என் கவிதைகள்.. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
என் கவிதைகள்.. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 25 செப்டம்பர், 2014

ஜெய் ஸ்ரீ துர்கா...1 (நவராத்திரி முதல் நாள்).

செஞ்சுடரும் சந்திரனும் இருவிழியாய் கொண்டவளே
வஞ்சமில்லா நெஞ்சினிலே வந்துதிக்கும் உமையவளே
வெஞ்சமரில் அசுரர்களை விரட்டியடித்தருள் செய்தாய்
தஞ்சமென்று வந்து விட்டோம் தாயே நீ காத்தருள்வாய்!

வியாழன், 11 செப்டம்பர், 2014

PAATTUKKORU BARATHI!....பாட்டுக்கொரு பாரதி!...


இன்று பாரதியார் நினைவு நாள்!.. மின் தமிழ் கூகுள் குழுமத்தில் இன்று நான் எழுதிய இரங்கற்பா உங்கள் பார்வைக்காக!...

பாரதத்தாய் பலகாலம் பொறுத்துத் தவமிருந்து
வாராத மாமணியா பெத்தெடுத்த புத்திரரே!
கூரான வார்த்த கொண்டு குடி காக்க வந்தவரே!
ஊரான ஊர் பாக்க  ஓடி நீயும் போனதென்ன!

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

THIRUMAGAL EZHUNTHARULGA!.....திருமகள் எழுந்தருள்க!!!....


இன்று (8/8/2014) வரலக்ஷ்மி விரதம்!.

மதிமுகம் ஒளிர்ந்திட மறைகளும் துதித்திட மங்கை எழுந்தருள்க!
கதியுனை நம்பினேன் கருணையை தந்திட கமலி எழுந்தருள்க!

திங்கள், 21 ஜூலை, 2014

வெள்ளி, 18 ஜூலை, 2014

PAADI UNAI THOZHUTHEN PARINTHENAKKU ARULE!..பாடி உனைத் தொழுதேன் பரிந்தெனக்கு அருளே!

ஆடி வெள்ளியில் அன்னையைப் போற்றுவோம்!

நாடி தினந்துதிக்கும் அன்பர் மனத்தினுள்ளே
ஆடி வரும் அழகே அண்டம் நிறை ஒளியே!
கோடி வினை அறுக்கும் ஞானப் பெருங்கனலே!
பாடி உனைத் தொழுதேன் பரிந்தெனக்கு அருளே!

கண்ணின் மணி நீயே! கருணைக் கடல் நீயே!
பெண்ணின் வடிவாகி பேணும் சுடர் நீயே!
மண்ணும் விண்ணுமாகி மலரும் எழில் நீயே!
எண்ணில் உருவானாய் எந்தன் துணை நீயே!

சனி, 12 ஜூலை, 2014

THALATTU!...தாலாட்டு!!!..

எங்க குடும்பத்தில குழந்தை பிறந்தா தொட்டிலிடும் போது பாடும் பாட்டு இது.. திரு.ஐயப்பன் கிருஷ்ணன்(ஜீவ்ஸ்) அவர்கள் சொன்னதற்கிணங்க முகநூலில் பகிர்ந்து கொண்டேன்.. இங்கயும் பதிவு பண்ணலான்னு ஒரு எண்ணம்..யாராச்சும் நிசமா, தாலாட்டு பாடணுன்னு ஆசைப்பட்டா தாராளமா இந்த பாட்ட ட்ரை பண்ணுங்க..


புதன், 16 ஏப்ரல், 2014

EESANADI POTTRI.. ஈசனடி போற்றி!

கண்டங் கறுத்தான் கவினுருவாய் உளம் நிறைந்து
நின்றருளுந் தோற்றம் நிலையாக மனம் வைப்போம்!
தண்ணிலவு தனைச்சூடி வெண்ணீறு தனிலாடி
பொய்யறுத்தார் நெஞ்சகத்தில் புனலாக அருள்சுரப்பான்

அண்ணாமலையான் அனலோடு புனல் ஏந்தி
பெண்ணை ஒருபாகம் கொண்டருளும் பேரொளியான்!
விண்ணாகி மண்ணாகி விரிந்திருப்பான் பொன்னடிகள்
கண்ணுள்ளே வைத்து கசிந்துருகிப் போற்றிடுவோம்!

எங்கும் நிறைந்திருப்பான் எம் ஐயன் பொழி கருணை
தங்கும் அடியவர் தம் தாள் பணிந்து வணங்கிடுவோம்!
பொங்கும் கங்கையினை சடை ஏந்தும் பொன்னவனை
சங்கம் முழங்கிடவே தாள் பணிந்து வணங்கிடுவோம்!

மின் தமிழ் குழுமத்தில், தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி, 'சித்திரை ரத'த்துக்காக எழுதி வெளியாகிய கவிதை!..

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி:கூகுள் படங்கள்.

புதன், 2 ஏப்ரல், 2014

திங்கள், 13 ஜனவரி, 2014

PONGAL THIRUNAAL SIRAPPU KAVAITHAI..ஞாயிறு போற்றுதும்!..ஞாயிறு போற்றுதும்!!

surya04
இந்தப் பாடலை, திரு.சுப்புத் தாத்தா மிக அருமையாகப் பாடி அளித்திருக்கிறார். அவருக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி!!..



ஒளி தந்து இருள்நீக்கி நலம் தந்து வளம் சேர்க்கும்

ஒப்பிலா கதிரவனை வணங்குவோம்!

 மழை தந்து மண்ணுலகம் மகிழ்வித்து அருள் செய்யும்

பர்ஜன்யன் உன்னடியைப் போற்றுவோம்!

 வானவரைக் காத்தருளும் இந்திரனின் திருவுருவே

வாழ்த்தினோம் வாழ்த்தினோம் அருள்கவே!

வயல்களில் விதைத்ததை விளைவிக்கும் பூஷாவே

வான்மணியே உனைத் தொழுதோம் வருகவே!

மூச்சிலே வரும் காற்று உன்னருட் செயலன்றோ

முழுமுதலே அர்யமான்!!  வணங்கினோம்!

 மூலிகைகள் உள்ளாடும் சக்தியாய் நோய் தீர்க்கும்

த்வஷ்டா உன் தாளிணைகள்  போற்றினோம்!

 பகன் என்ற பெயர் கொண்டு நீ தரும் வெம்மையால்

பாரிலே மன்னுயிர்கள் வாழுமே!

 ஜடராக்னி ரூபத்தில் உயிர்க்குலம் காத்தருளும்

விவஸ்வானின் திருநாமம்  போற்றினோம்!

 வாயுக்கள் வடிவான வளம் தரும் அம்சுமான்

வள்ளலே!..உன்னடியை  வணங்கினோம்!

 எண்ணத்தில் தீமை தனை எரித்திடும் சக்தியே

எமைக் காக்கும் விஷ்ணுவே அருள்கவே!

 இவ்வுலகம் படைத்தருளும் என் தேவே தாதாவெ

இகலோகம் வாழ நலம் தருகவே!

 நீர் வடிவில் உயிர்க்குதவும் வருணனே வாழ்த்தினேன்

நீர் வளம் நிறைய அருள் பொழிகுவாய்!

 நிலையாக மன்னுயிர்கள் வாழவே தவம் புரியும்

நிலவுலக மித்திரா வளம் வழங்குவாய்!


 ஆதித்ய தேவா  நல்ல‌றம் வளர்க்கும் பகலவா

ஆருயிர்கள் காக்கும் எழில் ஞாயிறே!

 அன்பான சூரியனே பண்பாளர் உளம் இருந்து

அகலாமல் வாழ்விக்க வரமருள்!
=====

இந்தப் பாடல், த்வாதச ஆதித்யர்கள் என்று போற்றப்படும் சூரியனின் பன்னிரண்டு திருநாமங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது…சூரியனே அனைத்துத் தேவர்களின் திருவுருவங்கொண்டு உலகைக் காக்கிறான் என்கிறது ‘பவிஷ்ய புராணம்’. பவிஷ்ய புராணத்தில், ஸ்ரீகிருஷ்ணர், தமது புதல்வன் சாம்பனுக்குச் சொல்வதாக வருகிறது இது.

இதன்படி, சூரிய பகவானே, ‘த்வாதச (பன்னிரெண்டு) ஆதித்யர்க’ளாக, பன்னிரெண்டு வடிவங்களை எடுத்துக் கொண்டு, பன்னிரெண்டு வகையான செயல்களைப் புரிகிறார். த்வாதச ஆதித்யர்கள் பின்வருமாறு.

1. தேவர்களைக் காக்கும் இந்திரன். மேகத்தைக் கட்டுப்படுத்துபவர் சூரியபகவான். சிம்ம மாதமாகிய ஆவணி மாதச் சூரியனின் திருநாமமே இந்திரன்.

2. படைக்கும் தொழிலைச் செய்யும் தாதா. இந்த திருநாமம் கொண்ட சூரியன், உயிர்களின் தோற்றத்திற்குக் காரணமான வெம்மையைத் தருபவர். மாதங்களில், இவர் சித்திரை மாதத்திற்கு உரியவராகக் கருதப்படுகிறார்.

3. உலகத்தில் மழையைப் பொழிவிக்கும் பர்ஜன்யன். நீர் நிலைகளில் இருக்கும் நீரை அமுதமென அள்ளி மேகமாக்கித் தருபவர் இவரே!. இவர் பங்குனி மாதத்துக்கு உரியவராகக் கருதப்படுகிறார்.

4. உணவுப்பொருள்களை விளைவித்து அருளும் பூஷா.விதைத்த விதைகள், பூமியில் முளைக்கத் தேவையான அளவு வெப்பத்தை அளிப்பவர் பூஷா. மாசிமாதச் சூரியனே பூஷா.

5. மூலிகைகளின் சக்தியாக இருந்து நோய்களைப் போக்கும் துவஷ்டா. இவர் ஐப்பசி மாதத்திற்கு உரியவராகக் கருதப்படுகிறார். அடைமழை மாதமான ஐப்பசியில், நோய் நொடிகள் அண்டாதிருக்க அருளுபவர் இவரே.

6. மூச்சுக்காற்றை அளித்து உயிர்களை இயங்கச் செய்யும் அர்யமான். ‘வைகாசி வாய் திறக்கும்’ என்று தொடங்கி, வீசும் காற்றின் அளவைக் குறித்துச் சொல்லப்படும் பழமொழிகளை நாம் அறிவோம். மிதமான காற்றுக்குத் தலைவன் அர்யமான். வைகாசி மாதச் சூரியனின் திருநாமம் இதுவே.

7. உயிர்களுக்கு நலம் வழங்கும் பகன். உயிரினங்களின் உடலில் உயிர் தங்கியிருக்க வெம்மை தேவைப்படுகிறது. இந்த வெம்மை இல்லாவிட்டால் உடல் குளிர்ந்துவிடும். அத்தகைய வெம்மையைத் தரும் பகலவனின் திருநாமமே இது. மாதங்களில் இவர் தைமாதச் சூரியனாக அறியப்படுகிறார்.

8. உயிர்களிடத்தில் ஜடராக்னி ரூபத்தில் இருந்து, உண்ணும் உணவின் ஜீரண சக்திக்கும், உடல் வெப்பம் சீராக இருக்கவும் உதவும் விவஸ்வான். எல்லா வகையான அக்னிக்கும் ஆதாரம் இவரே. மாதங்களில் இவர் புரட்டாசி மாதத்துக்குரியவராகக் கருதப்படுகிறார்.

9. தீய எண்ணங்களையும் தீய சக்திகளையும் அழிக்கும் விஷ்ணு. பரம்பொருளின் எங்கும் நிறைத் தன்மையே விஷ்ணு. பகலவனின் பிரகாசம் போல் தீப ஒளி நிறையும் கார்த்திகை மாதத்திற்கான‌ சூரியனே விஷ்ணு என்று அறியப்படுகிறார்.

10. வாயுக்களின் வடிவிலிருந்து உயிர்களுக்கு உதவும் அம்சுமான். இதமான வெப்பம் தருபவரே அம்சுமான். பனி நிறைந்த மார்கழி மாதத்திற்கான சூரியனே அம்சுமான்.

11. நீர் வடிவிலிருந்து உயிர்களுக்கு உதவும் வருணன். ஆடியில் வீசும் பெருங்காற்றுக்கு அதிபதி இவரே. ஆகவே ஆடி மாதச் சூரியனே வருணன் என்று அறியப்படுகிறார்.

12. உயிர்களின் நலனுக்காக, சந்திரபாகா நதிக்கரையில் தவமியற்றும் மித்திரன். கடலரசனின் இயக்கங்களைக் கட்டுப்படுத்தி உயிர்களுக்கு உற்ற தோழனாக விளங்குபவர். சந்திரபகவான் இவராலேயே ஒளி பெறுகிறார். மாதங்களில், ஆனி மாதச் சூரியனே மித்ரன் என்று புகழப்படுகிறார்.

ஞாயிறு போற்றுதும்!..ஞாயிறு போற்றுதும்!!

அன்பர்களுக்கு மனமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!

வல்லமை மின்னிதழின், பொங்கல் சிறப்பிதழில் வெளியான கவிதை:

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி : கூகுள் படங்கள்.

புதன், 18 டிசம்பர், 2013

AATHIRAIYAN ADI INAIGAL POTTRI!!...ஆதிரையான் அடியிணைகள் போற்றி!!!


ஆக்கலொடு காத்தழித்தும் மறைத்தும் அருள்செயும்
அண்ணலார் திருநடனம் அடியார்க்கு ஆரமுது
எண்ணில்லா பிரபஞ்சமதை இயக்கும் திருநடனம்
புண்ணியம் செய்தாலே பொருந்தும் சிந்தையிலே

பித்தன்  பிறை நுதலான் பேயாடும் காட்டுறையும் 
சித்தன் சிவ நாமம் சிந்தனையில் நிறுத்துவோர்தம்
அத்தன் அருட்கடலான் அனலோடு புனல் ஏந்தும்
கூத்தன் குவலயத்தைக் காத்தருள்வான் பதம் போற்றி!

விடையேறும் பெம்மான் விரிசடையோன் இணையடிகள்
வேதங்கள் துதி பாடித் தொழுதேத்தும் மலரடிகள்
வேதனைப் பிறப்பறுத்து வீடு தரும் பொன்னடிகள்
விலகாது சிந்திக்க வினை தீரும் கேள் மனமே!!

மண்ணானான் விண்ணானான் மன்னுயிர்கள் தானானன்
கண்ணான பக்தர்தம் கருத்ததனில் நிலையானான்
பெண்ணானான் ஆணானான் பெருவாழ்வு தானானான்
பண்ணானான் பதம் பாட பாரினிலே துயரேது!

ஆதிரையான் தாளடிகள் அருந்தவத்தால் சேர்ந்திடுவோம்!!
பாதி மதி சூடியவன் பதமலர்கள் போற்றிடுவோம்!!!
மோதி வரும்  பிறவிச் சுழல் முழுவதுமே கடந்திடுவோம்!!!
நாதமொடு பாடி நிதம் நமசிவாய என்றிருப்போம்!!!


அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

ஞாயிறு, 17 நவம்பர், 2013

THIRUVANNAMALAI THIRUKKAARTHIGAI DEEPATH THIRUNAAL (17/11/2013)...திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருநாள்!!




இந்தப் பாடலை, உயர்திரு.சுப்புத்தாத்தாவின் குரலில் கேட்க  கீழ்க்கண்ட காணொளியைச் சொடுக்கவும்... மிக அருமையாக, அழகாகப் பாடி அளித்திருக்கிறார். உயர்திரு.சுப்புத்தாத்தாவுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள், பணிவான நமஸ்காரங்கள்.

பொன்னார் மேனியன் அண்ணாமலையான்
பொன்னடி போற்றித் தொழுதேத்தும் திருநாள்!!.
கண்ணுதற் கடவுளின் கழலிணை தொழுது
கார்த்திகை தீபம் காணும் ஒரு நன்னாள்!!.

விண்ணையும் மண்ணையும் படைத்ததொரு பரமன்
விண் கடந்து மண் கடந்து நின்றதொரு நன்னாள்!!.
வியந்ததனை திருமாலும் பிரம்மனும் போற்றி
விருப்போடு பூசைகள் செய்ததும் இன்னாள்!!.

முதலில்லா முடிவில்லா முக்கண்ண தேவன்
மூவுலகம் நிறைந்தொளிரும் சோதியான தின்னாள்!!.
முதலான பரமனை முனிவரும் அமரரும்
முக்தியைத் தரவேண்டித் தொழுததும் இன்னாள்!!.

கிரிவலம் செய்திட பவ வினை தீரும்
கிரியே சிவமாகித் தோன்றியதும் இன்னாள்!!.
சித்தரும் பக்தரும் முக்தரும் தொழுதே
சிவ சிவ என்றே செபித்திடும் நன்னாள்!!.

உண்ணாமலையம்மை உகந்தருளும் திருத்தலம்!!.
அண்ணாமலையாரின் அருளுறையும் திருத்தலம்!!.
கண்ணான யோகியர் கனிந்தருளும் திருத்தலம்!!.
அண்ணாமலை மகிமை சொன்னாலும் தீருமோ!!.

அண்ணாமலை தீபம் காண்பதும் பேறு!.
அண்ணாமலை என்றே சொல்வதும் பேறு!!.
அண்ணாமலை நினைக்க முக்தியே சேரும்!.
அண்ணாமலையானின் அடிதொழுது போற்றுவோம்!!

அன்பர்கள் அனைவருக்கும் திருக்கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்

வெள்ளி, 8 நவம்பர், 2013

PARANGIRI VAZH PARANE...பரங்கிரி வாழ் ப‌ரனே!! (ஸ்கந்த சஷ்டி..8/11/2013)

அறுபடை வீடு கொண்ட ஆறுமுக வேலவனே
அறுவர் வளர்த்தெடுத்த ஆரமுதே!! சோதியனே!!
ஆறிரு தடந்தோளும் கூர் வேலும் கொண்டருளும்
அறுங்கோண அதிபதியே!! பரங்கிரி வாழ் பரனே!!

ஆறெழுத்து மந்திரத்தை ஓதி தினம் துதிக்கின்ற‌
அன்பர் மனத்திருப்போனே!!அருள் ஞான தத்பரனே
அழகென்ற சொல்லுக்கு ஒரு பொருளே குருபரனே
அகலாது காத்தருள்வாய் பரங்கிரி வாழ் ப‌ரனே!!

பன்னிரு விழிகளிலும் பொழி கருணைக்கு ஈடுண்டோ!!
பைந்தமிழ்  கடவுளே நின் அருளுக்கு இணையுண்டோ!!
பொன்னடி  தொழுது நின்றால் பொன்னகர் தனையருள்வாய்
நின்னையே போற்றுகின்றேன்! பரங்கிரி வாழ் பரனே!!

ஞான வழி மேவுகின்றோர் நாடுகின்ற குருகுகனே!!
மோன நிலை தந்தருளும் முழுமுதலே சிவைமகனே!!
வானவரும் ஞானியரும் தாள் பணியும் அருள்நிலவே!!
நானுனையே போற்றுகின்றேன் பரங்கிரி வாழ் பரனே!!

சித்தர்களும் முக்தர்களும் நித்தம் உனதடி பணிவர்
பக்தர்களோ பல கோடி, பணிந்து தினம் துதித்திடுவர்!!
சித்தம் அதில் உன்னுருவே நின்றிடவே வேண்டுகிறேன்
புத்தியிலே நின்றருள்வாய் பரங்கிரி வாழ் பரனே!!

செந்தூரான் கழலடி சிந்தையில் தினம் வைத்து 
வந்தனை  செய்திடுவோம் வாழ்த்துவோம் வாழ்த்தாது
நிந்தனை செய்வோர்தம் தமிழுக்காய் வரமளிக்கும்
கந்தனே உன்னடி தொழுதேன் பரங்கிரி வாழ் பரனே!!!


அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!

படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

வியாழன், 31 அக்டோபர், 2013

DEEPA OLI THIRUNAAL...தீப ஒளித் திருநாள்...

இந்தப் பாடலை,மிக அருமையாகப் பாடி, அழகான படங்களுடன் இணைத்திருக்கிறார், உயர்திரு.சுப்புத்தாத்தா.. கூடவே, மிக அழகாக ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் சேர்த்திருக்கிறார். கீழ்க்கண்ட  காணொளியில்  கேட்டு, கண்டு மகிழுங்கள்...


திசையெட்டும் ஒளிரட்டும் தீபங்கள் பொலியட்டும்!!
தீமைகள் அகன்று நல்ல திருவருள் நிறையட்டும்!!
வாழ்வெல்லாம் வளம் தரவே வாழ்த்துக்கள் மலரட்டும்!!
வண்ணமிகு வாணங்கள் எங்கெங்கும் நிறையட்டும்!!

மத்தாப்பு வாணங்கள், மகிழ்வான நல்வாழ்த்து,
புத்தாடை, பூ வாசம், புகழ் சேர்க்கும் விருந்தோம்பல்,
சத்தான சிற்றுண்டி, சந்தோஷ சிரிப்பொலிகள்,
முத்தான நாளிதுவே மலர்மகளை வணங்கிடுவோம்!

பொன்மகளே!  திருமகளே!  பூவுலகின் தலைமகளே!!
பொன்னடிகள் எடுத்து வைத்து நம் இல்லம் எழுந்தருள்க!!
பொன்னொளியில் குடியிருந்து, புவி சிறக்க வரமருள்க!!
பொன்னினும் பெரிய நல் மனம் தந்து நலமருள்க!!!

எந்நாளும் எம் மக்கள் சிரித்திருக்க வரமருள்க!!!
எங்கெங்கும் இன்பமயம் என்றிருக்கும் நிலையருள்க!!
இல்லையெனும் சொல் இல்லா நல்லுலகம் தனையருள்க!!
ஏற்றமிகு நல்வாழ்வு எல்லோர்க்கும் நீ அருள்க!!!

ஒளிர்கின்ற விளக்கினிலே மிளிர்கின்ற மெய்ச்சுடரே!!!
பளிங்கொத்த மனம் தந்து பவ வினைகள் தீர்த்திடுவாய்!!!
வளி போல வருந்துன்பந் தனிலிருந்து காத்தருள்வாய்!!!
தளிரொத்த திருவடிகள் பணிந்து தினம் வணங்கிடுவோம்!!!

அன்பர்கள் அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!!. பொங்கும் இன்பம் தங்குக எங்கும்!!!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!!
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

வெள்ளி, 18 அக்டோபர், 2013

NAVARATHIRI KAVITHAIGAL.. PART 9... நவராத்திரி கவிதைகள்... பகுதி..9 ஆரத்தி எடுப்போம்!!


பாடலை, கீழ்க்கண்ட லிங்கில், உயர்திரு.சுப்பு தாத்தாவின் குரலில் கேட்டு மகிழலாம். மத்யமாவதி ராகத்தில் அருமையாகப் பாடியிருக்கிறார். அவருக்கு என் உளமார்ந்த நன்றிகள்..
 
பல்லவி:
முத்து பச்சை கெம்பு ரத்ன பவள ஆரத்தி..
முழுமுதலே  உனக்கெடுப்போம் தீப ஆரத்தி..(முத்து)

அனுபல்லவி:

இரு தீபம் நெய்யில் ஏற்றி இலங்கு மஞ்சள் நீரும் இட்டு
இரு வினைகள்  தீர்ந்திடவே  எடுத்திடுவோம் ஆரத்தி..(முத்து)

சரணம்;
1.தேவி மஹா துர்க்கையளும் திருநிறைந்த மலர்மகளும்
கலை அருளும் வாணியளும் கொலுவிருக்கும்  நாளிதுவே
புவி மிசையில் மன்னுயிர்கள் புகழோடும் நிறைவோடும்
பொங்கும் அன்பு நலத்தோடும்  வாழ வேண்டும் தேவியரே!!  (முத்து)

2.பைரவியே பார்க்கவியே பாரதியே போற்றிடுவோம்!!
பாரினிலே ஒளி நிறைய ஏற்றிடுவோம் ஆரத்தி!
மங்களங்கள்  பாடிடுவோம் மனம் மகிழ்ந்து வாழ்த்திடுவோம்!!
மறுவருடம் வர வேண்டி எடுத்திடுவோம் ஆரத்தி!!  (முத்து)

இந்த வருட நவராத்திரி கவிதைகள் இனிதே நிறைவுற்றன..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!
படத்துக்கு நன்றி; கூகுள் படங்கள்..

வியாழன், 17 அக்டோபர், 2013

NAVARATHIRI KAVITHAIGAL.. PART 8.. நவராத்திரி கவிதைகள்..8.. பிராம்மி!!

 

சப்தமாதர்களின் முதலாவது தேவியான 'பிராம்மி' தேவியைக் குறித்த பாடல்...

ஆக்கும் தொழில் செய்யும் அன்பன் நாவில் உறைபவளே
அகிலம் முழுதும் உயிர்கள் படைக்கும் சக்தி தருபவளே
பிரம்ம தேவன் சக்தி பிராம்மி எனும் என் தாயே
பிள்ளை வரம் தந்தே பெரு மகிழ்ச்சி தருவாயே

நான்கு திருமுகங்கள், நான்கு திருக்கரங்கள் கொண்டு
நாளும் அன்னமதில் நடை பழகி வருபவளே
நலமருள் ஜபமாலை, கமண்டலமும் தரிப்பவளே
நல்லோர்க் கப‌யம் தந்து வரம் பலவும் தருபவளே

அம்பிகை திருமுகத்தில் தோன்றி வந்த பிரம்மாணி
அழகாய் பீதாம்பரம் அணிந்தருளும் ஜடாதாரணி
அன்னை உன் பெருமை சொல்ல சொல்ல இனிமையம்மா
அடியாள் அறியேனே அன்பு செய்து அருள்வாயம்மா

மான் தோல் தரித்து வந்து மா ஞானம் தருபவளே
மறதி நீக்குகின்ற மஹா சக்தி தேவியளே
மன்னுயிர் காக்கும் மாதா மண்டலத்தைக் காப்பவளே
மலரடி தொழுதேனே  மனக் குறைக‌ள்  தீர்ப்பாயே!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்..

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

NAVARATHIRI KAVITHAIGAL.. PART 7..நவராத்திரி கவிதைகள்.. பகுதி 7 ..ஸ்ரீ மாஹேஸ்வரி

சப்த மாதர்களுள் ஒருவரான ஸ்ரீமாஹேஸ்வரி தேவியைக் குறித்த பாடல்...

ருத்ரனின் சக்தியே ருத்ராணி தேவியே
ரிஷபத்தின் மீதிருந்தருள் தரும் சூலியே
ரௌத்ரி, மகேசி, மாஹேஸ்வரி மாயே
ர‌க்ஷித்தருள்வாயே நானும் உன் சேயே

வெள்ளைக் கலையுடுத்தி வந்தருளும் தாயே
வடகிழக்கு திக்கின் அதிபதியும் நீயே
கரம் நான்கில் சூலம், மான், மழு, கபாலம்
கனிந்தருளும் விழி மூன்றும் கொண்டவள் நீயே

கற்றைச் சடைமுடியில் சந்திரன் துலங்க
பற்றை அழித்தருளும் புன்னகை இலங்க‌
இற்றை பொழுதினிலே எழுந்து நீ வருவாய்
 ஒற்றை வழிப் பிறவி நோயதனைத் தீர்ப்பாய்

பக்தர் தம் மனத்திருக்கும் உக்ரமதை நீக்கி
பல நலனும் தரும் சாந்தம் உள்ளமதில் தேக்கி
பனி நிகர் குணமளித்து பல கலையும் அருள்வாய்
பார் புகழும் வாழ்வளித்து பதமலரும்  தருவாய்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்..

புதன், 16 அக்டோபர், 2013

NAVARATHIRI KAVITHAIGAL. PART 5, நவராத்திரி கவிதைகள்.. பகுதி 5. திருமகளே வளமருள்க...

பொன்னும் மணியும் தந்திடுவாய் நீ
பொலிவும் புகழும் தந்திடுவாய்.
எண்ணில் இன்பம் தந்திடுவாய் நீ
ஏழ்மை விலகச் செய்திடுவாய்.

விண்ணும் மண்ணும் தினந்தொழுமே நீ
விழியசைத்தால் வரும் பொன்னகரே!
வீரம் தானம் தவமெல்லாம் நீ
விரும்பும் மனிதர் அடைவாரே!.

அருளது அமுதெனப் பெருக்கிடுவாய் நீ
பொருளது நிறைந்திட அருளிடுவாய்!
அகமதில் இலங்கிடும் நல்லொளியே நீ
சுகத்தினைத் தந்திடும் வெண்மதியே!

அலைமக‌ள் திருமகள் மலர்மகளே நீ
அழகுக்கு அழகெனத் திகழ்பவளே!
பவத்தினை தீர்த்திடும் பொன்னொளியே நீ
நவத்தினைத் தாண்டிய நல்லழகே!

ஆதியும்  அந்தமும் உன்னடியே நீ
ஆனந்த சொரூபிணி அம்பிகையே!
இன்னருள் தந்திடும் பொன்மயிலே நீ
சொன்னதும் வந்திடும் நவநிதியே!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்..

செவ்வாய், 15 அக்டோபர், 2013

NAVARATHIRI KAVITHAIGAL.. PART 6, நவராத்திரி கவிதைகள்.. பகுதி 6, கும்பிடுறோம் மாரியம்மா!!!

'சக்தி ரதம்' இழுக்க வந்த ஒரு கிராமியப் பாடல்...



இந்தப் பாடலை, உயர்திரு.சுப்பு தாத்தா மிக அருமையாக, கிராமிய மெட்டில் பாடி, அவருடைய வலைப்பதிவில் வெளியிட்டிருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி. பாடலைக் கேட்க, கீழ்க்கண்ட  காணொளியைச்  சொடுக்கவும்..

 


 தன் வலைப்பூவிலும், இந்தப் பாடலை வெளியிட்டிருக்கிறார் தாத்தா... அந்த லிங்கைக் கீழே கொடுத்திருக்கேன்.


மாரி மாகாளி மதுர காளி அங்காளி!!
மானங் கூரையாக ஆட்சி செய்யும் வெக்காளி!!
 எந்திருச்சு வாருமம்மா எங்க மொகம் பாருமம்மா!!
கும்பிடுறோம் மாரியம்மா கொறைகள நீ தீருமம்மா!!

வேம்பே ஆடையம்மா வேல் விழியே வாருமம்மா!!
பாம்பும் குடை பிடிக்க பாக்கியவதி பாருமம்மா!!
பம்பையது ஒலிக்குதம்மா உடுக்க சத்தம் ஓங்குதம்மா!!
கம்பங் கூழ் காச்சி வச்சோம் காத்தாயி வாருமம்மா!!

தட்டுல பழங்க வச்சோம் தார் தாரா வாழ(ழை) வச்சோம்!!
தாம்பாளம் நெறைய பூவும் தங்க மஞ்சளுஞ் சேர்ந்து வச்சோம்!!
குங்குமத்துக் காரியே நீ கொலுவிருக்க வாருமம்மா!!
பொங்கலிட்டு படையலிட்டோம் புள்ளகளக் காருமம்மா!!

எலுமிச்சம் பழ மால எங்க ஊரு வெத்திலையும்!!
எட்டுக் கச புதுச் சேல வாங்கி வச்சோம் பத்தலையா?!!
ஏழ சனம் பாட வந்தோம் எங்க கொற தீருமம்மா!!
எட்டு வச்சு வாருமம்மா பொட்டழகி பாருமம்மா!!

 மொளைப்பாரி எடுத்து வந்தோம்  மான மழ பொழிய வேணும்!!
மாவிளக்கு ஏத்தி வச்சோம் மக்க பசி தீர வேணும்!!
தீச்சட்டி ஏந்தி வந்தோம் தீமைகள போக்கிடம்மா!!
பூ மிதிச்சு  வந்தோமம்மா பூச வச்சோம் ஏத்துக்கம்மா!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.