சனி, 23 ஜூன், 2012

மஹாகவி பாரதியின் 'கண்ணன் பிறப்பு'




மஹாகவி பாரதியார்,பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி எழுதிய பல கவிதைகளுள் ஒன்றான 'கண்ணன் பிறப்பு' கவிதையை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.


கண்ணன் பிறந்தான்-எங்கள்
கண்ணன் பிறந்தான்-இந்தக்
காற்றதை யெட்டுத் திசையிலுங் கூறிடும்.


தின்ன முடையான்-மணி
வண்ண முடையான்-உயர்
தேவர் தலைவன் புவிமிசைத் தோன்றினன்


பண்ணை யிசைப்பீர்-நெஞ்சிற்
புண்ணை யொரிப்பீர்-இந்தப்
பாரினிலே துயர் நீங்கிடும் என்றிதை




எண்ணிடைக் கொள்வீர்-நன்கு
கண்ணை விழிப்பீர்-இனி
ஏதுங் குறைவில்லை;வேதம் துணையுண்டு,(கண்ணன் பிறந்தான்)


அக்கினி வந்தான்-அவன்
திக்கை வளைத்தான்-புவி
யாரிருட் பொய்மைக் கலியை மடித்தனன்


துக்கங் கெடுத்தான்-சுரர்
ஒக்கலும் வந்தார்-சுடர்ச்
சூரியன்,இந்திரன்,வாயு,மருத்துக்கள்




மிக்க திரளாய்-சுரர்
இக்கணந் தன்னில்-இங்கு
மேவி நிறைந்தனர்;பாவி யசுரர்கள்


பொக்கென வீழ்ந்தார்,-உயிர்
கக்கி முடிந்தார்-கடல்
போல ஒலிக்குது வேதம் புவிமிசை(கண்ணன் பிறந்தான்)


சங்கரன் வந்தான்-இங்கு
மங்கல மென்றான்-நல்ல
சந்திரன் வந்தின் னமுதைப் பொழிந்தனன்




பங்க மொன் றில்லை-ஒளி
மங்குவ தில்லை-இந்தப்
பாரின்கண் முன்பு வானத்திலே நின்று

கங்கையும் வந்தாள்-கலை
மங்கையும் வந்தாள்-இன்பக்
காளி பராசக்தி அன்புட னெய்தினள்

செங்கம லத்தாள்-எழில்
பொங்கு முகத்தாள்-திருத்
தேவியும் வந்து சிறப்புற நின்றனள்.(கண்ணன் பிறந்தான்)


வெற்றி பெறுவோம்!!!

சனி, 16 ஜூன், 2012

மஹாகவி பாரதியாரின் அலைமகள் துதி

மஹாகவி பாரதியாரின் அலைமகள் துதி

அலைமகளைப் போற்றி, மஹாகவி பாரதியார் எழுதிய அற்புதப் பாடல் இது.


பாற்கட லிடைப் பிறந்தாள் - அது
பயந்தநல் லமுதத்தின் பான்மை கொண்டாள்
ஏற்குமோர் தாமரைப் பூ - அதில்
இணைமலர்த் திருவடி இசைத்திருப்பாள்
நாற்கரத் தானுடையாள் - அந்த
நான்கினும் பலவகைத் திருவுடையாள்
வேற்கரு விழியுடையாள் - செய்ய
மேனியர் பசுமையை விரும்பிடுவாள்


நாரணன் மார்பினிலே - அன்பு
நலமுற நித்தமும் இணைந்திருப்பாள்
தோரணப் பந்தலிலும் - பசுத்
தொழுவிலும் சுடர்மணி மாடத்திலும்
வீரர்தன் தோளிலும் - உடல்
வெயர்ந்திட உழைப்பவர் தொழில்களிலும்
பாரதி சிரத்தினிலும் - ஒளி
பரவிட வீற்றிருந் தருள் புரிவாள்


பொன்னிலும் மணிகளிலும் - நறும்
பூவிலும் சாந்திலும் விளக்கினிலும்
கன்னியர் நகைப்பினிலும் - செழுங்
காட்டிலும் பொழிவிலும் கழனியிலும்
முன்னிய துணிவினிலும் - மன்னர்
முகத்திலும் வாழ்ந்திடும் திருமகளைப்
பன்னிநற் புகழ்பாடி - அவள்
பதமலர் வாழ்த்திநற் பதம் பெறுவோம்.


மண்ணினுட் கனிகளிலும் - மலை
வாய்ப்பிலும் வார்கட லாழத்திலும்
புண்ணிய வேள்வியிலும் - உயர்
புகழிலும் மதியிலும் புதுமையிலும்
பண்ணுநற் பாவையிலும் - நல்ல
பாட்டிலும் கூத்திலும் படத்தினிலும்
நண்ணிய தேவிதனை - எங்கள்
நாவிலும் மனத்திலும் நாட்டிடுவோம்.


வெற்றி கொள் படையினிலும் -பல
விநயங்கள் அறிந்தவர் கடையினிலும்
நற்றவ நடையினிலும் - நல்ல
நாவலர் தேமொழித் தொடரினிலும்
உற்றசெந் திருத்தாயை - நித்தம்
உவகையிற் போற்றியிங் குயர்த்திடுவோம்
கற்றபல் கலைகளெல்லாம் - அவள்
கருணைநல் லொளிபெறக் கலிதவிர்ப்போம்.


வெற்றி பெறுவோம்!!!!

ஞாயிறு, 10 ஜூன், 2012

SRI MEENAKSHI PANCHARATHNAM...ஸ்ரீ மீனாக்ஷீ பஞ்சரத்னம்


பட்டாபிஷேகக் கோலத்தில் ஸ்ரீ மீனாக்ஷி அம்மன்
ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் அருளிய‌ ஸ்ரீ மீனாக்ஷீ பஞ்சரத்னம்

உத்யத்பானுஸஹஸ்ரகோடி ஸத்ருசாம் கேயூரஹாரோஜ்வலாம்
பிம்போஷ்டீம் ஸ்மிததந்த பங்க்திருசிராம் பீதாம்பராலங்க்ருதாம் I
விஷ்ணு ப்ரஹ்மஸுநேந்திர ஸேவிதபதாம் தத்வஸ்வரூபாம் சிவாம்
மீனாக்ஷீம் ப்ரணதோsஸ்மி ஸந்ததமஹம் காருண்யவாராம் நிதிம் II

முக்தாஹார லஸத்கிரீட ருச்ராம் பூர்ணேந்து வக்த்ர ப்ரபாம்
சிஞ்ஜந்நூபுர கிங்கிணீ மணிதராம் பத்மப்ரபா பாஸுராம் I
ஸர்வாபீஷ்ட பலப்ரதாம் கிரிஸுதாம் வாணீ ரமாஸேவிதாம்
மீனாக்ஷீம் ப்ரணதோsஸ்மிஸந்தமஹம் காருண்யவாராம் நிதிம் II

ஸ்ரீவித்யாம் சிவவாமபாக நிலயாம் ஹ்ரீங்கார மந்த்ரோஜ்வலாம்
ஸ்ரீசக்ராங்கித பிந்துமத்யவஸதிம் ஸ்ரீமத்ஸபாநாயகீம்
ஸ்ரீமத் ஷண்முக விக்னராஜ ஜனனீம் ஸ்ரீமத் ஜகன்மோஹினீம்
மீனாக்ஷீம் ப்ரணதோsஸ்மிஸந்தமஹம் காருண்யவாராம் நிதிம் II

ஸ்ரீமத் ஸுந்தரநாயகீம் பயஹராம் ஜ்ஞானப்ரதாம் நிர்மலாம்
ச்யாமாபாம் கமலாஸனார்சிதபதாம் நாராயணஸ்யானுஜாம் I
வீணாவேணு ம்ருதங்கவாத்ய ரஸிகாம் நாநாவிதா டம்பிகாம்
மீனாக்ஷீம் ப்ரணதோsஸ்மிஸந்தமஹம் காருண்யவாராம் நிதிம் II

நாநாயோகி முனீந்த்ரஹ்ருந்நிவஸதிம் நாநார்த்தஸித்தி ப்ரதாம்
நாநாபுஷ்ப விராஜிதாங்க்ரியுகலாம் நாராயணே நார்சிதாம் I
நாதப்ரஹ்ம மயீம் பராத்பரதராம் நாநார்த்தத்வாத்மிகாம்
மீனாக்ஷீம் ப்ரணதோsஸ்மிஸந்தமஹம் காருண்யவாராம் நிதிம் II

வெற்றி பெறுவோம்!!!!

திங்கள், 4 ஜூன், 2012

சகலகலாவல்லி மாலை

ஸ்ரீ குமரகுருபர ஸ்வாமிகள் அருளிய‌

சகலகலாவல்லி மாலை

கட்டளைக் கலித்துறை

வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே.

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்
கூடும் பசும்பொற் கொடியே கனதனற் குன்றுமைம்பாற்
காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே.

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற்
குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித்
தௌிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே.

தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று
காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே.

பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென்
நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத்
தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக்
கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே.

பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான்
எண்ணும் பொழுதௌி தெய்தநல் காயெழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பர்
கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே.

பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்
கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர்
தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும் வண்ணம்
காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே.

சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல
நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்
செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே.

சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின் றோற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை
கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே.

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடியுண் டேனும் விளம்பிலுன்போற்
கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே.

                                                                 ********

மாணவர்கள் இதைத் தினம் பாராயணம் செய்தால் சரஸ்வதி தேவியின் அருளால் ஞானமாகிய பெரும் பேறும், சகல கலைகளிலும் வல்லவராதலும்  கிடைக்கும்.

வெற்றி பெறுவோம்.!!!!!