புதன், 27 பிப்ரவரி, 2013

தனுசுவின் கவிதைகள்....ஓர் இரவு

Image courtesy...google images.

அனைத்து மத கடவுள்களும்
கருவறையில் அடைக்கப்பட்டன
இரவைக் கண்ட பயத்தில்!

"பொன்னான ஆட்சி"யை
"புண்ணாக்கு ஆட்சி' என
பறைசாற்றின
இரவு நேர தெருவிளக்குகள்!

கலைக் கோயிலாய்
தரிசனம் தந்துக்கொண்டு இருந்தன
இரவில் தாழிட்ட வீட்டுக்குள்
தொலைக்காட்சி!

காதல் சந்திப்பில்
இட்டு பெரும்
முத்தத்தின் சப்தத்தை
இரவுக்கு கானிக்கையாக்கிக் கொண்டு இருந்தன
ஒரு காதல் ஜோடி!

ஊழலை ஒழிக்க
இரவுக்கூட்டத்தில்
பாடுபட்டுக்கொண்டு இருந்தார்
வெட்டி முழங்கும் அரசியல்வாதி!

போதையின் உச்சத்தில்
கால்களில் பின்னல் போட்டு
இரவிடம் இல்லத்துக்கு
வழி கேட்கும் குடிமகன்!

நடு இரவில்
ஊளையில்
ஊர் பீதி
உண்டாக்கிக் கொண்டிருந்தன
தெரு நாய்கள்!

தாபத்தின் உணர்வை
அழும் குழந்தையின் குரலில்
தெரிவித்தது வீட்டுப்பூனை!

வராது எனத் தெரிந்திருந்தும்
நிலவுக்காக
வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்
ஒரு ப்ரியன்!

ஒவ்வொருவரும்
ஒவ்வொன்றும்
அந்த இரவைத் துணையாக்கிக்கொண்டிருக்க
தன் துணை யாருமின்றி
மெழுகைப்போல்
கரைந்துக்கொண்டு
அதிகாலையில் மறையத் துவங்கியது
என்றும் போல் அன்றைய இரவும்.

-தனுசு-

செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

NAIMISARANYAM...நைமிசாரண்யத்தில் அற்புத அனுபவம்.......

சில மாதங்களுக்கு முன் எங்கள் குடும்பத்தினருக்கு, இறையருளால் காசியாத்திரை மேற்கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது எங்களுக்கு ஏற்பட்ட ஒரு அற்புத அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்தக் கட்டுரை , 'ஞான ஆலயம்' மாத இதழில் வெளிவந்தது. 'ஞான ஆலயம்' இதழுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.  ருத்ராவர்த்தில் புகைப்படம் எடுக்க ஏனோ அனுமதிக்கவில்லை.  நைமிசாரண்யத்தில் பார்க்க வேண்டிய இடங்கள் குறித்த பட்டியலை படமாக எடுத்து பிரசுரித்திருக்கிறேன். ருத்ராவர்த்(Rudravarth) பற்றிய குறிப்பு கீழே இருக்கிறது.

புனித யாத்திரையில் அற்புத அனுபவம்:

எங்கள் குடும்பத்தினர்,  காசி யாத்திரை  சென்ற போது, நைமிசாரண்யம் என்னும் மஹா புண்ணிய க்ஷேத்திரத்தைத் தரிசிக்கும் வாய்ப்புக் கிடைக்கப் பெற்றோம்.

நைமிசாரண்யத்தில், நாம் பார்க்க வேண்டிய பல இடங்கள் உள்ளன. அதில் ஒன்று 'ருத்ராவர்த்' என்னும் இடம். இது ஊருக்கு வெளியே பன்னிரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சிவபெருமான் அருள் நிறைந்துள்ள இந்த இடம், மிக எளிமையாக, அமைதியாக இருக்கிறது.

முன்பே இங்கு சென்று வந்திருந்த நண்பர் ஒருவர், இங்கு கிடைக்கும் அற்புத அனுபவத்தைக் கூறி, 'தவறாது சென்று வாருங்கள்' என்று தெரிவித்திருந்ததால் இந்த இடத்திற்குச் சென்றோம். இல்லையேல் இது பற்றித் தெரியாது போயிருக்கும். நைமிசாரண்யத்திலிருந்து ஆட்டோ அல்லது மினி வேன்கள் இந்த இடத்திற்குச் செல்லுகின்றன. சற்றே பெரிய வாகனங்கள் செல்லுவது கடினம்.

நாங்களும் ஒரு மினி வேன் மூலம் இந்த இடத்தைச் சென்றடைந்தோம். இந்த இடத்தை அடைந்ததும், அருகில் இருந்த ஒரு கடையில், ஒரு தட்டில், வில்வம், பூ, வாழைப்பழம், ஊதுபத்தி முதலானவை விற்கிறார்கள். அவைகளை வாங்கிக் கொண்டோம்.

அங்கே, ஒரு சிறு கோவிலில், சிவபெருமான் சன்னதி இருக்கிறது. தரையில் இருக்கும் ஆவுடையார், அதன் மேல் சிறு லிங்க வடிவம் அமைந்த சன்னதி அது. அங்கே ஒரு சாது இருந்தார். எங்களைக் கண்டதும், அருகே இருந்த ஒரு சிறு குளத்திற்கு அழைத்துச் சென்றார். தண்ணீர் சற்றுக் கலங்கலாக உள்ள ஒரு சிறு குளம் அது. படிகளில் இறங்கிச் சென்றோம்எங்கள் கைகளில் இருந்த தட்டுக்களிலிருந்த வில்வ தளங்களை மொத்தமாக வாங்கி,  எங்களிடம் காண்பித்து, சிவனை வேண்டி குளத்தில் இட்டார்.

என்ன ஆச்சரியம்!!!, வில்வ இலைகள், குளத்தின் மேலே மிதக்காது, உள்ளே சென்று விட்டன. அடுத்த ஆச்சரியம் சில கணங்களில் நிகழ்ந்தது. எங்கள் கைகளில் இருந்த வாழைப்பழங்களை வாங்கி, தோலை உரித்து, ஒவ்வொருவராகக் குளத்தின் உள்ளே போடச் சொன்னார். நாங்களும் செய்தோம்.
Devadeveswar temple, Naimisaranyam
முழு வாழைப்பழம், குளத்தின் உள்ளே போட்டதும், சற்று மூழ்கி, உடனே சட்டென்று, திரும்பி மேலே எழும்பி செங்குத்தாக மிதந்து வந்தது. துளி அழுக்கு இல்லாமல், பளிங்கு போல்!!!. ஆச்சரியத்தில் எங்களுக்கு வாய் மூட வில்லை.

சிவப்பிரசாதம் என்று பக்தியுடன் அந்த சாது அவற்றை எடுத்து வழங்கினார். நாங்களும் சாப்பிட்டோம். பிறகே சிவன் சன்னதிக்கு அழைத்துச் சென்றார். ஒரு செம்பில் குளத்து நீரை எடுத்து வந்து அபிஷேகம் செய்து, கையோடு கொண்டு வந்திருந்த வில்வதளங்கள் மற்றும் பூக்களால் அர்ச்சித்து, ஊதுபத்தி காண்பித்து வழிபட்டோம் (அங்கு நாமே செய்யலாம்). அருகில், நாகர், பகளாமுகி தேவி ஆகியோரின் சன்னதிகளும் தனிக்கோவிலாக அமைந்துள்ளன. அவற்றையும் தரிசித்தோம்

பிறகு அந்த சாது கூறினார். சிவனருள் இருப்பவர்களுக்கு மட்டுமே, பழம் இவ்வாறு மேலேழும்பி வருமாம்நாங்கள் இறையருளை எண்ணி மெய்சிலிர்த்தோம்தட்டுக்களை  திரும்பக் கொண்டு கொடுக்கும் போது, கடைக்காரரும், 'பழம் மிதந்ததா?' என்று கேட்டார். சிலருக்கு அவ்வாறு மிதக்காதாம். 'இறையருள் இருந்தால்தான் இந்த இடம்  வரவே முடியும். இதைப் பற்றித் தெரிந்தவர்கள் மிகக் குறைவு. அப்படியும் சிலருக்கு பழம் உள்ளே போய்விடும்' என்றார்.

சிவனருளை எண்ணி, எங்களில் சிலருக்கு ஆனந்தக் கண்ணீரே வந்து விட்டது.  வணங்கியபடி ஊர் திரும்பினோம். நைமிசாரண்யம் செல்லும் வாய்ப்பு கிடைக்கப் பெறுபவர்கள், தவறாது இந்த இடத்தைத் தரிசிக்குமாறு,தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

வெற்றி பெறுவோம்!!!

சனி, 9 பிப்ரவரி, 2013

SRI MATHANGI STHOTHRAM....ஸ்ரீ மாதங்கி ஸ்தோத்திரம்


ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் மஹாமந்திரியாகிய ஸ்ரீ ராஜ சியாமளாதேவியின் மகிமை அளவிடற்கரியது. இந்த தேவி, ஸ்ரீ சரஸ்வதி தேவியின் தாந்த்ரீக ரூபமாக அறியப்படுகிறாள். சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்று, மிக உயர்ந்த நிலையை அடைய ஸ்ரீ ராஜசியாமளாதேவியின் அருள் அவசியம். 'மாதங்கி' என்பது இந்த தேவியின் மற்றுமொரு திருநாமம். ஸ்ரீ மாதங்கி தேவியின் மகிமைகளை அறிய இங்கு சொடுக்கவும். இந்த அம்பிகையின் ஸ்தோத்திரத்தின் காணொளி வடிவம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.  இதனை வலையேற்றியவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
வெற்றி பெறுவோம்!!!

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

ROHA NIVARANI ASHTAGAM......ஸ்ரீ துர்க்கை சித்தர் அருளிய ரோகநிவாரணி அஷ்டகம்.


ஸ்ரீ துர்கை சித்தர் அருளிய ரோக நிவாரணி அஷ்டகம், நோய்களை எல்லாம் தீர்க்கும் சக்தி படைத்த,மிக மகிமை வாய்ந்த துதியாகும். நம்பிக்கையுடன் இதைப் பாராயணம் செய்து அம்பிகையைப் பூஜித்தால், அம்பிகையின் அருளால், சகல விதமான நோய்களும், பிறவிப்பிணியும் நீங்கி பேரானந்த நிலையை அடையலாம்.

பகவதி தேவி பர்வத தேவி.
பலமிகு தேவி துர்க்கையளே
ஜகமது யாவும் ஜயஜயவெனவே
சங்கரி உன்னைப் பாடிடுமே
ஹநஹந தகதக பசபச வெனவே
தளிர்த் திடு ஜோதியானவளே
ரோக நிவாரணி சோகநிவாரணி
தாபநிவாரணி ஜய துர்க்கா

தண்டினி தேவி தக்ஷிணி தேவி
கட்கினி தேவி துர்க்கையளே
தந்தன தான தனதன தான
தாண்டவ நடன ஈச்வ ரியே
முண்டினி தேவி முனையொளி சூலி
முனிவர்கள் தேவி மணித் தீவியளே
ரோக நிவாரணி சோகநிவாரணி
தாபநிவாரணி ஜய துர்க்கா

காளினி நீயே காமினி நீயே
கார்த்திகை நீயே துர்க்கையளே
நீலினி நீயே நீதினி நீயே
நீர்நிதி நீயே நீர் ஒளியே
மாலினி நீயே மாதினி நீயே
மாதவி நீயே மான் விழியே
ரோக நிவாரணி சோகநிவாரணி
தாபநிவாரணி ஜய துர்க்கா

நாரணி மாயே நான் முகன் தாயே
நாகினியாயே துர்க்கையளே
ஊரணி மாயே ஊற்றுத்தாயே
ஊர்த்துவ யாளே ஊர் ஒளியே
காரணி மாயே காருணி தாயே
கானகயாளே காசி னியே
ரோக நிவாரணி சோகநிவாரணி
தாபநிவாரணி ஜய துர்க்கா

திருமகளானாய் கலைமகளானாய்
மலைமகளானாய் துர்க்கையளே
பெருநிதியானாய் பேரறிவானாய்
பெருவலியானாய் பெண்மையளே
நறுமலரானாய் நல்லவ ளானாய்
நந்தினி யானாய் நங்கையளே
ரோக நிவாரணி சோகநிவாரணி
தாபநிவாரணி ஜய துர்க்கா

வேதமும் நீயே வேதியள் நீயே
வேகமும் நீயே துர்க்கையளே
நாதமும் நீயே நாற்றிசை நீயே
நாணமும் நீயே நாயகியே
மாதமும் நீயே மாதவம் நீயே
மானமும் நீயே மாயவளே
ரோக நிவாரணி சோகநிவாரணி
தாபநிவாரணி ஜய துர்க்கா

கோவுறை ஜோதி கோமள ஜோதி
கோமதி ஜோதி துர்க்கையளே,
நாவுறை ஜோதி நாற்றிசை ஜோதி
நாட்டிய ஜோதி நாச்சியாளே
பூவுறை ஜோதி பூரண ஜோதி
பூதநற் ஜோதி பூரணியே
ரோக நிவாரணி சோகநிவாரணி
தாபநிவாரணி ஜய துர்க்கா

ஜய ஜய சைல புத்திரி ப்ரஹ்ம
சாரிணி சந்திர கண்டினியே
ஜய ஜய கூக்ஷ் மாண்டினி ஸ்கந்த
மாதினி காத்யாயன்ய யளே
ஜய ஜய காலராத்திரி கௌரி
ஸித்திதா ஸ்ரீ நவ துர்க்கையளே
ரோக நிவாரணி சோகநிவாரணி
தாபநிவாரணி ஜய துர்க்கா

வெற்றி பெறுவோம்!!!