன்னேன், ஒரு தடவையாவது காசிக்குப் போணுன்னு... அவர் போலாம், போலான்னே நாளைக் கடத்திட்டார், என்ன பண்றது?,  அவர், மத்த பெரியவாளெல்லாம் நல்ல கதிக்குப் போணுமோல்லியோ?' என்றார் கண்களைத் துடைத்தவாறே.

முதலில் சங்கல்பம் செய்து, பிறகு தானங்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு தானத்திற்கும் தனித்தனியாக வைதீகர்கள் வந்து வாங்கிக் கொண்டனர்.

அதன் பின் ஸ்நான சங்கல்பம்.  என்னையும் என் கணவரையும் பார்த்து,'நீங்களும் பண்ணுங்கோ' என்று சாஸ்திரிகள் சொல்லி விடவே நாங்களும் செய்தோம். அப்போது தான் தெரிந்து, பாவங்களில் எத்தனை வகைகள் என்று. சில விஷயங்களைப் பாவம் என்று தெரியாமலேயே செய்து கொண்டிருக்கிறோம் நாம். உதாரணமாக, குழந்தைகளை அடிப்பது. மிக நீளமாக, பஞ்ச மா பாதகங்களிலிருந்து ஆரம்பித்து, என்னென்ன விதம் உண்டோ அத்தனையும் சொல்லி, அத்தனையையும், ஸ்ரீவிசாலாக்ஷி உடனுறை, காசி விஸ்வநாதர் மன்னிக்க வேண்டும், கங்கா மாதா நிவர்த்திக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக்  கொண்டு சங்கல்பம் செய்தோம்.

அப்புறம், திரும்பவும் கங்கைக்குச் சென்று ஆனந்தமாக ஸ்நானம் செய்தோம். அதன் பின், என் மாமனார் மாமியார் உள்ளிட்ட தம்பதிகள் அனைவரும் திரும்பவும் சாஸ்திரிகள் இல்லத்திற்குச் சென்று, தீர்த்த ஸ்ரார்த்தம் செய்தனர். அதன் பின்னரே அன்று உணவு சாப்பிட்டோம்.

மாலையில் நீங்கள் சுற்றிப் பார்த்து வரலாம் என்று சாஸ்திரிகள் சொல்லிவிட்டார். பித்ருகடன்களை நிறைவேற்றுவோர், மறுநாள் காலை எட்டு மணிக்கு கங்கையில் குளித்து, ஈரத்துடன் தயாராக இருக்க வேண்டுமென்றும்  மோட்டார் படகு கரைக்கு வந்து அழைத்துச் செல்லும் என்றும் சொன்னார். படகிலேயே அடுப்பு, பாத்திரம், அரிசி முதலியவை இருக்கும் என்றும், படகிலேயே சமைத்து, சாத உருண்டைகள் தயார் செய்து, ஐந்து இடங்களில் பிண்ட பிரதானம் செய்ய வேண்டும் என்றும் சொன்னார். கிட்டத்தட்ட அரை நாள் ஈரத்தோடு இருக்க வேண்டும். கங்கையிலேயே படகுப் பயணம் வேறு. நடுவில் ஜூரம் வந்தால் கொடுக்க க்ரோசின் முதலியவை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்....(தொடரும்)

சிவனருளால்
வெற்றி பெறுவோம்!!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

தனுசுவின் கவிதைகள்.....வினா எழுப்பும் விசிறி!
பழையன கழிதலும்
புதியன புகுதலும்
இயற்கை நியதி
இந்த
இயற்கை நியதி
பழயன பரண் மேலும்
புதியன தலை மேலும்
என்று மாறி
உலகின் நியதியானதோ?

உலகம் ஒரு இந்திரபுரி!
அதில்
வசதி வாய்ப்புகள் மோட்சபுரி!

அடுப்பு
அம்மிக்கல்
அரைத்தல்
சமைத்தல்
துவைத்தல்
பயணித்தல்
வாழ்க்கையின் அத்தனையிலும்
ஆயிரம் முன்னேற்றம்!

வளருது விஞ்ஞானம்!
அதில்
விடியும் பொழுதெல்லாம்
தொடுவது நவீனம்!

புதுமை மாற்றம் வந்தது!
அது
பழையதை
புழு போல் பார்க்க வைத்தது!

மின்தடை வந்தது
புழுக்கத்தில்
என் கை
என்னை அறியாமல்
பழைய
பனை விசிறியை எடுத்தது!

அடுத்து கேள்விகள் வந்தது
புதுமை என்பது மாயமா?
நவீனம் என்பது மயக்கமா?
இது
ஏற்றமா?
ஏமாற்றமா?

-தனுசு-

சனி, 20 ஏப்ரல், 2013

KASI YATHRA ....PART 6, சங்கமக் கட்டத்தில்....(காசி யாத்திரை...பகுதி 6).


சென்ற பதிவின் தொடர்ச்சி.....

சங்கம ஸ்நானத்திற்குப் போகும் முன்பாக, எங்கள் கைடு, நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களைப் பற்றிச் சொன்னார். அவற்றின் சாரத்தையும், நான் நேரில் கண்ட சில விஷயங்களையும் பற்றிச் சொல்கிறேன்.

வேணி தானம் செய்வதற்கு, பண்டிட் தனியாக அரேஞ்ச் செய்யப்படுவார். அவரும் நம்முடன் படகில் வருவார். ஆண்கள்,முடியிறக்க வேண்டும் என்று அபிப்பிராயப்பட்டால், முன்கூட்டியே தெரிவித்துவிட வேண்டும். முடியிறக்கும் தொழிலாளரும் நம்முடன் படகில் வந்து விடுவார்.

பண்டிட்டுக்கும் இவ்வளவு தான்(தொகை குறிப்பிட்டார்) தக்ஷிணை தரவேண்டும். பொதுவாக 'முடிந்ததைக் கொடுங்கள்' என்று அவர் கேட்பார். கேட்ட உடனேயே, டக்கென்று தொகையைக் கொடுத்துவிட வேண்டும். 'நீங்கள் சொல்லுங்கள், தருகிறோம்' என்று இழுத்தோமானால் போச்சு. அது தவிர, சாப்பாட்டுக்குக் கொடுங்கள் என்று தனியாக வேறு கேட்பார். முடியிறக்கும் தொழிலாளருக்கு, படகோட்டிக்கு தரவேண்டிய தொகை தனி.

பொதுவாக நாலைந்து பேராகச் சேர்ந்து சென்றால், ஒருவரே தொகையைக் கொடுக்குமாறு ஏற்பாடு செய்து கொண்டு, பின்னால் பிரித்துக் கொள்ளலாம். ஒவ்வொருவரும் தனித்தனியாகப் பர்ஸைத் திறப்பது பாதுகாப்பானதல்ல. நம், பர்ஸ், வாட்ச், காமிரா இவைகள் பத்திரம். ஒவ்வொரு தம்பதியாகக் குளித்தால், ஒருவர் குளிக்கும் போது, மற்றவர் பொருட்களைப் பத்திரப்படுத்திக் கொள்ளலாம்.

கூடுமானவரை, படகில் ஏறும் போதும், இறங்கும் போதும் வேகமாக நடந்து செல்வது நல்லது. குறிப்பாக, இறங்கும் போது, வேகமாக இறங்கி வண்டிக்குள் வந்து விட வேண்டும். அகோரிகள், சாமியார்கள், பாம்பைக் காட்டி பயமுறுத்திக் காசு கேட்பவர்கள் எனத் துரத்துவார்கள். மினிமம் பத்து ரூபாயாவது தர வேண்டியிருக்கும். ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகக் கேட்பார்கள்.

படகில் ஏறியதும், வேணி தானம் செய்யும் சடங்குகள் நடக்கும். அதற்குப் பின்  படகு சங்கமத்துக்குச் செல்லும். அங்கே குளிக்கும் இடத்தில், பால் நிரம்பிய வாளிகளை வைத்துக் கொண்டு சிலர் நிற்பார்கள். டம்ளரில் பால் தந்து, சங்கம இடத்தில் ஊற்றினால் புண்ணியம் என்பார்கள். ஊற்றிய பிறகே தொகையைச் சொல்வார்கள். ஒரு டம்ளர் பால் விலை, ஆளைப் பொறுத்து ஐம்பது ரூபாயிலிருந்து, ஐநூறு வரை போகும்.  நான் நேரில் பார்த்த சம்பவம் ஒன்று சாம்பிளுக்கு...ஸ்நானம் செய்து விட்டு, அந்த அயர்வில், மூச்சிரைக்க நின்ற ஒரு வயதான மூதாட்டியிடம், ஒருவர் பாலை நீட்ட, நீட்டிய வேகத்தைப் பார்த்து, அந்த பாட்டியும், பாவம் 'குடிக்கத்தானாக்கும்' என்று நினைத்துக் குடித்து விட்டு, பிறகு பட்ட பாடு தனிக்கதை.

நாங்கள் படகில் ஏறிக் கொண்டோம். எங்களுடன் பண்டிட்டும் ஏறினார். பார்ப்பதற்கு சக பயணி போலவே இருந்தார். படகு செல்லும் போதே, பூஜை ஆரம்பித்தது. பண்டிட், பையிலிருந்து, கத்தரிக்கோல் இத்யாதிகளை எடுத்தார். மனைவிமார்களையும் கணவன்மார்களையும் எதிரும் புதிருமாக அமரச் செய்தார். மனைவி, கணவனுக்குப் பாத பூஜை செய்ய வேண்டிய சடங்கு முதலில்.

முன்பு கூறிய அதே மந்திரங்களைக் கூறி, கணவனை, தன்னை ஆசீர்வதிக்குமாறு மனைவி வேண்டி, இரு கரங்களையும் கூப்பி நமஸ்கரிக்க வேண்டும். பின், கத்தரிக்கோலுக்கு பூஜை. முறத்திலிருக்கும் மஞ்சள் குங்குமத்தில் கொஞ்சம் எடுத்துப் பூஜை செய்யச் சொன்னார். பின், மனைவியை திரும்பி அமரச் செய்து, கணவன் தலைவாரிப் பின்னலிட வேண்டும். பின்னலின் நுனியை சிறிதளவு கத்தரிக்கோலால் 'கட்' செய்து, முறத்தில் வாங்கிக் கொள்ள வேண்டும்.

இதை சங்கமக்கட்டத்தில், நீரில் விட வேண்டும் என்று பண்டிட் கூறினார். பொதுவாக, நீரின் மேல் மஞ்சள் குங்குமம் இட்டால், அது கரையும். கூந்தல் மேலே மிதக்கும். ஆனால், வேணி தானம் செய்யும் போது, நாம் காண்பது ஒரு தெய்வீக அற்புதம். முறத்திலிருந்துபொருட்களை நீரில் விட்டதும், கண் முன்னே கூந்தல் சட்டென்று உள்ளே மூழ்கும். மஞ்சள், குங்குமம் சற்று நேரம் மேலே மிதக்கும். பின்பே கரையும். முப்பெரும் நதி தேவியரும், பெண்கள் மனமுவந்து தரும் காணிக்கையைப் பெரு மகிழ்வுடன் உடனே ஏற்று நம்மை மகிழ்விக்கிறார்கள். நம் பிரார்த்தனைகள் நிறைவேற ஆசீர்வதிக்கிறார்கள்.

வேணி தானம் செய்வோர் அவசியம் இக்காட்சியைக் கண்ணாரக் காண வேண்டும். தவற விட்டு விடக் கூடாது. இதன் பின், ஆண்கள் முடியிறக்க வேண்டும்.

திரிவேணி சங்கமத்தில் ஒருவர் ஸ்நானம் செய்தால், அவரது மூதாதையர் பல தலைமுறைக்கு நற்கதி பெறுகின்றனர். எனவே சங்கம ஸ்நானம் மிக சிறப்பு வாய்ந்தது. பண்டிட், ஸ்நானம் செய்ய வேண்டிய விதிகளைச் சொன்னார். அவற்றை என் நினைவில் இருந்து எழுதுகிறேன்.

முதலில் ஆண்கள் ஸ்நானம் செய்ய வேண்டும். அதன் பின், பெண்கள் இறங்க வேண்டும். தம்பதிகளாக, (முறத்திலிருக்கும்)வேணி தானம் செய்து, கங்கை, யமுனை, சரஸ்வதியையும், வேணி மாதவரையும் பிரார்த்தித்துக் கொண்டு குளிக்க வேண்டும். வேணி மாதவரை சங்கமக் கட்டத்தில், கையால் எடுக்காமல், டப்பாவை அப்படியே நீரில் அமிழ்த்தி 'விஸர்ஜனம்' செய்ய வேண்டும்(செய்து விட்டு டப்பாவை அங்கேயே தூக்கிப்போடக் கூடாது. எடுத்து வந்து, கரையில் குப்பைத் தொட்டியில் சேர்க்க வேண்டும்). பின் மீண்டும் ஸ்நானம் செய்து விட்டு வந்து விட வேண்டும்.

பண்டிட்டுக்கு தக்ஷிணைகள் கொடுத்தோம். சங்கமத்தில் வஸ்திர தானம் செய்வது விசேஷம். கையோடு கொண்டு சென்ற வேட்டி, அங்கவஸ்திரத்தையும் கொடுத்தோம்(இது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது). அங்கிருந்த மற்றொரு படகில் அவர் ஏறிக் கொண்டார். எங்கள் படகு, சங்கமத்தை நோக்கிச் சென்றது.

சங்கமத்தை படகு நெருங்க, நெருங்க, மனசு பயத்தில் படபடத்தது. ஊரிலிருந்தே, 'சங்கமத்தில் குளிக்கும் போது எகிறிக் குதிக்கணும்' என்று சொல்லக் கேட்டு, 'எப்படி எகிறிக் குதிப்பது?' என்பது ஒன்றே சிந்தனையாக இருந்தது. போகும் வழியில் மரங்களில் குரங்குகள் தென்படுகிறதா எனப் பார்த்தேன்(எப்படி குதிக்கணும்னு தெரிஞ்சுக்கத்தான்). அருகிலிருந்த ஒரு மூதாட்டி, 'வயசானவாளே குதிக்கறா, உனக்கென்ன?' என்று தைரியப்படுத்தினார்.

படகு சங்கமத்தை அடைந்தது. கட்டைகளை ஒன்றிணைத்து கட்டுமரம் போல் ஒரு மேடை. அதன் இரு பகுதிகளில், ஸ்நானம் செய்ய வசதி செய்யப்பட்டிருந்தது. வசதி என்றால் படித்துறை அல்ல. மேடையிலிருந்து ஒரு சிறு மரப்படி இருந்தது. படியின் கீழிருந்து, இரு புறமும் கயிறுகள் கட்டி, அதன் நுனிகளை ஒரு நீண்ட தடிமனான கழி மூலம் இணைத்திருந்தார்கள். அதுவே மூன்றாவது படி. அதாவது, மேடை, மரப்படி, கழி என்று காலை வைத்து  இறங்கிக் குளிக்க‌வேண்டும்.

கழி நீரின் மேலே மிதக்கும். மேடையிலிருந்து மரப்படியில் இறங்கி உட்கார்ந்து கொள்ள வேண்டும். மரப்படியின் இருபுறமும் இருவர் நிற்பார்கள். ஒருவர், தன் காலால், கழியை நீருள் அழுத்துவார். கழியில் ஒரு காலை வைத்து, இறங்கி, மறு காலை நீருள் வைத்துக் குதிக்க வேண்டும். ஆனால் ஒன்றும் பயமில்லை (ஏன்னா, நானே இறங்கி, குதிச்சு, குளிச்சிட்டேன்). இறங்கும் போது, 'எப்படித் திரும்ப ஏறுவது?' என்பது யோசனையாக இருந்தது. ஆனால் இறையருளால் அதுவும் நடந்து விட்டது.

ஸ்நானம் செய்யும் போது, சங்கம நீருள் காசு போடுவது பலரின் வழக்கம். காசை யார் கண்ணிலும் காட்டாமல் வைத்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், இறங்கும் போதே, படியில் நிற்பவர்கள், 'எங்க கிட்ட கொடுத்துடுங்க...' என்று பிடுங்கிக் கொள்வார்கள்.

என் முறை வந்தது. ஜாக்கிரதையாக இறங்கினேன். இறங்கியதும் மனநிலையே மாறி விட்டது. சங்கம ஸ்நானம், கிடைத்தற்கரிய ஓர் அற்புத அனுபவம். வானில் தங்க நிறச் சூரியன் தகதகக்க,அந்த ஒளிக்கிரணங்களால், கருநிற யமுனையும், சற்றே வெளிர் நிற கங்கையும் ஒன்றிணைந்து மின்ன‌, காலுக்கு கீழ், அந்தர்வாஹினியாக ஓடும் சரஸ்வதியின் விறுவிறுப்பான ஓட்டத்தை உணர்ந்து, அனுபவித்துக் குளிப்பது அலாதியான அனுபவம். திடீரென மனம் லேசாகி, பறப்பதைப் போலவே இருக்கிறது. எனக்கு அருளப்பட்ட இந்த அற்புத அனுபவத்துக்காக, இறைவனுக்கு நன்றி சொன்னேன். கையோடு எடுத்து வந்திருந்த என் கணவரின் அங்கவஸ்திரத்துக்கு முழுக்காட்டி, பின் நானும் நீராடினேன்.

திரிவேணி சங்கமத்தை விட்டு வர மனமில்லை. 'மீண்டும் எப்போது சங்கம ஸ்நானம் வாய்க்குமோ' என்று நினைத்தபடி மேலே வந்தேன்.

பிளாஸ்டிக் கேன்களில் நீரைச் சேகரித்துக் கொண்டு, தங்குமிடம் வந்தோம். வந்ததும், என் மாமியார் உள்ளிட்ட பெண்களிடம் ஒரு தட்டில் சாதம் தந்து உருண்டை பிடிக்கச் சொன்னார்கள். பின் தீர்த்த சிரார்த்தம் நடந்தது. அது முடிய முக்கால் மணி நேரம் பிடித்தது. அதன் பின் ஆசீர்வாதம். அக்ஷதையை, உறவினர்களுக்குக் கொடுக்கவென, சின்ன சைஸ் கன்ஸீல்ட் கவர்களில் சேமித்துக் கொண்டோம். அதன் பின்னே ஈர உடையை மாற்றி, சாப்பிட வேண்டும். நாங்கள் சாப்பிடும் போது பிற்பகல் மூன்று மணி.

நாங்கள் எடுத்து வந்திருந்த ரவிக்கைத் துணி செட்களில் சிலவற்றை அங்கிருந்த யாத்ரீகப் பெண்களுக்குத் தாம்பூலமாகத் தரலாம் என என் மாமியார் அபிப்பிராயப்பட்டார். ஆனால் அங்கிருந்தவர்கள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. 'எல்லோரும் ஸ்ரார்த்தம் செய்து, பாவங்களைத் தீர்க்க வந்திருக்கிறார்கள், ஆகவே அவர்களுக்குத் தரக்கூடாது' என்று சொல்லி விட்டு, நான் முன்பு கூறியது போல், அங்கிருந்த அவர்களது உறவுப் பெண்களுக்கே தர வைத்தனர். இதைப் பார்த்த, ஒரு யாத்ரீகப் பெண், பின் எங்களிடம் வந்து 'நீங்க அவங்க கிட்ட ஒண்ணும் சொல்லக் கூடாது. நீங்களாகவே செஞ்சிடணும். உங்களை மாதிரியே நாங்களும் எடுத்து வந்திருக்கோம். நாங்க அப்படித்தான் செய்தோம். இன்னும் கொஞ்சம் செட்,கங்கைக் கரையில் கொடுக்க வச்சிருக்கோம். நீங்க அப்படி வச்சிருந்தீங்கன்னா இவங்க கிட்ட சொல்லாதீங்க.. ' என்றார். அப்படியே செய்தோம்.


அங்கிருந்து புறப்பட்டோம். வரும் வழியில், அலகாபாத்தில், 'ஆனந்த பவனம்' பார்த்தோம். சில காரணங்களால், வெளியிலிருந்து மட்டுமே சுற்றிப் பார்க்க முடிந்தது. ஆனாலும், நம் பாரத நாட்டின் முதல் பிரதமரான, பண்டிட் திரு.ஜவஹர்லால் நேரு பிறந்து வளர்ந்த அந்த மண்ணில் கால்கள் படும் போது நம் தேகம் சிலிர்ப்பது உண்மை. எத்தனை அருமையாக வளர்ந்தவர், நாட்டுக்காக எத்தனை பாடுகள் பட்டிருக்கிறார்!!!. நெஞ்சம் கனக்க, வெளி வந்தோம்.

அங்கிருந்து புறப்பட்டோம். அடுத்ததாக எங்கள் பயணம் 'சித்ரகூடம்' நோக்கி.

மானிடர் வாழ வேண்டிய மாண்பை உணர்த்திய அவதார புருஷன், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, தம் வனவாச காலத்தில், சிறிது காலம் வாசம் செய்து புனிதப்படுத்திய சித்ரகூடத் திருத்தலத்தை தரிசிக்கும் ஆவலோடு தொடர்ந்து பயணம் செய்தோம்..(தொடரும்...)

வெற்றி பெறுவோம்!!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

சனி, 13 ஏப்ரல், 2013

KASI YATHRA ..PART 5, பிரயாகையின் கோயில்கள் (காசி யாத்திரை....பகுதி 5).

சென்ற பதிவின் தொடர்ச்சி.....

முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம், பிரயாகையில் பிளாஸ்டிக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆகவே, சங்கம ஸ்நானம் முடிந்து, வேணி மாதவரைக் கரைத்த பின், அந்த ப்ளாஸ்டிக் டப்பாக்களை, கரைக்கு வந்து, கரையில் இருக்கும் குப்பைத் தொட்டிகளில் மட்டும் தான் போட வேண்டும். குளிக்கும் இடத்திலேயே போட்டு விட்டு வரக் கூடாது. ஃபைன் உண்டு.

கிளம்பும் போது, தங்கியிருந்த இடத்து சமையல்காரர், 'நீங்கள் ஸ்நானம் முடிந்து வந்த பின் இங்கு தீர்த்த சிரார்த்தம் செய்ய வேண்டும். அது முடிந்து சாப்பிட மூன்று மணியாகிவிடும். ஆகவே ஓட்ஸ் கஞ்சி வேண்டுமானால் தருகிறோம்.' என்றார். ரூபாயைக் கொடுத்து, கஞ்சி வாங்கிக் குடித்து விட்டுப் புறப்பட்டோம்.

முதலில் எங்களை அழைத்துச் சென்ற இடம், நான் முன்பே சொல்லியிருந்தது போல், கங்கைச் செம்புகளை விற்கும் கடை. அங்கே, விலை விவரம் கேட்டுக் கொண்டு, செம்புகளைத் தேர்ந்தெடுத்துத் தந்த பின், அவர்கள் கொடுத்த கேன்களைப் பெற்றுக் கொண்டு, திரும்பவும் வண்டியில்(கார்) ஏறினோம்.

போகும் வழியில் முதலாவதாக நாங்கள் தரிசித்தது, ஒரு கிருஷ்ணர் கோவில். நம்மூரில் இருப்பது போல் அல்லாமல் சற்று வித்தியாசமான திருவுருவங்கள். ஸ்ரீகிருஷ்ணரும் ராதாதேவியும், அவர்களுக்கு சற்றுக் கீழே, கையில் வெண்ணையுடன் பாலகிருஷ்ணரும் திருவருள் புரிந்தார்கள். காலை நேரத்தில், மனதிற்கு இதமளிக்கும் அழகான அலங்காரம். சர்க்கரை உருண்டைகள் பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டோம். சந்நிதியைச் சுற்றி வரும்போது, மாடிப்படிகள் இருந்தன. அதில் ஏறிச் செல்லச் சொன்னார்கள். செய்தோம். மேலே சென்றால், அழகான ஸ்ரீதுர்க்கை சந்நிதி. அண்ணனும் தங்கையும் ஒரே கோவில் கொலுவிருந்து அனுக்கிரகம் செய்கிறார்கள். அங்கும் பிரகாரம் சுற்றி வந்து விழுந்து வணங்கினோம். அதிர்வலைகள் அற்புதமாக இருந்தது. தெய்வீகம் கமழும் சூழல். சந்நிதியின் முன்பாக இருந்த, தேவியின் திருப்பாதங்கள் பதிக்கப்பட்ட கல்லில், பெண்கள், நீர் ஊற்றி அபிஷேகம் செய்து, மஞ்சள், குங்குமம் வைத்து, பூ வைத்து நமஸ்கரித்தார்கள்.

நாங்களும் நமஸ்காரம் செய்து விட்டுப் புறப்பட்டோம். அதன் பிறகு நாங்கள் சென்றது ஸ்ரீ சங்கரமடத்திற்கு. நபருக்கு  ஐந்து ரூபாய்கள் வீதம் டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றோம். 

கோவில் வாசலில் ஸ்ரீ ஆதிசங்கரரது திருவுருவச் சிலையும், பிரம்மாவின் அம்சாவதாரமாகக் கருதப்படும் ஸ்ரீ மண்டலமிச்ரரின் திருவுருவச்சிலையும் இருக்கின்றன. 

இவர் பின்னாளில், ஸ்ரீசுரேஸ்வராச்சாரியார் என்ற தீக்ஷா நாமம் பெற்று, ஸ்ரீ ஆதிசங்கரரின் சிஷ்யரானார். இவரே, ஸ்ரீ சிருங்கேரி சாரதாபீடத்தை அலங்கரித்த முதல் பீடாதிபதியும் ஆவார். கோவிலின் உள்ளே, 'பாட்டமதம்'  என்று புகழ் பெற்ற மீமாம்சகத் தத்துவத்தை பரப்பிய ஸ்ரீகுமாரில பட்டருக்கும் சிலை இருக்கிறது (இவர் குறித்த செய்திகளை என் பக்தியின் மேன்மை பதிவில் காணலாம்).

முதலில் நாங்கள் தரிசித்தது தேவியின் திருக்கல்யாணக் கோலம். அருகிலிருக்கும் படிக்கட்டுக்கள் வழியாக முதல் மாடி சென்றோம். இங்கு குறிப்பிட வேண்டிய விஷயம் ஒன்றிருக்கிறது. பொதுவாக, எல்லாக் கோவில்களிலுமே மாடிப்படிகள் அதிகம். மாடிகள் ஏறுவது என்பதை சாதாரண விஷயமாக எடுத்துக் கொண்டு, அதற்குத் தகுந்தாற்போல், மருந்துகள், 'நீ கேப் '(knee cap ) முதலானவைகள் எடுத்துக் கொள்வது நல்லது.


முதல் மாடி ஏறியதும், அழகான ஒரு சுற்றுச் சுவர். சுவரின் வெளிப்புறம் முழுக்க,  ஸ்ரீ மூகாம்பிகை, ஸ்ரீ துர்க்கை, ஸ்ரீகங்கா மாதா உள்ளிட்ட அம்பிகையின் அருட்சக்திகளை விளக்கும் சிற்பங்கள். இதில் சக்திபீடங்களும் அடங்கும். சுவரைக் கடந்து சந்நிதியின் உள்ளே சென்றால், கருணை பொங்கும் விழிகளால் கடாக்ஷிக்கிறாள் அன்னை ஸ்ரீகாமாட்சி. 'அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி' என அபிராமி பட்டர் போற்றித் துதிக்கும் அம்பிகை அத்தனை அழகு. அற்புதமான ஆகர்ஷண சக்தி. மிகுந்த சிரத்தையுடன் பூஜிப்பதை உணர முடிந்தது. சந்நிதியின் உட்புறச் சுவர் முழுக்க ஸ்ரீஆதிசங்கரரின் திவ்ய சரிதத்தை விளக்கும் ஓவியங்கள்.


அங்கிருந்து, இரண்டாவது மாடிக்கான படிகள் துவங்குகின்றன. இரண்டாவது மாடியிலும் சுற்றுச் சுவர் முழுக்க, தசாவதாரம் முதலான, ஸ்ரீவிஷ்ணுவின் 108 விதத் திருவுருவங்கள். சுற்றுச் சுவர் தாண்டி உள்ளே செல்லும் முன்பாக வேணி மாதவரின் திவ்ய தரிசனம். சுற்றுச் சுவருக்கு வெளியே, சீதா,லக்ஷ்மண,ஹனுமத் சமேத ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, சிறு அளவிலான தனி சந்நிதியில் சேவை சாதிக்கிறார். சந்நிதியின் உள்ளே சென்றால் ஏழுமலை வாசன் புன்னகை பொங்கும் திருவதனத்துடன் அருட்காட்சி தந்தருளுகின்றார்.

இங்கு உட்புறச் சுவர் முழுவதும் ராமாயணக் காட்சிகளை விளக்கும் ஓவியங்கள்.

தரிசனம் முடிந்து மூன்றாவது மாடி ஏறினோம். இங்கும் வெளிப்புற சுற்றுச்சுவர் முழுக்க, ஈசனின் அருளாடல்களை விளக்கும் சிற்பங்கள். சந்நிதியின் உள்ளே சென்றதும் மலைத்து விட்டோம். பிரம்மாண்டமான சிவலிங்கம். லிங்கத்தின் உள்ளே சிறு சிறு லிங்கங்கள். இறைவனின் திருநாமம், யோக சாஸ்திர சஹஸ்ர யோக லிங்கம் எனக் குறிப்பிடுகின்றார்கள். அற்புதமான திருவுருவம். நாங்கள் போன சமயம், சந்நிதியில், அபிஷேகப் பிரியரான எம்பெருமானுக்கு அபிஷேகங்கள் நடந்து கொண்டிருந்தன. ஆனந்தமாகத் தரிசித்தோம்.

'வேகம், வேகம்' என்ற கைடுப் பையனின் அவசரப்படுத்துதலுக்கு இடையே தான் தரிசனங்கள் செய்ய முடிந்தது. அவர் அவசரப்படுத்தியது எங்கள் நன்மைக்கே என்பதைப் பிறகு தான் உணர முடிந்தது.

அதன் பின் நாங்கள் சென்றது, புகழ்பெற்ற ஸ்ரீஹனுமான் கோவிலுக்கு. காணக் கிடைக்காத ஸ்ரீஹனுமானின் தோற்றம் அது. மிகப் பிரம்மாண்டமான ஹனுமான், படுத்திருக்கும் திருக்கோலத்தில் அருளுகிறார். ஸ்ரீஹனுமானின் விக்கிரகத்தின் நீள அகலங்கள் மிகப் பெரியது.  இந்த ஹனுமானின் திருநாமம் 'படே ஹனுமான் என்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் கங்கை கரை புரண்டு ஓடும் போது, ஸ்ரீஹனுமானின் கால்களை நனைக்கும் வரை நீர்ப்பிரவாகம் இருக்கும் என்கிறார்கள். செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீஹனுமானைத் தரிசிப்பது மிகுந்த நன்மையைத் தரும் என்கிறார்கள். வித வித டேஸ்ட்களில், லட்டு டப்பாக்கள் வாங்கி, ஸ்ரீஹனுமானுக்குப் படைத்து விநியோகம் செய்கிறார்கள். மெயினாக, எள் கலந்த லட்டு நிவேதிக்கப் படுகிறது.

படுத்த நிலையில் இருக்கும் ஸ்ரீஹனுமானைச் சுற்றி ஒரு தொட்டி போல் கட்டி இருக்கிறார்கள். க்ரில் அடைப்புகளைச் சுற்றி தரிசனம் செய்யலாம். காணிக்கைகளை ஸ்வாமியின் மேல் வீசிப் போடுகிறார்கள். அதைப் பூஜாரிகள் எடுத்துக் கொள்கிறார்கள்.  தரிசனம் துவங்கும் இடம் அல்லது முடியும் இடத்தில், நிற்கும் பூஜாரிகளிடம் நிவேதனப் பொருள் மற்றும் தக்ஷிணை கொடுத்தால் நிவேதித்துத் தருகிறார்கள்.

ஸ்ரீஹனுமானைத் தரிசனம் செய்து பிரார்த்தனைகள் செய்து கொண்டோம்.

கிட்டத்தட்ட, யாத்திரையில் நாங்கள் சென்ற எல்லாக் கோவில்களிலும், உண்டியல்களில் பணம்  போடுவதை பூஜாரிகள் விரும்பவில்லை. 'தக்ஷிணை கொடு' என்று வற்புறுத்துவதைப் பார்க்க முடிந்தது. குறைந்தது ரூ10/ வது கொடுத்தாக வேண்டும். சில இடங்களில் ரொம்பவும் கடினமாக, 'தக்ஷிணை கொடுக்காவிட்டால் தரிசனப் பலன் குறையும்' என்று பயமுறுத்துகிறார்கள். தகுந்த படி சில்லறை மாற்றி வைத்துக் கொள்வது நல்லது.

அங்கிருந்து நேராக, சங்கம ஸ்நானத்துக்குப் புறப்பட்டோம். அது அடுத்த பதிவில்..... (தொடரும்).

வெற்றி பெறுவோம்!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

KASI YATHRA..PART 4, வேணி தானம்...(காசி யாத்திரை..பகுதி 4).

படம் நன்றி: கூகுள் படங்கள்.

முந்தைய  பதிவின் தொடர்ச்சி....

சங்கல்பத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்பாக, 'வேணி தானம்' பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம்.

தமிழ்நாட்டில், பெண்கள், 'பூ முடி' கொடுப்பது என்று ஒரு வழக்கம் உண்டு. பொதுவாக, நம் பாரம்பரியத்தில், பெண்கள் முடியிறக்குவது கிடையாது. அதற்குப் பதிலாக, நீண்ட தலைப்பின்னல் (இருந்த காலத்தில்) பின்னி, பின்னலில் பூ சுற்றி, பின்னல் நுனியில் கொஞ்சம் கத்தரித்து, இறைவனுக்குச் சமர்ப்பிப்பார்கள். சிலர், தலை முடியில் குறிப்பிட்ட அளவு (உ.ம், ஒரு சாண் என்று வைத்துக் கொள்ளலாம்)சமர்ப்பிக்கிறேன் என்று வேண்டுதல் செய்து கொண்டு, அந்த அளவுக்கு முன்பு வரை பின்னலில் பூ சுற்றிக் கொண்டு, மிகுதிப் பின்னலைக் கத்தரித்து சமர்ப்பிப்பார்கள்.

இதுவே பிரயாகை திரிவேணி சங்கமத்தில், 'வேணிதானம்' என்று சொல்லப்படுகிறது. பிரயாகையில், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் ஒன்று கூடுகின்றன. கங்கையும் யமுனையும் வெளிப்படையாகவும், சரஸ்வதி அந்தர்வாஹினியாக(கண்களுக்கு வெளிப்படையாகத் தெரியாமல்,  கீழ்மட்டத்தில்)வும் ஒன்று கூடுவதால் அந்த இடத்திற்கு திரிவேணி சங்கமம் என்று பெயர்.

தலைப்பின்னல் வெளிப்படையாகப் பார்க்கும் போது, இரண்டு கால்கள்(பிரிவு) மட்டுமே இருப்பதாகத் தோன்றும். உண்மையில், மூன்று கால்கள் கொண்டே தலைப்பின்னல் பின்னப்படுகிறது. அதனால், பெண்களின் பின்னலில் சிறிது சமர்ப்பிப்பது மிகப் புனிதமானதாக, பெண்களுக்கு சௌமாங்கல்யத்தை அருளும் மகிமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

கணவனுடன் நீடித்த மணவாழ்வு மற்றும் எப்பிறவி எடுத்தாலும் அதே கணவன்/மனைவியையே வாழ்க்கைத் துணையாக அடையும் பொருட்டும் வேணிதானம் செய்யப்படுகிறது (நல்லா ஞாபகம் வச்சுக்குங்க).

பிரயாகை க்ஷேத்திரத்தில் செய்யும் சிறிய அளவு தானமும் கோடி மடங்குப் புண்ணியப் பலனைத் தர வல்லது. இங்கு வேணி தானம் செய்வதால், பெண்களின் ஜென்மஜென்மாந்திரப் பாவங்கள் யாவும் தீர்ந்து நல்ல நிலையை அடைவார்கள். 

'தீர்த்த ராஜா' என்று சிறப்பிக்கப்படும் பிரயாகையை, இந்திரன் காவல் காப்பதாக ஐதீகம். 'அக்ஷய வடம்' என்னும் சிறப்பு வாய்ந்த ஆலமரத்தின் மூல வேர் பிரயாகையில் உள்ளது. நடுப்பகுதி காசியிலும், நுனிப்பகுதி கயாவிலும் உள்ளது. இந்த மூன்று க்ஷேத்திரங்களிலும் இதைத் தரிசிப்பது மிகவும் முக்கியம்.

சில எதிர்பாராத காரணங்களால், நாங்கள் பிரயாகையில் அக்ஷயவடத்தை, சற்றுத் தூர நின்றே தரிசித்து வந்தோம்.

வேணி தானத்தின் முக்கியத்துவம் பற்றி அறிந்து கொண்டோம். இனி, வேணி தான சங்கல்பத்தைப் பற்றிப் பார்க்கலாம்.

'தேவரீர்!!(அதாவது கணவர்), நான் ஏதாவது குற்றங்குறைகள் செய்திருந்தால் அதை மன்னித்து விடுங்கள். தங்களை, நான் கோபத்தில் ஏதாவது எதிர்த்துப் பேசி இருக்கலாம். அழைத்தவுடன், ஓடி வராமல் அசிரத்தையாக இருந்திருக்கலாம். தங்களுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளில் ஏதேனும் குறை வைத்திருக்கலாம். தங்களைப் பற்றி வெளியாட்களிடம் மரியாதைக் குறைவாகப் பேசி இருக்கலாம். குடும்ப ஆண்களைத் தவிர வெளி ஆண்களிடம் பேசி இருக்கலாம்.....(இப்படி இன்னும் கொஞ்சம்..) இவ்வாறெல்லாம் நான் செய்த குற்றங்களுக்கு மன்னிப்பு வேண்டியும், தீர்க்க சௌமாங்கல்யத்துக்காகவும் , அடுத்தடுத்த பிறவிகளிலும் தங்களையே கணவராக அடையும் பொருட்டும், நான் வேணி தானம் செய்கிறேன்'

இந்த சங்கல்பம் மிகப் பழங்கால நடவடிக்கைகளை ஒட்டி வழங்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. இக்கால கட்டத்தில், பெண்களின் நிலையை வைத்துப் பார்க்கும் போது, இது எவ்வளவு தூரம் பொருந்தி வருகிறது என்பது சர்ச்சைக்குரியதாகவே படுகிறது. மேலும் இதைக் கேட்ட கணவன்மார்களில் பெரும்பாலோர் சிரித்ததன் காரணம் யாமறியோம் பராபரமே!!!

இருகைகளையும் கூப்பியபடி, இவ்வாறு கூறி முடித்து, கணவரை விழுந்து நமஸ்கரித்த பின், பிரயாகை க்ஷேத்திரம் சம்பந்தப்பட்ட புராணங்கள், க்ஷேத்திர மகிமை முதலானவற்றை அங்குள்ளவர் விரிவாக விளக்கினார். மேலும்,வேணி தானம் செய்ய வேண்டிய முறை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

டப்பாவில் வைத்திருக்கும் 'வேணி மாதவருக்கு' பூக்கள் போட்டு அர்ச்சனை செய்த பின், அதை திரிவேணி சங்கமத்தில் கரைக்கும் முறையைப் பற்றித் தெரிவிக்கப்பட்டது. திரிவேணி சங்கமத்தில் ஸ்நானம் செய்யும் முறையையும் தெரிவித்தார்கள்.

தங்களுக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ள முறத்தில் இருக்கும் மஞ்சள் குங்குமம், மலர்கள், சீப்பு கண்ணாடி இவற்றோடு வேணி தானம் செய்ய பிரயாகை கிளம்பினார்கள் தம்பதியர்கள் (தாம்பூலம் கொடுத்த பிறகு மங்கலப் பொருட்கள், ரவிக்கைத் துணி தவிர, மீண்டும் முறத்தில் வைக்கப்பட்டன). என் கணவர் காசியில் வந்து சேர்ந்து கொள்வதாகப் பயணத் திட்டம் இருந்ததால், நான் 'ஸ்நான சங்கல்பம்' மட்டும் தான் செய்ய முடிந்தது. தம்பதிகள் எல்லோரும் கிளம்பியதும், நான்  என் மாமனார், மாமியார் முதலானோரை நமஸ்கரித்து விட்டு, கூடச் சேர்ந்து கொண்டேன் (மேற்படி சங்கல்பம் வீட்டில் தெரிந்ததும், 'வட போச்சே' என்றது வேறு விஷயம்).

அடுத்த பதிவில் பிரயாகைக் கோவில்கள் பற்றியும், திரிவேணி சங்கம ஸ்நானம் பற்றியும். (தொடரும்...)

சிவனருளால்,
வெற்றி பெறுவோம்!!!

அன்புடன்,
பார்வதி இராமச்சந்திரன்.