திங்கள், 21 ஜனவரி, 2019

MOORI NIMIRNTHU MUZHANGI PURAPPATTU... PART 4..மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு!.. பகுதி..4.

Image result for goddess simhavahini


சிம்மவாஹினி!!!!!!!...

சிம்ம வாஹனம் என்றாலே, ஸ்ரீதுர்க்கை, அதில் ஆரோகணித்திருக்கும் திருவுருவமே அன்பர் நெஞ்சத்துள் தோன்றும்...

ஆயிரம் வடிவும், ஆயிரம் பெயரும் கூரிய விழிகள் பொழியும் கருணையும் பிறவி வேரறுத்திடும் எழிலும் திறமும் தாளிணை சிறப்பும் கூறிடல் இயலுமோ??!..

ஸ்ரீ துர்க்கை, தீப துர்க்கா, லவண துர்க்கா, க்ஷேமங்கரீ துர்க்கா என பல்வேறு திருவடிவங்கள் தாங்கி அருள்கிறாள். அவளது திருவடிவங்களில், 'நவதுர்க்கை' என்னும் ஒன்பது விதமான துர்க்கா வடிவங்கள் சிறப்பாகச் சொல்லப்படுகின்றன.

அம்பிகையின் வாஹனம் சிம்மம்.. இந்த வாஹனம், முதலில் இமவானால் அம்பிகைக்குக் கொடுக்கப்பட்டது!..

மஹிஷாசுரன், மூவுலகங்களையும் வதைத்திருந்த காலம்.. அவனுக்குப் பெண்ணாலேயே மரணம் நிகழும் என்பது அவன் பெற்றிருந்த வரம்..


இந்த இடத்தில், மஹிஷாசுரனின் முற்பிறவி வரலாறு, மஹா ஸ்காந்த புராணம் ருத்ர சம்ஹிதையில் சொல்லப்பட்டிருப்பதை இங்கு சுருக்கமாகப் பார்க்கலாம்....

மஹிஷன், முற்பிறவியில் 'வரமுனி' என்ற பெயருடைய முனிவராக இருந்தார். அச்சமயம், அகத்தியர் முதலான ஐம்பது முனிவர்கள் இவரைக் காண வந்தனர். வரமுனியோ, வந்த முனிவர்களை வரவேற்று உபசரிப்பதை விடுத்து, அவர்களை மதிக்காதிருந்தார். அதனால் வெகுண்ட அவர்கள், வரமுனிக்கு சாபமிட்டனர்.

 ( அன்னவன் தன் தவமதிப்பால் அவமதிப்பாய்
இருந்திடவும் அவனை நோக்கி
பொன்னனைய தவமுனிவர் வெகுண்டுரைப்பர்
எமையிகழ்ந்த புன்மையாலே
உன்னரிய கருங்கடாவாய் இனிப்பிறக்கக் 
கடவாய் என்றுளையச் சொன்னார் (அருணாசல மான்மியம்) ).

இதனால், வரமுனி வருத்தமுற்று, சாப விமோசனம் வேண்டி, முனிவர்களைப் பணிந்தார். அவர்களும் மனமிரங்கி, அந்தப் பிறவியின் முடிவில், சக்தியின் திருவருளால் உனக்கு நல்ல கதி கிடைக்கும் என்று கூறிச் சென்றனர்.  

வரமுனி, மஹிஷனாகப் பிறவி எடுத்தார். மஹிஷனது அட்டகாசம் துவங்கியது.. அவனை அழிக்க, அம்பிகையும் அவதரித்தாள்!!..

 தேவர்கள் அனைவரும், காத்யாயன ஆசிரமத்தில் ஒன்று கூடி, மஹிஷாசுரனின் கொடுமைகளை அழிக்க வேண்டி, அம்பிகையைத் துதிக்க, அம்பிகை, அனைத்து தேவர்களின், ஒருங்கிணைந்த சக்தி ஸ்வரூபமாய் தோன்றியருளினாள்!!..அம்பிகைக்கு, அனைத்து தேவர்களும், தத்தம் ஆயுதங்களினின்று, அந்தந்த ஆயுதங்களைத் தோற்றுவித்து, அளித்தனர். விச்வகர்மா, சூடாமணி, கடகங்கள், தோள்வளைகள், நூபுரங்கள், அட்டிகைகள், மோதிரங்கள், அஸ்திரங்கள், கவசம் முதலானவற்றை அளித்தான். வாடாத தாமரை மலர் மாலையை வருணன் அளித்தான். அவ்விதமே, ஹிமவானும் அம்பிகைக்கு சிம்ம வாஹனத்தை அளித்தார்.!!..

(தொடரும்..).

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

இது, தமிழ் வாசல் கூகுள் குழுமத்தில் வெளி வந்தது!.

2 கருத்துகள்: