என் கதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
என் கதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 28 அக்டோபர், 2013

MINI STORIES...UNGALIN NANBAN..சின்னஞ்சிறு கதைகள்...உங்களின் நண்பன்


அது ஒரு தொழிற்சாலை..

சில நூறு நபர்கள் மட்டுமே பணிபுரிந்தார்கள். ஆனால் அவர்களது வேலைத் திறமையின் காரணமாக, அந்தத் தொழிற்சாலைக்கு ஆர்டர்கள் குவிந்தன. தரமான பொருட்களை உற்பத்தி செய்யும் ஒரு அருமையான தொழிற்கூடமாக அது திகழ்ந்தது.

தொழிற்சாலையின் அதிபர்.. தொழிலை விரிவு படுத்துவதற்காக சுற்றுப் பயணம் புறப்படத் தீர்மானித்தார்..தொழிற்சாலையை, தொழிலாளர்களின் பொறுப்பில் விட்டுச் சென்றார்.

திரும்பியதும்,  அவருக்கு ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது..

 திடீரென்று ஆர்டர்கள்  குறைந்திருந்தன. தரம், மற்ற விஷயங்களில் எந்த மாற்றமும் இல்லை. போட்டித் தொழிற்கூடங்கள், தரத்தில் போட்டியிட முடியவில்லை. ஆயினும் அங்கு ஆர்டர்கள் குவிந்தன...

தொழிற்கூடத்தின் அதிபர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். காரணம் தேடினார். சில காலமாக, கொடுக்கப்பட்ட ஆர்டர்கள் சரியாக டெலிவரி செய்யப்படாதது தான் காரணம் என்று தெரிந்து கொண்டார்.

அவருக்குப் பேராச்சரியம்.. என்ன ஆச்சு தொழிலாளர்களுக்கு.. ஏதாவது பிரச்னை அல்லது குறையா.. ஒவ்வொருவராக விசாரிக்க ஆரம்பித்தார். காரணம் பளிச்சென்று புரிந்தது..

ஒவ்வொருவரிடமும் பெரிய புகார் பட்டியல்... என் திறமையை இவர் மதிக்கவில்லை. நான் முன்னேறக் கூடாதென திட்டமிட்டு வேலை செய்கிறார்...மட்டம் தட்டுகிறார்.. அவர் என்னைப் பற்றி துஷ்பிரசாரம் செய்கிறார்.' இப்படி நீண்டது பட்டியல்..

ஒரு அதிர்ச்சி வைத்தியம் தரத் தீர்மானித்தார் தொழிற்கூடத்தின் அதிபர்.

ஒரு நாள், தொழிலாளர்கள், தொழிற்கூடத்தின் வாசலில் ஒரு பெரிய அறிவிப்புப் பலகையைப் பார்த்தனர்..

'உங்கள் முன்னேற்றத்தைத் தடுத்த மிகக் கொடுமையான எதிரி இன்று மறைந்து விட்டார்.. தொழிற்கூடத்தின் உடற்பயிற்சி மையத்தில், அவரைக் காணலாம்..'

ஜிம்மை நோக்கி முண்டியடித்தது தொழிலாளர் கூட்டம்.. ஒருவருக்கொருவர் காரசாரமான உரையாடலில் ஈடுபட்டனர். சிலர், 'மலர் வளையம் கூட வைக்கக் கூடாது.. இவரெல்லாம் மரியாதைக்குரியவரல்ல..' என்பதாக மனிதநேயமில்லாமல் கூட பேசத் தலைப்பட்டனர். 

ஆனால், ஜிம்மின் உள்ளே நுழைந்து வந்தவர் யார் முகத்திலும் ஈயாடவில்லை. அதிர்ச்சி நிரம்பிய முகத்தோடு அவரவர் இடத்திற்குச் சென்ற‌னர். யாருடனும் பேசவில்லை.

சில நாட்களிலேயே தொழிற்கூடத்தில் நிலைமை சீராகியது..பழையபடி ஆர்டர்கள் குவிந்தன..

அப்படி ஜிம்மின் உள்ளே என்னதான் இருந்தது?!!..

ஒரு மேஜையில் அமரர் உடல் வைக்கும் பெட்டி, அதைத் திறந்தால் அதனுள்.....


ஒரு கண்ணாடி!!!!!!!

பக்கத்தில் கொட்டை எழுத்தில் ஒரு வாசகம்..

'ஒரே ஒருவர் தான் உங்கள் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த முடியும்..

அது நீங்கள் தான்..'

ஒருவரது மிகச் சிறந்த நண்பனும், மிகக் கொடுமையான எதிரியும் அவர் தான்.....

 அவர் மட்டுமே தான்..
+++++++++

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
- திருவள்ளுவர்.

"நான் உறுதியாகச் சொல்வேன். உனது கடந்து கால வாழ்க்கையை நீ பின்னோக்கித் திரும்பிப் பார்ப்பாயானால், நீ வீணாக எப்போதும் மற்றவர்களிடமிருந்து உதவியைப்பெற முயற்சி செய்த்தையும் அப்படி எதுவும் வராமற் போனதையும்தான் காண்பாய். வந்த உதவிகள் எல்லாம் உனக்குள்ளிருந்தவையாகத்தான் இருக்கும். "(சுவாமி விவேகானந்தர்..இந்த ஆண்டு சுவாமிஜி விவேகானந்தர் நூற்றாண்டு..)

செய்ய முடியும் என்று நம்பு. ஒன்றைச் செய்ய முடியும் என்று நீ முழுதாய் நம்பும்போது, உன் மனம் அதைச் செய்து முடிக்கும் வழிகளைக் கண்டறியும். ஒரு காரியத்தில் வைக்கும் நம்பிக்கை, அந்தக் காரியத்தை முடிக்கும் வழியையும் காட்டுகிறது.
- Dr. David Schwartz

பலரும், தங்களது சூழ்நிலை சரியில்லை என்றே குறைப்பட்டுக் கொள்கிறார்கள். வெற்றியாளர்களோ எழுந்து, தங்களுக்கான சூழ்நிலையைத் தேடுகிறார்கள்; அத்தகைய சூழ்நிலை கிடைக்கவில்லையெனில், அவர்களே உருவாக்குகிறார்கள்.
...ஜார்ஜ் பெர்னார்ட் ஷா.


அன்புடன்

பார்வதி இராமச்சந்திரன்.


நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!!!

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்..

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

MINI STORIES, MAAN SOLLUM RAGASIYAM..சின்னஞ்சிறு கதைகள் 1....மான் சொல்லும் ரகசியம்.....


அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.

வாழ்க்கைக்குத் தேவையான அற்புத அறிவுரைகள் அடங்கிய சின்ன சின்ன கதைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விருப்பம். நான் படித்த, கேட்ட, தெரிந்து கொண்ட கதைகளும், சொந்தமாக எழுதியவையும் இதில் அடங்கும். அந்த வகையில், ஒரு கதை இதோ உங்களுக்காக...

அது ஒரு அடர்ந்த காடு. பாய்ந்து வேகமாக சுழித்தோடும் ஆறு, செங்குத்தான பாறைகள், பாதைகள், கொடும் விலங்குகள், கானம் பாடும் பறவைகள், அழகிய மலர்கள் பூத்து மணம் பரப்பும் செடிகள், நெடிதுயர்ந்த மரங்கள் என, ஒரு காட்டிற்குரிய  அனைத்தும், குறைவற நிறைந்திருந்தது.

வேகமாக ஓடிக் கொண்டிருந்த ஆற்றின் கரையில், கர்ப்பமாக இருந்த மான் ஒன்று, தட்டுத் தடுமாறி நடந்து வந்தது. அதற்கு பிரசவ நேரம். பசும் புற்கள் நிறைந்த பள்ளமான இடம் ஒன்றை, ஆற்றோரத்தில் கண்ட மான், அதை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது. அந்த இடம், குட்டியை ஈனுவதற்கு பாதுகாப்பானது என்ற எண்ணம் அந்த மானுக்கு.

புதரை நெருங்கும் நேரத்தில் அந்த மானுக்கு பிரசவ வலி எடுக்க ஆரம்பித்தது!.

வலியோடு புதரை நெருங்கும் நேரத்தில் திடீரெனத் தோன்றியது விபரீதம்!

திடீரென்று கண்ணைப் பறிக்கும் மின்னலொன்று தோன்றியது. ஆம்!. வானில் கருமேகங்கள் சூழ ஆரம்பித்திருந்தது. அந்த மின்னலின் விளைவாக, புதரின் மேற்புறத்தில் காட்டுத்தீ தோன்றி விரைவாகப் பரவ ஆரம்பித்தது.

மிரண்ட மான், கீழ்நோக்கி நகரத் துவங்கியது. ஆனால் ஐயோ!!. கீழே ஆற்று நீரின் வேகம் அதிகரிக்க ஆரம்பித்திருந்ததைக் கண்டது மான். இடது புறம் திரும்பியது. அங்கும் ஒரு ஆபத்து. ஒரு வேடன், தன் அம்பால் அந்த மானை நோக்கிக் குறிவைத்தான்.

வலது புறம் திரும்பியது மான். அங்கு ஒரு சிங்கம்,மிகுந்த பசியோடு இந்த மானை நோக்கி வந்து கொண்டிருந்தது.

நாற்புறமும் ஆபத்து!

அந்த மான் இப்போது என்ன செய்யும்?. அது உயிர் பிழைத்து, நல்ல முறையில் குட்டியை ஈனுமா? அல்லது மானும், வேடனும், சிங்கமும் காட்டுத் தீயில் பொசுங்குமா?.

நெஞ்சு பதறும் இந்த வேளையில் அந்த மான் இப்போது என்ன செய்தது தெரியுமா?

அமைதியாக, மெல்ல நடந்து அந்த புதரை நோக்கிச் சென்று, தன் முழு கவனத்தையும், ஒரு புதிய உயிரை இந்த மண்ணுக்குக் கொண்டு வருவதில் செலுத்தியது. வேறெதிலும் அதன் கவனம் பதியவில்லை.

ஆனால், கண்ணிமைப்பதற்கும் குறைவான பொழுதில் பின்வரும் சம்பவங்கள் நடந்தேறின.

கண் கூசச் செய்யும் மற்றொரு மின்னலொன்று விண்ணை கிழித்து வந்து, வேடனின் கண்ணைப் பறித்தது. அதனால் குறி தவறிய வேடனின் அம்பு, சிங்கத்தைக் கொன்றது. கருமேகக் கூட்டங்கள் பொழிந்த மழையால் காட்டுத் தீ அணைக்கப்பட்டது.

மான் பத்திரமாகக் குட்டியை ஈன்றது. மிக மகிழ்வுடன், குட்டியை நாவால் தடவிக் கொடுத்தது.

நம் வாழ்விலும் இது போன்ற சந்தர்ப்பங்கள் வரும். நாற்புறமும் எதிர்மறை எண்ணங்கள், எதிரான போக்குக் கொண்ட மனிதர்களை சந்திக்க நேரும். சில சமயம் அவற்றின் வேகம், நாம் நினைப்பதை விடவும் கூடுதலாக இருக்கலாம்.

ஆனால் எந்தச் சந்தர்ப்பத்திலும், 'தப்பிக்க இயலாது' என்றோ, 'எல்லாம் முடிந்தது' என்றோ எண்ணாது, கைக்கருகில் இருக்கும் கடமையில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். நிலையில்லாத வாழ்வில், எல்லா சூழலும் மனிதர்களும் மாற்றத்திற்கு உள்ளாக வேண்டியவையே. நம் மனதில் நேர்மறை எண்ணங்கள் சூழ்ந்திருந்தால், நம்மை மீறிய ஒரு சக்தி, அது இறை நம்பிக்கை உடையவர்களுக்கு இறைவன், இல்லாதோருக்கு இயற்கை, நம் நல்வினை என்று ஏதோ ஒன்று நிச்சயம் நம்மைக் காப்பாற்றும் என்பது சத்தியமான உண்மை!!

மான், அந்த சந்தர்ப்பத்தில், வாழ்வின் மதிப்பைப் புரிந்து கொண்டு, தன் முழு கவனத்தையும் குட்டியை ஈனுவதில் செலுத்தியதைப் போல், கடமையைச் செய்வதில் முழுகவனத்தையும் செலுத்த வேண்டும். கீதை சொல்வதும் இதைத்தானே!!

வாழ்வு மகத்தானது. அதன் ஒவ்வொரு கணத்தையும்,  அது தரும் திருப்பங்களையும் அனுபவித்து வாழ கற்பதோடு, அது தரும் அனுபவங்களை நேர்மறை சிந்தனையோடு ஏற்பவருக்கு, வாழ்வே ஒரு திருவிழா!!

பொன்னான இந்த சிந்தனையோடு,

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

மனதின் உயரம்....

வாங்க, வாங்க, உள்ளுக்க‌ வந்துருங்க...யப்பா தம்பி ஒன்னத்தே சொல்றாக... பெராக்கு பாத்துக்கிட்டு அப்புறமேட்டு நிக்கலாங்... வாறவுகளுக்கு வளி வேணுல்லா... ' கண்டக்டர் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார். சில திடீர் சமயங்களில், வெறும் நாலு இட்லி சாப்பிட்டதற்கே வயிறு நிரம்பி எருக்களிப்பது போல், விசேஷ நாள், விடுமுறை நாள் இல்லாத இன்று கூட ஏகக் கூட்டம் பஸ்ஸில். பிதுங்கி வழிந்தது.

தாமரை, மல்லிகாவின் மடியிலிருந்து கொண்டு என்னைப் பார்த்து சிரித்தாள். வாயில் எச்சில் ஒழுக, என்னைப் பார்த்து, 'ங்கா....' என்றாள். 'ப்ப்...' என்று ஏதோ சொல்ல முயற்சித்து அது 'ப்ரு' வாகியது.

ஏதோ சொல்ல வாயெடுத்த மல்லிகா, என் முகம் பார்த்து 'கப்சிப்' ஆனாள். ரயிலில் ரிசர்வேஷன் கிடைத்த பிறகு போகலாம் என்ற என்னை வற்புறுத்தி, கிடைத்த பஸ்ஸில் கிளம்பியே ஆக வேண்டும் என்று கிளம்ப வைத்தவள் அவள். ஜன்னலோர ஸீட்டில் அவளும் தாமரையும். நடுவில் நான். எனக்கடுத்தாற்போல் ஒரு சின்ன வயசுப் பையன். கிட்டத்தட்ட நெருக்கிக் கொண்டு அமரும் நிலை. கசகசவென்றிருந்தது. கொஞ்சம் நிதானப்படுத்திக் கொண்டு மூச்சு வாங்கிய போது, நெருக்கடி பஸ்ஸில் மட்டும் அல்ல, மனதிலும் என்று புரிந்தேன்.

என்னைப் பற்றிய செய்திச் சுருக்கம் முதலில். ஒரு விபத்தில் அப்பா, அம்மா இருவரும் மரணிக்க, காலன் கைக்குத் தப்பிய கைக்குழந்தையாய் இருந்த என்னை, என் அம்மாவின் தங்கையும் அவர் கணவரும், எனக்கும் என் சொத்துக்களுக்கும்(ஒன்றும் பெரிதில்லை. கொஞ்சம் ரொக்கம், என் அம்மாவின் ஏராள நகைகள், ஒரு வீடு மட்டும்) ஊரார் நியமித்த காப்பாளர்களாக இருந்து வளர்த்தெடுத்தனர். குழந்தையில்லாதிருந்த அந்த இருவரும், என் வீட்டுக்கே தங்கள் ஜாகையை மாற்றிக் கொண்டனர். என் அம்மாவின் நகைகளை போட்டுக் கொண்டு, என் சித்தப்பாவின் தங்கை புகுந்த வீடு போனார். பெட்டியிலிருந்த ரொக்கம் 'காக்கா ஓஷ்' ஆகியதாகக் கேள்வி .

நான் கிட்டத்தட்ட பத்து வயதாகியிருந்த போது என் சித்தி, காலம் தப்பிப் பெய்தாலும் கழனி விளைவிக்கும் மழை போல் உண்டானாள். முதலில் சுதாவும் அப்புறம் இரு வருடங்களில் ஹேமாவும்.

இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரையாக இருந்த நான் ஒரிஜினல் சர்க்கரை வந்ததும், ஹாஸ்டலுக்கு மாற்றப்பட்டேன்.

முதலில் கிட்டத்தட்ட வாழ்க்கையே வெறுப்பு மயமாகத் தான் இருந்தது. நண்பர்கள் என்னும் நல்லுறவுகள், என் வெறுமையை இட்டு நிரப்பி, எனக்கு எல்லாமுமாகினர். படிப்பு என்னை முழுமையாக ஆக்ரமித்தது. கவனம் முழுதும் அதில் குவிய,  பாராட்டுகள் தேடி வந்தன. பள்ளி, கல்லூரி இரண்டிலும் 'ஸ்டார்' ஆனேன்.

கல்லூரியில் சந்தித்தவள் தான் மல்லிகா. பரஸ்பர அறிமுகம், நட்பு என்றெல்லாம் கதை விட எண்ணமில்லை. பளீரென பளிச்சிடும் அழகும் நிறமும் தான் என்னை முதலில் ஈர்த்தன‌. 'என்னா அழகுடா, யாருக்கு அதிர்ஷ்டமோ' என்கிற மாதிரியான புகழுரைகள் காதில் பட்டுப்பட்டு, அவள் பார்வையில் படுவதே கதிமோட்சம் போல் ஆகி, கிட்டத்தட்ட ஆண்கள் எல்லோரும் பித்துப் பிடித்துக் கிடந்தது தெரியும். அதனாலேயே அவள் என்னைப் பார்க்க ஆரம்பித்து, பேச ஆரம்பித்த போது, இரண்டடி உயரமாய் உணர்ந்தேன். தன் காதல் சொன்னதும் கனவில் மிதந்தேன்.

'ஆளும் தோரணையும் நிச்சயமா பெரிய எடத்துப் பொண்ணு மாதிரி தான் தெரியுது மாப்ள... படக்குனு புடிச்சு செட்டிலாயிரு. ஒங்கப்பா காச ஒன் விதி எடுத்துக்கிட்டாலும், எப்படி திருப்புது பாத்தியா...’ என்று  ஏகத்துக்கும் நண்பன் ஏத்திவிட, 'பொன்மகள் வந்தாள்' பாடலை விஜய் ரேஞ்சில் ரீமிக்ஸில் பாடித் திரிந்தேன். மல்லிகாவை ஜொள்ளு விட்டவர்களெல்லாம், கண்களால் எனை எரிக்க, கழுத்து நிமிர்த்திய வெடைக்கோழியாய் அலைந்தேன்.

ஒரு நாள் பேசிக்கொண்டிருந்த போது, நான் மெல்ல,' ஒங்கப்பா பிஸினஸா பண்றாரு?' என  ஆரம்பித்த போது தான்  அவளும் என்னைப் போல அதாவது பெற்றோர் அற்றவள் எனத் தெரிந்தது. எனக்கிருந்த அளவுக்கு சொத்து மட்டுமல்ல, இனிஷியல் கூட  இல்லாதவள் எனத் தெரிந்தது. ஒரு ஆஸ்ரமம் அவளை வளர்த்தெடுத்து, அவள் நன்றாகப் படித்ததால், ஒரு பெரிய மனிதர் உதவியுடன் கல்லூரியில் சேர்த்திருந்தது.

'ஆஸ்ரமத்தை நடத்திட்டுருக்குற ஐயாவும் அம்மாவும் தான் எங்களுக்கு அப்பாவும் அம்மாவும். நானு இத யாருட்டயும் சொல்லல. அப்பாம்மா ஊருல இருக்காங்களான்னு கேட்டா ஆமான்னுருவேன். ஊரு பேரக் கேட்டா, ஆசிரமம் இருக்குற ஊரு பேர சொல்லுவேன். இத சொல்லுறது, எம்மேல தேவையில்லாத பரிதாபத்த ஏற்படுத்திருமோன்னு ஒரு பயம்' என்றாள்.

'சட்டி சுட்டதடா' என்று காதருகில் ஒரு குரல் பாடினாலும், அடி மனசில் இருந்த ஏதோ ஒன்று, அது நிச்சயம் காதல் தானா என்று சொல்வதற்கில்லை. 'நம்மைப் போல் ஒருவள்' என்ற உந்துதலா, 'காசில்லைன்னதும் கழட்டி விட்டுட்டான்' என்ற ஏச்சுக்குப் பயந்தா, பெண்பாவம் பொல்லாது என்று மனதின் ஆழத்தில் ஊறியிருந்த நம்பிக்கை காரணமா ஏதென்று தெரியவில்லை. கைவிட மனமின்றிக் காதலைத் தொடர்ந்தேன்.

ஒரு முறை, லீவுக்கு ஊருக்குப் போயிருந்த போது, சித்தியிடம் என் காதலைச் சொன்னேன்.

'யாருமில்லாதவளா அந்தப் பொண்ணு?, ஒன் சித்தப்பா ஒனக்கு என்ன மாதுரி பொண்ணு பாத்து வச்சுருக்குறாங்கன்னு தெரியுமா?'.

'அதனால என்ன, நானும் அது மாதுரிதான' என்றவன் அத்தோடு நிறுத்தியிருக்கலாம். வாய்க்கொழுப்பு, கிரகக் கோளாறு எல்லாமாகச் சேர்ந்து, 'ஏன், எங்கப்பாம்மா காசு, நக எல்லாம் போதாதா?, எனக்கு வார வரதட்சணை வேற வேணுமாக்கும்' என்று விட்டேன்.

சித்தி வெறித்துப் பார்த்தாள். கொஞ்ச நேரம் அமைதியாய் இருந்து விட்டுப் பிறகு, 'ஒன் இஷ்டம்,  ஆனா அதுக்கப்புறம் இந்தப் பக்கம் வந்துராத'  என்றாள்.

'வீட்டயும் வாயில போட்டுக்கவா' என்று கேட்க நினைத்து, ஏனோ கேட்கவில்லை. கல்லூரிப் படிப்பின் கடைசி வருடம் அது. அதன் பின், கேம்பஸில் கிடைத்த வேலையில் சேர்ந்து, நண்பர்கள் சூழ மணம் முடித்து, தாமரை பிறந்து என மளமளவென வருடங்கள் மூன்று ஓடி விட்டன. எங்கள் இருவருக்கும் நல்ல வேலை. 'டே கேர் சென்டரில்' தாமரையை சீராட்டியபடி எங்கள் வாழ்க்கை,  லோனில் வாங்கிய ஃப்ளாட்,  பைக் சகிதம் ஓடிக் கொண்டிருந்தது.

மல்லிகா, அடிப்படையில் உறவுகளுக்கு ஏங்குபவள். 'ஒங்க சித்திக்கு என்னப் புடிக்குமா' என்று காதல் காலத்தில் கோடி முறை திரும்பத் திரும்ப வினவியவள். 'வெயிட் பண்ணலாம்பா' என்று பல முறை சொல்லிப் பார்த்து, என் பிடிவாதத்துக்காக திருமணத்துக்கு ஒத்துக் கொண்டவள். அதன் பிறகு பலமுறை,  தாமரை பிறந்த பிறகும் கூட, 'ஊருக்கு ஒருவாட்டி போயிட்டு வரலாம்பா' என்று நச்சரித்தேயிருப்பாள்.

அந்தச் சந்தர்ப்பம் விதி வழியே வந்து சேர்ந்தது. திடீர் ஹார்ட் அட்டாகில் சித்தப்பா மரணிக்க, சித்தியும் குழந்தைகளும் தனியாகியிருக்கிறார்கள். சித்தப்பாவுக்கு தனியாரில் வேலை.  சித்திக்கு சித்தப்பாவே உலகம். என்ன சம்பளம், என்ன சேமிப்பு என மனைவிக்கு எதையும் சொல்லாத ஆணாதிக்க சித்தப்பா.

அவர்கள் நிலை கண்டு இரங்கிய என் உள்ளூர் நண்பன், என் கூடப் படித்தவனைத் தொடர்பு கொண்டு, அவனிடம் இருந்து என் முகவரியை வாங்கி, என்று  என்னைத் தேடிக் கண்டடையும் ரிலே ரேஸ் முடிந்த நேரத்தில், சித்தப்பா சிவலோகப் பதவி அடைந்து முழுசாய் ஒரு மாதம் ஆகியிருந்தது.

ஏனோ எனக்கு எந்த வித பரிதாப உணர்வும் ஏற்படவில்லை. சித்தி என்ன செய்வாள் என்று தோன்றவில்லை. போனால், நம் தலையில் சுமையாக ஏறிவிட்டால் என்ன செய்வதென்றே தோன்றியது.

'என்னருந்தாலும் ஒங்கள வளத்தாங்கல்ல. தூக்கியா போட்டாங்க?. நல்லா படிக்க வச்சாங்கல்ல?.  ஒங்க நெனப்பு தப்புங்க, போய் ஒரு எட்டு பாத்துட்டு வரலாம். முடிஞ்சா அவங்கள கூப்புட்டுட்டு வந்துரலாம். சித்திக்கு எங்கயாவது சின்னதா வேல வாங்கிக் கொடுக்கலாம். பொம்பளப் புள்ளங்கள வச்சுட்டு என்ன பண்ணுவாங்க பாவம்'   என்றவளை,  எப்படி முயன்றாலும் வாயடைக்க முடியவில்லை. கடைசி அஸ்திரமாக, 'நமக்கும் ஒரு பொண்ணு இருக்கு பாத்துக்குங்க'  என்றதும், வாழ்வின் நிலையாமை எனக்கும் சேர்த்துத் தான் என்பது உறுத்த,  மீற முடியாமல், மனாசாகா மனசோடு இதோ கிளம்பியிருக்கிறேன். சும்மா பார்த்து விட்டு வந்து விடலாம். அப்புறம் தொடர்பு கொள்வதாகச் சொல்லி விட்டு, உடனே கிளம்பி விட வேண்டும் என்பது என் திட்டம்.

'ஏம்ப்பு..  செத்தவடம் நகந்துக்கிருவீக....., கொஞ்சோணு,  நானு ஒண்டிக்கிருவேன்..' கணீரென்ற குரல் கேட்டு, கலைந்து நிமிர்ந்தேன். 45, 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், கையில் பெரிய கூடையோடு நின்றாள். என் பக்கத்திலிருந்த பையன் என்னைப் பரிதாபமாகப் பார்த்தான். அவள் ஒண்டிக் கொள்ள வேண்டுமானால், இடத்தையே கொடுத்தாக வேண்டும். கையில் சுமை  வேறு. செய்வதறியாமல் எழுந்து நின்றான்.

''மன்னிச்சுக்க தம்பி, கூடய வச்சுக்கிட்டு நிக்க முடியல. தப்பா நெனக்காதீக, மகராசனா இருங்க..' என்று பையனை வாழ்த்திவிட்டு, ‘ஆத்தி... நீயி செத்த இங்கிட்டு வந்துருப்பா, தம்பி அங்கிட்டு போயிக்கட்டும்...' என மல்லிகாவிற்கு உத்தரவிட்டாள். மல்லிகா, சட்டென தாமரையை என் மடியிலிருத்தி எழுந்து விட, வேறு வழியில்லாமல், நான் ஜன்னலோரம் நகர்ந்தேன். சற்று இறுக்கம் குறைந்தவனாக உணர்ந்தேனாயினும் அந்தப் பெண்ணின் தோரணை என்னை எரிச்சல்படுத்தியது. நன்றாக உட்கார்ந்து கொண்டு, வெற்றிலை காவியேறிய பற்களால் என்னைப் பார்த்துச் சிரித்தாள்.

'பக்கத்தூருல திருளா, சோலி இருக்குன்னு சொன்னாக... வந்தேங்.... தேர்க்கூட்டம் திருநாக்கூட்டமுன்னா சும்மாவா... கெளம்புறதண்டிக்குங் கூட்டந்தே.. ஒரு பஸ்ஸூ கெடைக்கல. எங்கூருக்கு ரண்டு பஸ்ஸூ மாறணுமுண்டாக. அங்கிட்டுருந்து இங்கிட்டு வந்து இந்த பஸ்ஸ புடிச்சே... இன்னுமேட்டு தொக்கூருல ஒருவாட்டி மாறணு.. நீங்க எங்கிட்டு போறீக?....'.

நீளமாகப் பேசி நிறுத்தியவளை பார்க்கக் கடுப்பாயிருந்தது. என்ன இது, கொஞ்சங்கூட இங்கிதமில்லாமல்' என்று தொடர்ந்த சிந்தனையை நிறுத்தியது மல்லிகாவின் பதில். 'நாங்களுந் தொக்கூருதான் இறங்கணும்'.

'அப்புடியா, நல்லதாயிருச்சு,    நானு கொங்கணியாபுரம் போணும். தொக்கூரு பஸ் ஸ்டாண்டுல நிக்கும் கொங்கணியாபுரம் பஸ்ஸூ'.

'ஆமாங்க‌….சேந்தே எறங்கிரலாம்’ என்ற மல்லிகாவை பார்வையால் எரித்தேன். கொஞ்சங் கூட முன்யோசனையில்லாமல், பார்ப்பவர்களிடமெல்லாம் சொந்தம் கொண்டாடும் அவளைப் பார்க்கப் பற்றிக் கொண்டு வந்தது.

'ஒங்க புள்ளையா... என்னா பேரு'

'தாமரை'

'நல்ல பேருதே... எப்பா கண்டக்டரு தம்பி, இங்கிட்டு தொக்கூருக்கு ஒரு சீட்ட குடுத்துவுடுங்க...' பணத்தை முன்னிருப்பவர் மூலம் கண்டக்டருக்குக் கடத்தினாள். சீட்டு வாங்கியதும் சொல்லி வைத்தாற்போல் பஸ் கிளம்ப, கூடையை மூடியிருந்த துணியை விலக்கி, கவர்களைப் பிரித்து, பூக்களை எடுக்க வசதியாக கவர்களின் ஓரம் சுருட்டி மடித்தாள். நூல் கண்டு எடுத்து நுனி தேடினாள். மளமளவென்று, ஒவ்வொரு கவரில் இருந்தும் ஒவ்வொரு வகைப் பூவை எடுத்து, சேர்த்துத் தொடுத்தாள். கண் முன்னே விரியும் வண்ணக் காட்சி போல் கதம்பம் உருவானது.

பூவைப் பார்த்து முகம் மலர்ந்தாள் தாமரை. 'ஹீஇ...' என முன்னிருந்த இரண்டு பற்களைக் காட்டிச் சிரித்தாள். கைகளைத் தட்டினாள்.

'ஏம் பாப்பா, பூ தாரே... தலெல‌  வச்சுக்கிறியா...'  முடி வளராத‌ அவள் தலையைப் பார்த்துக் கேட்க, புரிந்தது போல் மீண்டும் சிரித்தது குழந்தை.

'பூ விக்கவா திருவிழாவுக்கு வந்தீங்க..?'.

'இல்லத்தா... பூப்பல்லாக்கு சோடிக்க கூலிக்கி வந்தே... எங்க ஊரு சின்னது. வெள்ளி செவ்வா, நாளு கெளம வந்தாத்தா கொஞ்சமாச்சு ஏவாரம் நடக்கு...... அக்கம்பக்கத்து ஊருல திருநா, சந்த, வந்தாத்தே நாலு காசு மீறு....   சாமி சோடன செய்யிறவக கூடமாட ஒத்தாசக்கி, பூக்கட்டக் கொள்ள எங்கள மானி(மாதிரி) பூக்கட்டறவுகள‌ கூப்புடுவாக. செஞ்சு குடுத்துட்டு, கூலியோட கூலியா அவுக கிட்டயே கொஞ்சப் பூவ உதிரியா கொறச்சு வெல வச்சு வாங்கிக்கிடுவோம். போற வார ஊரு நடுவுல கெட்டி வித்துப்புடுவோம். இப்ப அப்படித்தே வாங்கியாறே..., கெட்டி முடுச்சது இந்தப் பஸ்ஸூல இல்லாட்டி, தொக்கூரு பஸ் ஸ்டாண்டுல பூ விக்கிறவுக கிட்ட மொத்தமா வித்துப்புடுவே...'.

எனக்கு, ‘அத்தனை பூவையும் நானே வாங்கிக் கொள்கிறேன்’ என்று என் மனைவியாகப்பட்ட ‘வள்ளி’(வள்ளலுக்குப் பெண்பால்) சொல்லிவிட்டால் என்ன செய்ய‌ என்று பயம் வந்து விட்டது. அவர்கள் பேச்சில் நானும் கலக்கும் முகமாக,

'ஒங்க புள்ளங்க வேல பாக்குறாங்களா?' என்றேன்.

'இல்லப்பு... ரண்டு பொட்டப்புள்ளெக... ஒண்ணு மூணாப்பு, இன்னொண்ணு ரண்டு படிக்குதுக....'

ஆச்சரியமானேன். முன் உச்சியில் நரை திரண்டிருக்கும் இவளுக்கா சின்னக் குழந்தைகள்?. ஒரு வேளை சித்தி போல், வருடம் கடந்து பிறந்திருக்குமோ!!! சிந்தனை ஓடியது. 

மல்லிகா 'புள்ளகள யாருட்ட விட்டுட்டு வ‌ந்திருக்கீங்க?' என்றாள்.

'தங்கச்சிட்ட..'

'ஒங்க வீட்டுப் பக்கத்துலயே இருக்காங்களா?'

'இல்லல்ல‌... ஒண்ணாத்தே இருக்குறோ.....'

'அவங்களும் பூ விக்கிறாங்களா?'

'இல்ல..  வூட்டுல புள்ளகளப் பாத்துக்குர்றா....'

'ஓஹோ... அவங்களுக்கு எத்தன பசங்க?'

'அதாஞ் சொன்னேனே... ரண்டு பொட்டப் புள்ளக...'

திடீரென்று ஒரு இறுக்கம் கவிந்தாற்போல், பேச்சு திசையறியாமல் நடுவழியில் நின்றது. எனக்கு நிச்சயம் அவள் சொன்னதன் கோர்வை புரியவில்லை.

என் நினைப்பு அந்தப் பூக்காரப் பெண்மணிக்குப் புரிந்திருக்கும் போல. அனிச்சைச் செயல் போல் பூக்கட்டிக் கொண்டே, எங்கோ வெறித்த பார்வையுடன் பேசலானாள்.

'நாந் தங்கச்சின்னது எம் புருசெ ரண்டாவது சம்சாரத்தப்பா.  நாங் கல்யாணங் கெட்டுனது எந் தாய்மாமனத்தே. கொடுப்பின உள்ளவுகளுக்குத் தே கொலசாமி வரமா புருசங் கெடக்குன்னு சொல்லுறது அம்புட்டும் நெசந்தே. அவருக்கு ஆசன்னா ஆச அம்புட்டு உசுரு எம்மேல. வாளப்பள ஏவாரம் பாத்தாரு எங்கூட்டுக்காரரு. நானு மாடு வச்சு பாலு கறந்து விப்பே.... கூலிக்கி பூக்கெட்டிக் கொடுப்பே.., நாலு காசு சேர்த்து சின்னதா ஒரு  வூடு கூட கட்டுனோ.., வூடுன்னா என்னா.. நாலு சொவரு, ஒரு கூர, நடுவுல தடுத்து ஒரு சமயக்கட்டு, அம்புட்டுதே..... ஆனா சந்தோசமாயிருந்தோ நாங்க‌... ஒரே ஒரு கொற... ஒரு புள்ள இல்ல... கும்புடாத சாமி இல்ல, பண்ணாத வைத்தியமில்ல. ஒருவாட்டி டவுனு ஆசுபத்திரில, டாக்டரம்மா, என்னய படுக்க வச்சு, மொக்க மொக்கயா மிசினு வச்சு போட்டாப்படமெல்லா புடிச்சாக. எனக்குத் தே கொற அப்படின்னுட்டாக கடசியா..'

அவள் முகத்தையே பார்த்தாள் மல்லிகா.

'அன்னிக்கி நா அளுதேம்பாருத்தா அப்படியொரு அளுக... எங்கூட்டுக்காரரு, அதுனால என்னா இப்ப?, எனக்கு நீ கொளந்த, ஒனக்கு நா கொளந்த அப்படின்னுட்டாரு.. மேக்கொண்டு வைத்தியமெல்லா பாக்கலான்னாக, கொள்ளக் காசு கட்டச்சொன்னாக‌, எங்கூட்டுக்காரரு வேணான்னுட்டாரு.'

‘ஒரு வருசம் போல ஆச்சு... தெருஞ்சவுக வீட்டுல விசேசன்னுட்டு வெளியூரு போனாரு .. போயிட்டு வந்ததுலருந்து எங்கூட்டுக்காரரு ஆளு செரியில்ல. ஒருமானி இருந்தாரு. நாங்கேட்டு கேட்டுப் பாத்தே.. ஒண்ணுமில்ல, ஒண்ணுமில்லன்னாரு. ஒரு நாளு, ஒரு ஆளு வீட்டு வாசல்ல வந்துட்டு எங்கூட்டுக்காரரு பேரு சொல்லிக் கேட்டாரு. நானு ஏவாரம் பாக்கப் போயிருக்காருன்னேன். 'ஏம்மா, பொண்ணக் கெட்டிட்டு கெட்டுன ஊருலய விட்டுட்டு வந்துட்டாரே ஒம்புருசே.. நாங்க அங்க ஊருல எம்புட்டு நாளு பொண்ண வச்சுருக்க?' ன்னு கேட்டாரு பாக்கணுமே...எனக்கு மயங்கியடிச்சுருச்சு..'.

'வந்தவரு மக்கா(மறு) நாளு வாரேன்னுட்டு போயிட்டாரு. நா இடி விளுந்த மானி ஒக்காந்திருந்தே. ஆனாலு மனசு சொல்லிச்சு அப்படியிருக்காதுன்னு.
எங்கூட்டுக்காரரு ஏவாரம் பாத்துட்டு வந்தாரு. நாங்கேட்டே........ஆமான்னாரு..'

நிறுத்தினாள். எச்சில் கூட்டி விழுங்கினாள். 'நிக்கிற தரைய தடார்னு புடுங்கி நவத்திப்புட்டா என்னா மானி இருக்குஞ் சொல்லுங்க? .

அப்படித்தேயிருந்திச்சு எனக்கு. என்ன செய்யிறதுன்னே புரியல. நெனப்பு தப்பிப்போச்சு. கொஞ்ச நேரமாச்சு வெவரமெல்லா வெளங்க’.

‘அதுக்குள்ள அவுரு கொஞ்சங் கொஞ்சமா எல்லாஞ் சொன்னாரு. பங்காளிப் பய, எங்க கொறைய பெரிசு பண்ணி அவர அசிங்கமாப் பேசீட்டான்னு மனசு வெந்து போயி, சேக்காளிப் பய பேச்சக் கேட்டு, அசலூருல போயி, பொண்ணு கேட்டுருக்காரு. அவுக கஞ்சிக்கே அலமோதுற குடும்பம். ஒத்தங் கெட்டுனா போதுன்னு நெலம. அவுககிட்ட எல்லா வெவரத்தையுஞ் சொல்லி, 'எம் பொண்டாட்டி ரொம்ப நல்லவ. அவ கூடத்தே இருக்கணு, அவள அனுசரிக்கணுன்னெல்லா சொல்லி, அவுக சம்மதிச்சு, அந்த‌ ஊரு கோயில்ல தாலி கெட்டியிருக்காரு. எங்கிட்ட சொல்லீட்டு வந்து கூட்டிப் போறமுன்னு அவுக கிட்ட சொல்லி, அந்தப் பொண்ண அங்கனகுள்ளாறவே விட்டுப்புட்டு வந்துட்டாரு. எங்கிட்ட சொல்ல ரோசன பண்ணிட்டு இருந்திருக்காரு, ரம்ப நாளு ஆச்சின்னது, அவக ஊரு ஆளு கேட்டு வந்துருக்காரு.’.

'நாம் போயி கூட்டு வாரே.... ஒரு மாசம் பாரு, சரிப்பட்டுச்சுன்னா சேந்து இருங்க, இல்லாட்டி வேற வீடு பாத்து வச்சுர்றே.. ஒனக்கு ஒரு கொறையும் வர வுட மாட்டேன்னாரு'.

'எனக்கு எஞ்சொத்தே போன நெலம. என்ன செய்யன்னு தெரியல. பொறந்த வூட்டுக்குப் போயி அசிங்கப்பட முடியாது. வேற எங்க போக முடியு?.. அங்கனக்குள்ள தான இருந்தாகணு!!... எனக்கு மனசு ஆறல. இதுவே அவருக்கிட்ட கொற இருந்தா நா வுட்டுட்டிருப்பனா? என்னன்னாலு அவரு செஞ்சது பச்சத் துரோகம். ஆனா அதுக்கு வந்தவ என்ன பண்ணுவா?. அதும் நல்ல பொண்ணு. ஆனாலு மனசு கேக்காம, புடிப்பில்லாம திரிஞ்சே... எங்கூட்டுக்காரரு மேல இருக்குற கோவத்த நானு அவ மேல காட்டக் கூடாதுன்னு புடி சாதனயா இருந்தே.. எம்பாட்டுல வேல செய்வே... தோணிச்சுன்னா  சோத்தப் போட்டுத் தின்னுவே ... இப்புடி நாளு ஓடுச்சு. 

கொஞ்ச நாளுல வந்தவ உண்டானா. மொதப்புள்ள பொறந்துச்சு. எடுத்துட்டு வந்து எங்கையில தே கொடுத்தாக மொதல்ல. எந் தங்கச்சி, ‘நாம் பெத்தாலும் புள்ளக்கி அம்மா அவுக தே’ண்டு சொல்லீட்டான்னாக. எனக்கு போன உசுரு திரும்ப வந்துருச்சு. மறு வருசமே அடுத்ததும் பொறந்துருச்சு. ரண்டு புள்ளங்களும் என்ன  அவுகளோடவே இறுக்கி வச்சுருச்சுக'.

'ஆனா காலக் கொடும இருக்கு பாராத்தா, ரண்டாவது பொறந்து மூணு மாத்தைக்கெல்லா(மாசத்திற்கெல்லாம்) அவுரு நெஞ்சப் புடிச்சுட்டு சாஞ்சுட்டாரு. பெரிய பெரிய ஆசுபத்திரிக்கெல்லா கொண்டு காட்டுனோ....இருதயத்துல அடப்புண்டாக. கொள்ளக் காசு கேட்டாக ஆபரேசனுக்கு. எனக்கு ஈரக்கொல நடுங்கிருச்சு. தாலி தப்புச்சா போதுண்டு,  வூடு மாடு எல்லாத்தயும் வித்தே..., காசு கேக்குறப்பல்லா கொடுக்க சொல்ல நல்லாப் பேசுன டாக்டருக,  பணங்கெடக்காம நாங்கொஞ்சம் தவக்கம் காட்டவும் கடுத்துப் பேசுனாக'.

'இந்தப் பாளாப் போன ஒலகத்துல, நல்ல மருந்து, படிப்பு , மூணு வேளயு நல்ல சோறு இதையெல்லா, எங்கள மாதிரி பாவப்பட்ட சனங்க கனவுலதே பாக்க முடியு. காசிருந்தாத்தே எல்லா பவுசுங்... ஏள உசிரு சல்லி பெறாது. எம்புட்டு கவருமெண்டு வந்தாலு இத மாத்த முடியாது. மாட்டாக. இது எனக்குப் புரியும் போது எங்கூட்டுக்காரரு இந்த ஒலகத்துல இல்ல. சாவுக்கு வந்தவுக, 'நீ பாட்டுக்கு ஒம்பாட்டப் பாரு, அதுக்குதே பெத்தவுக இருக்காகல்ல. அவுக பாப்பாக. நீ விட்டுரு. நாடு கெடக்குற கெடையில நக நட்டு போட்டு ரண்டு பொட்டப்புள்ளகள கெட்டிக் கொடுக்க ஆகுமாண்டு  யோசி'ன்னாக. எந் தம்பியு அதத்தே சொன்னா....'.

'எங்கூட்டுக்காரரு ஒரு புள்ளக்கி ஆசப்பட்டு எங்கிட்டக்கூட சொல்லாம ரண்டாவது கெட்டினாரு. ஆனாப் பாரு, பெத்த புள்ளங்கள வளக்க அவுரு ஆள் இல்ல. எந் தங்கச்சி வெள்ளந்திப் பொண்ணு. பெத்தவுக வயசானவுக. அவ ரண்டு பொட்டப்புள்ளங்கள வச்சி எங்க போவா பாவம்?. அவர எடுத்துட்டுப் போன ஒடனே மூத்தது ஓடி வந்து எங்காலக் கெட்டி அளுதுச்சு. அதுகள விட்டுரவா நானு?. நம்மளப் பத்தி நெனச்சு இன்னுமேட்டு என்னாகணு?, இருக்குறவரக்கு அதுகளுக்காக இருந்துருவோம்னு தெயிரியப்படுத்திட்டே'.

' எம் புள்ளக, கவருமெண்டு பள்ளியொடத்துல தே படிக்குதுக..  நல்லா படிக்குதுக. எப்பாடு பட்டாச்சு…….,எம்புள்ளகளப் பெரிய படிப்பு படிக்க வச்சுரணுமத்தா... எங்க நெலம அதுகளுக்கு வரக் கூடாது.  படுச்சு பெரிய வேலக்குப் போயி, நல்ல நெலமக்கு வரணு. எங்கள மாதுரி பாவப்பட்ட சனத்துக்கு அதுகளால முடுஞ்சத செய்யணு. அதுக்குதே எங்க சோலின்னு கூப்புட்டாலு ஓடீருவே...நா வெளியூரு போனா, ஏ வூட்டு அக்கம்பக்கத்துல இருக்குறவுக,  எந் தங்கச்சிய பாத்துக்கிருவாக. அதனால ஒரு பயமெல்லா இல்ல...காசு சம்பாரிக்கலன்னாலும் மனுசாளுக சம்பாரிச்சு வெச்சுருக்கே....'.

அவள் பேசப்பேச எனக்குள் ஏதுவோ விழுந்து நொறுங்கியது. என்னை யாரோ  முச்சந்தியில் நிற்க வைத்து, விளாசியதாக உணர்ந்தேன். 'என்ன மனசு..., என்ன மனசு இந்தப் படிக்காத பெண்ணுக்கு?, துரோகம் செய்த கணவன் பெற்ற பிள்ளைகளை, பண பலமோ மற்ற வித ஆதரவுகளோ இல்லாத இந்தப் பெண், எவ்வித சுயநலமோ, எதிர்பார்ப்புகளோ இல்லாமல், பொது நல நோக்குடன் வளர்க்கிறாள். ஆனால் நான்?. ‘என் பணத்தை எடுத்துக்கொண்டுதானே வளர்த்தார்’ என என் சித்தப்பாவை நினைத்தேனேயன்றி, எனக்கு உணவு, உடை, படிப்பு முதலியவற்றுக்கு ஒரு குறையும் வைக்காமல் தானே வளர்த்தார் என நினைக்கவில்லை. முள்ளைப் பார்த்து விட்டு, ரோஜாவைப் பார்க்கத் தவறிவிட்டேன்.  அவர் பெற்ற, என் தங்கைகளின் பொறுப்பை ஏற்பதை சுமையாக நினைக்கிறேன். என் படிப்பு எனக்கு இதையா கற்றுத் தந்தது?

விடுவிடுவென என் மனதிற்குள்  அந்தப் பூக்காரப் பெண் விஸ்வரூபமெடுக்க,  நான் அவள் முன் மிக அற்பமாய் உணர்ந்தேன்.
'மல்லிகா, என் ஃப்ரெண்டு எழுதின லெட்டர் ஒன் ஹேண்ட் பேக்குல தான இருக்கு? அத எடு' என்றேன். எதுவும் புரியாமல், லெட்டரை அவள் எடுத்துக் கொடுக்க, அதிலிருந்த நண்பனின் எண்ணுக்கு என் கைபேசியை எடுத்துப் போன் செய்தேன்.

'ஆமாண்டா, ரெண்டு நாள் முன்னாடி தான் ஒன் லெட்டர் கெடச்சு வெவரம் தெரியும். தோ லீவு கெடச்ச‌ ஒடனே பொறப்புட்டாச்சு. மதியத்துக்குள்ள வந்துருவேன். சித்தில்லாம் அங்க தான இருக்காங்க?.  முடிஞ்சா நான் வந்துட்டிருக்கேன்னு போய்ச் சொல்லு. என்ன?. அ, ஆமாமா, எங்கூட‌ கூட்டிட்டு போகலான்னு தான் ப்ளான். அதுக்குத் தான் வரேன். வொய்ஃப், பாப்பா எல்லாருந்தான் வரோம். சரி சொல்லிர்றியா? அங்க வந்து பாக்கறேன். சரியா? வச்சுர்றேன்?' சொல்லிவிட்டு திரும்பிய போது, மல்லிகா என்னைப் பார்த்து, புரிந்து, சந்தோஷமாகப் புன்னகைத்தாள்.
  
தாமரை, என்னை நோக்கி,  திருத்தமாக, 'ப்பாஆஆ...' என்றது.

கூடையிலிருந்து கமழ்ந்த பூமணம், மனதிலும் நுழைய, மன‌  நெருக்கடி குறைந்ததை உணர்ந்தேன்.
==========================

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!

இது வல்லமை மின்னிதழில் வெளியானது

படத்துக்கு நன்றி; கூகுள் படங்கள்.

திங்கள், 29 ஜூலை, 2013

மாறுவது நெஞ்சம்...

அம்மாவோடு வீட்டுக்குள் நுழையும் போது அத்தை மெலிதாகச் சொன்னாள். 

'அவெ  வந்திருக்கா...... கடப்பக்கம் போயிருக்காப்புல...'

அம்மா  திடுக்கிடுவது தெரிந்தது.  பதில் ஏதும் வரவில்லை.  அது அம்மாவின் சுபாவம்.

அமைதியாகக் கொல்லைப்பக்கம் போனாள் அம்மா. 

'அவெ'என்ற விளி, அத்தையின் தம்பியை, அம்மாவின் கணவனை, என் தகப்பனை ஒரு சேரக் குறிப்பது.  

அம்மா, லோகுவை பிள்ளை பெறப் பிறந்த வீடு போயிருந்த போது, அப்பா என்ற அந்த மனிதர், அந்தச் சமயம், படிப்பதற்காக எங்களோடு வந்து தங்கியிருந்த அத்தையின் மகளை இரண்டாவதாகமணம் செய்து கொண்டார். அப்போது விலகியது, இப்போது எதனால் நெருங்குகிறது என்று தெரியவில்லை.

அத்தை, சமையலறையில், சுருங்கிய முகத்தோடு டீ ஆற்றுவது தெரிந்தது. தம்பி வீட்டிலிருந்து கல்லூரியில் படிக்கட்டும் என்று அனுப்பிய தன் மகள், ஒரு நாள் மாலையும் கழுத்துமாக, தன் தம்பியோடு வந்து நிற்கவும், அடிவயிற்றிலிருந்து வெகுண்டெழுந்த கனலோடு, பொறி பறக்கச் சண்டையிட்டவள். 

'இப்ப என்னா?!!....நா ஆரு வாழ்க்கயயும் பாழடிக்கல... அவுங்க பாட்டு இருக்கட்டும், நானும் இருந்துக்குறேன்' என்று, என்னமோ, தன் நிலை தான் உயர்த்தி போல பேசிய மகளை 'சீ' என்று வெறுத்தவள்.

'மனுசனா நீ....' என்று தம்பி மேல் மண்ணிறைத்தவள். 

விஷயம் தெரிந்து.... ஊர், உறவுமுறைகளின் முன், அப்பாவை விட்டு அம்மா விலகியதும்,  'ஒங்கப்பா இல்லாம, ஒரு பொட்டப்புள்ளய வச்சி வளக்க வம்பாடு பட்டே...... அந்தக் கெதி இன்னொரு பொண்ணுக்கு எம்புள்ளயாலயே வந்திருச்சு. ஆனா அவ தனியாளா இருக்கவுடமாட்டே......  நாம் போறே....' என்று மகளிடம், ஊர் முன்னால் உரக்கச் சொல்லிவிட்டு எங்கள் வீடு தேடி வந்தவள். அம்மா எத்தனை சொல்லியும் திரும்பச் செல்லவில்லை.

'நீ எங்குட்டாச்சும் வேல பாத்துக்க சரசு.... புள்ளகள, வூட்ட நாம் பாத்துக்குறே....' என்று எங்களோடு வந்து கிட்டத்தட்ட பன்னிரண்டு வருடங்களாகி விட்டது.

அம்மா தனியான போது எனக்குப் பத்து வயது. என் தம்பி லோகு ஆறு மாதக் குழந்தை.

'டீ ஆறிப்போகுது' அத்தை கவனப்படுத்தியதும், அம்மா, டீ பருகினாள். நெற்றியில் சுருக்கம் விழ யோசிப்பது புரிந்தது.

'என்னா....பணப்பிரச்னையா?'

'அதுதாங் கெடக்குதே.... ரெண்டு பேரும் போட்டி போட்டு சம்பாரிச்சி வச்சிருக்காங்க.. ஆள ஆள் இல்லாம...'

'பின்ன என்னாவாம்?'

'ஆரு கண்டா?..

வாசலில் அரவம் கேட்டதும், நான் சட்டென எழுந்தேன்.  அம்மா எழுந்திருக்கவில்லை.

உள்ளே வந்தவர் நல்ல சிவப்பாக, உயரமாக இருந்தார். கைகளில், பழங்கள், தின்பண்டங்கள் கொண்ட  பைகள் இருந்தன. திரைப்படங்களில் சுற்றியடிக்கும் ஃப்ளாஷ்பேக் போல, நினைவலைகளில் மிதந்து, பன்னிரண்டு வருடங்கள் முந்திய அவர் உருவம் தேடிப் பிடித்தேன்.  சற்று மங்கலாக.....கலங்கலாக……

ஊர்ப் பஞ்சாயத்தின் முன், கம்மிய குரலோடு 'வேணும்னுட்டு பண்ணலை சரசு, தகப்பன் இல்லாதது... நாங்காட்டுன பாசத்த தப்பாப் புருஞ்சுக்கிட்டு, 'கட்டுனா ஒன்னதான் கட்டுவே...  இல்லன்னா செத்துடுவே...ன்னுட்டு அழுதுச்சு...எவ்வளவோ சொல்லியுங்கேக்கல.. எதாச்சும் செஞ்சுருமோன்னுட்டுத்தான்...........ஒன்னயும் புள்ளங்களயும் விட்டு இருக்க முடியாது... அது இங்க அக்கா கூட இருக்கும்.  நம்ம வீட்டுல நாம மட்டுந்தேன். நா அப்பப்ப இங்க வந்து போறே... எஞ்சம்பளம் மொதக்கொண்டு ஒங்கிட்ட குடுத்துர்றே….ஒனக்கு ஒரு சங்கட்டமும் வராது...' என்று திருப்பி திருப்பி சொன்னது....  ,

'இவ இன்னாரு சம்சாரம்னு சொன்னது போயி, இன்னாரு மொத சம்சாரம்னு சொல்ல வச்சுட்டீங்க..... இனிமேப்பட்டு எப்படி இருக்க?... ஊரு முன்னாடி பேச்சுப்பட்டு போச்சு... மகராசனா போயி இருங்க..... அடுத்தவ புருசன்னு ஆனப்புறம் எனக்கென்னா இருக்கு?....' என்று  நிர்த்தாட்சண்யமாக மறுத்து விட்டு, ஊர்ப்பெரியவர்களின்  முன் அம்மா விலக்கு வாங்கிக்கொள்ள, பேச நா எழும்பாமல், விழிகளில் நீர் திரள நின்றது.... எல்லாம் தொடர்ந்து நினைவு வந்தது.

கடைசியாக எப்போது பார்த்தேன்?.

அம்மாவோடு நான் கிளம்பிய போது, மெல்ல என் கை பிடித்து அழுத்தி... 'அம்மாவ பாத்துக்கம்மா....' என்று சொன்ன போதா….. அப்போதுதானிருக்க வேண்டும்.

படிகளைக் கடந்து உள்ளே வந்தவர், நின்றிருந்த என்னைப் பார்த்ததும், விழிகளில் வியப்பு மின்ன 'மலரூ..... நீயாப்பா.... ' என்று முகமெல்லாம் விகசிக்க அருகில் வந்தார்.  அமர்ந்திருந்த அம்மாவைப் பார்த்ததும் சட்டென்று முகம் மாறினார். 

கொஞ்சம் சமாளித்து, 'நல்லாருக்கியா சரசு...?' என்றார் அம்மாவைப் பார்த்து...

அம்மா 'ம்' என்றதும், 'என்னா படிக்குறப்பா?' என்றார் என்னிடம். 'டாக்டருக்குப் படிக்குறா.... கடசி வருசம்.'  என்று அத்தை பதில் சொல்ல, 'பேசமாட்டாயா?' என்பது போல என்னைப் பார்த்தார்.

'என்னா திடீர்னு?' நேரடியாக அம்மா விஷயத்துக்கு வர... சற்று நேரம் அமைதியாக இருந்தார். பின் மெல்ல 'அதுக்கு ஒடம்பு சரியில்ல.... கான்சர்னு சொல்லீட்டாங்க.... குணப்படுத்திரலாம்கிறாக...ஆனா... அப்படித் தெரியில... ரண்டு மூணு வருசமா அது படுற பாடு சகிக்கல... 'மாமா, ஒன்ன ஒங்குடும்பத்துலருந்து பிரிச்சது தப்புத்தே... அன்னைக்கே நா மன்னிப்பு கேட்டுருக்கணும்.... செய்யல.... என்னக் கூட்டீட்டுப் போ... அத்தகிட்ட நாங் கால்ல கைல வுழுந்தாவது ஒன்ன சேத்து வக்கிறே... இல்லாட்டா.... எங்கட்ட வேகாது'ன்னு கதறுது.’ என்றார்.

அத்தையின் முகத்தில் அலமறுதல் தெரிந்தது. பெற்றவள் அல்லவா?

அம்மா, 'அதான் சரிபண்ணிறலாம்னுட்டாங்க இல்ல...' என,

'எங்களுக்குன்னு ஆரு இருக்கா?, அக்காவும் ஒன்னோட வந்திருச்சு. ஒடம்பு சரியானாலும் எத்தன நாளு இப்படியே ஓட்டுறது? எனக்கு புள்ளங்கன்னு இவுங்க ரெண்டு பேருந்தான... நீ புடிசாதனயா வந்துட்ட.  ஊர வுட்டும் வந்தாச்சு...அடிக்கடி  பாக்கக்கூட‌  முடியாம போச்சு...'

அம்மா அர்த்தத்துடன் என்னைப் பார்த்து சிரித்தாள். ‘ஊரவுட்டு’ன்னா கண்காணாத தூரத்திலேயே இருந்தோம் பார்க்க முடியாமல் போனதற்கு...பக்கத்து டவுனில் தானே!!

'நீங்களா தேடிக்கிட்டது தான இது..'

'நா ஒங்கள வேண்டான்னு சொன்னேனா... எம்புட்டு கெஞ்சுனே..... ஒனக்கு ஒங்கௌரவத்த விட்டுக் குடுக்க முடியல...' 

‘நீங்க மட்டும்?!!. பெத்த புள்ளங்களக் கூட பாக்க வராம இருந்தீங்கல்ல?

‘அது ஒனக்குத் தெரிஞ்சு பாக்க வரல்ல... அடிக்கடி இல்லன்னாலும், மாசத்துல ஒரு நா  அதுங்க பள்ளிக்கூடம் போக வரச்சொல்ல அதுங்களுக்கே தெரியாம பாத்துக்கிட்டுத்தான் இருந்தே. எங்க அதுங்கள நாம்பாக்குறது ஒனக்குத் தெரிஞ்சா பெரச்சனையாயிரும்னுதான் ஒளிஞ்சு நின்னு பாத்தே. மலரு சடங்கான அன்னிக்கு நீ அதக் கூட்டிட்டு ஸ்கூல்ல இருந்து வந்தபோது நா பக்கத்து கடயிலருந்து பாத்துட்டுதா இருந்தே. நீ எனக்கு சடங்கு பத்திரிக அனுப்பலன்னாலும், வேலு கிட்டயிருந்து பத்திரிக வாங்கி,  அது போட்டோவ நிதக்கும் பாக்குறே.’

மடியிலிருந்து அழுக்குப் பத்திரிகையை உருவிக்காட்டினார். அம்மா திகைப்பது தெரிந்தது.

‘போன ரண்டு மூணு வருசமா,  அது கூட ஆசுபத்திரி அது இதுன்னு அலஞ்சுதான் வந்து பாக்க முடியாம போயிருச்சு...’

'நடந்தது நடந்து போச்சு... இப்ப என்னா சொல்லுங்க’

'இல்ல.. நா ஒங்கூட இங்க இருக்கே...   இல்லாட்டா...'

'இல்லாட்டா...?' அம்மாவின் குரலில் கோபம் தெரிந்தது.

'இங்கிட்டு பக்கத்துல வீடு பாத்து வந்திர்றோம்!'

'வேல?' அத்தை கேட்க, 'வி.ஆர்.எஸ் கொடுத்திரலாம்னு இருக்கேன். அது உடம்புக்கும் வேலைக்குப் போக முடியாது' என்றார் அப்பா.

'மிந்தி, அது அழுவுதுன்னு கல்யாணம் கட்டுனேன்னீங்க.. இப்பயும் அது அழுவுதுன்னு வர்றேங்கிறீங்க....'

'அது அழுவுதுன்னு வரல.  இன்னமேப்பட்டு தூரமா இருக்க சரிவராது. எனக்கும் வயசாச்சு. அதுக்கு என்னமாச்சும் ஆயிப்போச்சுன்னா... எல்லாம் இருந்தும் இல்லாம நா எப்படி இருக்குறது?'

'இது வரைக்கும் எப்படி இருந்தீங்களோ அப்படி' …அம்மாவின் பேச்சு அப்பாவைக் கோபப்படுத்தியது.

அத்தையின் பார்வை கெஞ்சுதலாக ஆகியிருந்தது.

‘என்னா பேசுற? கொஞ்சமாச்சும் இத்தன வருசத்துல கோவம் கொறஞ்சு எரக்கப்படுவன்னு தா வந்தே. இப்பயும் இப்படிச் சொன்னாக்க என்ன செய்யுறது?. ஒனக்கு புருசன் வேண்டான்னா வுடு. நா ஒன்ன ஒரு தொந்தரவும் பண்ணல. புள்ளக என்ன பாவம் பண்ணுச்சு? அப்பென்னு நா ஒருத்த இருந்தும் அதுகளுக்கு ஒரு புரோசனமும் இல்லாம?

அம்மா சரேலென்று நிமிர்ந்தாள். 'அதுங்கள வளக்கக் கஷ்டப்படமட்டும் நா செய்யணும். அதுங்க வளந்தப்புறம் அப்பா உரிம கொண்டாட வருவீகளா?'

‘திருப்பியிம் சொல்லுறே. நானா வேண்டான்னே?. நீ தான போன?.

'அப்ப நீங்க செஞ்சத சகிச்சுட்டு, வேற ஒருத்திக்கிட்ட எல்லா உரிமயயும் தூக்கிக் கொடுத்துட்டு, அவ பிச்ச போடறது வாங்கிக்கிட்டு ஒங்ககூட இருந்தா நா உத்தமி. இல்ல?'

'அப்படி இல்ல சரசு..' அப்பா நிதானத்துக்கு மாறினார். பேச்சில் அழாக்குறை தெரிந்தது. ‘இதப்பாரு... இதுவரக்கும் சரி. ஆனா, நாளக்கு மலருக்கு ஒரு கல்யாணங்கட்டணுன்னா கேப்பாகல்ல அப்பா எங்கன்னு? என்னா சொல்வீக?. இப்ப  அக்கம் பக்கத்துல‌ நா வெளிநாட்டுல இருக்குறதா சொல்லியிருக்கீகன்னு கேள்விப்பட்டே... கல்யாணத்துக்கு வரணுன்னா என்னா பண்ணுவீக?’.

இருநாட்களுக்கு முன் வீடு வந்த நெருங்கிய‌ உறவுக்காரப் பெண்மணி, தன்னிடம் ஒரு நல்ல மாப்பிள்ளை ஜாதகம் இருப்பதாகவும் நல்ல பெண்ணாகத் தேடுவதாகவும் சொன்ன கையோடு, பேச்சோடு பேச்சாக‌ 'ஒன் மகளப்பத்தி சொல்லலாமுன்னா அப்பா என்ன செய்றாருன்னு கேப்பாகளேன்னு சொல்லல..' என்றது எனக்கு நினைவுக்கு வந்தது.

 அம்மா ஒரு நிமிடம் மௌனமானாள். 'எல்லாம் சொல்லித்தான் மாப்புள தேடணும். ஊருல சொன்னது எங்க தற்காப்புக்காகச் சொன்ன பொய்யின்னு சொல்லணும். ஏன்னா, இப்ப நா ஒங்க‌ மொத சம்சாரங்கூட இல்ல.. முன்னாள் சம்சாரம்'.

'இதெல்லா சட்டப்படி நடந்துது இல்லயே.. ஊர் பஞ்சாயத்துதான... நாளக்கே போயி சொன்னா சேத்துவுட்டுருவாங்க. நான் பெரியண்ணன பாத்து பேசிட்டே... இத்தன வயசுக்கப்புறம் ஏன் தனியா இருக்கீங்க.  போயி பேசுங்க, சேத்துவுட்டுறேன்னு அவருதா சொன்னாரு...'

'ஓ.. எல்லா பேசிட்டுதான வந்துருக்கீங்க?'

நிலைமை எனக்கு சுத்தமாகப் புரிந்தது. அப்பா வயதான காலத்திலாவது விண்டு போனதை ஒட்டவைக்கப் பிரயத்தனப்படுகிறார்.

'இத்தன வருசத்துக்கப்புறம் நீங்க எங்ககூட வந்தா கேக்குறவங்களுக்கு என்ன பதில் சொல்றது?'

'வெளிநாட்டுல வேல பாக்குறதாதான சொல்லியிருக்கீக..... வந்துட்டேன்னு  சொல்லுங்க'

'ஒங்ககூட இருக்குறவள‌ என்ன சொல்லுறது?'

'அது பெரச்சன இல்ல. ஒறவுக்காரப்புள்ள, ஒடம்பு முடியல, புள்ளகுட்டியு இல்ல.  புருசெ வூட்டுல அனுப்பீட்டாக. நாங்க தான் நாதி அதுக்குன்னு சொல்லிரலாம். இது நாஞ்சொன்னதில்ல. அதுவே சொல்லுச்சு.'

தன் தவறுக்குத் தண்டனையாக, யாருமற்ற அனாதையென்ற சொல்லை வலிய‌ ஏற்கிறாள் அத்தை மகள் என்று புரிந்தது. மரணம் ஒரு மிகப்பெரிய ஆசான். அது வருவது நிதர்சனமாகும் போது மனம் எப்படி புடம் போட்ட தங்கமாகிவிடுகிறது!!!.

அம்மா ஏதும் பதில் பேசாமல் எழுந்து போனாள். அத்தை சமையல் கட்டில் தஞ்சம் புகுந்தாள். அப்பா,  இனி செய்வதற்கு ஏதுமில்லா பாவனையில் கூடத்து சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்தார்.


நான் வெளியில் போய் டியூஷனில் இருந்து தம்பியைக் கூட்டி வந்தேன். உள்ளே நுழையும் போது ஏதோ ஒரு மாற்றத்தை உள்ளுணர்வு உணர்த்தியது. டைனிங் டேபிளில் அப்பா சாப்பிட்டுக் கொண்டிருக்க, அத்தையைத் தேடினேன்.

சமையல் கட்டுக்குள் போனதும், அத்தை என்னிடம் மெதுவாக 'அம்மா, அப்பாவ இங்க வந்து இருக்கச் சொல்லிருச்சு. வேற ஏரியாவுல வீடு பாத்துரலாம்னுச்சு. கொஞ்சம் பெருசா, இன்னும் ரெண்டு ரூம்பு இருக்கா மாதுரி.. வீடு பாத்ததும் வந்துருவாங்க...' என்று விட்டு என்னை ஏறிட்டாள். கண்கள் சிவந்து, முகம் வீங்கி இருந்தது. கூடவே நான் ஏதாவது மறுத்து விடுவேனோ என்கிற பயமும் தெரிந்தது.

'அம்மா எங்க?..' 

'கொல்லக்கட்டுல..., ஆத்தா... ஒங்களுக்கு ஒரு எடஞ்சலும் நா வரவுடமாட்டே... நானே பூரா பாத்துக்குறே... பின்னாடி ஒரு ரூம்பு கொடுத்தாக்கூட போது...அதுபாட்டு இருந்துரு.. பெத்துப்புட்டே..... என்னா செய்ய?' அழுகிறாளா தெரியவில்லை.

கொல்லையில், மாடிப்படிக்கட்டில் அம்மா வானம் பார்த்து அமர்ந்திருந்தாள். நான் போய் தோள் தொட்டதும் திரும்பினாள். 

'அத்த சொல்லுச்சா?'

நான் தலையாட்டியதும் என் கையைப் பற்றினாள். நான் அவள் கையை எடுத்து என்னுடையதில் பொதிந்தேன். லோகு ஓடி வந்து 'நானூ...' என்று அம்மாவின் அருகில் அமர்ந்தான். நான் இருவரையும் அணைத்துக் கொண்டேன்.  மெல்ல அம்மாவின் தலையை வருடிக்கொடுத்தேன்.
===================================
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.
இது சிறுகதைகள்.காம் தளத்திற்காகவே எழுதப்பட்டு அதில் வெளிவந்தது.

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!!

செவ்வாய், 23 ஜூலை, 2013

சரயு...


images (1)சரயு வெடித்துச் சிரிப்பதன் காரணம் புரியாமல் பார்த்தாள் சுசி.

 அதிர்ந்து சிரிப்பதும் நடப்பதும் சரயுவின் இயல்பல்ல. ஆழங்காண முடியாத கடலமைதி அவள்.

தாழ்வாரத்துக் குறட்டில் அமர்ந்து அரிசியில் கல் பொறுக்கிக் கொண்டிருந்தவள் திடீரென சிரித்ததும் ஆச்சரியமானது சுசிக்கு...

'என்னாச்சுக்கா...

ம்ம்.. நிமிர்ந்தாள் சரயு. முன் வகிட்டில் குங்குமச் சிவப்பு, நெற்றியில் அரும்பியிருந்த வியர்வையுடன் சங்கமித்து, பொட்டுப் பொட்டாய் வியர்த்திருந்தது. கூர் மூக்கும் சின்ன உதடுகளும் பௌர்ணமி நிலவாய்த் தகதகத்து மின்னும் முகமுமாய், ரேணுவைப் போன்ற‌ தேவதையல்ல சரயு.  ஆயினும் அந்த மாநிற முகத்தில் துலங்கும் ஒளி சாதாரணமானதல்ல...

‘என்ன?’..

‘இல்ல சிரிச்சுட்டிருந்திங்கல்ல.. அதான்...’

பதிலுக்குப் புன்னகைத்தாள். சில நேரங்களில் புன்னகையும் பல நேரங்களில் ஓராயிரம் அர்த்தமுள்ள மௌனமுமே அவள் வாசகம். அபூர்வமாகத்தான் வாக்கியங்கள் வெளிவரும்.

சுசி தன் பார்வையை, சரயு அமர்ந்திருந்த   தாழ்வாரத்தைத் தாண்டிய முற்றத்தின் மீது வீசினாள்.  ரேணுவின்   குழந்தைகள் சியாமாவும் ரூபாவும் செப்பு சாமான்களோடு திண்ணையில் அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்தன. யுக யுகாந்திரமாய் பழக்கப்பட்ட அப்பா, அம்மா விளையாட்டு. எப்போதும் போல் அப்பா காரெக்டர் வேலையிலிருந்து  வருவதும் அம்மா   சமைப்பதும் நடந்து கொண்டிருந்தது.. ரூபா தான் அம்மா போல. அவள் புடவையாய் கட்டியிருந்த சுசியின் தாவணியோ, கால் மடித்து காய் நறுக்குவது போல் நடித்த பாங்கோ, பேசிய வசனமோ... ஏதொவொன்று சரயுவின் மோனத்தில் கல்லெறிந்து சிரிப்பலையை சிதறச் செய்திருக்க வேண்டும்.

'வெளையாட்டுப் பாத்தீங்களா..

அதற்கும் புன்னகை. கொஞ்சம் பொறுத்து, 'நல்லா கவனிச்சுருக்குங்க ரேணுவையும் அவ வீட்டுக்காரரையும்' என்றாள் சரயு.

தன் யூகம் மெய்ப்பட்டதில் மகிழ்வடைந்து சுசி, மேலும் பேச்சைத் தொடரும் முன், சரயு எழுந்து சென்று விட்டாள்.

சரயு அப்படித்தான்.. இப்போதல்ல.. எப்போதுமே.. தன்னிருப்பை வெளிக்காட்டிக் கொள்ளாததோடு, தனக்கு வேண்டியதைத் தான் தான் கேட்டுப் பெற வேண்டும் என்ற உணர்வே இல்லாதது போல் தோன்றும் சுசிக்கு.
சுசிக்குப் பத்து வயதாயிருக்கையில் வீரபாண்டி அத்தையின் மகன் ஆறுமுகத்துக்கும் சரயுவுக்கும் கல்யாணம் நடந்தது. சுதி மாறாமல், சரயு பன்னிரண்டாம் வகுப்பு முடித்ததும் அடுத்த முகூர்த்தத்தில் எந்தப் பேச்சு வார்த்தையும் முன் பின் அபிப்பிராயங்களும் இல்லாமல், பூவுக்கடுத்து காய் என்பது போல் இயல்பாக நடந்த விஷயம் அது. உறவுகளும் இது இயல்பே என்பது போல் எந்தச் சந்தடியும் இல்லாமல் கல்யாணத்திற்கு வந்து சென்றனர்.

ஊர்க்கோவிலில் கல்யாணம், வீட்டு முற்றத்தில் தட்டுப் பந்தல் போட்டு விருந்து, இரண்டாம் நாள் மறுவீடு என்ற எந்த மாறுதலும் இல்லாமல் நடந்தது நினைவிருக்கிறது.

மாறியது ஒன்று மட்டும் தான். கல்யாணம் நடந்து நாலு வருடம் கடந்த பின், ரேணு அக்காவுக்கு கல்யாணம் கூடி வந்த போது வீரபாண்டி அத்தை பின் கட்டு
கலகலக்கக் கத்தியது தான் மாற்றம்.

“என்னா இது? என்னா இதுங்குறேன்... மூத்தவளுக்கு அஞ்சு பவுனுக்குச் செயினு மட்டும் போட்டு காது மூக்க மூடி கதவடச்சுட்டீக. ரெண்டாமவளுக்குப் பத்து பவுனுன்னா... என்னா போக்கத்தவுகளா நாங்க..”

“இந்தாத்தா.. என்னா இம்புட்டு சத்தமாப் பேசுறீக.. வேண்டாமத்தா.. ஒக்காரு செத்த... அவுக என்னா வேணுன்னுட்டா செய்றாக.. மாப்புள ஊடு கொஞ்சந் தண்டி தே.. அவுக கேட்டத செய்யுறாக...”

“அப்ப நாங்க இவுக தரந்தண்டிக்கு கொறச்சலுன்றீக... எம் புள்ள வெறும் பயலுன்றீக..”

அப்பாவின் நண்பரான மாயாண்டி மாமா, பஞ்சாயத்துப் பேச வந்தவர், வெற்றிலையை மென்று துப்பினார். அத்தையை இகழ்ச்சியாகப் பார்த்தார்.

'ஆத்தா... ஆரு இது.. ஒன்ன வளத்த அண்ணெ, அண்ணி  அவுக மக. ஒம் மேல வச்சுருக்க பாசந்தான அதுக மேலயு. அதுல வேத்தும இல்லாத்தா.. வேணுன்னு செய்வாகளா.. புரிஞ்சுக்க... வேணுன்னா.. இந்தக் கல்யாண முடுஞ்சு கொஞ்ச நாளு செண்டு ஒம் மருமகளுக்கும் அஞ்சு பவுன செய்யச் சொல்லு. இன்னும் இருக்குல்ல வளகாப்பு....பிள்ளப் பேறு...'

அத்தை நொடித்தாள்.'ஆஆம்ம்ம்மா... பெரிய வளகாப்பு. ஊருல ஆளாளுக்குப் பேச்சு தாங்கல.. அண்ணெ மகளக் கெட்டி வந்து வருச நாலாச்சு. இன்னும் வகுறு தொறக்கலியே... சொந்தத்த பாத்து ஏமாந்தியான்னு. போன வாரம் சுங்குவார்பட்டிலந்து பொண்ணு கொடுக்கவே வந்திட்டாக  ரெண்டாந்தாரமா...'

அப்பா அதிர்ந்து நிமிர்ந்தார்……'என்னா சொன்ன...?'

'ஆங்... சொன்னாங்க சுடுசோறுக்கு சொரணயில்லன்னு... எம் புள்ள அளகுக்கும் எங்க ஊட்டுக்கு இருக்குற மரியாதக்கும் ஒண்ணுல்ல பத்து பொண்ணுக வருவாக எம் புள்ளக்கு..'

'ஆத்தா.. மரியாத தவறுது... ஆரு முன்ன இப்புடியெல்லாம் பேசுற.... நல்லால்ல சொல்லீட்டே...'

'ஆரு மரியாத தவறுனது. மூத்த மாப்புள இருக்க சொல்ல, அவனுக்கு சொல்லிவுடாம ரெண்டாவது பிள்ளக்கு பேசி முடுச்சுருக்காக. எங்க நடக்கும் இது?. என்னாடான்னு வெசாரிச்சாவுல்ல வெளங்குது... அஞ்சு பவுனு கூட்டிப் பேசுனது.'

‘ஆத்தா... மொத, மாப்புளக்கி சொல்லிவுடல, சீரு கம்மிண்டீக, அப்புறமேட்டு, மருமக இன்னம் புள்ள உண்டாகலண்டீக, அம்பூட்டுப் பெரிய மகராசி.. என்னாத்துக்கு பகுமானப் பேச்சுப் பேசூறெ... மூடி மறச்சுப் பேசாத ஆத்தா.. இப்ப என்னா முடிவு சொல்லுற.?’.

‘போடுற அஞ்சு பவுன இப்பவே போடணும். எம் புள்ளகிட்ட வந்து சொல்லிவுடாததுக்கு மன்னிப்புக் கேக்கணும். அப்பத்தே கண்ணாலத்துக்கு வருவோ. இல்லன்னா பெரச்சின தே சொல்லீட்டே....’

'இது வேறென்னத்தயோ மனசுல வெச்சுப் பேசுது மாப்புள... நானு என்ன சொல்றேண்டா..'  மாயாண்டி மாமா  பேச.. அம்மா கண்கலங்க சாமி பிறையில் காசு வைத்து வேண்டினாள்.

அதற்கப்புறம் என்ன நடந்ததென்று தெரியாது. ரேணுவின் கல்யாணத்துக்கு சரயு வரவில்லை. அதற்கடுத்த ரெண்டாம் நாள் பெட்டியோடு வந்து நின்றாள். அத்தான், பஸ் ஸ்டாண்டில் இறக்கிவிட்டுப் போனதாய்ச் சொன்னாள்.

அப்பா எதுவும் பேசவில்லை. அம்மாவும். நாலு  மாதம் கழித்து,  அத்தானின் இரண்டாம் திருமணத் தகவல் வந்த அன்று, உள்ளூர் தொழிற்பயிற்சிப் பள்ளியில்  தையல் ஆசிரியை வேலைக்கான படிப்பில் சேர விண்ணப்பம் வாங்கி வந்து தந்த போது தான் அப்பாவின் மனம் புரிந்து அதிர்ந்து அழுதாள் அம்மா. அப்போதும் சரயு எதுவும் பேசாமல், சலனமின்றி, விண்ணப்பம் வாங்கிக் கையெழுத்திட்டாள்.

சியாமாவின் கத்தல் நனவுலகுக்கு இழுக்க, திரும்பிப் பார்த்த போது, ரேணு அம்மாவிடம் விசும்பிக் கொண்டிருந்தது தெரிந்தது. இது கிட்டத்தட்ட ஒரு மாதமாக தினசரி நடப்பு.

'என்னய என்னா பண்ணச் சொல்லுறீக?. அந்த மனுசெ என்னாடான்னா  ஊடு வாங்கக் கொஞ்சம் பணம் தவங்குது,  ஒங்கப்பாவத் தரச் சொல்லுன்றாரு. அப்பா என்னான்னா...'

'ஒனக்குக் கொஞ்சம்மாச்சு அறிவுன்றது இருக்குதா?. இப்பத் திடீர்னு ரெண்டு லச்சத்த வெட்டுண்டா எங்குட்டு போவாரு?. இருக்குற  ஊடு கடனுல கெடக்கு. நாளக்கே அவருக்கு ஒண்ணுன்னா, ரெண்டு பொட்டப் புள்ளகள வச்சிட்டு எங்குட்டு போக முடியு?. ஆச்சி, இன்னு ஒண்ணு ரெண்டு வருசத்துக்குள்ளயு  சுசிக்கு கலியாணங்க் கெட்டணு. இப்பமே பொண்ணு கேட்டு வாராக. அதுக்கே காசக் காணுன்னுட்டு தள்ளித் தள்ளிப் போட்டுக் கெடக்கு. அவ வயசுல, ஒனக்கு பெருசு பொறந்தாச்சி. இம்புட்டுச் சடவுல, எவெ எக்கேடு கெட்டா எனக்கென்னா... எங்காரிய எனக்கு முக்கியமுண்டு பேசுறியே....'

ரேணுவுக்கு சுருக்கென்றது போல, 'பின்ன, என்னயு பெரியவள மாதுரி, பொறந்த ஊட்டோட கெடந்து சாகச் சொல்லுறியா.. எனக்கும் ரெண்டு பொட்டப் புள்ளக இருக்குல்ல...'

அம்மா அசந்து போனாள். நானும் தான்.

புயலடித்தது போல சரயு வந்து நின்றாள். எங்கிருந்தாளோ, என்ன கேட்டாளோ!

'இதப் பாரு, என்னயப் பத்தி பேசுற வேல வெச்சுக்கிட்டா நல்லாருக்காது சொல்லீட்டே..  நானும் ஒன்னய மாதுரி, நாயமில்லாம,  நாம புகுந்த ஊட்டோட இருந்தாத்தே மரியாதன்னு   நெனச்சிருந்தா.. நீ இன்னக்கி, ஒரு புருசெனக்  கெட்டி, ரெண்டு புள்ளப் பெத்துருந்திருக்க மாட்ட...... ஒன் அளகுக்கு மயங்கின‌ எம் புருசெனோட மொறயில்லாத ஆசக்கிப் பணிஞ்சு போயி ஒன்ன ரெண்டாந் தாரமாக் கெட்ட ஒப்பாமெ.. அநியாயத்துக்குப் பயப்படக் கூடாதுண்டு இருக்கச் சொல்லத்தே நீ இன்னக்கி நிமுந்து இத்தத்தண்டிப் பேச்சுப் பேசூறே.. நெனப்புல வெச்சிக்க.. என்னா?'

சொடுக்குப் போடுவது போலப் பேசியவள், வேகமாக உள்ளே சென்று விட்டாள்.

நானும் அம்மாவும் விழி அகட்டி அமர்ந்திருக்க, ரேணு வியந்து போய்ப் பார்த்தாள். பின், மெல்ல,  எழுந்து,  அக்காவின் தையல் மெஷினைத் தடவிக் கொடுத்தாள்.
 ====================================================

கதையாக்கம்: பார்வதி இராமச்சந்திரன்.
வல்லமை மின்னிதழில் வெளிவந்தது.

படத்துக்கு நன்றி:
ஓவியர் இளையராஜா,
https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcRAtiZzD79RBGr1-tGtxB2FyTUKmkpOdm-vObzwtyAafI-NCHil