திங்கள், 8 மார்ச், 2021

KANTHARALANGAARAM... KAAPPU... கந்தரல‌ங்காரம். ..காப்பு.

 அன்பு நண்பர்களுக்கு வணக்கம்!..

வெகு நாட்களாயிற்று உங்களையெல்லாம் சந்தித்து.. மீண்டும் ஒரு நெடுந்தொடருடன் வந்திருக்கிறேன்!. முருகனருளால்!...

கந்தரலங்காரம்.. ஸ்ரீ அருணகிரிநாதரின் அருட் கொடை... இதற்கு உரை பலரும் எழுதியிருக்கிறார்கள்.. அவர்கள் சொன்னதை விடவும், புதிதாக நான் ஏதும் சொல்லி விட முடியுமா என்று தெரியவில்லை. எனினும், முருகனருளை முன்னிட்டுத் தொடங்குகிறேன்...என் செயலாவது யாதொன்றும் இல்லை.. கந்தனே சரண்!.. இதன் மூலம் கந்தனை சிறிது நேரம் இணைந்தே தியானிக்கலாம் வாருங்கள்!...

கந்தர் அலங்காரம்

காப்பு

     அடலருணைத் திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு

வட வருகிற் சென்று கண்டுகொண்டேன்வருவார் தலையில்

தடபடெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்

கடதட கும்பக களிற்றுக் கிளைய களிற்றினையே.

 

பொருள்:

ஞான வீரர்கள் வாழும் திருவண்ணாமலையில், திருக்கோபுரத்தின் உள் வாயிலுக்கு அருகே,  வட பாகத்தில் ( அதாவது இடப் புறத்தில்) சர்க்க‌ரையை ஏந்தியிருக்கும் துதிக்கையையும், கருணையாகிய மதம் வழிந்தோடுகிற சுவட்டுடன் கூடிய மத்தகத்தையும் உடையவரும், தன்னிடத்தே வந்து, தடபட என்ற சத்தத்துடன் குட்டிக் கொண்டு வழிபடும் பக்தர்களுக்கு,  தம் இனிமையான அருளை வாரி வழங்குகிறவருமான விநாயகப் பெருமானின்  இளையோனாகிய முருகனை, நான் சென்று கண்டு கொண்டேன்,  அதாவது சென்று தரிசித்தேன் என்கிறார் அருணகிரியார்.


அடல் என்றால் வீரம் . 'அருணை' என்று குறிக்கப்படுவது, திருவண்ணாமலைத் திருத்தலம். 'அடலருணை' என்பது 'வீரம் பொருந்திய திருவண்ணாமலை' என்ற பொருளில், ஊர் வாழ் மக்களின் இயல்பைக் குறித்ததாகும். இங்கு வீரம் என்பது, தன்னைத் தான் வெற்றி கொள்ள உதவும்,  ஞான வீரம்.    அத்தகைய  வீரர்களான, மகான்கள் வாழும் ஊர் திருவண்ணாமலை  என்பதையே 'அடலருணை' என்றார்.


 ஊரில் திருமகள் வாசம் செய்வதன் அடையாளமாக விளங்கும் திருக்கோயிலின் கோபுரம், (கிழக்கு நோக்கிய‌ ) 'திருக்கோபுரம்.. 'அந்த வாயில்' என்பது 'உள் வாயில்'..  'வடவருகில்' என்பது, உள் வாயிலின் இடப்புறம்.   அவர் சர்க்கரையால் ஆன இனிப்புப் பண்டங்களை விரும்பி, வாய் நிரம்ப உண்பவராதலால், அவற்றை ஏந்தியிருக்கும் அவரது துதிக்கை, ‘சர்க்கரை மொக்கியகை’. . அவரைத் துதிப்பவர்கள், அவரது இனிமையான அருளைப் பெறுவார்கள் என்பதும் இதன் பொருள்.  கடம்= யானையின் மதம். தடம் என்பது சுவடு. கும்பமாகிய மத்தகத்தில், மதம் வழிந்தோடுகிற சுவடுள்ள யானை என்பதே, 'கடதட கும்பக் களிறு'. இங்கு, 'மதம்' என்பதற்கு, விநாயகப் பெருமானின் கருணை என்றே பொருள்.

(தொடரும்...)


அன்புடன்

பார்வதி இராமச்சந்திரன்


நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!.

படத்துக்கு நன்றி!... கூகுள் படங்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக