திங்கள், 29 ஜூலை, 2013

மாறுவது நெஞ்சம்...

அம்மாவோடு வீட்டுக்குள் நுழையும் போது அத்தை மெலிதாகச் சொன்னாள். 

'அவெ  வந்திருக்கா...... கடப்பக்கம் போயிருக்காப்புல...'

அம்மா  திடுக்கிடுவது தெரிந்தது.  பதில் ஏதும் வரவில்லை.  அது அம்மாவின் சுபாவம்.

அமைதியாகக் கொல்லைப்பக்கம் போனாள் அம்மா. 

'அவெ'என்ற விளி, அத்தையின் தம்பியை, அம்மாவின் கணவனை, என் தகப்பனை ஒரு சேரக் குறிப்பது.  

அம்மா, லோகுவை பிள்ளை பெறப் பிறந்த வீடு போயிருந்த போது, அப்பா என்ற அந்த மனிதர், அந்தச் சமயம், படிப்பதற்காக எங்களோடு வந்து தங்கியிருந்த அத்தையின் மகளை இரண்டாவதாகமணம் செய்து கொண்டார். அப்போது விலகியது, இப்போது எதனால் நெருங்குகிறது என்று தெரியவில்லை.

அத்தை, சமையலறையில், சுருங்கிய முகத்தோடு டீ ஆற்றுவது தெரிந்தது. தம்பி வீட்டிலிருந்து கல்லூரியில் படிக்கட்டும் என்று அனுப்பிய தன் மகள், ஒரு நாள் மாலையும் கழுத்துமாக, தன் தம்பியோடு வந்து நிற்கவும், அடிவயிற்றிலிருந்து வெகுண்டெழுந்த கனலோடு, பொறி பறக்கச் சண்டையிட்டவள். 

'இப்ப என்னா?!!....நா ஆரு வாழ்க்கயயும் பாழடிக்கல... அவுங்க பாட்டு இருக்கட்டும், நானும் இருந்துக்குறேன்' என்று, என்னமோ, தன் நிலை தான் உயர்த்தி போல பேசிய மகளை 'சீ' என்று வெறுத்தவள்.

'மனுசனா நீ....' என்று தம்பி மேல் மண்ணிறைத்தவள். 

விஷயம் தெரிந்து.... ஊர், உறவுமுறைகளின் முன், அப்பாவை விட்டு அம்மா விலகியதும்,  'ஒங்கப்பா இல்லாம, ஒரு பொட்டப்புள்ளய வச்சி வளக்க வம்பாடு பட்டே...... அந்தக் கெதி இன்னொரு பொண்ணுக்கு எம்புள்ளயாலயே வந்திருச்சு. ஆனா அவ தனியாளா இருக்கவுடமாட்டே......  நாம் போறே....' என்று மகளிடம், ஊர் முன்னால் உரக்கச் சொல்லிவிட்டு எங்கள் வீடு தேடி வந்தவள். அம்மா எத்தனை சொல்லியும் திரும்பச் செல்லவில்லை.

'நீ எங்குட்டாச்சும் வேல பாத்துக்க சரசு.... புள்ளகள, வூட்ட நாம் பாத்துக்குறே....' என்று எங்களோடு வந்து கிட்டத்தட்ட பன்னிரண்டு வருடங்களாகி விட்டது.

அம்மா தனியான போது எனக்குப் பத்து வயது. என் தம்பி லோகு ஆறு மாதக் குழந்தை.

'டீ ஆறிப்போகுது' அத்தை கவனப்படுத்தியதும், அம்மா, டீ பருகினாள். நெற்றியில் சுருக்கம் விழ யோசிப்பது புரிந்தது.

'என்னா....பணப்பிரச்னையா?'

'அதுதாங் கெடக்குதே.... ரெண்டு பேரும் போட்டி போட்டு சம்பாரிச்சி வச்சிருக்காங்க.. ஆள ஆள் இல்லாம...'

'பின்ன என்னாவாம்?'

'ஆரு கண்டா?..

வாசலில் அரவம் கேட்டதும், நான் சட்டென எழுந்தேன்.  அம்மா எழுந்திருக்கவில்லை.

உள்ளே வந்தவர் நல்ல சிவப்பாக, உயரமாக இருந்தார். கைகளில், பழங்கள், தின்பண்டங்கள் கொண்ட  பைகள் இருந்தன. திரைப்படங்களில் சுற்றியடிக்கும் ஃப்ளாஷ்பேக் போல, நினைவலைகளில் மிதந்து, பன்னிரண்டு வருடங்கள் முந்திய அவர் உருவம் தேடிப் பிடித்தேன்.  சற்று மங்கலாக.....கலங்கலாக……

ஊர்ப் பஞ்சாயத்தின் முன், கம்மிய குரலோடு 'வேணும்னுட்டு பண்ணலை சரசு, தகப்பன் இல்லாதது... நாங்காட்டுன பாசத்த தப்பாப் புருஞ்சுக்கிட்டு, 'கட்டுனா ஒன்னதான் கட்டுவே...  இல்லன்னா செத்துடுவே...ன்னுட்டு அழுதுச்சு...எவ்வளவோ சொல்லியுங்கேக்கல.. எதாச்சும் செஞ்சுருமோன்னுட்டுத்தான்...........ஒன்னயும் புள்ளங்களயும் விட்டு இருக்க முடியாது... அது இங்க அக்கா கூட இருக்கும்.  நம்ம வீட்டுல நாம மட்டுந்தேன். நா அப்பப்ப இங்க வந்து போறே... எஞ்சம்பளம் மொதக்கொண்டு ஒங்கிட்ட குடுத்துர்றே….ஒனக்கு ஒரு சங்கட்டமும் வராது...' என்று திருப்பி திருப்பி சொன்னது....  ,

'இவ இன்னாரு சம்சாரம்னு சொன்னது போயி, இன்னாரு மொத சம்சாரம்னு சொல்ல வச்சுட்டீங்க..... இனிமேப்பட்டு எப்படி இருக்க?... ஊரு முன்னாடி பேச்சுப்பட்டு போச்சு... மகராசனா போயி இருங்க..... அடுத்தவ புருசன்னு ஆனப்புறம் எனக்கென்னா இருக்கு?....' என்று  நிர்த்தாட்சண்யமாக மறுத்து விட்டு, ஊர்ப்பெரியவர்களின்  முன் அம்மா விலக்கு வாங்கிக்கொள்ள, பேச நா எழும்பாமல், விழிகளில் நீர் திரள நின்றது.... எல்லாம் தொடர்ந்து நினைவு வந்தது.

கடைசியாக எப்போது பார்த்தேன்?.

அம்மாவோடு நான் கிளம்பிய போது, மெல்ல என் கை பிடித்து அழுத்தி... 'அம்மாவ பாத்துக்கம்மா....' என்று சொன்ன போதா….. அப்போதுதானிருக்க வேண்டும்.

படிகளைக் கடந்து உள்ளே வந்தவர், நின்றிருந்த என்னைப் பார்த்ததும், விழிகளில் வியப்பு மின்ன 'மலரூ..... நீயாப்பா.... ' என்று முகமெல்லாம் விகசிக்க அருகில் வந்தார்.  அமர்ந்திருந்த அம்மாவைப் பார்த்ததும் சட்டென்று முகம் மாறினார். 

கொஞ்சம் சமாளித்து, 'நல்லாருக்கியா சரசு...?' என்றார் அம்மாவைப் பார்த்து...

அம்மா 'ம்' என்றதும், 'என்னா படிக்குறப்பா?' என்றார் என்னிடம். 'டாக்டருக்குப் படிக்குறா.... கடசி வருசம்.'  என்று அத்தை பதில் சொல்ல, 'பேசமாட்டாயா?' என்பது போல என்னைப் பார்த்தார்.

'என்னா திடீர்னு?' நேரடியாக அம்மா விஷயத்துக்கு வர... சற்று நேரம் அமைதியாக இருந்தார். பின் மெல்ல 'அதுக்கு ஒடம்பு சரியில்ல.... கான்சர்னு சொல்லீட்டாங்க.... குணப்படுத்திரலாம்கிறாக...ஆனா... அப்படித் தெரியில... ரண்டு மூணு வருசமா அது படுற பாடு சகிக்கல... 'மாமா, ஒன்ன ஒங்குடும்பத்துலருந்து பிரிச்சது தப்புத்தே... அன்னைக்கே நா மன்னிப்பு கேட்டுருக்கணும்.... செய்யல.... என்னக் கூட்டீட்டுப் போ... அத்தகிட்ட நாங் கால்ல கைல வுழுந்தாவது ஒன்ன சேத்து வக்கிறே... இல்லாட்டா.... எங்கட்ட வேகாது'ன்னு கதறுது.’ என்றார்.

அத்தையின் முகத்தில் அலமறுதல் தெரிந்தது. பெற்றவள் அல்லவா?

அம்மா, 'அதான் சரிபண்ணிறலாம்னுட்டாங்க இல்ல...' என,

'எங்களுக்குன்னு ஆரு இருக்கா?, அக்காவும் ஒன்னோட வந்திருச்சு. ஒடம்பு சரியானாலும் எத்தன நாளு இப்படியே ஓட்டுறது? எனக்கு புள்ளங்கன்னு இவுங்க ரெண்டு பேருந்தான... நீ புடிசாதனயா வந்துட்ட.  ஊர வுட்டும் வந்தாச்சு...அடிக்கடி  பாக்கக்கூட‌  முடியாம போச்சு...'

அம்மா அர்த்தத்துடன் என்னைப் பார்த்து சிரித்தாள். ‘ஊரவுட்டு’ன்னா கண்காணாத தூரத்திலேயே இருந்தோம் பார்க்க முடியாமல் போனதற்கு...பக்கத்து டவுனில் தானே!!

'நீங்களா தேடிக்கிட்டது தான இது..'

'நா ஒங்கள வேண்டான்னு சொன்னேனா... எம்புட்டு கெஞ்சுனே..... ஒனக்கு ஒங்கௌரவத்த விட்டுக் குடுக்க முடியல...' 

‘நீங்க மட்டும்?!!. பெத்த புள்ளங்களக் கூட பாக்க வராம இருந்தீங்கல்ல?

‘அது ஒனக்குத் தெரிஞ்சு பாக்க வரல்ல... அடிக்கடி இல்லன்னாலும், மாசத்துல ஒரு நா  அதுங்க பள்ளிக்கூடம் போக வரச்சொல்ல அதுங்களுக்கே தெரியாம பாத்துக்கிட்டுத்தான் இருந்தே. எங்க அதுங்கள நாம்பாக்குறது ஒனக்குத் தெரிஞ்சா பெரச்சனையாயிரும்னுதான் ஒளிஞ்சு நின்னு பாத்தே. மலரு சடங்கான அன்னிக்கு நீ அதக் கூட்டிட்டு ஸ்கூல்ல இருந்து வந்தபோது நா பக்கத்து கடயிலருந்து பாத்துட்டுதா இருந்தே. நீ எனக்கு சடங்கு பத்திரிக அனுப்பலன்னாலும், வேலு கிட்டயிருந்து பத்திரிக வாங்கி,  அது போட்டோவ நிதக்கும் பாக்குறே.’

மடியிலிருந்து அழுக்குப் பத்திரிகையை உருவிக்காட்டினார். அம்மா திகைப்பது தெரிந்தது.

‘போன ரண்டு மூணு வருசமா,  அது கூட ஆசுபத்திரி அது இதுன்னு அலஞ்சுதான் வந்து பாக்க முடியாம போயிருச்சு...’

'நடந்தது நடந்து போச்சு... இப்ப என்னா சொல்லுங்க’

'இல்ல.. நா ஒங்கூட இங்க இருக்கே...   இல்லாட்டா...'

'இல்லாட்டா...?' அம்மாவின் குரலில் கோபம் தெரிந்தது.

'இங்கிட்டு பக்கத்துல வீடு பாத்து வந்திர்றோம்!'

'வேல?' அத்தை கேட்க, 'வி.ஆர்.எஸ் கொடுத்திரலாம்னு இருக்கேன். அது உடம்புக்கும் வேலைக்குப் போக முடியாது' என்றார் அப்பா.

'மிந்தி, அது அழுவுதுன்னு கல்யாணம் கட்டுனேன்னீங்க.. இப்பயும் அது அழுவுதுன்னு வர்றேங்கிறீங்க....'

'அது அழுவுதுன்னு வரல.  இன்னமேப்பட்டு தூரமா இருக்க சரிவராது. எனக்கும் வயசாச்சு. அதுக்கு என்னமாச்சும் ஆயிப்போச்சுன்னா... எல்லாம் இருந்தும் இல்லாம நா எப்படி இருக்குறது?'

'இது வரைக்கும் எப்படி இருந்தீங்களோ அப்படி' …அம்மாவின் பேச்சு அப்பாவைக் கோபப்படுத்தியது.

அத்தையின் பார்வை கெஞ்சுதலாக ஆகியிருந்தது.

‘என்னா பேசுற? கொஞ்சமாச்சும் இத்தன வருசத்துல கோவம் கொறஞ்சு எரக்கப்படுவன்னு தா வந்தே. இப்பயும் இப்படிச் சொன்னாக்க என்ன செய்யுறது?. ஒனக்கு புருசன் வேண்டான்னா வுடு. நா ஒன்ன ஒரு தொந்தரவும் பண்ணல. புள்ளக என்ன பாவம் பண்ணுச்சு? அப்பென்னு நா ஒருத்த இருந்தும் அதுகளுக்கு ஒரு புரோசனமும் இல்லாம?

அம்மா சரேலென்று நிமிர்ந்தாள். 'அதுங்கள வளக்கக் கஷ்டப்படமட்டும் நா செய்யணும். அதுங்க வளந்தப்புறம் அப்பா உரிம கொண்டாட வருவீகளா?'

‘திருப்பியிம் சொல்லுறே. நானா வேண்டான்னே?. நீ தான போன?.

'அப்ப நீங்க செஞ்சத சகிச்சுட்டு, வேற ஒருத்திக்கிட்ட எல்லா உரிமயயும் தூக்கிக் கொடுத்துட்டு, அவ பிச்ச போடறது வாங்கிக்கிட்டு ஒங்ககூட இருந்தா நா உத்தமி. இல்ல?'

'அப்படி இல்ல சரசு..' அப்பா நிதானத்துக்கு மாறினார். பேச்சில் அழாக்குறை தெரிந்தது. ‘இதப்பாரு... இதுவரக்கும் சரி. ஆனா, நாளக்கு மலருக்கு ஒரு கல்யாணங்கட்டணுன்னா கேப்பாகல்ல அப்பா எங்கன்னு? என்னா சொல்வீக?. இப்ப  அக்கம் பக்கத்துல‌ நா வெளிநாட்டுல இருக்குறதா சொல்லியிருக்கீகன்னு கேள்விப்பட்டே... கல்யாணத்துக்கு வரணுன்னா என்னா பண்ணுவீக?’.

இருநாட்களுக்கு முன் வீடு வந்த நெருங்கிய‌ உறவுக்காரப் பெண்மணி, தன்னிடம் ஒரு நல்ல மாப்பிள்ளை ஜாதகம் இருப்பதாகவும் நல்ல பெண்ணாகத் தேடுவதாகவும் சொன்ன கையோடு, பேச்சோடு பேச்சாக‌ 'ஒன் மகளப்பத்தி சொல்லலாமுன்னா அப்பா என்ன செய்றாருன்னு கேப்பாகளேன்னு சொல்லல..' என்றது எனக்கு நினைவுக்கு வந்தது.

 அம்மா ஒரு நிமிடம் மௌனமானாள். 'எல்லாம் சொல்லித்தான் மாப்புள தேடணும். ஊருல சொன்னது எங்க தற்காப்புக்காகச் சொன்ன பொய்யின்னு சொல்லணும். ஏன்னா, இப்ப நா ஒங்க‌ மொத சம்சாரங்கூட இல்ல.. முன்னாள் சம்சாரம்'.

'இதெல்லா சட்டப்படி நடந்துது இல்லயே.. ஊர் பஞ்சாயத்துதான... நாளக்கே போயி சொன்னா சேத்துவுட்டுருவாங்க. நான் பெரியண்ணன பாத்து பேசிட்டே... இத்தன வயசுக்கப்புறம் ஏன் தனியா இருக்கீங்க.  போயி பேசுங்க, சேத்துவுட்டுறேன்னு அவருதா சொன்னாரு...'

'ஓ.. எல்லா பேசிட்டுதான வந்துருக்கீங்க?'

நிலைமை எனக்கு சுத்தமாகப் புரிந்தது. அப்பா வயதான காலத்திலாவது விண்டு போனதை ஒட்டவைக்கப் பிரயத்தனப்படுகிறார்.

'இத்தன வருசத்துக்கப்புறம் நீங்க எங்ககூட வந்தா கேக்குறவங்களுக்கு என்ன பதில் சொல்றது?'

'வெளிநாட்டுல வேல பாக்குறதாதான சொல்லியிருக்கீக..... வந்துட்டேன்னு  சொல்லுங்க'

'ஒங்ககூட இருக்குறவள‌ என்ன சொல்லுறது?'

'அது பெரச்சன இல்ல. ஒறவுக்காரப்புள்ள, ஒடம்பு முடியல, புள்ளகுட்டியு இல்ல.  புருசெ வூட்டுல அனுப்பீட்டாக. நாங்க தான் நாதி அதுக்குன்னு சொல்லிரலாம். இது நாஞ்சொன்னதில்ல. அதுவே சொல்லுச்சு.'

தன் தவறுக்குத் தண்டனையாக, யாருமற்ற அனாதையென்ற சொல்லை வலிய‌ ஏற்கிறாள் அத்தை மகள் என்று புரிந்தது. மரணம் ஒரு மிகப்பெரிய ஆசான். அது வருவது நிதர்சனமாகும் போது மனம் எப்படி புடம் போட்ட தங்கமாகிவிடுகிறது!!!.

அம்மா ஏதும் பதில் பேசாமல் எழுந்து போனாள். அத்தை சமையல் கட்டில் தஞ்சம் புகுந்தாள். அப்பா,  இனி செய்வதற்கு ஏதுமில்லா பாவனையில் கூடத்து சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்தார்.


நான் வெளியில் போய் டியூஷனில் இருந்து தம்பியைக் கூட்டி வந்தேன். உள்ளே நுழையும் போது ஏதோ ஒரு மாற்றத்தை உள்ளுணர்வு உணர்த்தியது. டைனிங் டேபிளில் அப்பா சாப்பிட்டுக் கொண்டிருக்க, அத்தையைத் தேடினேன்.

சமையல் கட்டுக்குள் போனதும், அத்தை என்னிடம் மெதுவாக 'அம்மா, அப்பாவ இங்க வந்து இருக்கச் சொல்லிருச்சு. வேற ஏரியாவுல வீடு பாத்துரலாம்னுச்சு. கொஞ்சம் பெருசா, இன்னும் ரெண்டு ரூம்பு இருக்கா மாதுரி.. வீடு பாத்ததும் வந்துருவாங்க...' என்று விட்டு என்னை ஏறிட்டாள். கண்கள் சிவந்து, முகம் வீங்கி இருந்தது. கூடவே நான் ஏதாவது மறுத்து விடுவேனோ என்கிற பயமும் தெரிந்தது.

'அம்மா எங்க?..' 

'கொல்லக்கட்டுல..., ஆத்தா... ஒங்களுக்கு ஒரு எடஞ்சலும் நா வரவுடமாட்டே... நானே பூரா பாத்துக்குறே... பின்னாடி ஒரு ரூம்பு கொடுத்தாக்கூட போது...அதுபாட்டு இருந்துரு.. பெத்துப்புட்டே..... என்னா செய்ய?' அழுகிறாளா தெரியவில்லை.

கொல்லையில், மாடிப்படிக்கட்டில் அம்மா வானம் பார்த்து அமர்ந்திருந்தாள். நான் போய் தோள் தொட்டதும் திரும்பினாள். 

'அத்த சொல்லுச்சா?'

நான் தலையாட்டியதும் என் கையைப் பற்றினாள். நான் அவள் கையை எடுத்து என்னுடையதில் பொதிந்தேன். லோகு ஓடி வந்து 'நானூ...' என்று அம்மாவின் அருகில் அமர்ந்தான். நான் இருவரையும் அணைத்துக் கொண்டேன்.  மெல்ல அம்மாவின் தலையை வருடிக்கொடுத்தேன்.
===================================
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.
இது சிறுகதைகள்.காம் தளத்திற்காகவே எழுதப்பட்டு அதில் வெளிவந்தது.

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!!

செவ்வாய், 23 ஜூலை, 2013

சரயு...


images (1)சரயு வெடித்துச் சிரிப்பதன் காரணம் புரியாமல் பார்த்தாள் சுசி.

 அதிர்ந்து சிரிப்பதும் நடப்பதும் சரயுவின் இயல்பல்ல. ஆழங்காண முடியாத கடலமைதி அவள்.

தாழ்வாரத்துக் குறட்டில் அமர்ந்து அரிசியில் கல் பொறுக்கிக் கொண்டிருந்தவள் திடீரென சிரித்ததும் ஆச்சரியமானது சுசிக்கு...

'என்னாச்சுக்கா...

ம்ம்.. நிமிர்ந்தாள் சரயு. முன் வகிட்டில் குங்குமச் சிவப்பு, நெற்றியில் அரும்பியிருந்த வியர்வையுடன் சங்கமித்து, பொட்டுப் பொட்டாய் வியர்த்திருந்தது. கூர் மூக்கும் சின்ன உதடுகளும் பௌர்ணமி நிலவாய்த் தகதகத்து மின்னும் முகமுமாய், ரேணுவைப் போன்ற‌ தேவதையல்ல சரயு.  ஆயினும் அந்த மாநிற முகத்தில் துலங்கும் ஒளி சாதாரணமானதல்ல...

‘என்ன?’..

‘இல்ல சிரிச்சுட்டிருந்திங்கல்ல.. அதான்...’

பதிலுக்குப் புன்னகைத்தாள். சில நேரங்களில் புன்னகையும் பல நேரங்களில் ஓராயிரம் அர்த்தமுள்ள மௌனமுமே அவள் வாசகம். அபூர்வமாகத்தான் வாக்கியங்கள் வெளிவரும்.

சுசி தன் பார்வையை, சரயு அமர்ந்திருந்த   தாழ்வாரத்தைத் தாண்டிய முற்றத்தின் மீது வீசினாள்.  ரேணுவின்   குழந்தைகள் சியாமாவும் ரூபாவும் செப்பு சாமான்களோடு திண்ணையில் அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்தன. யுக யுகாந்திரமாய் பழக்கப்பட்ட அப்பா, அம்மா விளையாட்டு. எப்போதும் போல் அப்பா காரெக்டர் வேலையிலிருந்து  வருவதும் அம்மா   சமைப்பதும் நடந்து கொண்டிருந்தது.. ரூபா தான் அம்மா போல. அவள் புடவையாய் கட்டியிருந்த சுசியின் தாவணியோ, கால் மடித்து காய் நறுக்குவது போல் நடித்த பாங்கோ, பேசிய வசனமோ... ஏதொவொன்று சரயுவின் மோனத்தில் கல்லெறிந்து சிரிப்பலையை சிதறச் செய்திருக்க வேண்டும்.

'வெளையாட்டுப் பாத்தீங்களா..

அதற்கும் புன்னகை. கொஞ்சம் பொறுத்து, 'நல்லா கவனிச்சுருக்குங்க ரேணுவையும் அவ வீட்டுக்காரரையும்' என்றாள் சரயு.

தன் யூகம் மெய்ப்பட்டதில் மகிழ்வடைந்து சுசி, மேலும் பேச்சைத் தொடரும் முன், சரயு எழுந்து சென்று விட்டாள்.

சரயு அப்படித்தான்.. இப்போதல்ல.. எப்போதுமே.. தன்னிருப்பை வெளிக்காட்டிக் கொள்ளாததோடு, தனக்கு வேண்டியதைத் தான் தான் கேட்டுப் பெற வேண்டும் என்ற உணர்வே இல்லாதது போல் தோன்றும் சுசிக்கு.
சுசிக்குப் பத்து வயதாயிருக்கையில் வீரபாண்டி அத்தையின் மகன் ஆறுமுகத்துக்கும் சரயுவுக்கும் கல்யாணம் நடந்தது. சுதி மாறாமல், சரயு பன்னிரண்டாம் வகுப்பு முடித்ததும் அடுத்த முகூர்த்தத்தில் எந்தப் பேச்சு வார்த்தையும் முன் பின் அபிப்பிராயங்களும் இல்லாமல், பூவுக்கடுத்து காய் என்பது போல் இயல்பாக நடந்த விஷயம் அது. உறவுகளும் இது இயல்பே என்பது போல் எந்தச் சந்தடியும் இல்லாமல் கல்யாணத்திற்கு வந்து சென்றனர்.

ஊர்க்கோவிலில் கல்யாணம், வீட்டு முற்றத்தில் தட்டுப் பந்தல் போட்டு விருந்து, இரண்டாம் நாள் மறுவீடு என்ற எந்த மாறுதலும் இல்லாமல் நடந்தது நினைவிருக்கிறது.

மாறியது ஒன்று மட்டும் தான். கல்யாணம் நடந்து நாலு வருடம் கடந்த பின், ரேணு அக்காவுக்கு கல்யாணம் கூடி வந்த போது வீரபாண்டி அத்தை பின் கட்டு
கலகலக்கக் கத்தியது தான் மாற்றம்.

“என்னா இது? என்னா இதுங்குறேன்... மூத்தவளுக்கு அஞ்சு பவுனுக்குச் செயினு மட்டும் போட்டு காது மூக்க மூடி கதவடச்சுட்டீக. ரெண்டாமவளுக்குப் பத்து பவுனுன்னா... என்னா போக்கத்தவுகளா நாங்க..”

“இந்தாத்தா.. என்னா இம்புட்டு சத்தமாப் பேசுறீக.. வேண்டாமத்தா.. ஒக்காரு செத்த... அவுக என்னா வேணுன்னுட்டா செய்றாக.. மாப்புள ஊடு கொஞ்சந் தண்டி தே.. அவுக கேட்டத செய்யுறாக...”

“அப்ப நாங்க இவுக தரந்தண்டிக்கு கொறச்சலுன்றீக... எம் புள்ள வெறும் பயலுன்றீக..”

அப்பாவின் நண்பரான மாயாண்டி மாமா, பஞ்சாயத்துப் பேச வந்தவர், வெற்றிலையை மென்று துப்பினார். அத்தையை இகழ்ச்சியாகப் பார்த்தார்.

'ஆத்தா... ஆரு இது.. ஒன்ன வளத்த அண்ணெ, அண்ணி  அவுக மக. ஒம் மேல வச்சுருக்க பாசந்தான அதுக மேலயு. அதுல வேத்தும இல்லாத்தா.. வேணுன்னு செய்வாகளா.. புரிஞ்சுக்க... வேணுன்னா.. இந்தக் கல்யாண முடுஞ்சு கொஞ்ச நாளு செண்டு ஒம் மருமகளுக்கும் அஞ்சு பவுன செய்யச் சொல்லு. இன்னும் இருக்குல்ல வளகாப்பு....பிள்ளப் பேறு...'

அத்தை நொடித்தாள்.'ஆஆம்ம்ம்மா... பெரிய வளகாப்பு. ஊருல ஆளாளுக்குப் பேச்சு தாங்கல.. அண்ணெ மகளக் கெட்டி வந்து வருச நாலாச்சு. இன்னும் வகுறு தொறக்கலியே... சொந்தத்த பாத்து ஏமாந்தியான்னு. போன வாரம் சுங்குவார்பட்டிலந்து பொண்ணு கொடுக்கவே வந்திட்டாக  ரெண்டாந்தாரமா...'

அப்பா அதிர்ந்து நிமிர்ந்தார்……'என்னா சொன்ன...?'

'ஆங்... சொன்னாங்க சுடுசோறுக்கு சொரணயில்லன்னு... எம் புள்ள அளகுக்கும் எங்க ஊட்டுக்கு இருக்குற மரியாதக்கும் ஒண்ணுல்ல பத்து பொண்ணுக வருவாக எம் புள்ளக்கு..'

'ஆத்தா.. மரியாத தவறுது... ஆரு முன்ன இப்புடியெல்லாம் பேசுற.... நல்லால்ல சொல்லீட்டே...'

'ஆரு மரியாத தவறுனது. மூத்த மாப்புள இருக்க சொல்ல, அவனுக்கு சொல்லிவுடாம ரெண்டாவது பிள்ளக்கு பேசி முடுச்சுருக்காக. எங்க நடக்கும் இது?. என்னாடான்னு வெசாரிச்சாவுல்ல வெளங்குது... அஞ்சு பவுனு கூட்டிப் பேசுனது.'

‘ஆத்தா... மொத, மாப்புளக்கி சொல்லிவுடல, சீரு கம்மிண்டீக, அப்புறமேட்டு, மருமக இன்னம் புள்ள உண்டாகலண்டீக, அம்பூட்டுப் பெரிய மகராசி.. என்னாத்துக்கு பகுமானப் பேச்சுப் பேசூறெ... மூடி மறச்சுப் பேசாத ஆத்தா.. இப்ப என்னா முடிவு சொல்லுற.?’.

‘போடுற அஞ்சு பவுன இப்பவே போடணும். எம் புள்ளகிட்ட வந்து சொல்லிவுடாததுக்கு மன்னிப்புக் கேக்கணும். அப்பத்தே கண்ணாலத்துக்கு வருவோ. இல்லன்னா பெரச்சின தே சொல்லீட்டே....’

'இது வேறென்னத்தயோ மனசுல வெச்சுப் பேசுது மாப்புள... நானு என்ன சொல்றேண்டா..'  மாயாண்டி மாமா  பேச.. அம்மா கண்கலங்க சாமி பிறையில் காசு வைத்து வேண்டினாள்.

அதற்கப்புறம் என்ன நடந்ததென்று தெரியாது. ரேணுவின் கல்யாணத்துக்கு சரயு வரவில்லை. அதற்கடுத்த ரெண்டாம் நாள் பெட்டியோடு வந்து நின்றாள். அத்தான், பஸ் ஸ்டாண்டில் இறக்கிவிட்டுப் போனதாய்ச் சொன்னாள்.

அப்பா எதுவும் பேசவில்லை. அம்மாவும். நாலு  மாதம் கழித்து,  அத்தானின் இரண்டாம் திருமணத் தகவல் வந்த அன்று, உள்ளூர் தொழிற்பயிற்சிப் பள்ளியில்  தையல் ஆசிரியை வேலைக்கான படிப்பில் சேர விண்ணப்பம் வாங்கி வந்து தந்த போது தான் அப்பாவின் மனம் புரிந்து அதிர்ந்து அழுதாள் அம்மா. அப்போதும் சரயு எதுவும் பேசாமல், சலனமின்றி, விண்ணப்பம் வாங்கிக் கையெழுத்திட்டாள்.

சியாமாவின் கத்தல் நனவுலகுக்கு இழுக்க, திரும்பிப் பார்த்த போது, ரேணு அம்மாவிடம் விசும்பிக் கொண்டிருந்தது தெரிந்தது. இது கிட்டத்தட்ட ஒரு மாதமாக தினசரி நடப்பு.

'என்னய என்னா பண்ணச் சொல்லுறீக?. அந்த மனுசெ என்னாடான்னா  ஊடு வாங்கக் கொஞ்சம் பணம் தவங்குது,  ஒங்கப்பாவத் தரச் சொல்லுன்றாரு. அப்பா என்னான்னா...'

'ஒனக்குக் கொஞ்சம்மாச்சு அறிவுன்றது இருக்குதா?. இப்பத் திடீர்னு ரெண்டு லச்சத்த வெட்டுண்டா எங்குட்டு போவாரு?. இருக்குற  ஊடு கடனுல கெடக்கு. நாளக்கே அவருக்கு ஒண்ணுன்னா, ரெண்டு பொட்டப் புள்ளகள வச்சிட்டு எங்குட்டு போக முடியு?. ஆச்சி, இன்னு ஒண்ணு ரெண்டு வருசத்துக்குள்ளயு  சுசிக்கு கலியாணங்க் கெட்டணு. இப்பமே பொண்ணு கேட்டு வாராக. அதுக்கே காசக் காணுன்னுட்டு தள்ளித் தள்ளிப் போட்டுக் கெடக்கு. அவ வயசுல, ஒனக்கு பெருசு பொறந்தாச்சி. இம்புட்டுச் சடவுல, எவெ எக்கேடு கெட்டா எனக்கென்னா... எங்காரிய எனக்கு முக்கியமுண்டு பேசுறியே....'

ரேணுவுக்கு சுருக்கென்றது போல, 'பின்ன, என்னயு பெரியவள மாதுரி, பொறந்த ஊட்டோட கெடந்து சாகச் சொல்லுறியா.. எனக்கும் ரெண்டு பொட்டப் புள்ளக இருக்குல்ல...'

அம்மா அசந்து போனாள். நானும் தான்.

புயலடித்தது போல சரயு வந்து நின்றாள். எங்கிருந்தாளோ, என்ன கேட்டாளோ!

'இதப் பாரு, என்னயப் பத்தி பேசுற வேல வெச்சுக்கிட்டா நல்லாருக்காது சொல்லீட்டே..  நானும் ஒன்னய மாதுரி, நாயமில்லாம,  நாம புகுந்த ஊட்டோட இருந்தாத்தே மரியாதன்னு   நெனச்சிருந்தா.. நீ இன்னக்கி, ஒரு புருசெனக்  கெட்டி, ரெண்டு புள்ளப் பெத்துருந்திருக்க மாட்ட...... ஒன் அளகுக்கு மயங்கின‌ எம் புருசெனோட மொறயில்லாத ஆசக்கிப் பணிஞ்சு போயி ஒன்ன ரெண்டாந் தாரமாக் கெட்ட ஒப்பாமெ.. அநியாயத்துக்குப் பயப்படக் கூடாதுண்டு இருக்கச் சொல்லத்தே நீ இன்னக்கி நிமுந்து இத்தத்தண்டிப் பேச்சுப் பேசூறே.. நெனப்புல வெச்சிக்க.. என்னா?'

சொடுக்குப் போடுவது போலப் பேசியவள், வேகமாக உள்ளே சென்று விட்டாள்.

நானும் அம்மாவும் விழி அகட்டி அமர்ந்திருக்க, ரேணு வியந்து போய்ப் பார்த்தாள். பின், மெல்ல,  எழுந்து,  அக்காவின் தையல் மெஷினைத் தடவிக் கொடுத்தாள்.
 ====================================================

கதையாக்கம்: பார்வதி இராமச்சந்திரன்.
வல்லமை மின்னிதழில் வெளிவந்தது.

படத்துக்கு நன்றி:
ஓவியர் இளையராஜா,
https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcRAtiZzD79RBGr1-tGtxB2FyTUKmkpOdm-vObzwtyAafI-NCHil

ஞாயிறு, 21 ஜூலை, 2013

தனுசுவின் கவிதைகள்....பக்கவாத்தியம்


என்னை ஆள்வது என் மனம்
என் மனதை ஆள்வது?....

ஒரு நாள் சந்தோஷம்
மறு நாள் கோபம்
ஒரு நாள் இனிப்பு
மறு நாள் கசப்பு
ஏனிது?.....

உலகமெனும் நாடக மேடையில்
நடிக்க வந்த 
நடிகர்களில் நானும் ஒருவன்
இது
ஷேக்ஸ்பியர் சொன்ன உண்மை
நான் சொல்வதும் உண்மை

என் நடிப்பு ஒளிர
என் நாடகம் மிளிர
நான் என்ன செய்ய?

பக்கவாத்தியம் இல்லாத கச்சேரி களைகட்டுவதில்லை
பக்குவப்படாத மனதில் இனிமையில்லை
கண்ணாரக் கண்டுவிட்டேன்
இனி என்ன செய்ய?

வணக்கம்
வந்தனம்
நலமா
சுகமா
இந்த வார்த்தையெனும் வாத்தியங்களை 
முதலில் நானே இசைத்து
புன்னகைத்தால்
அன்றெல்லாம் 
அடியேனுக்கு அத்தனை இடத்திலும் ஆனந்தம்
அரசனாக பொழுது கழியும்

இந்த பக்கவாத்தியதிற்கு
பக்கவாதம் வந்தால்
அன்றெல்லாம் கசந்து
தனிமை உணர்வில்
ஆண்டியாகி பொழுது கழியும்

நான்
அரசனா
ஆண்டியா 
யாராக வாழ? 

மண்ணில் பிறக்கும் மனிதன்
மண்ணையே சொந்தமாக்கி
இறுதியில்
மண்ணுக்கே சொந்தமாகும் போது
தன்னையே உணர்வது போல்...

என்னுள் எழும் மிருகம்
என்னையே சொந்தமாக்கி
இறுதியில்
என்னையே அழிக்கும் போது
என்னை நான் உணர்ந்து ஆவதென்ன?

மிருதங்கத்தை இசைத்து
மிருகத்தை எரித்து
கடத்தை இசைத்து
கனலை அழித்து
வாழ்ந்திட குறைந்து போவதென்ன?

யாரும்
என்னை நேசித்திருக்க
பக்குவப்பட்ட மனமாய்
பக்கவாத்தியம் வாசித்திருந்து
களைகட்டும் கச்சேரியை
காலமெல்லாம் கேட்கப்போகிறேன்
நீங்களும் ஒரு முறை
கேட்டுப்பாருங்களேன்.

-தனுசு-
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

சனி, 13 ஜூலை, 2013

நினைவு நல்லதானால்...


'நல்லதே நினைக்கணும்....'. இதைச் சொல்லாத சமய  நூல்களில்லை. சுயமுன்னேற்ற நூல்களில்லை. உளவியல் நிபுணர்களில்லை. ஏனோ இதைப் பற்றி நானும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதும் அதை நடைமுறைப்படுத்த கொஞ்சமேனும் முயல வேண்டுமென்பது என் ஆசை.

எண்ணங்கள் எப்படிச் செயல்படுகிறதென்பதை அறிய வேண்டுமென்பது என் நெடுநாளைய அவா. எண்ணங்கள் பரந்த இப்பிரபஞ்சம் முழுவதையும் ஆளும் இறைவனின் உணர்வில் ஒரு சிறு துளிதான்.  நாமே இறைவனது குழந்தைகள் எனும் போது நம் எண்ணங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?.

நம் மனதில் தோன்றும் எண்ணங்கள் யாவும் இப்பிரபஞ்ச வெளியில் அலைகளாக  உருவெடுத்து பயணிக்கின்றன. அவை யாவும் தொடர்ந்து அதிர்ந்தவாறே இருக்கின்றன.

இந்தக் கருத்து, சமீபத்தில் நான் படிக்க நேர்ந்த, 'ஒரு யோகியின் சுயசரிதம்' எனும் புத்தகத்தில்(புத்தகமல்ல இது... ஆன்மீகம் நாடுவோருக்கு இது ஒரு பொக்கிஷம்)ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தரால் மிகப் பலமாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

"ஆழ்ந்த ஒரு முனைப்படுதலின் மூலம், ஒரு ஞானி, எந்த ஒரு மனிதனுடைய எண்ணங்களையும், அவன் வாழ்கிறவனாக இருந்தாலும் சரி, இறந்தவனாக இருந்தாலும் சரி, அறிந்து கொள்ள முடியும். எண்ணங்கள் எங்கும் நிறைந்ததாகவே இருக்கின்றன. அவை தனி மனிதனில் வேரூன்றியில்லை. மனம் அமைதியாக இருக்கும் போது, ஆன்மாவின் மூலம் ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான வழிகாட்டுதல் உள்ளுணர்வின் வாயிலாக வந்து சேருகிறது. மனிதனின் தவறான புரிந்துணர்வே, நல்ல தீய எண்ணங்களுக்குக் காரணமாயிருக்கிறது. யோக நெறிகள், மனதை அமைதிப்படுத்தி, நம் உள்ளிருந்து அழைக்கும் தெய்வீகக் குரலைக் கேட்குமாறு செய்கின்றன".

இதைப் படித்ததும் எனக்கு கீழ்க்கண்டவாறு தோன்றியது. நம்மில் பலருக்கும் இந்த அனுபவங்கள் நேர்ந்திருக்கும்.

1. அமைதியான மனநிலையில், ஆழ்ந்து யோசிக்கும் போது, சிக்கலான பிரச்னைகள் எளிமையான தீர்வுகள் மூலம் தீர்க்கப்படுகின்றன.

2. நாம் ஒருவரைச் சந்திக்க வேண்டுமென மிகுந்த தீவிரத்துடன் நினைக்கும் போது, அந்த நபரை, எதிர்பாராத வகையில் சந்திக்க நேர்வது.

3. நம்மை கடுமையாக வெறுக்கும் நபரைப் பார்க்க நேர்ந்த கொஞ்ச நேரத்தில், நம் மனம் இனம் புரியாமல் அலைக்கழிக்கப்படுவது அல்லது உடல் நோயுறுவது.

4. நாம் மிகவும் அன்பு செலுத்தும் நபர், ஏதாவது ஆபத்தில் சிக்கிக் கொள்ள நேர்ந்தால், அது அறியாத சூழலிலும் நம் மனம் நிலை கொள்ளாமல் தவிப்பது.

இப்படி எத்தனையோ கூறிக்கொண்டே போகலாம். நம் எண்ண அலைகள், நம் மூன்றாவது கண்(ஆஜ்ஞா) வழியாக வெளியாகி, நம்மையும் நம்மை சுற்றி இருக்கும் சூழலையும் பாதிப்பதாலேயே இவ்வாறு நிகழ்கிறது. நம்மைச் சுற்றிலும் கண்ணுக்குத் தெரியாத மின்காந்த அலைகள் பரவிக்கிடக்கின்றன. நாம் எண்ணும் நேர்மறை எண்ணங்கள், நம் உடலிலிருந்து வெளியேறி அவற்றுடன் கலக்கும் போது, மின்காந்த அலைகள், நமக்கு நலம் தரும் முறையில் செயல்படுகின்றன. எதிர்மறை சிந்தனைகள், நம்மிடமோ அல்லது நம்மைச் சுற்றி இருப்பவர்களிடமோ காணப்பட்டால், அவை, நம்மை உடனடியாகத் தாக்குகின்றன. நம் செயல்பாடுகளைப் பாதிக்கின்றன.

நேர்மறை எண்ணங்களின் சக்தி குறித்து நம்மில் அறியாதார் யார்?. எதிர்மறை எண்ணங்கள், கோபம், பொறாமை முதலிய உள் எதிரிகள், நம் உடல்நிலையில் பலத்த பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மாரடைப்பு வந்தவர்களுக்கு மருத்துவர் முதலில் கூறும் அறிவுரை, 'டென்ஷனாகாதீங்க' என்பது தானே....

'ஆட்டோ சஜஷன்' எனும் நமக்கு நாமே அறிவுரைத்துக் கொள்ளும் திறன் பற்றி அறியாதவர்கள், நம்மில் மிகச் சிலரே இருக்கக் கூடும். மிகக் கடினமான சூழலில் சிக்கியிருக்கும் போது, நமக்கு நாமே 'நாம இதை சமாளிக்கலாம்' என்றோ, இதுவும் கடந்து போகும்' என்றோ திரும்ப திரும்ப உச்சரிப்பது, நம் மனதை சமனப்படுத்தி, அமைதிப்படுத்தும்.

இவை அனைத்துமே, எண்ணங்களின் செயல்பாடுகள் குறித்த எளிய உதாரணங்களே. சமீப காலமாக, ஆழ்மன செயல்பாடுகளை அதிகரிப்பது குறித்த வகுப்புகள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. ஒருவர் நம்மீது வெறுப்பாக இருந்தால், அவரது மனநிலையை மாற்றவோ, அல்லது நம்மைப் பற்றி ஒருவருக்கு சரியாகப் புரிய வைக்கவோ, நமது ஆழ்மன அலைகளைப் பயன்படுத்தலாம் என்று கூறி, அதன்படி பயிற்றுவிக்கிறார்கள்.

தவத்திரு வேதாத்திரி மஹரிஷி அவர்கள், ஒருவரை நம் மனதுள் 'வாழ்க வளமுடன்' என்று கூறி வாழ்த்துவது, அவருக்கும் நமக்கும் உள்ள உறவில் நல்ல மாறுதல்களை ஏற்படுத்தும் என நிரூபித்திருக்கிறார்.

'எண்ணம் போல் வாழ்வு', 'உள்ளத்தனையது உயர்வு' என்பன போன்ற அறிவுரைகள், அறவுரைகள் எல்லாம், நம் உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களை கூர்ந்து நோக்கி, அவற்றை பரிசீலித்து, சரிவர பயன்படுத்த வேண்டும் என்பதற்காகச் சொல்லப்படுகின்றவையே.

இம்மாபெரும் பிரபஞ்சத்தில், எல்லா செயல்களும், சிந்தனை உட்பட, அதனதன் சரியான எதிர்விளைவுகளைக் கொண்டுள்ளன. ஆகவே, யாராவது ஒருவர் நம் மீது சுடுசொற்களை வீசினாலோ, பழி சுமத்தினாலோ பதறிப் போக வேண்டியதில்லை. தர்மம், ஒரு போதும் முறை தவறாது தன் வேலையைச் செய்யும். நாம் ஒருவரது எதிர்மறையான செயலுக்கு எதிர்வினை ஆற்றினாலும், அதுவும் எதிரிடையான விளைவுகளையே நமக்குக் கொண்டு சேர்க்கும். ஒருவர் பேசிய வார்த்தையும் செய்த செயல்களும் வட்டியும் முதலுமாக திரும்ப வந்து சேருவதை எத்தனை இடத்தில் பார்க்கிறோம். இயற்கையை வஞ்சித்த மனிதன், அதனால் வரும் சேதங்களை சமீபத்தில் கூட பெருவெள்ளமாய் அனுபவித்தானே!.

நான் முன்பு தெரிவித்த 'ஒரு யோகியின் சுய சரிதம்' புத்தகத்தில், ஒரு நிகழ்ச்சி வருகிறது. இந்தியாவின் தலைசிறந்த யோகிகளுள் ஒருவரான மஹான் லாஹிரி மஹாசயர்,   தன் சீடன் ஒருவனிடம் பின்வருமாறு கூறுகிறார், 'மின்சாரம், அல்லது புவி ஈர்ப்பு இவைகளைப் போல், எண்ணமும் ஒரு சக்தி தான் மனிதனின் மனம் என்பது எல்லாம் வல்ல இறைவனின் உணர்வின் ஒரு சிறு பொறிதான். உன் சக்தி வாய்ந்த மனம் எதைத் தீவிரமாக நம்புகிறதோ அது உடனே நடக்கவே செய்யும்'.

எல்லாம் வல்ல இறைவன் நம் ஒவ்வொருவர் உள்ளத்திலும் உறைந்து நம் செயல்களைக் கண்காணிக்கிறார் என்பதை வலுவாக நம்பி, நம் எண்ணங்களை முறைப்படி செயல்படுத்தினால், நம் நியாயமான விருப்பங்கள் நிச்சயம் நிறைவேறும். பாஸிடிவ் திங்கிங் எனப்படும் நேர்மறை சிந்தனைகள், நம் மனதில் நிரம்பி வழியுமானால், நிச்சயம் வெற்றிக்கான வழி நம் கண்முன்னே தோன்றும்.

வெற்றி பெறுவோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

ஞாயிறு, 7 ஜூலை, 2013

கிளிமொழி (தனுசுவின் குறுங்கவிதைகள்...)

கிளிமொழி
ஹேய்.....
பச்சைக்கிளியே
நீ
திக்கி திக்கி சொல்வதென்ன?
கிளி மொழியை
கற்றுத் தருகிறாயா?

ஆண்களை வீழ்த்த பெண்களுக்கு!


சீர்
நாத்தனார்
மாமியார்
மாமனார்
இவர்களுக்கு
புதுக்கவிதை பிடிக்காது.

இவர்கள் அந்த காலத்து ஆட்கள்
ஆதலால் என்கிறீர்களா...

இல்லை இல்லை...
இந்த
புதுக்கவிதையில்
'சீர்" வருவதில்லை
அதனால்.
வெற்றுக் கணக்கு
ஸ்விஸ் வங்கியில்
இந்தியர்கள்
பல்லாயிரம் கோடி பதுக்கல்!
இது
இன்றைய செய்தி.

அட பெரும்புத்தி பெருச்சாளிகளா
யாருக்கும் பயன் இல்லாமல்
பதுக்கி வைத்திருப்பது
பணமல்ல
வெறும் நம்பர்கள்.

அன்புடன்

 -தனுசு-

செவ்வாய், 2 ஜூலை, 2013

பெண்ணென்றால் கேவலமோ?.......


பெண்ணென்றால் கேவலமோ?
பெரும் பாவம் செய்தோமோ!!
மண்ணிலே பிறவியெல்லாம்
பெண்ணின்றிப் பிறந்திடுமோ?

நல்லதொரு சுமை தூக்கி
நாலெட்டு நடக்கு முன்னே
இறக்கி வைக்க இடம் தேடி
இங்குமங்கும் அலைகின்றீர்!!
.
பத்து மாதம் கருச்சுமந்து 
படும் பாடு நீர் அறிந்தால்
பாரினிலே பெண்பிறவி
பெருமையென்றே பேசிடுவீர்!!

சூலறிந்த நாள் தொடங்கி
சுகமான சுமையென்றெண்ணி
தன்னுள்ளே உயிர் வளர்க்கும்
தியாக வேள்விக்கு ஈடுண்டோ?

முதல் மூன்று மாதம் வரை
தலை சுற்றும், வயிறு குமட்டும்.
குழம்பு கொதிக்கும் வாசமென்றாலும்.
 குடம் குடமாய் வாந்தி வரும்.

புரண்டு படுக்க இயலாது.
பூப் போல நடக்க வேண்டும்.
பூமியின் பொறுமை எல்லாம்
பொன்னுடலில் வர வேண்டும்.

ஐந்து மாதம்  நிறைந்து விட்டால்
அணையாத‌ பசித்தீ வாட்டும்
எத்தனை முறை உண்டாலும்
இன்னமும் வயிறு கேட்கும்.

ஆறு மாதம்  ஆன பின்னே
அயர்ந்து அமரச் சொல்லும்.
அடி வயிற்றில் குழந்தை முட்டும்
ஆழ்ந்த தூக்கம் தொலைந்து போகும்.

நாலிரண்டு மாதத்திலே
நாலெட்டு நடந்தால் திணறும்.
நீர் கோர்த்து கால் வீங்கும்
நிலவு முகம் பூசணியாகும்.

ஒன்பதாம் மாதம் வந்தால்
உள்ளங்கால் நரம்பு சுண்டும்.
ஓரெட்டு நடக்கும் முன்னே
உடலிலே அயர்ச்சி பொங்கும்.

ஐயிரண்டு மாதத்திலே
அங்கமெல்லாம் வலி பொறுத்து
ஆருயிரின் ஓருறவை
அகம் மகிழத் தருகின்றோம்.

ஆயினும் பெண்ணென்றால்
ஆயிரம் வசையொலிகள்.
அன்பு தரும் உயிரில்லை.
அரங்கேறும் கேவலங்கள்.

 அம்மாவும் பெண் தானே!!!
அருமை மகள் பெண் தானே!!!
அன்பு தந்து வாழ்விக்கும்
அருந்துணைவி பெண் தானே!!

பெண்களைத் தொழுது நிதம்
பெருங்கோயில் கட்ட வேண்டாம்
மண்ணிலே வாழ வந்தோம்
வாழ விட்டு, வாழ்ந்திடுவீர்!!.

---பார்வதி இராமச்சந்திரன்------

நன்றி: வல்லமை மின்னிதழ்.
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.