சனி, 20 ஏப்ரல், 2013

KASI YATHRA ....PART 6, சங்கமக் கட்டத்தில்....(காசி யாத்திரை...பகுதி 6).


சென்ற பதிவின் தொடர்ச்சி.....

சங்கம ஸ்நானத்திற்குப் போகும் முன்பாக, எங்கள் கைடு, நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்களைப் பற்றிச் சொன்னார். அவற்றின் சாரத்தையும், நான் நேரில் கண்ட சில விஷயங்களையும் பற்றிச் சொல்கிறேன்.

வேணி தானம் செய்வதற்கு, பண்டிட் தனியாக அரேஞ்ச் செய்யப்படுவார். அவரும் நம்முடன் படகில் வருவார். ஆண்கள்,முடியிறக்க வேண்டும் என்று அபிப்பிராயப்பட்டால், முன்கூட்டியே தெரிவித்துவிட வேண்டும். முடியிறக்கும் தொழிலாளரும் நம்முடன் படகில் வந்து விடுவார்.

பண்டிட்டுக்கும் இவ்வளவு தான்(தொகை குறிப்பிட்டார்) தக்ஷிணை தரவேண்டும். பொதுவாக 'முடிந்ததைக் கொடுங்கள்' என்று அவர் கேட்பார். கேட்ட உடனேயே, டக்கென்று தொகையைக் கொடுத்துவிட வேண்டும். 'நீங்கள் சொல்லுங்கள், தருகிறோம்' என்று இழுத்தோமானால் போச்சு. அது தவிர, சாப்பாட்டுக்குக் கொடுங்கள் என்று தனியாக வேறு கேட்பார். முடியிறக்கும் தொழிலாளருக்கு, படகோட்டிக்கு தரவேண்டிய தொகை தனி.

பொதுவாக நாலைந்து பேராகச் சேர்ந்து சென்றால், ஒருவரே தொகையைக் கொடுக்குமாறு ஏற்பாடு செய்து கொண்டு, பின்னால் பிரித்துக் கொள்ளலாம். ஒவ்வொருவரும் தனித்தனியாகப் பர்ஸைத் திறப்பது பாதுகாப்பானதல்ல. நம், பர்ஸ், வாட்ச், காமிரா இவைகள் பத்திரம். ஒவ்வொரு தம்பதியாகக் குளித்தால், ஒருவர் குளிக்கும் போது, மற்றவர் பொருட்களைப் பத்திரப்படுத்திக் கொள்ளலாம்.

கூடுமானவரை, படகில் ஏறும் போதும், இறங்கும் போதும் வேகமாக நடந்து செல்வது நல்லது. குறிப்பாக, இறங்கும் போது, வேகமாக இறங்கி வண்டிக்குள் வந்து விட வேண்டும். அகோரிகள், சாமியார்கள், பாம்பைக் காட்டி பயமுறுத்திக் காசு கேட்பவர்கள் எனத் துரத்துவார்கள். மினிமம் பத்து ரூபாயாவது தர வேண்டியிருக்கும். ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகக் கேட்பார்கள்.

படகில் ஏறியதும், வேணி தானம் செய்யும் சடங்குகள் நடக்கும். அதற்குப் பின்  படகு சங்கமத்துக்குச் செல்லும். அங்கே குளிக்கும் இடத்தில், பால் நிரம்பிய வாளிகளை வைத்துக் கொண்டு சிலர் நிற்பார்கள். டம்ளரில் பால் தந்து, சங்கம இடத்தில் ஊற்றினால் புண்ணியம் என்பார்கள். ஊற்றிய பிறகே தொகையைச் சொல்வார்கள். ஒரு டம்ளர் பால் விலை, ஆளைப் பொறுத்து ஐம்பது ரூபாயிலிருந்து, ஐநூறு வரை போகும்.  நான் நேரில் பார்த்த சம்பவம் ஒன்று சாம்பிளுக்கு...ஸ்நானம் செய்து விட்டு, அந்த அயர்வில், மூச்சிரைக்க நின்ற ஒரு வயதான மூதாட்டியிடம், ஒருவர் பாலை நீட்ட, நீட்டிய வேகத்தைப் பார்த்து, அந்த பாட்டியும், பாவம் 'குடிக்கத்தானாக்கும்' என்று நினைத்துக் குடித்து விட்டு, பிறகு பட்ட பாடு தனிக்கதை.

நாங்கள் படகில் ஏறிக் கொண்டோம். எங்களுடன் பண்டிட்டும் ஏறினார். பார்ப்பதற்கு சக பயணி போலவே இருந்தார். படகு செல்லும் போதே, பூஜை ஆரம்பித்தது. பண்டிட், பையிலிருந்து, கத்தரிக்கோல் இத்யாதிகளை எடுத்தார். மனைவிமார்களையும் கணவன்மார்களையும் எதிரும் புதிருமாக அமரச் செய்தார். மனைவி, கணவனுக்குப் பாத பூஜை செய்ய வேண்டிய சடங்கு முதலில்.

முன்பு கூறிய அதே மந்திரங்களைக் கூறி, கணவனை, தன்னை ஆசீர்வதிக்குமாறு மனைவி வேண்டி, இரு கரங்களையும் கூப்பி நமஸ்கரிக்க வேண்டும். பின், கத்தரிக்கோலுக்கு பூஜை. முறத்திலிருக்கும் மஞ்சள் குங்குமத்தில் கொஞ்சம் எடுத்துப் பூஜை செய்யச் சொன்னார். பின், மனைவியை திரும்பி அமரச் செய்து, கணவன் தலைவாரிப் பின்னலிட வேண்டும். பின்னலின் நுனியை சிறிதளவு கத்தரிக்கோலால் 'கட்' செய்து, முறத்தில் வாங்கிக் கொள்ள வேண்டும்.

இதை சங்கமக்கட்டத்தில், நீரில் விட வேண்டும் என்று பண்டிட் கூறினார். பொதுவாக, நீரின் மேல் மஞ்சள் குங்குமம் இட்டால், அது கரையும். கூந்தல் மேலே மிதக்கும். ஆனால், வேணி தானம் செய்யும் போது, நாம் காண்பது ஒரு தெய்வீக அற்புதம். முறத்திலிருந்துபொருட்களை நீரில் விட்டதும், கண் முன்னே கூந்தல் சட்டென்று உள்ளே மூழ்கும். மஞ்சள், குங்குமம் சற்று நேரம் மேலே மிதக்கும். பின்பே கரையும். முப்பெரும் நதி தேவியரும், பெண்கள் மனமுவந்து தரும் காணிக்கையைப் பெரு மகிழ்வுடன் உடனே ஏற்று நம்மை மகிழ்விக்கிறார்கள். நம் பிரார்த்தனைகள் நிறைவேற ஆசீர்வதிக்கிறார்கள்.

வேணி தானம் செய்வோர் அவசியம் இக்காட்சியைக் கண்ணாரக் காண வேண்டும். தவற விட்டு விடக் கூடாது. இதன் பின், ஆண்கள் முடியிறக்க வேண்டும்.

திரிவேணி சங்கமத்தில் ஒருவர் ஸ்நானம் செய்தால், அவரது மூதாதையர் பல தலைமுறைக்கு நற்கதி பெறுகின்றனர். எனவே சங்கம ஸ்நானம் மிக சிறப்பு வாய்ந்தது. பண்டிட், ஸ்நானம் செய்ய வேண்டிய விதிகளைச் சொன்னார். அவற்றை என் நினைவில் இருந்து எழுதுகிறேன்.

முதலில் ஆண்கள் ஸ்நானம் செய்ய வேண்டும். அதன் பின், பெண்கள் இறங்க வேண்டும். தம்பதிகளாக, (முறத்திலிருக்கும்)வேணி தானம் செய்து, கங்கை, யமுனை, சரஸ்வதியையும், வேணி மாதவரையும் பிரார்த்தித்துக் கொண்டு குளிக்க வேண்டும். வேணி மாதவரை சங்கமக் கட்டத்தில், கையால் எடுக்காமல், டப்பாவை அப்படியே நீரில் அமிழ்த்தி 'விஸர்ஜனம்' செய்ய வேண்டும்(செய்து விட்டு டப்பாவை அங்கேயே தூக்கிப்போடக் கூடாது. எடுத்து வந்து, கரையில் குப்பைத் தொட்டியில் சேர்க்க வேண்டும்). பின் மீண்டும் ஸ்நானம் செய்து விட்டு வந்து விட வேண்டும்.

பண்டிட்டுக்கு தக்ஷிணைகள் கொடுத்தோம். சங்கமத்தில் வஸ்திர தானம் செய்வது விசேஷம். கையோடு கொண்டு சென்ற வேட்டி, அங்கவஸ்திரத்தையும் கொடுத்தோம்(இது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது). அங்கிருந்த மற்றொரு படகில் அவர் ஏறிக் கொண்டார். எங்கள் படகு, சங்கமத்தை நோக்கிச் சென்றது.

சங்கமத்தை படகு நெருங்க, நெருங்க, மனசு பயத்தில் படபடத்தது. ஊரிலிருந்தே, 'சங்கமத்தில் குளிக்கும் போது எகிறிக் குதிக்கணும்' என்று சொல்லக் கேட்டு, 'எப்படி எகிறிக் குதிப்பது?' என்பது ஒன்றே சிந்தனையாக இருந்தது. போகும் வழியில் மரங்களில் குரங்குகள் தென்படுகிறதா எனப் பார்த்தேன்(எப்படி குதிக்கணும்னு தெரிஞ்சுக்கத்தான்). அருகிலிருந்த ஒரு மூதாட்டி, 'வயசானவாளே குதிக்கறா, உனக்கென்ன?' என்று தைரியப்படுத்தினார்.

படகு சங்கமத்தை அடைந்தது. கட்டைகளை ஒன்றிணைத்து கட்டுமரம் போல் ஒரு மேடை. அதன் இரு பகுதிகளில், ஸ்நானம் செய்ய வசதி செய்யப்பட்டிருந்தது. வசதி என்றால் படித்துறை அல்ல. மேடையிலிருந்து ஒரு சிறு மரப்படி இருந்தது. படியின் கீழிருந்து, இரு புறமும் கயிறுகள் கட்டி, அதன் நுனிகளை ஒரு நீண்ட தடிமனான கழி மூலம் இணைத்திருந்தார்கள். அதுவே மூன்றாவது படி. அதாவது, மேடை, மரப்படி, கழி என்று காலை வைத்து  இறங்கிக் குளிக்க‌வேண்டும்.

கழி நீரின் மேலே மிதக்கும். மேடையிலிருந்து மரப்படியில் இறங்கி உட்கார்ந்து கொள்ள வேண்டும். மரப்படியின் இருபுறமும் இருவர் நிற்பார்கள். ஒருவர், தன் காலால், கழியை நீருள் அழுத்துவார். கழியில் ஒரு காலை வைத்து, இறங்கி, மறு காலை நீருள் வைத்துக் குதிக்க வேண்டும். ஆனால் ஒன்றும் பயமில்லை (ஏன்னா, நானே இறங்கி, குதிச்சு, குளிச்சிட்டேன்). இறங்கும் போது, 'எப்படித் திரும்ப ஏறுவது?' என்பது யோசனையாக இருந்தது. ஆனால் இறையருளால் அதுவும் நடந்து விட்டது.

ஸ்நானம் செய்யும் போது, சங்கம நீருள் காசு போடுவது பலரின் வழக்கம். காசை யார் கண்ணிலும் காட்டாமல் வைத்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், இறங்கும் போதே, படியில் நிற்பவர்கள், 'எங்க கிட்ட கொடுத்துடுங்க...' என்று பிடுங்கிக் கொள்வார்கள்.

என் முறை வந்தது. ஜாக்கிரதையாக இறங்கினேன். இறங்கியதும் மனநிலையே மாறி விட்டது. சங்கம ஸ்நானம், கிடைத்தற்கரிய ஓர் அற்புத அனுபவம். வானில் தங்க நிறச் சூரியன் தகதகக்க,அந்த ஒளிக்கிரணங்களால், கருநிற யமுனையும், சற்றே வெளிர் நிற கங்கையும் ஒன்றிணைந்து மின்ன‌, காலுக்கு கீழ், அந்தர்வாஹினியாக ஓடும் சரஸ்வதியின் விறுவிறுப்பான ஓட்டத்தை உணர்ந்து, அனுபவித்துக் குளிப்பது அலாதியான அனுபவம். திடீரென மனம் லேசாகி, பறப்பதைப் போலவே இருக்கிறது. எனக்கு அருளப்பட்ட இந்த அற்புத அனுபவத்துக்காக, இறைவனுக்கு நன்றி சொன்னேன். கையோடு எடுத்து வந்திருந்த என் கணவரின் அங்கவஸ்திரத்துக்கு முழுக்காட்டி, பின் நானும் நீராடினேன்.

திரிவேணி சங்கமத்தை விட்டு வர மனமில்லை. 'மீண்டும் எப்போது சங்கம ஸ்நானம் வாய்க்குமோ' என்று நினைத்தபடி மேலே வந்தேன்.

பிளாஸ்டிக் கேன்களில் நீரைச் சேகரித்துக் கொண்டு, தங்குமிடம் வந்தோம். வந்ததும், என் மாமியார் உள்ளிட்ட பெண்களிடம் ஒரு தட்டில் சாதம் தந்து உருண்டை பிடிக்கச் சொன்னார்கள். பின் தீர்த்த சிரார்த்தம் நடந்தது. அது முடிய முக்கால் மணி நேரம் பிடித்தது. அதன் பின் ஆசீர்வாதம். அக்ஷதையை, உறவினர்களுக்குக் கொடுக்கவென, சின்ன சைஸ் கன்ஸீல்ட் கவர்களில் சேமித்துக் கொண்டோம். அதன் பின்னே ஈர உடையை மாற்றி, சாப்பிட வேண்டும். நாங்கள் சாப்பிடும் போது பிற்பகல் மூன்று மணி.

நாங்கள் எடுத்து வந்திருந்த ரவிக்கைத் துணி செட்களில் சிலவற்றை அங்கிருந்த யாத்ரீகப் பெண்களுக்குத் தாம்பூலமாகத் தரலாம் என என் மாமியார் அபிப்பிராயப்பட்டார். ஆனால் அங்கிருந்தவர்கள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. 'எல்லோரும் ஸ்ரார்த்தம் செய்து, பாவங்களைத் தீர்க்க வந்திருக்கிறார்கள், ஆகவே அவர்களுக்குத் தரக்கூடாது' என்று சொல்லி விட்டு, நான் முன்பு கூறியது போல், அங்கிருந்த அவர்களது உறவுப் பெண்களுக்கே தர வைத்தனர். இதைப் பார்த்த, ஒரு யாத்ரீகப் பெண், பின் எங்களிடம் வந்து 'நீங்க அவங்க கிட்ட ஒண்ணும் சொல்லக் கூடாது. நீங்களாகவே செஞ்சிடணும். உங்களை மாதிரியே நாங்களும் எடுத்து வந்திருக்கோம். நாங்க அப்படித்தான் செய்தோம். இன்னும் கொஞ்சம் செட்,கங்கைக் கரையில் கொடுக்க வச்சிருக்கோம். நீங்க அப்படி வச்சிருந்தீங்கன்னா இவங்க கிட்ட சொல்லாதீங்க.. ' என்றார். அப்படியே செய்தோம்.


அங்கிருந்து புறப்பட்டோம். வரும் வழியில், அலகாபாத்தில், 'ஆனந்த பவனம்' பார்த்தோம். சில காரணங்களால், வெளியிலிருந்து மட்டுமே சுற்றிப் பார்க்க முடிந்தது. ஆனாலும், நம் பாரத நாட்டின் முதல் பிரதமரான, பண்டிட் திரு.ஜவஹர்லால் நேரு பிறந்து வளர்ந்த அந்த மண்ணில் கால்கள் படும் போது நம் தேகம் சிலிர்ப்பது உண்மை. எத்தனை அருமையாக வளர்ந்தவர், நாட்டுக்காக எத்தனை பாடுகள் பட்டிருக்கிறார்!!!. நெஞ்சம் கனக்க, வெளி வந்தோம்.

அங்கிருந்து புறப்பட்டோம். அடுத்ததாக எங்கள் பயணம் 'சித்ரகூடம்' நோக்கி.

மானிடர் வாழ வேண்டிய மாண்பை உணர்த்திய அவதார புருஷன், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, தம் வனவாச காலத்தில், சிறிது காலம் வாசம் செய்து புனிதப்படுத்திய சித்ரகூடத் திருத்தலத்தை தரிசிக்கும் ஆவலோடு தொடர்ந்து பயணம் செய்தோம்..(தொடரும்...)

வெற்றி பெறுவோம்!!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

3 கருத்துகள்:

  1. காசி யாத்திரை படித்தேன்.

    இனிதே முடிந்தது மனதிற்கு இதமாக இருந்தது.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெய்ட் ப்ளீஸ்!!.இதுவரைக்கும் பிரயாகை யாத்திரை தான் நிறைவடைந்தது. இனிமே தான் காசி யாத்திரை இருக்கிறது. யாத்திரை சம்பந்தமான அனைத்து தகவல்களையும் சேர்த்து ஒரு கைடு போல் தரவேண்டுமென்பதற்காகவே இத்தனை பதிவுகள். தயவு செய்து பொறுமை காக்கவும்.

      நீக்கு
  2. பண்டிட்களுக்கு தக்ஷிணை, வஸ்திர தானம், பாம்பைக்காட்டி பயமுறுத்துவோர் தொல்லைகள் என ஒன்றுவிடாமல் அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு