ஞாயிறு, 29 டிசம்பர், 2013

MINI STORIES...MITHAI VIYABAARI..சின்னஞ் சிறு கதைகள்...மிட்டாய் வியாபாரி!!


'இவ்வுலக வாழ்க்கையில் நம் கடமைகளைப் பற்றில்லாமல் செய்வதே கர்ம  யோகம்' என்று நமக்கு அறிவிக்காத மஹான்களில்லை.. கீதாசார்யன் கீதையில் அருளிய கர்ம யோகத்தின் சிறப்பை விவரிக்க வார்த்தைகள் போதாது.. 

அதீதமாக ஒரு விஷயத்தின் மீது பற்று வைக்கும் போது அது நமக்கு ஏற்படுத்தும் விளைவுகளை நாம் அறிந்தோமில்லை அல்லது அறிந்தாலும் அதைப் பெரிதுபடுத்துவதில்லை..

ஒரு மிட்டாய் வியாபாரி, தன் பிள்ளைகள் மீது வைத்த பற்று, அவனை மேன்மேலும் கீழான பிறவிகளுக்கு எடுத்துச் சென்ற இந்தக் கதையை, நம்மில் பலர் அறிந்திருந்தாலும், அறியாத சிலருக்காக மீண்டும் கொடுக்கிறேன்..

ஒரு ஊரில் ஒரு மிட்டாய் வியாபாரி வாழ்ந்து வந்தான். அவனுக்கு நான்கு மகன்கள்.. மிகுந்த இரக்க சுபாவமுடைய அவன், மிகவும் நேர்மையான முறையில் வாழ்க்கை நடத்தி வந்தான்.

அந்த ஊருக்கு ஒரு துறவி வந்தார். அவர் கடும் தபஸ்வி. பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறையே ஒரு குறிப்பிட்ட நாளில் உணவு உண்பார். அதையும் அவர் யாரிடமும் யாசிக்க மாட்டார். யாரேனும் அவருக்கு பிக்ஷையிட வேண்டும். அன்று பொழுது சாய்வதற்குள் பிக்ஷையிடாவிட்டால், மீண்டும் பன்னிரண்டு வருடங்கள் கழித்து தான் உணவு.

துறவி, உணவு உண்ணும் நாள் அது. அன்று யாரும் அவருக்குப் பிக்ஷையிடவில்லை. பொழுது சாயும் நேரமும் வந்து விட்டது..

மிட்டாய் வியாபாரி, அந்தத் துறவிகயைக் கண்டான். அன்போடு தன் கடைக்கு அழைத்து வந்து, பழங்கள், இனிப்புகள் அளித்து வணங்கினான். தன் மனைவி, மகன்களையும் அழைத்து, துறவியை வணங்கச் செய்தான். துறவி மிக மகிழ்ந்தார்.

துறவி,வியாபாரியிடம், 'மகனே, நான் உனக்கு என் தவ வலிமையால் 'வீடு பேறு(மோக்ஷம்) தர இயலும்.. ஆகவே என்னோடு வா!!' என்றார்.

வியாபாரி, 'இல்லை ஸ்வாமி, என் மகன்கள் மிகவும் சிறியவர்களாக இருக்கிறார்கள். இவர்களை நான் தக்க வயது வரை வளர்க்க வேண்டும்.. அதன் பின்பு தான் இதைப் பற்றியெல்லாம் யோசிக்க இயலும்.. ஆகவே சிறிது காலம் கழித்து வாருங்கள்!!' என்றான்.

துறவி ஒப்புக் கொண்டார். சிறிது காலம் கழித்துச் சென்றார். பார்த்தால், வியாபாரியின் கடையில் வேறொருவர் இருந்தார். வியாபாரி, மரணமடைந்து விட்டதாகவும், கடையை அவரிடம் விற்று விட்டதாகவும்,அவர் குடும்பத்தினர் சிறியதொரு நிலத்தில் விவசாயம் செய்து கஷ்ட ஜீவனம் செய்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார் அவர்.

துறவி, தன் தவ வலிமையால், வியாபாரி, ஒரு எருதாகப் பிறந்து, தன் மகன்களின் முன்னேற்றத்துக்காக, நிலத்தில் அரும்பாடுபட்டு உழைத்து வருவதை அறிந்து கொண்டார் அவர்.

துறவி, வியாபாரியின் மகன்களிடம் சென்று, தான் அவரது தந்தையின் நண்பன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.  அவர்களும், வியாபாரியின் மனைவியும் அவரை அறிந்து கொண்டு வணங்கினர். துறவி, வியாபாரியின் மகன்களிடம் நிலத்தில் உழுது கொண்டிருந்த எருதைப் பார்க்க அனுமதி கோரிப் பெற்றார்.

நேராக எருதிடம் சென்று, தன் கமண்டலத்தில் இருந்த புனித நீரைத் தெளித்தார். எருதுக்கு, பூர்வ ஜென்ம நினைவும் பேசும் சக்தியும் வந்தது. மீண்டும் தன்னோடு வரும்படி அழைத்தார் துறவி. பாசத்தினால் அறிவை இழந்திருந்த வியாபாரியோ, இம்முறையும் மறுத்தான். தன் பிள்ளைகள் நல்ல நிலைக்கு வந்ததும் வருவதாக வாக்குறுதி அளித்தான். மீண்டும் சிறிது காலம் கழித்து வருமாறு கோரினான்.

துறவி, கொடுத்த வாக்கைக் காக்க சில காலம் கழித்து, மீண்டும் வந்தார். இம்முறை எருதும் இல்லை.. வியாபாரியின் மகன்களின் நிலை மிக மோசமாக இருந்தது.

அவர்கள் துறவியை அடையாளம் கண்டு கொண்டனர்.

'இவர் ஒவ்வொரு முறை வரும் போதும் துரதிருஷ்டம் தொடர்ந்து வருகிறது.. முதன் முறை இவர் வந்த கொஞ்ச நாளில் அப்பா இறந்தார்.. இரண்டாம் முறை இவர் வந்த கொஞ்ச நாளில் தான் எருது உயிரை விட்டது..கஷ்டங்கள் இரட்டிப்பாயின' என்று சொல்லிக் கொண்டு, துறவியை அடிக்கவே வந்து விட்டனர்.

துறவி அவர்களை அமைதிப்படுத்தினார். தன் தவ வலிமையால், வியாபாரி இருக்கும் இடத்தை அறிந்தார். வியாபாரி, உயிரோடு இருந்த போது, தான் சேர்த்து வைத்த செல்வத்தை எல்லாம் பொற்காசுகளாக பானைகளில் இட்டு, வீட்டில் மூலையில் புதைத்து வைத்து இருந்தான்.  இப்போதும் அவன் தன் பிள்ளைப் பாசத்தால், அந்தப் பானைகளைக் காக்கும் பாம்பாகப் பிறந்திருந்தான்!!..

தன் தவ வலிமையால், இம்முறை மானசீகமாக, வியாபாரியிடம் பேசினார் துறவி..வியாபாரியிடம் பிள்ளைப் பாசம் நீங்கவேயில்லை!!.. அவன் 'இந்தச் செல்வத்தைக் காத்து தன் மகன்களிடம் ஒப்புவிக்கும் வரை, தன்னால் வர இயலாது' என்றான்.

துறவி, ஒரு முடிவுக்கு வந்தவராக, வியாபாரியின் மகன்களை அழைத்தார். வீட்டின் ஒரு குறிப்பிட்ட மூலையைத் தோண்டுமாறும், அப்போது அங்கிருந்து வெளிவரும் பாம்பை அடித்துக் கொன்றால், அவர்கள் கஷ்டங்கள் நீங்குமென்றும் குறிப்பிட்டார்.

மகன்களும், துறவி சொன்னவண்ணம் செய்தனர். மூலையத் தோண்டியபோது, பொற்காசுகள் மின்னிய பானைகளையும், காவல் காக்கும் பாம்பையும் கண்டனர். பாம்பை அடித்துக் கொன்று பொற்காசுகளைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டனர். துறவியை மகிழ்ந்து வணங்கினர்.

வியாபாரிக்கு மகன்களிடம் அடிபட்டதால், பிள்ளைப் பாசம் விலகியது.. துறவியுடன் சென்ற அவன் உயிர்,  பிறவா நிலையை அடைந்தது.

இக்கதை, பற்றினால் ஏற்படும் விளைவுகளையும்,நல்லோருடன் சேர்ந்திருத்தலாகிய  சத்சங்கத்தின் பெருமையையும் ஒரு சேரச் சொல்கிறது...

'ஒரு  துறவி, பாம்பை அடிக்குமாறு சொல்லலாமா?!!' என்பவர்களுக்காக ஒரு வார்த்தை.. கடவுள் நமக்கு வழங்கும் கஷ்டங்கள் எல்லாம் நம்மைப் பக்குவப்படுத்தி உயர்நிலைக்கு எடுத்துச்  செல்ல.. அதைப் போல, துறவி 
செய்ததும் வியாபாரியின் பற்றை விலக்கி, அவனுக்கு நற்கதி அளிக்க. 

வாக்குத் தவறாத அந்தத் துறவி, இதை வியாபாரிக்குச் செய்யும் நற்செயலாகவே கருதிச் செய்தார்.

மானிடப் பிறவி கிடைத்தற்கரியது. துறவி, முதல் முறை வந்த போது வியாபாரியின் முடிவு காலம் அருகிலிருப்பதை உணர்ந்தே அவனை மோக்ஷத்திற்கு அழைத்திருக்க வேண்டும். அவனுக்கு அது புரியாமல் போகவே மேலும் இரு கீழான பிறவிகள் எடுக்க நேர்ந்தது. சத்சங்கத்தின் மகிமை, இறுதியில் அவனுக்கு நற்பேறு பெற்றுத் தந்தது..

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.(குறள்)

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

சனி, 21 டிசம்பர், 2013

தனுசுவின் கவிதைகள்!!.....பிரம்மச்சாரி!!!


என்
உடம்புக்கு முடியவில்லை 
கண் இரண்டிலும் சோர்வின் அலை 
ஊண் எடுப்பதில் ஆர்வமில்லை 
நான் நலம் குன்றியதால்
வந்தது எனக்குப் பெரும் கவலை

யார் வருவார் தலையை வருட
யார் தருவார் வெந்நீர் பருகிட
என் கையே எனக்கு உதவி
பிணி அறியாது மனிதரின் தகுதி

இருமினால் தொண்டைவலி
திரும்பினால் உடல் வலி
படுக்கையில் இருக்கிறேன்
போர்த்திவிட யாருமின்றி
குளிர் காய்ச்சலில் இருக்கிறேன்
கவனிக்க ஆளின்றி

சுக்கிரனும்
சந்திரனும்
சுக ஸ்தானத்தில் இருந்தென்ன
சூரியனாய்
சுட்டெரிக்கும்
வீரிய வைரஸ்
என்னை வாட்டுவதென்ன

நெற்றிப் பொட்டும்
நெஞ்சுக்கூடும்
வலியில் என்னை இறுக்குது
வாய் கசப்பும் 
வாந்தி மயக்கமும்
வரிந்துகட்டி வாட்டுது

மருந்து 
மாத்திரை
கவனித்து கொடுப்பார் யாருமில்லை
அதற்காக நான்
உற்றோ
உறவோ
இல்லாத அனாதையுமில்லை

அன்பான அம்மா
ஆதரவான மனைவி
பாசமான பிள்ளைகள்
எல்லோரும் இருக்க 
திரைகடலோடி திரவியம் தேடும்
தீய கொடுமைக்கு ஆளானதால்
சொந்தங்கள் பிரிந்து 
தனிமையில் வாழும்
சம்சாரி எனும் பிரம்மச்சாரி. 

-தனுசு-

படத்துக்கு நன்றி; கூகுள் படங்கள்.

புதன், 18 டிசம்பர், 2013

AATHIRAIYAN ADI INAIGAL POTTRI!!...ஆதிரையான் அடியிணைகள் போற்றி!!!


ஆக்கலொடு காத்தழித்தும் மறைத்தும் அருள்செயும்
அண்ணலார் திருநடனம் அடியார்க்கு ஆரமுது
எண்ணில்லா பிரபஞ்சமதை இயக்கும் திருநடனம்
புண்ணியம் செய்தாலே பொருந்தும் சிந்தையிலே

பித்தன்  பிறை நுதலான் பேயாடும் காட்டுறையும் 
சித்தன் சிவ நாமம் சிந்தனையில் நிறுத்துவோர்தம்
அத்தன் அருட்கடலான் அனலோடு புனல் ஏந்தும்
கூத்தன் குவலயத்தைக் காத்தருள்வான் பதம் போற்றி!

விடையேறும் பெம்மான் விரிசடையோன் இணையடிகள்
வேதங்கள் துதி பாடித் தொழுதேத்தும் மலரடிகள்
வேதனைப் பிறப்பறுத்து வீடு தரும் பொன்னடிகள்
விலகாது சிந்திக்க வினை தீரும் கேள் மனமே!!

மண்ணானான் விண்ணானான் மன்னுயிர்கள் தானானன்
கண்ணான பக்தர்தம் கருத்ததனில் நிலையானான்
பெண்ணானான் ஆணானான் பெருவாழ்வு தானானான்
பண்ணானான் பதம் பாட பாரினிலே துயரேது!

ஆதிரையான் தாளடிகள் அருந்தவத்தால் சேர்ந்திடுவோம்!!
பாதி மதி சூடியவன் பதமலர்கள் போற்றிடுவோம்!!!
மோதி வரும்  பிறவிச் சுழல் முழுவதுமே கடந்திடுவோம்!!!
நாதமொடு பாடி நிதம் நமசிவாய என்றிருப்போம்!!!


அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

செவ்வாய், 10 டிசம்பர், 2013

MINI STORIES.... KADAVUL SEYAL!!!.....சின்னஞ்சிறு கதைகள்...கடவுள் செயல்!!!


அது ஒரு அடுக்கு மாடிக் கட்டிடம்!!... கட்டுமானப் பணிகள் இன்னும் முடிவடையாத சூழல். 

அந்தக் கட்டிடத்தின் கட்டுமானப் பணியை மேற்பார்வையிடுபவர், ஆறாவது தளத்தைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தார். ஏதோ காரணமாக, கீழ்த்தளத்தில் வேலை செய்யும் தொழிலாளியை அழைக்க வேண்டியிருந்தது.

அவர் பல முறை அந்தத் தொழிலாளியைப் பெயர் சொல்லி அழைத்தும், கட்டிட வேலையில்  எழுந்த பலவித ஓசைகளின் காரணமாக, அது அந்தத் தொழிலாளியின் செவிகளில் விழவில்லை. 

அந்தத் தொழிலாளியின் கவனத்தைத் திருப்புவதற்காக, ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து, அந்தத் தொழிலாளியை நோக்கிப் போட்டார். அந்தத் தொழிலாளி, தன் அருகில் விழுந்த அந்த ரூபாயை எடுத்தார்!!. சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, மகிழ்ச்சியுடன் அதை எடுத்து, தன் சட்டைப் பையில் வைத்துக் கொண்டு, வேலையைத் தொடர்ந்தார்.

மேற்பார்வையாளர், புன்முறுவலுடன், ஒரு ஐநூறு ரூபாய் நோட்டை எடுத்துப் போட்டார். இம்முறையும்,  தொழிலாளி, அதை மகிழ்ச்சியுடன் எடுத்து, சட்டைப் பையில் வைத்துக் கொண்டு வேலையைத் தொடர்ந்தார்.

மேற்பார்வையாளர் சற்று யோசித்தார். ஒரு சிறு கல்லை எடுத்து, தொழிலாளியை நோக்கி, குறிபார்த்து எறிந்தார். தொழிலாளி, இம்முறை சரேலென  நிமிர்ந்து பார்த்தார். மேற்பார்வையாளர், இப்போது அவருடன் பேச இயன்றது.

நம் வாழ்வும் பல முறை இம்மாதிரியான நிகழ்வுகளினூடே செல்கிறது. நமக்குக் கிடைக்கும் பெரிய, சிறிய லாபங்கள் அனைத்தையும் நம் அதிர்ஷ்டத்தின் காரணமாகவோ, திறமையின் காரணமாகவோ  கிடைத்தது என நினைக்கிறோம். ஆனால் ஒரு சிறு கஷ்டம் வந்தாலும் கடவுளிடம் ஓடுகிறோம். பலருக்கு, கடவுள் ஒருவர் இருக்கும் நினைவே கஷ்டம் வரும் போது தான் வருகிறது.

நமக்குக் கஷ்டத்தைக் கொடுத்தவர் அவரே என்றும் அதைத் தீர்க்க வேண்டியது அவரது கடமை என்றும், தீர்க்காவிட்டால், 'கடவுளே இல்லை' என்றும் கூறும் பலரை நாம் கண்டிருப்போம்.

நமக்கு நல்லவை நடக்கும் போது இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். அப்போது தான், பிரச்னைகள் வரும் போது அவரிடம் முறையிடுதலை முழு மனதோடு செய்ய இயலும்.

உண்மையில் நமக்கு வருபவை எல்லாம் கஷ்டங்கள் அல்ல. இறைவன் நமக்கு வைக்கும் சோதனைகள். அதன் மூலம் அவர் நமக்கு ஏதோ தெரிவிக்க விரும்புகிறார். இதை உண்மையாக உணர்ந்தால், இறைவனின் குரலை நமக்குள்ளும் நிச்சயம் கேட்கலாம்.

இந்தப் பிறவியை நமக்குக் கொடுத்ததற்கு, இந்த இனிமையான வாழ்க்கையை அருளியதற்கு, நல்ல பெற்றோர், நண்பர்கள், தொழில், செல்வம், ஆரோக்கியம் என அனைத்துப் பேறுகளும் வழங்கியதற்கு, அன்றாடம் இறைவனுக்கு நன்றி சொல்வோம்.

வாழ்க்கை, நாம் எதைத் தருகிறோமோ அதையே திரும்ப வழங்குகிறது.... மன மகிழ்வுடன், நமக்கு அருளப்பட்டவைகளுக்காக, இறைவனுக்கு நன்றி சொல்லத் தொடங்குவோமானால், மேன்மேலும், இறைவனுக்கு நன்றி சொல்லும் வாய்ப்பை, வாழ்க்கை கொடுத்துக் கொண்டேயிருக்கும்!!!. நிச்சயமாக..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!!

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.