புதன், 10 மார்ச், 2021

KANTHARALANGAARAM.. SONG 1...கந்தரலங்காரம்..பாடல் 1.

     பாடல்..1.


          பேற்றைத் தவஞ் சற்றுமில்லாத வென்னைப்ர பஞ்ச மென்னுஞ்

சேற்றைக் கழிய வழிவிட்ட வா. செஞ்சடாடவிமேல்

ஆற்றைப் பணியை யிதழியைத் தும்பையை யம்புலியின்

கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே.

 

பொருள்:

 " காடு போல் அடர்ந்த தன்  செஞ்சடை மேல், கங்கையையும், பாம்பையும், கொன்றை மலரையும், தும்பைப் பூவையும், பிறை மதியையும் தன் அளப்பரிய கருணைக்கு அடையாளமாக சூடியிருக்கும் சிவபெருமானின் குமாரன்,   முன் செய் புண்ணியமோ, இறைவனைப் பெற விரும்பிச் செய்த தவம் முதலான ஆன்மீக சாதனைகளோ சற்றும் இல்லாத என்னை,  ( ஆணவம், கன்மம், மாயை  எனப்படும் ) முக்குற்றங்களாகிய‌  சேறு, என்னிலிருந்து நீங்குமாறு, எனக்கு அருளியதில் என்ன வியப்பு!!" என்கிறார் அருணகிரியார்.


 இப்பாடலில், சித்தாந்தத்தின் முப்பொருள் உண்மைகளான, பசு (ஆன்மா), பதி, பாசம் ஆகிய மூன்றும் சொல்லப்படுகின்றன. 'என்னை' என்பது ஆன்மாவைக் குறிக்கும்.. சேறு' ஆன்மாவிடமிருந்து நீங்க வேண்டிய மும்மலங்களாகிய பிணிப்பைக் குறிக்கும்..சிவ குமாரனே பதியாவான்.


தன்னைச் சார்ந்தவர்களைப் புனிதர்களாக்கும் தன்மையின் குறியீடு கங்கை. இறைவன் திருமுன் அடங்கியிருக்கும் செருக்கின் குறியீடு நாகம். சிறந்த நிறமும் மணமும் உடைய கொன்றை, உத்தம சாதகர்களின் குறியீடு. ஓரிதழ் கொண்ட மணமற்ற தும்பை, இறைவன் பால் கொண்ட அன்பைத் தவிர வேறெதுவும் அறியாத அடியார்களின் குறியீடு. தவறிழைத்தவர்களும், எம்பிரானை அடைந்தால் காக்கப்படுவார்கள் என்பதன் குறியீடு சந்திரன். ஆக, கங்கை, பாம்பு, கொன்றை, தும்பை, பிறை மதி ஆகிய ஐந்தையும், தம் கருணைக்கு அடையாளமாக இறைவன் தன் தலையில் சூடியிருக்கிறார். இத்தகையை தந்தையின் குமாரனும்,  தந்தையைப் போல், கிருபைக்கு இருப்பிடமானவனே. அவன் இந்தப் பிரபஞ்சமென்னும் சேறு நீங்குதற்கு,  அருள் செய்ததில் என்ன வியப்பு!!.. என்கிறார் அருணகிரியார். மும்மலங்களும், இறையருளால் நீங்கும் என்பது, பாடலின் உட்குறிப்பு.

(தொடரும்...).


அன்புடன்

பார்வதி இராமச்சந்திரன்


நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!


படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக