புதன், 26 ஜூன், 2013

எண்ணத்தால் வாழ்வு வரும்!!!


நாம் பெத்த ஓவியமே
நடந்து வரும் பூந்தேரே
பூதலத்து ராசாவே
புன்சிரிக்கும் ரோசாவே
எம்மடியில அதிசயமா
வந்துதிச்ச சூரியரே
பொன்னான ஒன் வாழ்வு
கண்ணு முன்ன தோணுதய்யா!!

தங்கத்தால் அரமணையாம்
தகதகக்கும் கோவுரமாம்
கருந்தேக்குக் கதவுகளாம்
கண்மூடா காவலுண்டாம்
கோட்டை மதிலு தாண்டி
கோமகனார் வாசலிலே
காத்திருக்கும் கோடி சனம்
கண்ணார உனைப் பார்க்க‌

வெள்ளியிலே வீதிகளாம்
வீதியெல்லாம் ரத்தினமாம்
முத்து நவரத்தினத்தைக்
கொட்டி அங்கே விப்பாகளாம்
முத்தத்தில் (முற்றத்தில்) முந்நூறு 
முழுப்பவளக் கோலமிட்டு
மாணிக்கம் நிறைப்பாராம்
மகராசன் வருகைக்கு

கண்ணா உன் முகம் பாத்தா
காணாத வாழ்வு வரும்
கங்கை  வீட்டு வாசல் வரும்
கனவெல்லாம் நனவாகும்
கலகலன்னு நீ சிரிச்சா
மளமளன்னு முத்துதிரும்
 தங்கமே நீ நடந்தா..
தங்கத்தேரு ஆடி வரும்.

 எட்டடிக் குடுசக் குள்ள‌ 
ஏந்தான் பொறந்தோமின்னு
என்னைக்கும் நெனக்காதே
எந் தங்க ராசாவே!!
இருளெல்லாம் வெடிஞ்சு வரும் 
ஏழைக்கும் காலம் வரும்
எம் மகனே நீ  நெனைக்கும்
எண்ணத்தால் வாழ்வு வரும்!!!

-பார்வதி இராமச்சந்திரன்.-

நன்றி: வல்லமை மின்னிதழ்.
படம் நன்றி: கூகுள் படங்கள்.
வெற்றி பெறுவோம்!!!

செவ்வாய், 18 ஜூன், 2013

தனுசுவின் குறுங்கவிதைகள்....


அன்புச் சகோதரர் திரு.தனுசு குறுங்கவிதைகள் எழுதுவதிலும் வல்லவர். அவரது குறுங்கவிதைகள் சிலவற்றை 'ஆலோசனை தொகுப்பில்' வெளியிட அன்புடன் இசைந்துள்ளார். இதோ அவரது குறுங்கவிதைகளில் சில இங்கு...

அனிச்சை செயல்

அன்று
பத்தாம் வகுப்பு படிக்கும் போது
இயற்பியலில்
"அனிச்சை செயல்" பற்றிய பொருள் விளங்காது

இன்று
இளம் நங்கைகள்
என்னை கடந்து போகயில்
என்
இளந்தொந்தி
என்னையறியாமல்
உள் வாங்கும் போது
அந்த
அனிச்சை செயலின் பொருள் விளங்கியது.
 =======================


மெழுகுவர்த்தி....

தாத்தாவுக்கு
தொண்ணூறாவது பிறந்த நாள் விழா!
சுற்றிலும் குடும்பத்தார்
கேக் வெட்ட அழைத்து வந்தோம் அவரை

அந்த பாச மிகு காட்சியைப் பார்த்து
ஏற்றி வைத்த
மெழுகுவர்த்தியும்
ஆனந்தக் கண்ணீர் விட்டது...
==========================

திருநங்கை

பிரம்மா
இனி நீ
இரவில்
ஓவர் டைம் பார்க்காதே
பார்
நீ பணிச்சுமையால்
செய்திருக்கும் குழப்பத்தை.
 =====================================

-தனுசு-

திங்கள், 17 ஜூன், 2013

நாம் பெத்த ராசா....


தவமாத் தவமிருந்து
தருமராசர் நோம்பிருந்து
பூமிதி தா(ன்) மிதிச்சி
பூச்சட்டி கையேந்தி
பலநாள் பொறுத்திருந்து
பாதகத்தி பெத்த மகெ(மகன்).
பெத்தவ மொகம் பாக்க‌
எப்பத்தா வருவானோ?

 பொன்னேதுங் கேக்கலையே
பொடவ கூட கேக்கலையே
கண்ணால ஒரு வாட்டி
பாக்கத்தான் துடிக்கிறேனே
பணங்காசு கேக்கலயே
பழய சோறுங் கேக்கலயே
 பாவி மவ‌ ஒம் மொகத்த‌
பாக்க நெதம் தவிக்கிறேனே

அரக்கஞ்சி நாங் குடுச்சு
அருமயா வளத்தெடுத்தே
பூவடிச்சா நோகுமுன்னு
பொத்திப் பொத்தி பாத்திருந்தே
ஒன்னப் பிரிஞ்சிருக்கும்
ஒரு காலம் வருமின்னு
ஒரு நாளும் நெனக்கலயே
ஒரு பேருஞ் சொல்லலையே
  
பணங்காசு வந்துப்புட்டா
பழசெல்லா மறந்திருமா
புதுசாக ஒறவு வந்து
புத்தியத்தா கெடுத்திருமா
ஆத்தாவ வேண்டான்னு
 அரமனசா நீ நெனச்சிரலாம்
அரும மகெ(ன்) வேண்டான்னு
எ ஆவி கூட நெனக்காதே

கண்ணீரு மழ கொட்ட‌
காத்திருக்கே எம் மகனே
புண்ணியமாப் போகுமப்பு
பூ மொகத்தக் காட்டிப்புடு
போக் காலம் வந்து நா
போன தடம் மறயுமுன்ன‌
பூ லோக மகராசா
பெத்த என்ன பாத்துப்புடு.

சமீபத்தில் ஒரு கிராமத்தில், தன் வாழ்வின் இறுதியை நெருங்கும் ஒரு ஏழைத்தாய், தன் மகன் வந்து பார்ப்பதில்லை என மனம் உருகும் வண்ணம் அழுததைக் கண்டேன். ஆதரவற்ற அன்னையர் எத்தனையோ பேர்...   அவ்வாறு ஆதரவற்று இருப்போரைக் கண்டால், ஒன்றிரண்டு ஆறுதல் வார்த்தைகளேனும் சொல்வோம் நண்பர்களே!!!!


அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

வெற்றி பெறுவோம்!!

நன்றி: வல்லமை மின்னிதழ்.
படத்துக்கு நன்றி:கூகுள் படங்கள்.