அன்றைய தினம் மாலை சுமார் 5 மணி அளவில் கோவில்கள் தரிசனம் செய்யப் புறப்பட்டோம்.
காசி மாநகரத்திற்குள் நுழைபவர்கள் அனைவருமே இறைவனால் தேர்வு செய்யப்பட்டவர்கள் என்று புராணங்கள் கூறுகின்றன. இத்தலத்தின் பெருமைகள் சொல்லில் அடங்காது. காசி மாநகருக்கு 'வாரணாசி' என்ற மற்றொரு பெயரும் உண்டு. அதுவே இன்று பொதுவாக வழங்கப்படுகிறது. கங்கையின் கிளை நதிகளான வருணா, அசி என்ற இரு நதிகளின் சங்கமத் தலம் ஆதலால், இது வாரணாசி எனப் பெயர் பெற்றது.
காசியில் நாம் பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம். வேக வேகமாகப் பார்ப்பதானாலும் ஒரு முழு நாள் தேவைப்படும். எங்களுக்கோ அரை நாளுக்கும் குறைவான பொழுதே கிடைத்தது. முக்கியமான சில கோயில்களுக்கு மட்டுமே சென்று வர முடிந்தது.
யாத்ரீகர்களுக்கு உதவும் பொருட்டு, காசி நகரத்தின் மேப் தொடர்பான லிங்க் கீழே கொடுத்திருக்கிறேன்.
காசியில் நாங்கள் முதலில் சென்றது, கால பைரவர் ஆலயத்திற்கு. காசி செல்பவர்கள் அனைவரும் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில் இது. இங்கே காசியின் சிறப்புகளுள் ஒன்றான 'தண்டம்' வழங்கப்படுகிறது. தண்டம் என்பது ஒரு நீண்ட கோல். அதைப் பக்தர்களின் தலையில் வைத்து ஆசீர்வதிக்கிறார்கள். இதனால், பக்தர்களின் பாவங்களை கால பைரவர் ஸ்வீகரித்து அழிப்பதாக ஐதீகம்.
காலபைரவர் கோயிலிலேயே காசிக் கயிறுகள் வாங்க வேண்டும். சின்ன சைஸ் , பெரிய சைஸ் கயிறுகள், மற்றும் ப்ரேஸ்லெட் போன்ற டைப்பில் தடிமனான கயிறுகள் என பலவிதம் கிடைக்கிறது. போகும் முன்பே எவ்வளவு வேண்டும் என்று கணக்குப் போட்டுக் கொண்டுவிட்டோம். யாத்ரீகர்கள் அனைவரும் சேர்ந்து மொத்தமாக வாங்கும் பட்சத்தில் நன்றாக பேரம் பேசலாம்.
காசியின் பெரும் சிறப்புப் பெற்ற புராதனமான ஆலயங்கள் பலவும் சிறு சிறு சந்துகளின் ஊடேயே அமைந்திருக்கின்றன. மிக நன்றாக வழி தெரிந்தவர்கள் துணை கொண்டே சென்று வர இயலுகிறது.
சின்ன சின்ன கன்ஸீல்ட் கவர்களில், அங்கு கொடுக்கப்பட்ட பஸ்மம், விபூதி முதலியவற்றைச் சேகரித்துக் கொண்டோம்.
அடுத்ததாக நாங்கள் சென்றது ஆஞ்சநேயர் கோவில். சங்கட மோசன் ஆலயம் என்று வழங்கப்படுகிறது. நம் சங்கடங்களைத் தீர்ப்பவராதலால், ஸ்ரீஹனுமாருக்கு இந்தத் திருநாமம்.மகான் ஸ்ரீதுளசி தாசர் அமைத்த திருக்கோவில் இது. மிகப் பெரிய சுற்றளவில் அமைந்திருக்கிறது அஞ்சனை மைந்தனின் ஆலயம். உள்ளே மிகுந்த சாந்நித்யத்துடன் ஸ்ரீராம தூதன் அருள்பாலிக்கிறார். அருகே, லிங்கத் திருமேனியும் இருக்கிறது. ஸ்ரீஆஞ்சநேய சந்நிதிக்கு எதிர்ப்புறத்தில், ஸ்ரீஸீதா, லக்ஷ்மண ஹனுமத் சமேத ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்கும் சந்நிதானம் இருக்கிறது. மிக அதிகக் கூட்டம் இருந்தது. வரிசையில் நின்று தரிசனம் செய்தோம். அங்கேயே பிரசாத ஸ்டால் இருக்கிறது. அநேகமாக அனைவரும் வாங்குகின்றனர். ஆனால் கவனமாக வெளியே தூக்கி வர வேண்டியிருக்கிறது. எக்கச்சக்க குரங்குகள்!!!. கோவிலுக்குள் நுழையும் இடத்திலிருந்து எல்லா இடத்திலும் 'குடுகுடுவென' ஆனந்தமாக ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. அதனால் இதைச் செல்லமாக MONKEY TEMPLE என்றும் அழைக்கிறர்கள்.
பிறகு, துளசி மானஸ மந்திர், துர்காதேவி அம்மன் ஆலயம் ஆகியவற்றையும் தரிசனம் செய்தோம். ஸ்ரீதுளசி தாசர், இராமபிரானின் திவ்ய சரிதமான இராமாயணத்தை, ஸ்ரீராமசரிதமானஸ் என்ற திருநாமத்துடன் இந்தி மொழியில் எழுதிய இடமே 'ஸ்ரீதுளசி மானஸ மந்திர்'. மிகுந்த கவனத்துடன் பராமரிக்கப்படுகிறது இந்தக் கோவில்.
துர்காமாதாவின் ஆலயத்தில், அம்பிகையின் சாந்நித்யம், ஒரு 'பிண்டியில்' ஆவாஹனம் ஆகியிருக்கிறது. அங்கும் கூட்டம் மிகுதியாக இருந்தது.
பின், புகழ்பெற்ற விஸ்வநாதர், விசாலாக்ஷி ஆலயம். காசியின் பலனே ஸ்ரீவிஸ்வநாதர் தரிசனம் தானே!!!. குறுகலான தெருக்களின் ஊடே சென்று முதலில் விசாலாக்ஷியை தரிசித்தோம். தனிக்கோவிலில் கொலுவிருக்கிறாள் அம்பிகை. இது நகரத்தாரின் பராமரிப்பிலேயே உள்ளது. சுற்றுச் சுவர்களில் தமிழ் எழுத்துக்களைக் காண முடிகிறது. இக்கோவிலின் அர்த்தஜாம பூஜை, இன்றளவும் நகரத்தார் பெருமக்களாலேயே சிறப்புற நடத்தப்படுகிறது.
விசாலாக்ஷி அம்பிகையின் சந்நிதி ஒரு சக்தி பீடமாகும். அம்பிகையின் திருச்செவிகளிலிருந்த தோடுகள் விழுந்த இடமாகக் கருதப்படுகிறது. சாந்த ஸ்வரூபிணியான அம்பிகை.
கோயிலில் அவ்வளவாகக் கூட்டம் இல்லை. வெள்ளிக் கவசத்தில், சாந்தமான திருமுகத்துடன், கருணை பொங்கும் திருவிழிகளுடன் அம்பிகை கொலுவிருக்கிறாள். அம்பிகையின் திருமுன் பூர்ணமகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. அனவரதமும் குங்கும அர்ச்சனை செய்த வண்ணம் இருக்கிறார்கள். அம்பிகையின் திருவுருவத்தின் பின்புறம் சக்தி பீடம். அம்பிகையின் அருட்சக்தி, ஒரு சிறு பீடத்தில் ஆவாஹனமாகியிருக்கிறது. கேட்பவர்களுக்குக் காண்பிக்கிறார்கள்.
அம்பிகையின் அருட்கடாக்ஷம் பொங்கும் திருவிழிகளைப் பார்த்தவாறே இருந்துவிடலாம் எனத் தோன்றுகிறது. கனிவான திருமுகம், மிகுந்த பரிவோடு, 'வா, என்ன வேண்டும் உனக்கு' என்று வினவும் காருண்யம் மிகுந்த பார்வை. விவரிக்க வார்த்தைகளில்லை!!!. எத்தனை துன்பங்கள் இருந்தாலும், அம்பிகையைப் பார்த்த மாத்திரத்திலேயே அவை பறந்து, மறந்து போய் விடுவது உறுதி. மிக நெருக்கமான ஒருவரைப் பார்த்த உணர்வே ஏற்படுகிறது.
பிரகாரம் சுற்றி வந்து, நமஸ்கரித்தோம். அருகிலேயே நவக்கிரக சந்நிதி இருக்கிறது. அங்கேயே ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று மேல்நோக்கிப் பார்த்தால் தங்கக் கோபுரம் தெரிகிறது. மிகுந்த பக்தியுடன் வணங்கினோம்.
அஷ்ட விநாயகத் தலங்களில் ஒன்று காசி. டுண்டி விநாயகர், இத்திருத்தலத்தில் அருள் பாலிக்கிறார். காசி விஸ்வநாதர் கோவில் முன்பாக, டுண்டி விநாயகரைத் தரிசித்தோம். அதன் பின், காசி விஸ்வநாதர் சந்நிதிக்குச் சென்றோம். வழியில், ஒரு மண்குடுவையில், பாலில் ஊமத்தம்பூ முதலியவை போட்டு விற்கிறார்கள். இதை விஸ்வநாதருக்கு அபிஷேகிக்கலாம். ஆளுக்கு ஒன்று வாங்கிக் கொண்டோம். நல்ல கூட்டம். வரிசையில் நின்றோம். சந்நிதியை நெருங்க நெருங்க ஒரு வித பரபரப்பு தொற்றிக் கொண்டது.
சந்நிதியை அடைந்தோம். நம் பிறவிப் பயனே விஸ்வநாதராக அமர்ந்து அருள்பாலிக்கின்றது என்பதே உணர்வாக இருந்தது. ஆனந்தமான தரிசனம். எல்லாம் முடிந்து, பிரகாரம் சுற்றி வந்தோம். விஸ்வநாதர் சந்நிதி அருகில் நின்ற திருக்கோல அன்னபூரணி தேவி அருள்புரிகிறாள். மகாலட்சுமி, பல்வேறு மஹரிஷிகள் பிரதிஷ்டித்த லிங்கத் திருமேனிகள் என்று தரிசித்தோம். அதன் பின் தனிக்கோவில் கொண்டருளும் அன்னபூரணி அம்பிகை சந்நிதி அடைந்தோம். பளிங்குக் கோவிலில் குடிகொண்டருளுகிறாள் பாரிலுள்ளோர் பசி தீர்க்கும் பரதேவதை. அழகு கொஞ்சும் தங்கமுக மண்டலம். நல்ல தரிசனம் கிடைத்தது. இங்கும் பிரகாரத்தில் மந்திரித்த கயிறு தருகிறார்கள். அரிசியும் பிரசாதமாகக் கிடைக்கிறது. வீட்டுக்கு எடுத்து வந்து அரிசிப்பானையில் சேர்க்கலாம்.
கோவிலை விட்டு வெளி வந்தோம். அடுத்ததாக, சோழி அம்மன் சந்நிதி. அதற்குக் கொஞ்ச தூரம் காரில் பயணித்தோம். வாசலிலேயே, சிறு மண் சட்டிகளில் சோழிகள் விற்கிறார்கள். வாங்கிக் கொண்டோம். விற்பனை செய்யும் சிறுவனே, கூட வந்தான். அம்பிகையின் சந்நிதியை அடைந்ததும் நன்றாகத் தரிசித்து, சோழிகளைச் சமர்ப்பித்தோம். கூட வந்த சிறுவன், சில மந்திரங்கள் சொல்லி, எங்களைத் திருப்பிச் சொல்லச் சொன்னான். நிறைவாக, மழலைத் தமிழில், 'காசி புண்ணியம் எனக்கு, சோழி புண்ணியம் உனக்கு' என்று சொல்லி முடிக்கச் சொன்னான். செய்தோம்.
அதன் பின் கங்கா மாதா ஆரத்தி பார்க்கக் கிளம்பினோம். கங்கையில் கொஞ்ச தூரம் படகில் பயணிக்க வேண்டும். நிறையப் பேர் பயணம் செய்கிறார்கள். ஆரத்தி நடக்கும் இடத்திற்கு எதிர்ப்புறமாக, படகுகள் வரிசையாக நிறுத்தப்படுகின்றன. அங்கிருந்து தரிசிக்கலாம். இரண்டு இடங்களில் அழகாக ஆடை அணிந்த பண்டாக்கள் அற்புதமாக கங்காமாதாவுக்கு ஆரத்தி காண்பிக்கிறார்கள். தூபம் , தீபம், அடுக்கு ஆரத்தி என அத்தனையும் காணக் கண் கோடி வேண்டும். ஆரத்தி எடுக்கும் இடத்தின் அருகிலும் ஏகக் கூட்டம். அந்த இடத்தில், ஆங்காங்கே டி.வி. வைத்துக் காண்பிக்கிறார்கள். படகுகளின் ஊடே, ஒரு சிறுவன் வந்து தட்டுக்களில் வைத்திருந்த தீபங்களை விற்கிறான். ஒரு சிறு தொன்னையில் இரு அகல் தீபங்கள் மற்றும் பூக்கள். வாங்கி, நாமும் ஆரத்தி சமயத்தில் கங்கையில் மிதக்க விட்டு வழிபடலாம். அனைவரும் தீபங்கள் ஏற்றி கங்கைத் தாயை வணங்கினோம்.
காசியின் பிரசித்தி பெற்ற பூஜைகளில் ஒன்றான சப்தரிஷி பூஜை, சுமார் ஏழரை மணிக்கு ஆரம்பிக்கிறது. ஆரத்தி ஏழு மணிக்கு ஆரம்பித்து எட்டு மணி சுமாருக்கு முடிகிறது. ஒரு நாளில் ஏதேனும் ஒன்றை மட்டுமே தரிசிக்க இயலும். நாளை சப்தரிஷி பூஜையைப் பார்க்கலாம் என நினைத்துக் கொண்டு புறப்பட்டோம்.(தொடரும்...)
சிவனருளால்,
வெற்றி பெறுவோம்!!!!
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.