புதன், 29 மே, 2013

நீ வரு நாளப் பாத்திருக்கேன்.......



கொதிக்கிற வெயிலிலே கூலி வேல நாம்பாத்து

கொண்டார காச கேட்டு கன்னத்துல அடிக்கிறியே

வடி கஞ்சி கடங்கேட்டு வாங்கிக் குடிச்சுப்புட்டு

ஒம் பிள்ள படுத்திருக்கே  ஒனக்கிது தா(ன்)  தெரியலயா?


பச்ச புள்ள மடியிருத்தி பால் கொடுக்குற வேளையிலே

எச்சி துப்பி அடிக்கிறியே எட்டி நீயும் மிதிக்கிறியே

கத்தி  கதறி அலறுகிற கைப்பிள்ள முகம் பாத்து

குத்தி மனச‌ பிடுங்குதய்யா எ வயிறு கொதிக்குதய்யா


நாலு வருச முன்ன நா வாழ்ந்த பவுச கண்டு

நாலூரு சீம எல்லா(ம்) நாம் போனா மதிப்பாக‌

நாம் பொறந்த ஊருலயும் நாம் புகுந்த வூட்டிலயும்

எம் போல வாழணுன்னு எப்பவுந் தா வாழ்த்துவாக‌


எரிஞ்ச கண்ணு பட்டு எம் பொழப்பு போச்சுதய்யா

எங்கிருந்தோ வந்த குடி எங்குடியக் கெடுத்ததய்யா

எட்டூரு விட்டெறியும் எ ராசா பேரு சொன்னா

பட்டுன்னு தள்ளி வுட்டுப் பாத்திருச்சே இந்தக் குடி!!


எம்புட்டோ சொன்னேனே!! என்ன நீயும் மதிக்கலயே

எதுத்துக் கேட்டாக்க ஒன் மனசு சகிக்கலையே

மந்திரிச்ச கோழி போல, மறுக்கா மறுக்கா நீயும்

சந்தியிலே கள்ளுக் கட போறதயும் நிறுத்தலையே


பத்திரமா பொட்டியில வச்ச நக போச்சுதய்யா

பத்திரத்த வச்சதுல பழய வீடு போனதய்யா

சத்திரத்த கட்டி வச்சு தருமஞ் செஞ்ச பரம்பரய‌

புத்தியில்லா மனுசெ ‘குடி’, கொக்கரிச்சு தின்னதய்யா


வெறுப்பு மீறிப் போய் வெசங் குடிச்சுப் போகலான்னு

வெவரங் கெட்டுப் போய் ஒரு நேரம் மயங்கிப் புட்டேன்

வெனயம் இல்லாத எம் பிஞ்சுக மொகம் பாத்து

வாழ்ந்து தே  பாப்போம்னு வீராப்பா நெனைச்சுப் புட்டேன்


இனிமேட்டும் ஒ(ன்) அடி தாங்க என்னால முடியாது

இனி பொறுத்துப் போனாக்கா ஒரு நாளும் விடியாது

ஒங் குடியும் குடுத்தனமும்  ஒரு கூட்டா சேராது

ஒன் நெனப்பு மாறலென்னா ஒறவிருக்க ஏலாது


எப்பத் தா(ன்) குடிக்காம இங்கிருக்க‌ நீ வரியோ,

தப்பாம அது வரக்கும் தவிப்போட  காத்திருக்கேன்

பாழாப் போற குடி பாதகத்த தொலைச்சுப் புட்டு

வாழ்வு வேணுமுன்னு நீ வரு நாளப் பாத்திருக்கேன்.


நட்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

வெற்றி பெறுவோம்!!!

நன்றி: வல்லமை மின்னிதழ்
படங்கள் நன்றி:கூகுள் படங்கள்.

புதன், 22 மே, 2013

தனுசுவின் கவிதைகள்....குற்றம் செய்!

ஆற்றலுக்கு ஆணையும்
அழகுக்கு பெண்ணையும்
படைத்தது இயற்கை!
சில கண்ணில்லா காமாந்தகர்களால்

இந்த ஆற்றல்
ஆணாதிக்கமாக மாறுவதால்
அசிங்கப்பட்டு நிற்கும் ஆண்களில் நானும் ஒருவன்.

கலவி
அன்பின் உச்சம்
காமம்
கலவியின் கௌரவத்தை குறைக்கும் எச்சம்.

காமத்தின் கொடுமை
அதற்கு
கண்ணில்லாமல் போனது
காலத்தின் கொடுமை
அதை
கண்மூடி பார்ப்பது

பெண்
காமத்துக்கு படைக்கப்பட்ட உடமையா?
பெண்ணினத்தை
அப்படி நினைப்பது உலகத்தின் மடமையா?

பத்து வயது பூர்த்தியாக
பத்து நாள் இருக்கும்
பள்ளி செல்லும் பிள்ளை  மீது
பள்ளியறை சுகம் காண
பாயும் வெறியனையும்..

தன் மதி தவறும் போது
தங்கையையும்
தற்காலிக தாரமாக்க
நினைக்கும்
தரங்கெட்டவனையும்.....

சுற்றமோ
சொந்தமோ
யாருமின்றி சேலையோடு செத்துக்கிடந்தால்
சுடுகாட்டிலும்
பிணத்தை புசிக்கும் கழுகையும்....

புதரென்று பொருள் கொண்டு
புறம் தள்ளாமல்
இந்த உயிர்களை
மயிரென்று வெட்டித்தள்ள மனம் கொள்வோம்!

எதிர் கொள்ள நேரிடும்
இந்த சட்டத்தை
விட்டத்தில் போட்டு
சாட்டையை சுழற்றி நாம் ஒரு விதி செய்வோம்!

காமத்தின் உச்சத்தில்
சதை மேயும் மிருகத்தை
தயங்காமல்
நாமே அழித்து
கொன்றொழிக்கும் குற்றம் செய்வோம்!!!

-தனுசு-

படம் நன்றி: கூகுள் படங்கள்.

ஞாயிறு, 19 மே, 2013

KASI YATHRA......PART12, BODH GAYA,.....புத்த கயா..(காசி யாத்திரை, பகுதி 12, நிறைவுப் பகுதி)


அக்ஷய வடம் பதிவின் தொடர்ச்சி...

எங்கள் புத்த கயா பயணம் துவங்கும் போதே மழை பிடித்துக் கொண்டது. 
ஆயினும், புத்த கயாவைப் பார்க்க வேண்டும் என்ற உறுதியால் சென்றோம். வழியும் அவ்வளவு சரியாக இல்லை.

புத்தகயாவைப் பற்றி ஒரு சுருக்கமான முன்னுரை...

பௌத்தர்களின் புண்ணியத் திருத்தலங்களில் ஒன்றான புத்த கயா பீஹாரில் அமைந்துள்ளது. புத்தர் ஞானம் பெற்ற தலமாதலால் இது பௌத்தர்கள் போற்றி வழிபடும் புண்ணிய பூமியாகத் திகழ்கிறது.

மஹாபோதி ஆலயம் என்றழைக்கப்படும் புத்தரின் மிகப்பிரம்மாண்ட ஆலயம் புத்தகயாவில் அமைந்துள்ளது. புத்தர் ஞானோதயம் பெற்றதாகக் கூறப்படும் போதி மரம் இந்த ஆலயத்தில்தான் இருக்கிறது.

நாங்கள் இறங்கி, மழையினூடே நடந்து சென்றோம். செருப்புகள், கைப்பைகள் முதலியவற்றை அதற்கான காப்பகத்தில் ஒப்படைத்து விட்டு, காமிராவுக்கான சீட்டை வாங்கிக் கொண்டு கோவிலுக்குச் சென்றோம். வழியெங்கும் அழகழகான தூண்கள். கொஞ்ச தூரம் நடக்க வேண்டும். பிறகு வலப்புறமாகப் பெரிய படிகள் இறங்குகின்றன. படிகளின் மேலிருந்து பார்த்தால், அழகு கொஞ்சும் ஆலயம் தெரிகிறது. ஆலயத்திற்கு முன்னால், சிறிய, பெரிய அளவுகளில் கல்லால் ஆன வேலைப்பாடமைந்த மணிகள். சிறிய ஆலயங்களின் அழகழகான சிற்பங்கள் எல்லாம் இருக்கின்றன. அவற்றைத் தாண்டி, ஆலயத்திற்குச் சென்றோம்.

வழியெங்கும் பேச்சுக் குரல்கள் இருந்தாலும், ஆலயத்தினுள் அவ்வளவு அமைதி. தங்கத்தாலான அழகிய,  பெரிய  புத்தர் விக்கிரகம்  நடுநாயகமாக ஒளி வீச, தூபங்கள் மணத்தன.

புத்தரின் சன்னிதி முன்னால், பாலி மொழியிலான வழிபாட்டுப் பாடல்களை, பௌத்த குருமார்கள் இசைத்த வண்ணம் இருக்கிறார்கள். மனதிற்கு மிகவும் இதமளிக்கும் சூழல்.

முழந்தாளிட்டு புத்தபகவானை வேண்டிக் கொண்டு பிரார்த்தனை செய்தோம். வெளியே வர மனமில்லாமல் வெளியே வந்தோம்.

சுற்றிலும் மழை கொட்டிக் கொண்டு இருந்தது. இருப்பினும் சுற்றி வந்தோம்.

சிற்பப் புதையல் என்றே இந்த ஆலயத்தைக் கூறலாம். அவ்வளவு அழகு. இருட்டு வேளையில் நாங்கள் சென்ற போதே, அந்த ஆலய அழகிலிருந்து, எங்கள் கண்களை எடுக்க முடியவில்லை. வெளிச்சத்தில் இன்னும் அழகாக இருக்கும் என்று தோன்றியது. பௌத்த மதத்தின் முக்கிய வழிபடு தேவியரான தாராதேவியரின் சிற்ப அற்புதங்கள் சுற்றுச் சுவர் முழுவதிலும் இருக்கின்றன. நீலதாரா, மஞ்சள் தாரா ஆகிய தேவியரின் சிற்பங்கள் இருளிலும் அவ்வளவு அழகாகத் தெரிந்தன‌ . 

புத்த பகவானின் சன்னிதிக்கு நேர் பின்புறத்தில், புகழ் பெற்ற 'போதி மரம்' இருக்கிறது. அதனருகில், புத்த பகவானின் திருவடிகளின் சுவடுகள் கல்லில் பதிந்திருக்கின்றன. கண்ணாடிப் பேழைக்குள் அவற்றைப் பாதுகாத்து வழிபடுகிறார்கள். அந்த மழை நேரத்திலும், பௌத்த குருமார்கள் போதி மரத்தின் அருகில் அமர்ந்து, மைக் வைத்து, வழிபாட்டுப் பாடல்களைப் பாடிய வண்ணம் இருந்தனர். அருகில், பல்வேறு நாடுகளிலிருந்து வந்து வழிபடும் பக்தர்கள் அமர்ந்திருந்தனர்.

ஆலயத்தை சுற்றி வந்து வணங்கி விட்டுப் புறப்பட்டோம். நேராக காசி நோக்கிப் பயணம் தொடர்ந்தது.

காசியை நாங்கள் அடையும் போது இரவு மணி இரண்டு. மறு நாள் காலை எட்டு மணிக்குத் தயாராக வேண்டும் என்று எங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் படி வெகு சீக்கிரமே எழுந்து, மீண்டும் கங்கையில் ஸ்நானம் செய்து தயாரானோம். நாங்கள் கொண்டு வந்திருந்த, சுமங்கலிகளுக்கான தாம்பூலக் கவர்களை, கங்கைக் கரையில் கோயில் கொண்டருளும் கேதாரீசுவரரைத் தரிசனம் செய்ய வந்திருந்த பெண்களுக்குத் தந்தோம். அதன் பின், நாங்களும், கேதாரீசுவரரை, கங்கை நீரால் அபிஷேகம் செய்து தரிசித்தோம்.

மீண்டும் காசிவிஸ்வநாதரைத் தரிசிக்கும் ஆவல் உந்தித் தள்ளியது. ஒரு ஆட்டோவில் விரைவாகக் கோவிலை அடைந்தோம். அவ்வளவாகக் கூட்டம் இல்லை. காசி விஸ்வநாதரை மீண்டும் தரிசித்துப் பரவசமடைந்தோம். அபிஷேகம் செய்து வணங்கினோம். அங்கிருந்த மற்ற சன்னதிகளையும் நன்றாகத் தரிசித்து வெளி வந்தோம். கோவில் வாசல் அருகிலிருந்த சனீஸ்வர பகவானையும் விளக்குகள் ஏற்றி வழிபட்டோம்.

காசி சங்கர மட ஆலயம்
நாங்கள் தங்கும் இடம் வந்தபோது, தம்பதி பூஜைக்கு வரவழைக்கப்பட்டிருந்த தம்பதியர் தயாராகக் காத்திருந்தனர். அவர்களுக்கு பூஜை செய்து, தூப தீபம் காட்டி, வஸ்திரங்கள் சமர்ப்பித்து ஆசி பெற்றோம். அதன் பின் சுமங்கலி பூஜை, கங்கா பூஜை ஆகியவையும் கிரமமாக நடந்தேறின. அதிக நேரம் எடுக்கவில்லை. மிக விரைவாகவே அனைத்தும் நிறைவேறின. அதன் பின் சிவ தரிசனம் செய்ய வேண்டும் என்ற நியதிப்படி அருகிலிருந்த சங்கர மடத்தைச் சேர்ந்த சிவன் கோவிலில் சென்று தரிசனம் செய்தோம். அழகான கோவில். அருமையாகப் பராமரிக்கிறார்கள். நல்ல தரிசனம் வாய்த்தது. பின், திரு.மஹாதேவ சாஸ்திரிகளின் இல்லம் அடைந்தோம்.

எங்கள் யாத்திரையைச் சிறப்பித்துத் தந்த திரு.மஹாதேவ சாஸ்திரிகள் தம்பதியினருக்கு மனமார நன்றி கூறினோம். அன்று அவரது இல்லத்திலேயே எங்களுக்கு உணவளித்து உபசாரம் செய்தனர். அவரிடமிருந்து பிரியா விடை பெற்றுக் கொண்டு,  பாதியில் விட்டிருந்த 'ஷாப்பிங்' முடிக்க‌ கடைகளுக்குச் சென்றோம்.

எங்களில் பலருக்கு ஜுரம் வேறு. அருகிலிருந்த மருத்துவரிடம் சென்று காண்பித்து, மருந்துகள் எடுத்துக் கொண்டனர். பிற்பகல் விமானத்தில் சென்னை திரும்ப ஏற்பாடாகியிருந்ததால் பரபரப்புடன் கிளம்பினோம்.

விமானம் மூலம் காசியிலிருந்து புது டில்லி  வந்து,பின் புது டில்லியிலிருந்து சென்னை விமானம் பிடித்து சென்னை வந்தடைந்தோம். நள்ளிரவு தாண்டி விட்டது சென்னை வரும்போது.

இறையருளால் நல்ல விதமாக காசி யாத்திரை நிறைவடைந்தது. அதன் பின் மீண்டும் இராமேஸ்வரம் செல்ல வேண்டும். அதன் பின் இல்லத்தில் சமாராதனைகள் முதலிய‌வை செய்து, மீண்டும் கங்காபூஜை செய்த பின்பே, காசிச் செம்பு முதலியவைகளை உறவினர்களுக்குத் தரவேண்டும். ஆகவே ஒரு வாரத்திற்குள் இராமேஸ்வர யாத்திரையும் செய்தோம்.

இராமேஸ்வரத்தில் ஸ்ரீபர்வதவர்த்தினி உடனுறை இராமநாதஸ்வாமிக்கு அபிஷேகிக்கவென்றே, பிரயாகையில், ஒரு நல்ல பெரிய செம்பைத் தேர்ந்தெடுத்து, அதில் கங்கா தீர்த்தம் சேகரித்து, சீல் செய்திருந்தோம். அதனோடு, அம்பிகைக்கும் ஸ்வாமிக்கும்  வஸ்திரங்கள் வாங்கி ,அனைத்தையும் எடுத்துக் கொண்டு, இராமேஸ்வரம் கிளம்பினோம்.

இராமேஸ்வரம் அடைந்து, தீர்த்தங்களில் நீராடி, உடை மாற்றி,அதன் பின் ஸ்வாமி தரிசனம் செய்தோம்(ஈர வஸ்திரத்துடன் தரிசனம் செய்யக்  கூடாது).கோவில் உள்ளேயே மாலைகள், அர்ச்சனைத் தட்டுகள் ஆகியவை கிடைக்கும். அவற்றை வாங்கிக் கொண்டோம்.

சிறப்புத் தரிசன டிக்கெட்டுகள் வாங்கிக் கொண்டால் நன்றாக அபிஷேகம் பார்க்கலாம். நம்மை சன்னிதி முன்பாக அமர வைத்து, முதலில் பால் முதலானவற்றை அபிஷேகம் செய்து, நாம் கொண்டு வந்திருந்த கங்கைச் செம்பின் சீலை உடைத்து, நீரை ஒரு பாத்திரத்தில் சேகரித்து, ஸ்வாமிக்கு அழகாக அபிஷேகம் செய்தார்கள். அபிஷேகம் பார்க்கும் போது,கண்களும் மனதும் ஒரு சேர நிறைந்தது.

அதன் பின் தீபாராதனை முடிந்து பிரசாதங்கள் பெற்றுக் கொண்டு, பிரகாரம் சுற்றி வந்தோம். அம்பிகையின் சன்னிதியிலும் நல்ல தரிசனம் கிடைத்தது. கோவிலைச் சுற்றி வந்து மற்ற அனைத்து சன்னிதிகளிலும் வழிபட்டோம். கோவிலை விட்டு வெளிவரும்  வழியில் அமைந்திருக்கும் அழகான செந்தூர ஆஞ்சநேயரிடம் யாத்திரையை நல்ல விதமாக நிறைவு செய்து தந்ததற்காக, மனமார நன்றி கூறி பிரார்த்தித்தோம்.

இல்லத்தில் மறு நாளே சமாராதனை பூஜை ஏற்பாடாகியிருந்தது. ஏழுமலையானின் திருவுருவப்படத்தை வைத்து, அருகிலேயே, கங்கைச் செம்புகள், அன்னபூரணி விக்கிரகங்கள், காசிக் கயிறு, விஷ்ணு பாதம்(இது கயாவில் கிடைக்கும்) முதலியவை வைத்து அலங்கரித்திருந்தோம்.

இறையருளால், மிக நல்ல முறையில் பூஜைகள் நடந்தேறி, உறவினர்கள், நண்பர்கள் யாவரும் விருந்துண்ட பின் அவர்களுக்குத் தாம்பூலத்துடன், கங்கைச் செம்புகள், அன்னபூரணி விக்கிரகங்கள் முதலியவை வழங்கி நமஸ்கரித்தோம்.

ஸ்ரீவிசாலாட்சி உடனுறை ஸ்ரீகாசி விஸ்வநாதர் நினைத்தாலும், அழைத்தாலுமே காசி யாத்திரை சித்திக்கும். இது பூர்வ புண்ணிய வசத்தாலேயே ஒருவருக்குக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. எம்மையும் ஒரு பொருட்டாக எண்ணி, எங்களுக்கு இந்த மறக்க முடியாத நல்வாய்ப்பினை நல்கிய இறையருட்பெருங்கருணைக்கு என்றென்றும் நன்றி செலுத்தி வருகிறோம்.

இந்த யாத்திரைத் தொடரைப் படிக்கும் அன்பர்கள் அனைவருக்கும், இறையருளால், வெகு விரைவிலேயே காசியாத்திரை செய்யும் பொன்வாய்ப்புக் கிடைக்க வேண்டுமென,  ஸ்ரீவிசாலாட்சி உடனுறை ஸ்ரீகாசி விஸ்வநாதரையும், ஸ்ரீபர்வதவர்த்தினி சமேத ஸ்ரீஇராமநாதஸ்வாமியையும் மனமார வேண்டுகிறேன்.

இந்தத் தொடரை எழுத என்னை ஊக்குவித்த அன்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

இறையருளால்,

வெற்றி பெறுவோம்!!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

செவ்வாய், 14 மே, 2013

KASI YATHRA .. ...PART 11, AKSHAYA VADAM.......அக்ஷய வடம்.(காசி யாத்திரை.....பகுதி 11).


முந்தைய பதிவின் தொடர்ச்சி...

அக்ஷய வடம் என்னும் ஆலமரத்தின் அடிப்பாகம் கயாவில் இருக்கிறது. அக்ஷய வடத்தின் அடியில் பிண்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டால், முன்னோர்கள், நல்ல கதியை அடைவார்கள் என்பது ஐதீகம். குறிப்பாக, அகால மரணமடைந்தோருக்கும், தனுஷ்டை(குறிப்பிட்ட சில நட்சத்திரங்களில் இறைவனடி சேர்தல்)யில் மேலுலகம் சென்றோருக்கும் நற்கதி கிடைக்கும். மேலும் கயாவில் சிரார்த்தம் செய்த பலன், அக்ஷய வடத்தின் அடியில் பிண்டங்கள் சமர்ப்பிப்பதாலேயே கிடைக்கும்.

அக்ஷய வடம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கிறது. சதுர்யுகங்களின் முடிவில், பிரளயம் வரும் பொழுது பரமாத்மா, அக்ஷய வடத்தின் இலையிலேயே சிறு குழந்தையாக(ஆலிலைக் க்ருஷ்ணர்) சயனித்து மிதந்து வருவார். அவர் திருவடிகளில் உலகனைத்தும் ஒடுங்குகிறது. இதை நினைவுபடுத்தும் விதமாக, அக்ஷய வடத்துக்கு அருகில் சிறு மண்டபம் போன்ற அமைப்பில் ஸ்ரீகிருஷ்ணர் கோவில் கொண்டிருக்கிறார். 

இத்தகைய பெருமை வாய்ந்த அக்ஷய வடத்துக்கு ஒரு வேனில் சென்றோம். அக்ஷய வடத்தைச் சுற்றிலும் பெரிய விஸ்தீர்ணமான இடம் இருக்கிறது. அதை அடுத்து பெரிய சுற்றுச் சுவர். ஏறவும் இறங்கவும் தனித் தனி வழிகள், பெரிய பெரிய படிகளுடன் கட்டப்பட்டிருக்கிறது.

வேனிலிருந்து இறங்கி, நடந்து படிகளின் அருகில் சென்றால், 'ஓடு, ஓடு' என்ற குரல். விழுந்தடித்து ஓடி, படிகளில் ஏறிவிட்டுத் திரும்பினால், ஒன்று, இரண்டு அல்ல, எக்கச்சக்க குழந்தைகள்!!!. யாராவது யாத்ரீகர்கள் வந்தால் பிச்சைக்காகத் துரத்துகிறார்கள். எங்களுடன் கூட வந்தவர், 'அவர்கள், வந்து தருவார்கள், போங்க, போங்க' என்று சொல்லி எங்களை விடுவித்தார்.நானும் என் கணவரும், முதலில் மேலேறி வந்தோம். அருகிலேயே கை, கால் அலம்ப இடம் இருக்கிறது. பிறகு, அக்ஷய வடத்தைத் தரிசித்தோம். 

யுகம் யுகமாக, பல்வேறு நிகழ்வுகளுக்கு சாக்ஷியாக இருக்கும் மகிமை பொருந்திய அக்ஷய வடம். மிக அமைதியாக, உறுதியாக, இலைகள் காற்றில் படபடக்க, சுற்றிலும் பக்தர்களால் கட்டப்பட்ட பல வண்ணத்துணிகள் தோரணம் போல் விளங்க, கிட்டத்தட்ட பார்க்கும் போது, ஒரு மரம் என்ற உணர்வே தோன்றவில்லை. இரு கரம் குவித்து வழிபடவே தோன்றுகிறது. மிக வயது முதிர்ந்த உறவினர்களைப் பார்க்கும் மனநிலையே இருந்தது.

எதிர்ப்புறம் இருந்த மேடையில் நாங்கள் இருவரும் அமர்ந்தோம்.  சிரார்த்தம் செய்த தம்பதியினர்,  அக்ஷய வடத்தின் கீழ் அமர வைக்கப்பட்டார்கள். அங்கிருந்த பண்டா,  சிரார்த்தம் செய்த தம்பதியினரை சங்கல்பம் செய்யச் சொன்னார்.  பிறகு கீழ் வருமாறு கூறினார்.

'காசி யாத்திரையின் மிக முக்கியமான கட்டம் இது. உங்கள் முன்னோர்கள் நல்ல கதி அடைவதற்காக, உங்களுக்கு விருப்பமான, இலை, காய்(கிழங்குகள் அல்ல), பழம் முதலியவற்றை விட வேண்டும். அதாவது அவற்றை இனி உணவில் உபயோகிக்கக் கூடாது. உங்களைப் பெற்றவர்கள், உங்களுக்காக, எவ்வளவோ தியாகங்களைச் செய்திருப்பார்கள், அவர்களுக்காக நீங்கள் செய்யும் தியாகம் இது' என்று கூறி விட்டு, கீழ்க்கண்ட நிபந்தனைகளையும் கூறினார்.

1. அவரவர் இல்லத்தில் திதி கொடுக்கும் போது செய்யப்படும் சமையலில் (இது வீட்டுக்கு வீடு மாறுபடும்) உபயோகிக்கும் காய், கனிகளை விடக்கூடாது. முக்கனிகள், திதியில் உபயோகிப்பதால் அவற்றையும் விடக்கூடாது.

2. வாழைக்காய், எல்லா வித சிரார்த்தங்களிலும் உபயோகிப்பதால் அதை விடக் கூடாது.

3. வாழை இலை, தாமரை இலை (சாப்பிட உபயோகிப்பதால்) முதலியவற்றை விடக்கூடாது.

4.இங்கு சங்கல்பம் செய்து விட்ட பின்பு, போகும் வழியில் அவற்றைச் சாப்பிட நேர்ந்தால் பரவாயில்லை. ஊருக்குப் போய்ச் சேர்ந்த பின்பே, நியமத்தைக் கடைபிடிக்க வேண்டும்.

5. காசி யாத்திரை பூர்த்தியான பின், காசியில் விட்ட காய், கனிகளை எங்காவது வேறு வழியில்லாமல்,சாப்பிட நேர்ந்து விட்டால், அடுத்து வரும் கார்த்திகை மாதம், அந்தக் காய், கனிகளை கணிசமான அளவில் வாங்கித் தானம் செய்ய வேண்டும் (அதுக்காக, தானம் செய்து விட்டுச் சாப்பிடக் கூடாது).

6. முக்கியமான விஷயம், இந்த நியமம், இங்கு வந்து சிரார்த்தம் செய்து, சங்கல்பம் செய்த கணவன் மனைவி இருவருக்கு மட்டுமே பொருந்தும். மற்ற குடும்ப உறவினர்களை இது கட்டுப்படுத்தாது.

7. ஆகவே, காசியில் விட்ட காய் கனிகளை வீட்டில் வாங்கலாம், சமைக்கலாம். வேறு யாருக்கேனும் வாங்கிக் கொடுக்கலாம். ஆனால், காய் கனிகளை விட்ட தம்பதியர் மட்டும் சாப்பிடக்கூடாது. சிலர் நினைப்பதைப் போல், அந்த காய் கனிகளைக் கையாலும் தொடக்கூடாது என்றெல்லாம் இல்லை.

8. இங்கிலீஷ் காய், கனிகள் விடுவதில்லை.

இந்த விஷயங்களைக் கூறிவிட்டு, 'எந்தெந்த இலை, காய், கனிகளை விடப் போகிறீர்கள் என்று முடிவு செய்யுங்கள். கணவன், மனைவி இருவரும் ஒத்த மனதினராக, ஒரே ஒரு இலை, காய், கனியின் பெயரைக் கூற வேண்டும். தனித்தனியாக, வெவ்வேறு பெயர்களைக் கூறக் கூடாது' என்றும் சொன்னார்.

என் அபிப்பிராயத்தில், 'அற்றது பற்றெனில் உற்றது வீடு' என்பதற்கிணங்க, மோக்ஷ கதி அடைய வேண்டுமெனில் உலகப் பற்றை விட்டொழிக்க வேண்டும். சம்சார சாகரத்தில் கதியற்றுச் சுழலுவோருக்கு அது மிகச் சிரமமான காரியம் என்பது தெளிவு. ஆகவே, ஒரே ஒரு காய், பழம், இலை முதலியவற்றில் இருக்கும் பற்றுதலையாவது விட்டொழிக்க முயல்வது, சிறுகச் சிறுக, உலகப் பொருட்களில் இருக்கும் பற்றுதலை விட்டொழிப்பதை நோக்கிச் செலுத்தும். அது, இப்பிறவியில் இயலாவிட்டாலும் இனி வரும் பிறவிகளில், நம் ஆன்மாவில் ஒட்டியிருக்கும் ஜென்மாந்தர வாசனையாக மாறி, கொஞ்சம் கொஞ்சமாக ஆன்ம முன்னேற்றத்தை நோக்கிச் செலுத்தி, ஏதேனும் ஒரு பிறவியில் மோக்ஷமடைதலைச் சாத்தியமாக்கும் என்ற நம்பிக்கையிலேயே இந்த சம்பிரதாயம் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஆனா நம்ம மக்கள்!!!. என்னத்தச் சொல்றது!!. அங்கு நடைபெற்ற 'டிஸ்கஷன்களை' சொல்ல வேண்டுமெனில் தனிக் கட்டுரையே எழுத வேண்டும். இருக்கும் டெக்னிகல் நாலெட்ஜ் எல்லாம் அப்டேட் பண்ணி, குறுக்கு மறுக்காகச் சிந்தித்து, காய் கனிகளை டிஸைட் செய்தார்கள். சாம்பிளுக்கு ஒன்று இங்கே...

(கணவன், மனைவி உரையாடல் பாணியில் கற்பனை செய்து கொள்க...)

' சீதாப்பழத்த  விட்டுறலாம். அதத்தான் நாம வாங்கறதே இல்ல. காய்க்கு, கத்தரிக்கா விட்டுறலாம். அது தான் எனக்கு ரொம்பப் புடிக்கும். புடிச்ச ஒண்ணுத்தயாவது விடுவோமே....'

'முலாம்பழத்தயும்  கொத்தவரங்காயயும் விட்டாளாம்  உங்கண்ணா மன்னி... அதயே விட்டுடலாமா..'

'அவா விட்டதத்தான் நாமளும் விடணுமா..'

'இல்ல, நாள் கெழமைல சேர்ந்து சமைக்கும் போது குழப்பம் வராம இருக்குமே.'

'இல்லடி..ஒனக்கு அவியல் புடிக்கும்.. கொத்தவரங்கா இல்லாம எப்படி பண்ணுவ?'

'கொத்தவரங்காவும் வாயுங்கறா.... அதுக்குப் பதிலாத்தான் பீன்ஸ் போட்டுடலாமே... இப்பல்லாம்  எங்க போனாலும்  சமயல்ல‌ கத்தரிக்கா தான் போடறா...ஒரு காய் கணிசம் கொறஞ்சாலும்  கத்தரிக்கா போட்டா நெறக்கறது.  உங்கம்மாக்கு சுமங்கலிப் பிரார்த்தன பண்றச்ச கத்தரிக்கா பிட்ல தான பண்ணியாறது...'

'இல்ல, விருப்பமான ஒரு காயவாவது விட்டுடலாம்னு.... சரி.. நீ சொல்றபடி செய்துர்லாம்' . (இத மொதல்லயே சொல்லியிருக்கலாம்).

ஆகக் கடைசியில், பெரும்பாலும், 'விருப்பமான' சீதாப்பழம், நாவல்பழம், முலாம்பழம், சுரைக்காய், அரச இலை, புங்க இலை, புரச இலை முதலானவைகளை விட்டு விடுவதாகச் சங்கல்பங்கள் நிறைவேறின. ஓரிருவரே உண்மையாக, மனச்சான்றுடன் செயல்பட்டார்கள். ஸ்ரீகிருஷ்ணர், அக்ஷய வடத்தின் கீழ் அமர்ந்திருந்தவாறு அனைத்தையும் பார்த்து புன்னகைத்த வண்ணம் இருந்தார்.

பண்டா, ஒவ்வொரு தம்பதியையும் கேட்டு, அவர்கள் சொன்ன காய், கனி, இலை முதலியவற்றை விடுவதாகச் சங்கல்பம் செய்யச் சொன்ன பின்னர், அவருக்குத் தக்ஷிணை தர வேண்டும். குறைந்தது 50, 100 என்று தருகிறார்கள். அதன் பின், அவரை. 'திருப்தியா, நாங்கள் காசி யாத்திரை செய்த பலன், கயா சிரார்த்தம் செய்த பலன் சித்திக்க வேண்டும் என ஆசி கூறுகிறீர்களா....' எனத் தம்பதிகள் கேட்டு, அவர், 'திருப்தியடைந்தேன்'  என்று பதில் சொன்னார்.  பின், பிண்டம் சமர்ப்பிக்க வேண்டியவர்களைத் தவிர, மற்றவர்களை, அக்ஷய வடத்தைப் பிரதக்ஷிணம் செய்து வெளியேறச் சொன்னார்கள். பிண்டம் சமர்ப்பிக்கும் போது அதைப் பார்க்கலாகாது என்று ஐதீகம். ஆகவே, நானும் என் கணவரும், அக்ஷய வடத்தைப் பிரதக்ஷிணம் செய்து, அக்ஷய வடத்தையும் ஸ்ரீகிருஷ்ணரையும் வணங்கிக் கீழிறங்கினோம். மற்றவர்கள், அக்ஷய வடத்தின் பாதங்களில் பிண்டங்களை சமர்ப்பித்து, தர்ப்பணம் செய்து விட்டு வந்தார்கள்.

இங்கே ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வேண்டும். சிலர் நினைப்பது போல், காசி யாத்திரை சென்று விட்டு வந்து விட்டால், பிறகு, இல்லத்தில் திதி, அமாவாசை தர்ப்பணம் முதலியவை செய்ய வேண்டாம் என்பது கிடையவே கிடையாது. காசி, கயா சிரார்த்தம் செய்து விட்டாலும் கூட இல்லத்தில் திதி முதலியவை செய்வதை நிறுத்தவே கூடாது என்று அங்கு இருந்த பண்டாக்கள் கூறினர்.

கீழே வரும் போது, மறுபடியும் பெருங்கூட்டமாகக் குழந்தைகள் துரத்துகிறார்கள். பணத்தை ஒருவரிடம் கொடுத்து, 'எல்லோரும் பிரித்துக் கொள்ளுங்கள்' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினோம்.

தங்கும் இடம் வந்து சாப்பிட அமரும் போது மணி, மாலை ஐந்தாகி விட்டது.
அதன் பின் காசிக்குக் கிளம்பினோம். வழியில் புத்த கயா பார்த்து விட்டு, இரவு காசியை அடைந்து, காலை, சுமங்கலி பூஜை, தம்பதி பூஜை, கங்கா பூஜை முடித்து, உணவுக்குப் பின் ஷாப்பிங் அப்புறம் விமானப் பயணம் என்று பெரிய ப்ரொக்ராம் லிஸ்ட் காத்திருந்தது. பரபரப்புடன் கிளம்பிய எங்களுடன் மழையும் சேர்ந்து கொண்டது. (அடுத்த பதிவில் நிறையும்..).

சிவனருளால்,
வெற்றி பெறுவோம்!!!!.


அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

செவ்வாய், 7 மே, 2013

KASI YATHRA... PART 10, கயாவில் ஒரு நாள் (காசி யாத்திரை... பகுதி 10).


முந்தைய பதிவின் தொடர்ச்சி....

கயா... பித்ருகர்மாக்கள் கயாவில் செய்யப்பட்டால் கிடைக்கும் புண்ணியம் அளவில்லாதது எனப் புராணங்கள் கூறுகின்றன. பித்ருக்கள் கயாவில் செய்யப்படும் ஸ்ரார்த்தத்தாலேயே த்ருப்தியடைந்து, பிறவித் தளையிலிருந்து விடுபட்டு மோக்ஷம் அடைகிறார்கள்.

கயாவைத் தவிர வேறெங்கு ஸ்ரார்த்தம் செய்ப்பட்டாலும், அதன் நிறைவில், 'கயாவில் செய்த பலன் கிடைக்கட்டும்' என்று பிரார்த்தித்து, அக்ஷய வடம் இருக்கும் திசை நோக்கி சில அடிகள் நடப்பது சம்பிரதாயமாக இருக்கிறது.

கயாவில் செய்யப்படும் ஸ்ரார்த்தம் மிக அதிக நேரம் எடுப்பதாக இருக்கிறது. கிட்டத்தட்ட பகல் 9 மணிக்கு ஆரம்பித்தால், பிற்பகல் குறைந்தது மூன்று மணியாவது ஆகும் முடிவதற்கு. அதற்கேற்றாற்போல் பசி தாங்காதவர்களுக்கு, க்ளூகோஸ் மாத்திரை முதலியவை தேவைப்படும். இது தவிர, கயாவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய பொருட்கள் குறித்து, இரண்டாவது பகுதியில் ஏற்கெனவே தெரிவித்திருப்பதை நினைவுபடுத்திக் கொள்ளவும்.

காசியிலிருந்து கயாவிற்கு ரயிலில் பயணப்படுவதே உத்தமம். மிகுந்த சிரமம் இல்லாது விரைவில் சென்று விடலாம். மறுநாள் களைப்பும் அதிகம் தெரியாது. ஆனால் நாங்கள் காரில் சென்றதால், கிட்டத்தட்ட 6 மணி நேரம் பயணிக்க நேர்ந்தது. வழியில் ரோடு அவ்வளவாக சரியாக இல்லை. ஆகவே மிகுந்த தாமதமேற்பட்டது. ரயிலில் சென்றால், குறைந்த பட்சம் நாலரை மணி நேரத்தில் கயாவை அடைந்து விடலாம்.

காலையில் கயாவை அடைந்ததும் நேராக, தங்கும் இடத்துக்குச் சென்றோம். விடுதி மிக வசதியாக இருக்கிறது. மிகப் பெரியதும் கூட.  நல்ல பெரிய, காற்றோட்டமான அறைகள், சுத்தமான குளியலறைகள் எல்லாம் இருந்தது. வெந்நீர் கேட்டால் தந்தார்கள். சற்றே பெரிய பேப்பர் கப்களில் நல்ல தரமான‌ காபி வழங்கப்பட்டது.

போனதும் குளித்துத் தயாராகச் சொன்னார்கள். எனக்கும் என் கணவருக்கும் காலை உணவாக அவல் உப்புமா கிடைத்தது. மிக ருசியாக இருந்தது. சிற்றுண்டி முடிந்ததும் வண்டிகளில் கிளம்பினோம்.

பெரியவர்கள் எல்லோரும் முதலில் பல்குணி நதியின் கரையை அடைந்தார்கள். நதி என்று பெயரே தவிர, வறண்ட பூமி தான். ஆங்காங்கே ஊற்றுகள் இருக்கிறது. ஒரு படித்துறையில், தேயிலைத் தோட்டத்தில் வைக்கும் ஸ்ப்ரிங்ளர் போல் அமைத்து நீர் தெளிக்கிறார்கள். அதை எடுத்துத் தலையில் தெளித்துக் கொண்டோம்.

ஸ்ரீவிஷ்ணுபாதக் கோவிலின் படிகள்.
மிகப் பெரிய கூட்டங்களாக அமர்ந்து இன பேதமின்றி அனைவரும் பித்ருகடன்
நிறைவேற்றுகிறார்கள். எங்கள் குழுவினர், விஷ்ணுபாதக் கோவிலின் படிகளின் மேல் அமர வைக்கப்பட்டனர்.

நான் பல்குணி நதி நீரின்றி வறண்டு இருப்பதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபொழுது, அங்கு இருந்தவர் ஒருவர், இது சம்பந்தமான புராணக் கதை ஒன்றை விவரித்தார்.

ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியும், சீதா தேவியும் கயாவில் சிரார்த்தம் செய்ய வந்த போது, ஸ்ரீ ராமர், 'இதோ அனுஷ்டானங்களை முடித்து விட்டு வருகிறேன்' என்று சொல்லிவிட்டு, தம் தம்பிகளுடன் சென்று விட்டார். பல்குணி நதியின் கரையில், ஸ்ரீராமருக்காக, ஆற்று மண்ணை அளைந்தவாறு சீதா தேவி காத்திருந்த வேளையில்,  திதி கொடுக்கும் நேரம் நெருங்கி விட்டது. பொதுவாக, நண்பகல் வேளையிலேயே பித்ருலோகத்திலிருந்து பித்ருக்கள் வருவார்கள். முற்காலத்தில் அந்த நேரத்திலேயே ஸ்ரார்த்தம் செய்யும் வழக்கம் இருந்தது.

பல்குணி நதி
தெய்வங்கள் மனிதர்களுடன் நேரடியாகப் பேசிய காலம் அது. எல்லாச் செயல்களும் அதற்கென குறித்த பொழுதுகளிலேயே தவறாமல் நடத்தப்பட்ட யுகம் அது. ஸ்ரார்த்த சமயம் நெருங்கியதும், ஆற்று மண்ணிலிருந்து தசரதர் சீதை முன் தோன்றினார். தமக்குப் பசி எடுப்பதாகவும், தம்மால் காத்திருக்க முடியாதென்றும் கூறினார். ஸ்ரீராமர் இன்னும் வரவில்லையெனினும், தசரதருக்கு  பிண்டம் அளிக்க வேண்டிய சூழலில்,சீதை, ஆற்று மண்ணைப் பிசைந்து உருண்டைகள் பிடித்து, உள்ளன்போடு தன் மாமனாருக்கு அளித்து, தன்னை ஆசீர்வதிக்க வேண்டினாள். தசரதரும் மகிழ்வோடு அதனை ஏற்றார். அச்சமயம், அங்கிருந்த பல்குணி நதி, அக்ஷய வடம் என்னும் ஆலமரம், துளசிச் செடி, ஒரு பசு, மற்றும் அந்தணர் ஒருவர் ஆகியோர் அந்த நிகழ்வுக்கு சாட்சிகளாக நின்றனர்.

ஸ்ரீராமர் வந்தார். முறைப்படி ஸ்ரார்த்த கர்மாவை நிறைவேற்றினார். ஆனால் தசரதர் வந்து பிண்டம் ஏற்றுக் கொள்ளவில்லை. 'தாம் செய்த கர்மாவில் ஏதேனும் தவறு நிகழ்ந்ததோ' எனும் பதற்றம் ஸ்ரீராமருக்கு. சீதை, தான் செய்த செயலைக் கூறினாள். ஸ்ரீராமர், சீதையின் கூற்று உண்மையென்று நன்கு உணர்ந்தாராயினும், அதை வெளிக்காட்டாது, 'நீ செய்த செயலுக்கு யார் சாட்சி?' என்று  கேட்டார். தெய்வங்களின் லீலைகளெல்லாம், மானிடருக்கு நல்வழி காட்டத்தானே!!.

அச்சமயம், பல்குணி நதி, துளசிச் செடி, பசு, அந்தணர் முதலியோர், சீதையின் செயலை தாம் பார்க்கவில்லை என பொய்யுரைத்தனர். அக்ஷய வடம் எனும் ஆலவிருக்ஷம் மட்டும், சீதையின் சொல்  உண்மையென்று சொன்னது.

அக்ஷய வடம்
 கோபமே வராத சீதைக்கும் கோபம் வந்தது. பொய்யுரைத்த பல்குணி நதி, துளசி, பசு, அந்தணர் முதலானோருக்கு சாபமிட்டாள். கயாவில் பல்குணி நதி எப்போதும் வற‌ண்டு காணப்படும் என்றும், ஊற்றுகள் மட்டுமே இருக்கும் என்றும்,  கயாவில் துளசி முளைக்காது என்றும், பசுவின் பின்பாகம் மட்டுமே பூஜிக்கப்படும் என்றும், கயையில் வாழும் அந்தணர்கள், தாம் கற்ற வித்தையை விற்று வாழவேண்டிய நிலை உருவாகும், மேலும் எவ்வளவு கொடுத்தாலும் அதனால் அவர்கள் திருப்தியில்லாமல் வாழ்வார்கள் என்றும் சாபம் தந்தாள். அக்ஷய வடத்தை, யுக யுகாந்தரங்களுக்கு நீடுழி வாழ  வாழ்த்தி, யுகங்களின் முடிவில் பிரளயம் தோன்றும் போது, அக்ஷயவடத்தில் இலையிலேயே, பரமாத்மா குழந்தை வடிவில் தோன்றுவார், அவரது திருவடிகளில் உலகங்களனைத்தும் லயமாகும் என்றும் அருளினாள்.  மேலும் கயாவிற்கு வருவோர் அக்ஷய வடத்திலும் பிண்டங்களை அர்ப்பணம் செய்வார்கள். அப்போது தான் கயாவில் செய்யும் ஸ்ரார்த்தத்தின் பலன் கிடைக்கும் என்றும் ஆசீர்வதித்தாள்.

அதே போல் கயா க்ஷேத்திரத்தின் பெருமைக்குக் காரணமான கயாசுரனின் வரலாற்றையும் விவரித்தார். இது பல்வேறு புராணங்களில் பலவிதமாகக் கூறப்படுகிறது. நான் இங்கு கயாவில் வழங்கப்படுவதை மட்டும் சொல்கிறேன். மற்ற புராணங்களை பின்னொரு பதிவில் காணலாம்.

கயாசுரன், அசுரனெனினும், தம் மக்களை நல்ல முறையில் அரசாண்டவன். சிறந்த விஷ்ணுபக்தன். ஆனாலும் அவன் அசுரனென்பதால் தேவர்களுக்குக் கடும் பகைவனாக விளங்கினான். அவனைக் கொல்ல வேண்டுமென‌ தேவர்கள் அனைவரும் ஸ்ரீவிஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்தனர். அதன்படி, ஸ்ரீ விஷ்ணு, கயாசுரனை அணுகி, தாம் ஒரு யாகம் நடத்த இருப்பதாகவும், அதற்கான யாக பூமியாக அவன் உடலைத் தர வேண்டுமென்றும் கேட்டார். அவனும் ஒப்புக் கொண்டான். யாகம் முடியும் வரை அவன் உடலை அசைக்காது இருக்க வேண்டுமென்று  நிபந்தனை விதிக்கப்பட்டதற்கும் உடன்பட்டான். 

யாகம் துவங்கியது. யாகத்தீயின் வெம்மை தாங்காமல் கயாசுரன் மாண்டு விடுவான் என எண்ணியதற்கு மாறாக, அவன் செய்த தர்மம் அவன் தலை காத்தது. எனவே,யாகம் நிறைவடையும் நேரத்தில், பகவான் ஸ்ரீவிஷ்ணு, தம் பாதத்தை அவன் தலையில் வைத்து பூமியில் அழுத்தினார். அவ்வாறு செய்வதற்கு முன், அவனது இறுதி விருப்பம் எதுவாயினும் தாம் அதை நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுத்தார்.

கயாசுரன், தம் விருப்பங்களாகக் கீழ்க்கண்டவற்றைத் தெரிவித்தான்.

1. இந்தப் புனிதமான க்ஷேத்திரம், தம் பெயராலேயே வழங்கப்பட வேண்டும்

2. பித்ருகர்மாக்கள் நிறைவேறும் புனிதத் தலமாக இது திகழ வேண்டும். இங்கு வரும் அனைவரும், தம் தாய், தந்தையருக்கு மட்டும் அல்லாது, தமக்குத் தெரிந்தவர், அறிந்தவர், தூரத்து உறவினர், நண்பர்கள், வளர்ப்புப் பிராணிகள் முதலிய யாவருக்கும் பிண்டம் அளித்து அவர்களை நற்கதி அடையச் செய்ய வேண்டும்.

3.எந்த நாளில் பிண்டங்கள் ஸ்ரீவிஷ்ணு பாதத்தில் சமர்ப்பிக்கப்படவில்லையோ அன்று தனக்கு மீண்டும் உயிர் பிச்சை அளிக்க வேண்டும் என்றும் வேண்டினான். அவன் வேண்டுகோள்கள் நிறைவேறும் என்று ஸ்ரீவிஷ்ணு உறுதியளித்தார்.

அதன்படி, இந்த க்ஷேத்திரம் 'கயா' என்றே வழங்கப்படுகிறது. இங்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் தம் முன்னோர்களுக்குத் திதி கொடுத்து,  விஷ்ணு பாதத்தில் பிண்டங்களை அர்ப்பணம் செய்து வருகின்றனர். திதி நடக்காத தினமே இல்லை. கயாவில் மட்டும் எந்தத் திதியிலும் பித்ருகர்மா செய்யலாம்.  இங்கு ஒவ்வொருவரும் தம்தம் தாய், தந்தையருக்கு மட்டுமல்லாது, தெரிந்தவர் அனைவருக்கும் பிண்டம் அளிக்கலாம். பொதுவாக இல்லங்களில் செய்யப்படும் ஸ்ரார்த்தத்தில், தாய், தந்தை வழிகளில் மூன்று தலைமுறையினருக்காக,  மூன்று பிண்டங்கள் மட்டுமே அளிக்கப்படும். பிரயாகையிலும், காசியிலும் தீர்த்த ஸ்ரார்த்தத்தின் போது 16 பிண்டங்கள் அளிக்கப்படும். ஆனால் கயாவில் மட்டும் 64 பிண்டங்கள் அளிக்கப்படும்.

இதில் 32 பிண்டங்கள் தாய்க்கு மட்டும். இதிலிருந்து,பெற்றெடுத்த தாய் எத்தனை உயர்ந்தவள் என்பதை அறியலாம். 16 பிண்டங்கள் மூதாதையருக்காகவும், மீதி 16, நான் முன் சொன்னதைப் போல், மற்ற உறவினருக்காகவும் அளிக்கப்படுகிறது.

தன்னைப் பத்து மாதம் சுமந்து பெற்ற தாய், கருச்சுமந்த காலத்திலிருந்து, தன்னைப் பெற்றெடுத்து வளர்ப்பதற்காகப் பட்ட ஒவ்வொரு அவஸ்தைக்காகவும்  மன்னிப்பு வேண்டி ஒவ்வொரு மனிதனும் கயாவில் பிண்டங்களை அர்ப்பணிக்கிறான். கல் மனம் படைத்தவர் கூட, தன் தாய் தனக்காக பட்ட அவஸ்தைகளை ஒவ்வொன்றாகச் சொல்லிச் சொல்லி, பிண்டங்களை அர்ப்பணிக்கும் பொழுதில் கதறி அழுது விடுவார்.

'என்னை வயிற்றில் சுமந்த போது, உனக்கு வாந்தி முதலிய அசௌகரியங்கள் ஏற்பட்டிருக்குமே, அதற்காக இந்தப் பிண்டத்தை அர்ப்பணம் செய்கிறேன். நீ விரும்பியதை உண்ண முடியாமல் தவித்திருப்பாயே அதற்காக இது. தூங்கும் நேரத்தில் கூட, புரண்டு படுத்தால் எனக்கு மூச்சு முட்டக்கூடும் என, எழுந்து கொண்டு மறுபுறம் படுத்தாயே அதற்காக இதை அர்ப்பணம் செய்கிறேன். நான் வயிற்றில் உதைப்பதை வலியாக எண்ணாமல், மகிழ்ந்தாயே அதற்காக இது, பொறுக்க முடியாத பெரும் வலியைத் தாங்கி என்னைப் பெற்றெடுத்தாயே அதற்காக இது, பிறந்ததும், தாய்ப்பால் தந்து என் பசி ஆற்றியதற்காக இது,...' இவ்வாறு ஒவ்வொரு அவஸ்தைக்காகவும் ஒன்று அர்ப்பணம் செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள்.

கயாவிற்கு வந்திருந்தவர்களில் மிகப் பலர், தமக்குத் தெரிந்தவர் யார் யாருக்கு பிண்டம் அளிக்க வேண்டும் என்பதை ஒரு லிஸ்ட் போலவே  எழுதிக் கொண்டு வந்திருந்தனர் (மறக்காமல் இருக்க).

அங்கு பல நெகிழ்வான நிகழ்வுகளைப்  பார்க்க முடிந்தது. த‌ன் சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்த ஒருவர், 'எங்கப்பாம்மாக்கு எதுவும் செய்ய முடியலையேன்னு வருத்தமா இருந்தது. இங்க வந்து எல்லாம் செஞ்சதும் திருப்தியாயிடுச்சு. அவங்க நிச்சயம் நல்ல கதிக்குப் போவாங்க...' என்றார் பரவசமாக.

என் மாமனார், மிகச் சிறு வயதில் தவறிப் போன தன் தம்பிக்கு பிண்டம் அளித்து விட்டு, கண்களில் நீருடன் 'இப்பத்தான் திருப்தியாச்சு' என்றதும் எனக்கு நிஜமாகவே இந்த யாத்திரையின் பலனை அடைந்தது போல் தான் தோன்றியது.

 விஷ்ணு பாதக் கோவிலில் திதி முடிந்ததும், அங்கு அர்ப்பிக்கப்பட்ட பிண்டங்களை, ஒரு தாமரை இலையில் எடுத்துக் கொண்டு, ஸ்ரீவிஷ்ணு பாதம் பதிக்கப்பட்ட சந்நிதியை நோக்கிச் சென்று, அங்கு விஷ்ணு பாதத்தில் அர்ப்பணம் செய்தனர்.  வெள்ளிக் கவசம் சாற்றப்பட்ட தொட்டி போன்ற எண்கோண அமைப்பினுள் விஷ்ணுபாதம் இருக்கிறது. விஷ்ணு பாதத்திற்கு நேராக ஸ்ரீ விஷ்ணுவின் சந்நிதானம் இருக்கிறது. ஆஞ்சநேயர் உட்பட பல்வேறு சந்நிதகள் இருக்கின்றன. ஆனால் நிதானமாகத் தரிசனம் செய்ய முடியாதபடி பயங்கரக் கூட்டம். கூடுமானவரை தரிசனம் செய்தோம்.

அதற்குப் பின் தங்கும் இடம் வந்தோம். அங்கு  ஒரு பெரிய கூடத்தில் ஹோமத்துடன் கூடிய சிரார்த்தம் ஆரம்பமாகியது.  இங்கும் பிண்டங்கள் அர்ப்பணம் செய்வார்கள்.  அதன் பின், புது வேட்டிகளை அணிந்து, பெரிய வரிசையில் அமர்ந்திருக்கும் வைதீகர்களுக்கு உணவிட வேண்டும். ஒவ்வொரு தம்பதிக்கும் இரண்டு வைதீகர்கள்  என்ற கணக்கு. முதலில் பெண்கள் அனைவரும் சேர்ந்தே, அனைத்து வைதீகர்களுக்கும் பரிமாறி விட்டு, அதன் பின் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட வைதீகர்களைக் கவனித்துப் பரிமாற வேண்டும்.

என்னையும் என் கணவரையும் ஸ்ரார்த்தம் நடக்கும் போது அருகிலிருக்கக் கூடாது என்று சொல்லி விட்டதால், விஷ்ணு பாதக் கோவிலிலும், தங்கும் இடத்திலும், ஸ்ரார்த்தம் நடக்கும் இடத்துக்கு வெகு தொலைவிலேயே அமர்ந்திருக்க நேரிட்டது. வைதீகர்கள் சாப்பிட்டதும் அவர்களை வலம் வந்து நமஸ்கரிக்கும் சமயம் எங்களை அழைத்தார்கள்.  அவர்களை வலம் வந்து நமஸ்கரித்து விட்டு, பிண்டங்களை பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அக்ஷய வடம் நோக்கிப் புறப்பட்ட பெரியவர்களுடன் பயணப்பட்டோம்....(தொடரும்)

சிவனருளால்,
வெற்றி பெறுவோம்!!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

சனி, 4 மே, 2013

KASI YATHRA... PART 9, கங்கையில் படகுப் பயணம் (காசி யாத்திரை.... பகுதி 9).

சென்ற பதிவின் தொடர்ச்சி....

மறு நாள் காலை கங்கைக் கரையை அடைந்தோம். அவரவர் பாரம்பரிய உடை உடுத்தி, கங்கையில் நீராடி, ஈர உடையோடு தயாரானார்கள். இந்த உடையை, அன்றைய தினம் வைதீக கர்மாக்கள் முடிந்ததும், மீண்டும் கங்கையில் குளித்து விட்டு தானம் செய்ய வேண்டும். கையில் ஓரிரண்டு துண்டுகள் மட்டும் எடுத்துக் கொண்டோம்.

மோட்டார் படகு வந்தது. அனைவரும் ஏறிக் கொண்டோம். வைதீக கர்மாக்கள் செய்ய வேண்டுவோர் முன்புறம் அமர, நாங்கள் படகின் பின்புறம் சென்று விட்டோம்.

படகின் நடுவில், ஒவ்வொரு தம்பதிக்கும் ஒன்று என்ற விகிதத்தில் அடுப்புகள் இருந்தன. சின்ன சைஸ் இரும்பு குமுட்டி அடுப்புகள். சில படகுகளில் சின்ன மண்ணெண்ணை ஸ்டவ்வும் பார்க்க முடிந்தது. அரிசி, பாத்திரம், கரண்டி, விசிறி என எல்லாம் தயாராக இருந்தது. ஏறியதும், பெண்கள் அடுப்பை ஏற்றி, பாத்திரத்தில் கங்கை நீர் எடுத்து அரிசி களைந்து சாதம் வடிக்க ஆயத்தமானார்கள். அவரவரே செய்ய வேண்டும். நான் உதவி செய்யலாமா என்று கேட்டதற்கு கூடாது என்று விட்டார்கள். ஆண்கள், படகின் முகப்பில் அமர்ந்து, சாஸ்திரிகள் கூறியவாறு தர்ப்பணம் முதலியவை செய்யத் துவங்க, படகு கிளம்பியது.

கங்கையில் பயணம் செய்தவாறே(கிட்டத்தட்ட ஒன்றரை, இரண்டு மணி நேரம்) செய்ய வேண்டிய முக்கியக் கர்மா இது. ஒவ்வொரு மனிதனின் முன்னோர்களும், தம் வம்சத்திலிருந்து யாராவது வந்து தம‌க்குப் பிண்டம் அளிக்கிறார்களா என எதிர்பார்த்து கங்கைக் கரையில் காத்திருப்பார்களாம். அவர்களை நல்ல கதி அடையச் செய்ய ஒவ்வொருவரும் கட்டாயம் செய்ய வேண்டிய கடமை இது.

ஐந்து ஸ்நான கட்டங்களில் பிண்டம் அளிக்க வேண்டும். மிக அதிக எண்ணிக்கையில் ஸ்நான கட்டங்கள் இருந்தாலும், மிக முக்கியமான ஐந்து கட்டங்களில் மட்டுமே இது நிறைவேற்றப்படுகிறது. ஒவ்வொன்றுக்கு இடையிலும் மிக அதிக தூரம் உண்டு. ஆகவே போட்டில் செல்கிறோம். ஒரு ஸ்நான  கட்டத்தை நெருங்கியதும், வடித்த சாதத்தை எடுத்து தட்டில் போட்டு பெண்கள் உருண்டைகளாக்கித் தர, அதை ஆண்கள் வாங்கி, மந்திர பூர்வமாக கங்கையில் அர்ப்பணம் செய்தார்கள். அடுத்த ஸ்நானக் கட்டம் வருவதற்குள், மறு முறை சாதம் வடித்துத் தயார் நிலையில் வைக்க வேண்டும். இவ்வாறு ஐந்து முறை செய்ய வேண்டும். கொஞ்சம் வேகமாகச் செய்ய முடிந்தால் நல்லது. கூடுமானவரை பேச்சில் ஈடுபடாமல், சாதத்தை அடிபிடிக்க விடாமல் செய்ய வேண்டும். ஒரு படகில் பல தம்பதிகள் இருப்பதால், ஒருவருக்கு நேரமானால் அது மற்ற அனைவரையும் பாதிக்கும். ஆயுளில் ஒரு முறை கிடைக்கும் வாய்ப்பு இது. இதை வீண் செய்யாமல், பித்ருக்கள் ப்ரீதி அடைந்து நம் தலைமுறை தழைக்க ஆசி கூற வேண்டும் என்ற வேண்டுதலோடு செய்வது நல்லது.

பெரியவர்களெல்லோரும் சிரத்தையாக தம் பித்ருகர்மாவை நிறைவேற்றியபடி இருக்க, நாங்கள் படகின் பின்னிருந்து, கங்கையின் அழகையும், படித்துறைகளையும் பார்த்தபடி வந்தோம். நிஜமாகவே இது ஓர் அற்புத அனுபவம். கரையோரத்தில் இருக்கும் ஆலயங்கள், நீள நீள கம்புகள் நட்டு, அதில் கூடைகளை மாட்டி, பறவைகளுக்கு உணவு வைத்திருக்கும் விதம், பலதரப்பட்ட மக்களின் பிரார்த்தனை வழக்கங்கள் இவற்றைப் பார்த்தபடி பயணித்தோம்.

ஹரிச்சந்திர மகாராஜா காவல் காத்த சுடலை என்பதால் ஹரிச்சந்திர காட்டில் பிணங்கள் எரியூட்டப்படுவது நடக்கிறது. நள்ளிரவில், யோகிகள் பலர் சூழ்ந்து ஜபம் செய்வார்கள் என்றார்கள்.

இப்படி ஒவ்வொரு படித்துறையின் பெயர், அது சார்ந்த விவரங்கள், காசியின் பெருமை முதலியவற்றை எங்கள் கூடவே வந்த ஒருவர் சொல்லிக் கொண்டு வந்தார். குறிப்பாக, மகாபாரதம் தோன்றுவதற்குக் காரணமான நிகழ்வுகளை உள்ளடக்கிய 'அற்புத பாரதம்' குறித்தும் அறிந்து கொள்ளும் நல்வாய்ப்புக் கிடைத்தது.

பித்ரு கர்மாக்கள் நிறைவடையும் நேரம் கொஞ்சம் மந்திரங்கள் அதிகம் இருக்கும். ஆகவே, சாஸ்திரிகள் என்னையும் என் கணவரையும் பார்த்து, 'நீங்க இறங்கி, கங்கையில் குளிச்சுட்டு, பக்கத்தில பிந்து மாதவரை சேவிச்சுட்டு வந்துருங்கோ, அதுக்குள்ள இங்கே எல்லாம் முடிஞ்சுடும்' என்றார்.

'சரி, பக்கத்தில் தானே, சீக்கிரம் போயிட்டு வருவோம்' என்று கிளம்பினோம். அவர் கை காட்டிய இடத்துக்கு அருகே போனதும் அசந்து போனேன். அவ்வளவு உயரமான இடத்தில் தான் பிந்து மாதவர் கொலுவிருக்கிறார். பெரிய பெரிய படிகள். கைப்பிடிகள் உண்டு. ஏறி, திரும்பி, திரும்பவும் படிகள் ஏறினால், மிகப் பெரிய கூடம் ஒன்று இருக்கிறது. பல பக்தர்கள் அங்கே தியானத்திலும் பஜனையிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். அதைத் தாண்டினால் பிந்து மாதவப் பெருமானின் கருவறை. அழகு கொஞ்சும் திருவுருவம். கீழே சின்னதாக நவநீதக் கிருஷ்ணரும் இருக்கிறார். சிரத்தையாகப் பூஜை செய்கிறார்கள். உள்ளே சென்றதும், மனதை அமைதிப்படுத்தும் விதமான அதிர்வலைகளின் தாக்கத்தை உணர முடிந்தது. பக்தியுடன் வழிபட்டோம்.

சந்தனம், தீர்த்தம் பிரசாதமாகத் தருகிறார்கள். பெற்றுக் கொண்டோம். தக்ஷிணை தந்து, நமஸ்கரித்தோம். பின்னோக்கி நகர்ந்து வெளியே வந்தோம். அருகிலேயே, சிவனாரின் பெரிய லிங்கத் திருமேனி ஒன்றும் இருக்கிறது. பிந்து மாதவர் வழிபட்ட லிங்கம் என்று சொன்னார்கள். ஒரு பெரிய தாராபாத்திரத்திலிருந்து, லிங்கத்தின் மேல் நீர் அபிஷேகித்த வண்ணம் இருந்தது. அருகிலேயே நிறைய மஹரிஷிகள் பிரதிஷ்டித்த லிங்கத் திருமேனிகள். அனைத்தையும் வணங்கினோம். வெளியே வந்து, இறங்கும் முன்பாக, இடப்புறம் திரும்பினால், கொஞ்சம் படிகள் இறங்குகின்றன. அங்கே, மாத்வர்களால் மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்படும் கிருஷ்ணன் கோவில் இருக்கிறது. இது மிகப் பலருக்குத் தெரிவதில்லை. அங்கும் தரிசனம் செய்தோம்.

நாங்கள் தரிசனம் முடிந்து வருவதற்கும் படகு கிளம்புவதற்கும் சரியாக இருந்தது.
.
சாஸ்திரிகளின்  அஸிஸ்டென்ட் பையன் ஒருவன், பாத்திரங்களை எடுத்து, கங்கைக் கரையில் இருந்த வண்டல் மண்ணால் தேய்த்து சுத்தம் செய்தான். தங்கப் பாத்திரம் தோற்கும்!!!. அத்தனை மினுமினுப்பு. 'பேசாம பாக்கெட் பாக்கெட்டா சோப்பும் லிக்விட்டும் வாங்கறதுக்கு, இதை இரண்டு பாக்கெட் எடுத்து போனா என்ன?' என்று தோன்றியது (யாரு விட்டாங்க?).

பெரியவர்கள் கங்கையில் குளித்ததும், மீண்டும் தங்கும் இடம் வந்தோம். ஒரு பெரிய ப்ளாஸ்டிக் பையில் ஈர வஸ்திரங்களை (வேட்டி, அங்கவஸ்திரம், புடவை அனைத்தும்) வைத்தோம். உணவுக்கு முன் அவை தானம் செய்யப்பட்டன.

மதியம் கொஞ்சம் ரெஸ்ட். மாலை சப்தரிஷி பூஜைக்கு டிக்கட் வாங்க முன்கூட்டியே கொஞ்சம் பேர் சென்று விட்டனர். நாங்கள் கொஞ்சம் ஷாப்பிங் போகலாம் என்று நினைத்தோம்.

காசியில் அன்னபூரணி விக்கிரகம், காசிப்பட்டு முதலியவை தவிர வேறு சிலவும் பிரசித்தம். வண்ணம் போகாத மரப்பொம்மைகள், குறிப்பாக சின்ன சின்னதாக அட்டைப் பெட்டிகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் பொம்மை மிருகங்கள் ரொம்பவே அழகு. வாங்கிக் கொலுவில் வைக்கலாம். அதே போல் வளையல்கள். மர வளையல்கள் ரொம்பவும் அருமையாக இருக்கும். அஷ்டகந்தம் எனும் பூஜைப் பொருள் அங்கே ஒரிஜினலாகக் கிடைக்கும்.

பூஜா விக்கிரகங்கள், ஸ்வாமி அலங்காரப் பொருட்கள், ஸ்வாமி சிம்மாசனம் உள்ளிட்ட பூஜைப் பொருட்கள்  சம்கி, கற்கள் ஒட்டப்பட்ட குங்குமச் சிமிழ் பலவும் நியாயமான விலையில் கிடைக்கும். உதாரணமாக, அங்கு ஒரு குங்குமச் சிமிழ் பத்து ரூபாய் என வாங்கினேன். இங்கே நம்மூரில் விசாரித்த போது ஐம்பது ரூபாய் சொன்னார்கள்.

பிரயாகையில் தோல் பொருட்கள்  விலை கம்மி என்று எங்கள் கூட வந்த பெண்மணி கூறினார். ஆனால் நாங்கள் அங்கு கடைப்பக்கம் போகாததால் தெரியவில்லை.

ஒரு விஷயம் இங்கே சொல்ல வேண்டும். கைடு கூட்டிச் செல்லும் கடைக்குச் சென்றால் அவருக்கு கொடுக்க வேண்டிய கமிஷன் சேர்த்து விலை சொல்வார்கள். அதே சமயத்தில் நமக்கு நாலு கடை ஏறி இறங்குவதும் கஷ்டம். சூழலை அனுசரித்து, கைடை விரோதிக்காது, அவரிடம் வழி மட்டும் கேட்டுக் கொண்டு, 'நாங்கள் வசதிப்படும் போது செல்கிறோம்' என்று கூறிவிட்டு, பின்னால் நாமே செல்வது சிறந்தது. பேரம் பேசுவதில் மன்னர்களை விட்டு விலையைத் தீர்மானிக்கச் சொல்வது சாலச் சிறந்தது. ஏனென்றால், நன்றாகப் பேரம் பேசினால் நல்ல விலைக்கு வாங்கலாம்.

சப்த ரிஷி பூஜை சரியாக ஏழு மணி அளவில் ஆரம்பிக்கும். இதற்கு  கொஞ்ச நேரம் முன்பாகவே டிக்கட்டுகள் வாங்கலாம். நிறையக் கூட்டம் இருக்கும். ஆகவே டிக்கட் வாங்கினாலும் முன் கூட்டியே செல்வது நல்லது.

காசியில் நடத்தப்படும் பூஜையில் மிகச் சிறப்பு வாய்ந்த பூஜை இது. காசி விஸ்வநாதருக்கு சப்த ரிஷிகளே வந்து பூஜை செய்வதாக ஐதீகம். ஆகையால் ஏழு பண்டாக்கள் காசி விஸ்வநாதரைச் சுற்றி அமர்ந்து, அனைத்து வித அபிஷேகங்களையும் செய்து, செந்தூரத்தால் ராம நாமம் எழுதிய வில்வதளங்களால் பூஜிப்பார்கள். பார்க்கவே ரொம்ப அருமையாக இருக்கும். தீப ஆரத்தி நடக்கும் போது  மெய்சிலிர்க்கும்.நாங்கள் சரியான நேரத்தில் சென்று அமர்ந்து பூஜையைத் தரிசித்தோம்.

ஆனால் இங்கு ஒரு நெருடலான விஷயம் சொல்லாமல் விடுவது முறையில்லை என்று நினைக்கிறேன். பொதுவாக, ஆன்மீக யாத்திரையைப் பற்றி எழுதும் போது நெகடிவ்வான விஷயங்கள் சொல்வதில்லை. ஆனால் அவ்வாறு செய்வது, அந்தக் கட்டுரையைப் பின்பற்றி யாத்திரை செய்யும் யாத்ரீகனுக்கு வேறு விதமான அனுபவங்களைத் தந்து வருத்தப்படுத்தக் கூடும். ஆகவே சொல்கிறேன்.

இந்த பூஜை பார்க்கச் செல்கிறவர்கள், முதல் வரிசையில் வேகவேகமாக எழுந்து விடும் திறனுள்ளவர்களை அமரச் செய்வது நல்லது. பூஜை முடிந்ததும், சட்டுபுட்டென்று எழுந்து விடுவது உத்தமம். நாங்கள் கொஞ்சம் தாமதித்தோம். ஆகையால், உள்ளே இருந்த பண்டா வெளியில் வந்து விட்டார். என் கணவரின் நெற்றியில் சிந்தூரம் வைத்து, ராம நாமம் எழுதிய வில்வதளங்களில் இரண்டைக் கொடுத்து, 'எடு தக்ஷிணை' என்றார். என்னவர் பர்ஸைத் திறந்து, இருபது ரூபாயை நீட்ட, வாங்கவில்லை. 'நூறு ரூபாய் கொடு, அதுதான் வைத்திருக்கிறாயே' என்றார். சரி, கோவிலில் ப்ரச்னை வேண்டாம் என்று கொடுத்தோம்.

உடனே பின்னாலேயே ஒருவர் வந்து தீர்த்தம் கொடுத்தார். அவரும் தக்ஷிணை கேட்டார். நூறு ரூபாயைத் தவிர வாங்கவில்லை. உடனே அந்த இடம் விட்டு நகர முற்பட்டோம். பின்னாலேயே ஒருவர் ஓடி வந்து வில்வம் தந்தார். 'வாங்கி விட்டோம்' என்றாலும் விடவில்லை. நூறு ரூபாய் வாங்கி விட்டுத் தான் விட்டார். கிட்டத்தட்ட அந்த ஒரு நொடிக்குள் இவ்வாறே சுமார் இரண்டாயிரத்தைத் தாண்டி செலவாகி விட்டது. அப்படியும் ஒருவர் ஓடி வந்து என்னவர் கையில் துண்டைப் போட்டு முறுக்கி 'எடு தக்ஷிணை' என்றார். விடுவித்துக் கொண்டு வருவதற்குள் பெரும்பாடாகி விட்டது. 'விஸ்வநாதப் பெருமானே துணை' என்று  வெளியில் ஓடி வந்தோம்.

வேகமாக அறைக்கு வந்து, ஒரு தனிப்பையில் மறுநாள் கயாவிற்குச் செல்லத் தேவைப்படும் பொருட்களைப் பேக் செய்தோம். சாப்பிட்டுவிட்டு, காரில் கயாவிற்குப் புறப்பட்டோம்.....(தொடரும்.)

சிவனருளால்
வெற்றி பெறுவோம்!!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

வெள்ளி, 3 மே, 2013

தனுசுவின் கவிதைகள்.....பாடவைக்கும் பாத கொலுசு!



கொஞ்ச தூரத்தில்
கொலுசொலி
கேட்கிறது
என்னை கொஞ்ச
வரச்சொல்லி அழைக்கிறது!

நெஞ்சம் நிறைய இனித்து
அந்த சப்தம்
என்னை
தனதாக்கி ஆள்கிறது!
இந்திரஜாலமாய் மலர்ந்து
அடி நெஞ்சில்
குளிர் தருகிறது!

அந்த ஜல் ஜல் ஒலி
ஜதி கூட்ட
சல் சல் ஒலி
சுதி ஏற்ற
என்னை மயக்கும்
வாத்யம்
தாளம்
ஸ்வரம்
கானம்
கலந்த நாத உபாசனையாகிறது!

இத்தனையும் செய்யும்
அந்த
கொலுசு அணிந்த
அழகிய மேகலையின்
அசைவும் ஓர் கலையாகிறது!
அந்த
அபிநயம் பூட்டிய ஒலி
தரும் இசை நவரசமாகிறது!
அந்த
கொலுசு கட்டிய பாதம்
வரும் திசை பாசுரமாகிறது

இவை தரும் அவள்
நர்த்தகியோ
நாட்டியப் பேரொளியோ அல்ல.....

மஞ்சள் தாம்பாளத்தின்
இளம்வெற்றிலை....
மல்லிகைச் செடியில் துளிர்விட்ட
புதுமொட்டு....
அதிகாலைப் பொழுதில்
எழும்கதிர்.....
அந்தி சாயும் பொழுதின்
முதல்பிறை.....

அவள் மங்கையல்ல
மழலை!
குமரியல்ல
குழந்தை!

ஓரெட்டு நிறைந்தவளுக்கு
தாலாட்டு பாட வரும் நான்
அவள்
காலடி பட்டு கிளம்பும் ஓசையில்
தலையாட்டி தூங்கி விடுகிறேன்!
இந்த
பூமியின் மற்ற இன்பம் மறந்துவிடுகிறேன்!



-தனுசு-
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.