புதன், 31 மார்ச், 2021

KANTHARALANGAARAM...SONG 2..கந்தரலங்காரம்.. பாடல் 2.


 பாடல்..2.

  அழித்துப் பிறக் கவொட்டாவயில் வேலன் கவியையன்பால்

எழுத்துப் பிழையறக் கற்கின்றி  லீரெரி மூண்டதென்ன

விழித்துப் புகையெழப் பொங்குவெங் கூற்றன் விடுங்கயிற்றாற்

கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே

 

பொருள்:

" பிறவிச் சுழலை நீக்கும், கூர்மையான வேலை  உடைய‌ திருமுருகனின் புகழ் பாடும் கவியை, (வாழும் நாட்களில்) அன்பு நிறைந்த உள்ளத்தோடு, எவ்விதப் பிழையும் இன்றிப் பாடக் கற்காமல் இருக்கிறீர்களே!.  தன் கண்களின் புகையோடு கூடிய அனல் எழ, கோபம் பொங்குகின்ற முகத்தோடு கூடிய கால தேவன்,  தன் கையில் இருக்கும் பாசக் கயிற்றல், கழுத்தில் சுருக்கிட்டு இழுக்கும் அந்த தினத்திலா கவி கற்கப் போகிறீர்கள்??? “  என்கிறார் அருணகிரியார்..


 பிறவிச் சுழலை நீக்க உதவும் ஞானத்தை, முருகப் பெருமான் தன் திருக்கரத்தில் கூரிய முனையுடைய வேலாயுதமாக‌ ஏந்தியிருக்கிறான். அவன் அருளால், ஞானம் கைவரப் பெற்றால், பிறவாமை கிடைக்கும்.


முருகப் பெருமானின் திருவருளைப் பெற, அவனது புகழைப் பாடும் பாடல்களை பிழையில்லாமல் பாடக் கற்க வேண்டும். அதாவது, பாடலின் பொருளுணர்ந்து, அது நம் உணர்வில் தோயுமாறு திரும்பத் திரும்ப, பல முறை பாடுதல் வேண்டும். அவ்விதம் செய்யும் போது, உள்ளொளி பெருகும். ஞானம் கிட்டும். இறையனுபவம்  வாய்க்கும்.. .அந்திய காலத்தில், இறைவனது திருவடி நிழலில் இன்புறலாம். இல்லையெனில், கொடுமையான உருவமுடைய காலன், தன் பாசக் கயிற்றால் கழுத்தில் சுருக்கிட்டு, உயிரினை உடலில் இருந்து பிரித்துக் கொண்டு போகும் மரண வேதனையை அனுபவிக்க நேரிடும். பிறவிச் சுழல் நீங்காது.


மேலும் அந்த நேரத்தில், இறைவன் புகழைப் பாடும் கவியை கற்பது இயலுமோ!!..ஆகவே, இப்போது கற்காமல் போனீர்களென்றால், அந்திய காலத்திலா கற்கப் போகிறீர்கள்? என்று, பிறவாமை வேண்டி, இறைவனின் புகழைப் பாட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார் அருணகிரியார்.


(தொடரும்).


அன்புடன்

பார்வதி இராமச்சந்திரன்


நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!..


படத்துக்கு நன்றி!. கூகுள் படங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக