வெள்ளி, 17 அக்டோபர், 2014

VANTHACHE DEEPAVALI!....வந்தாச்சே தீபாவளி!...

ஆகவே மக்களே கொஞ்ச நாள் இடைவெளி விட்டு திரும்பவும் வந்தே ஆச்சு நான்!...தீபாவளி வந்தாச்சுல்ல.. அதான்!..

பண்டிகை பிஸி நாளைலருந்து ஆரம்பிச்சுடும்!.. அப்புறம் தீபாவளி ஆனதுக்கப்புறம் தான் இணையம் பக்கம் வர முடியும்!.. அதனால தீபாவளி பதிவு இப்பவே!..

இந்தப் பதிவுல, கொஞ்சம் கொஞ்சம் தீபாவளி டிப்ஸ் பார்க்கலாம்!..

தீபாவளி எப்படி கொண்டாடணும்கறதப் பத்தில்லாம் ஏற்கெனவே நம்ம 'ஆலோசனை'  வலைப்பூவுல 'தீபாவளி' பதிவுல பார்த்திருப்பீங்க.. பாரம்பரிய முறை அங்கே சொல்லியிருப்பது. இப்ப நிறைய மாறிப் போச்சு.

ஆனா மாறாதது பண்டிகைக்கான உற்சாகமும் சந்தோஷமும் தான் இல்லையா?!..

உங்களுக்கெல்லாம் தெரியாததை புதுசா சொல்லப்போறதில்லை. இருந்தாலும், ஏதாவது மறந்திருந்தா நினைவுபடுத்தற பதிவுன்னு வச்சிக்கலாம்!..

1.வேலைக்குப் போற பெண்களுக்கு டென்ஷன் தரதே பண்டிகைக்கான முன் தயாரிப்புகள் தான்.. முதல்ல முடிவு பண்ண வேண்டிய விஷயம் பட்ஜெட்!..உங்கள்ல பலர் தாராளமா நிதி ஒதுக்கீடு பண்ணியிருக்கலாம். சிலருக்கு லோன் விஷயங்கள் இருக்கறதால அவ்வளவா ஒதுக்கீடு பண்ண முடியாதிருக்கலாம். எதுவா இருந்தாலும், பண்டிகைக்கான சந்தோஷம் குறையாம பாத்துக்கறது நம்ம திட்டமிடுதல்ல இருக்குங்கறது என்னோட நம்பிக்கை.

வீட்டை சுத்தப்படுத்தி அலங்கரிக்கும் வேலையை எல்லாம், பண்டிகைக்கு முந்தைய வார விடுமுறை நாட்களில் வைத்துக் கொண்டால் டென்ஷன் குறையும்.. இனிப்புகள் செய்வதை, இரு நாட்களுக்கு முன்பாகவே திட்டமிட்டு ஒவ்வொன்றாக செய்யலாம்.. இப்படி எல்லாமே திட்டமிட்டு செய்வதால, வேலைப் பளு குறையும்.

முதல்ல உடைகள் விஷயத்தைப் பார்க்கலாம்...தள்ளுபடி விலைக்காக ஆடி மாசமே தீபாவளிக்கும் சேத்து வாங்கி வைக்கற சாமர்த்தியர்களுக்கு இங்கிட்டிருந்தே கும்பிடுறேன்!..ஆனா தள்ளுபடி நிஜம்தானான்னு ஒரு தடவைக்கு ரெண்டு தடவை உறுதிப்படுத்திக்கங்க.. தரமான துணிவகைகள் தான் முக்கியம்.. கடை, பிரபலமான கடையாயிருக்கணுன்னு நான் நினைக்கறதில்லை.. சமயத்துல, சாதாரண கடைகள்ல அசாதாரண ரகங்கள் கிடைக்கறது எனக்கு சர்வ சாதாரணம்!.. அது மாதிரி கூட்டம் கம்மியாயிருக்கறதால நிதானமா தேர்வு பண்ணலாம்.

சில பேர், தீபாவளிக்கு முதல் நாள் தான் ஷாப்பிங் போவாங்க!..மதுரைல, தீபாவளி முதல் நாள் சாயங்காலம், திண்டுக்கல் ரோடு, சென்னை ரங்கநாதன் தெரு மாதிரி இருக்கும்!.. தெருவோரக் கடைகள்ல வீட்டு உபயோகப் பொருட்கள் பலதும் வாங்கலாம்.. வருஷாந்திர உபயோகத்துக்கு பக்கெட், வாளி, குடை இம்மாதிரி நிறைய வாங்கலாம். விலை ரொம்பவே குறைவாயிருக்கும்.. இனிப்புகள், துணிமணிகள் கூட நிறையவே வாங்கலாம்..குறைந்த விலையில்!!.

பட்ஜெட்டுக்கு தகுந்தபடி, விலை கூடவோ அல்லது குறைந்த விலையில் ரெண்டு மூணு செட் துணிகளோ வாங்குவது எல்லாம் முடிவு பண்ணி, அதுக்கப்புறம் துணி வாங்கப் போனா, பட்ஜெட் கையைக் கடிக்காது. முடிவு பண்ணி, அதுலருந்து மாறாம இருக்கறது முக்கியம்..'பட்ஜெட்..பட்ஜெட்'னு மனசு நினைவுபடுத்திட்டே இருக்கணும்!!!!.

2. இப்ப பண்டிகைக்கான பலகார வகைகள் பத்தி பாக்கலாம்.. வேலைக்குப் போற பெண்கள் டக்குனு முடிவு பண்றது, 'கடைகள்ல வாங்கிடலாம்'னு தான்.. இது சரின்னு சொல்லிட முடியாது!.. அதே சமயம் நேரப் பிரச்னைன்னு ஒண்ணு இருக்கவே இருக்கு இல்லையா.. என்னதான் கடைல வாங்கினாலும் வீட்டுல செய்ய ஏதாவது ஒரு அயிட்டம் முடிவு பண்ணிக்கங்க.. இருக்கவே இருக்கு குலோப்ஜாமூன். இல்லாட்டி ஏதாவது ரெடிமிக்ஸ் முறுக்கு மாவு, அதிரச மாவு பயன்படுத்தி பட்சணங்கள் (இதெல்லாம் பட்சணங்கள் அவ்வளவா செய்ய வராதவங்களுக்கு) செய்யலாம்.. 'நான் செஞ்சது'ங்கற சந்தோஷமும் திருப்தியும் கடைல வாங்கறதுல வராதுல்ல?!..

வீட்டுல செய்யறது உடம்புக்கும் பர்ஸூக்கும் நல்லதுங்கறத எப்பவும் மறக்காதீங்க :))!!

வட இந்தியாவுல, ஒரு இல்லத்தரசி எவ்வளவு இனிப்புகள் செஞ்சு விநியோகிக்கறாங்கறத பொறுத்து தான் அவளோட மரியாதை கூடுமாம்!!..இப்ப இருக்கற விலைவாசில, அப்படில்லாம் முடியறது கஷ்டம்.. ஒண்ணு அல்லது ரெண்டு ஸ்வீட், காரம்னு நல்லபடியா, நிறைவா செஞ்சாலே போதும். கண்டிப்பா எல்லோருக்கும் விநியோகிக்கற எண்ணிக்கைல செய்யப் பாருங்க... நாமளே செஞ்சு, நாமளே சாப்பிடறத விடவும், அக்கம்பக்கம், உறவு, நட்புகளுக்கு கொடுத்து மகிழறது உறவுப் பிணைப்பை உறுதியாக்கும்!.. அதுல கிடைக்கற சந்தோஷம் தனி!..

ஆனா ப்ளாஸ்டிக் கவர், டப்பாக்கள்ல கொடுக்கறத தவிர்க்கலாங்கறது என்னோட வேண்டுகோள்.. அலுமினியம் ஃபாயில் பேப்பர்ல செஞ்ச டப்பாக்கள், அல்லது நல்ல தரமான ஜிப்லாக் கவர்கள் பெஸ்ட்.

மறக்காம, நம்ம வீட்டுல வேலை செய்யறவங்களுக்கும், இனிப்புகள், பண்டிகைப் பணம் கொடுத்து சந்தோஷப்படுத்துங்க!.. 

பண்டிகை விருந்து செய்யும் போது மெனுவை பார்த்து முடிவு பண்ணுங்க.. நிறைய இனிப்புகள் சாப்பிடறதால, வயிறு நிறைஞ்சேயிருக்கும். எக்கச்சக்க ஐட்டங்கள் வேண்டாம்.. சாதாரண சமையலை விட, கொஞ்சம் கூடுதலா இருக்கற மாதிரி செஞ்சா பண்டங்கள் வீணாகாது. வேலையும் விரைவா முடியும்!.

தீபாவளி அன்னிக்கு காலையில், தீபாவளி மருந்து சாப்பிடணுங்கற‌
சம்பிரதாயத்த விடாம கடைபிடிச்சா அஜீரணக் கோளாறுகளுக்கு குட்பை சொல்லலாம்!!.

3. பட்டாசூ!..விலையைப் பாத்தா ஓடற மாதிரி இருக்கு ஒவ்வொண்ணும்.  பட்ஜெட்டுல பாதி இதுவே முழுங்கிடுது!.. பண்டிகை, கொண்டாட்டம்னாலும் காசை கரியாக்குற விஷ்யம் இதுங்கறத மறக்க வேண்டாம்.. ஒரு குறிப்பிட்ட வெடி பத்தாயிரம், இருபதாயிரம் ரூபான்னா ரொம்பவே யோசிச்சு முடிவு பண்ணி வாங்குங்க.. 

என்னைப் பொறுத்தவரை, சாஸ்திரத்துக்கு கொஞ்சம் வாங்குவேன். அதிக விலையில் பட்டாசு, வெடிகள் வாங்கவே மாட்டேன்!.. தீபாவளி கொண்டாடக் கூட முடியாதவங்க இருக்கற தேசம் இது!.. அந்த பணத்த, ஏதாவது ஆசிரமங்களுக்கு நன்கொடையா தரலாம்!..

4. அடுத்தாப்புல எப்பவும் சொல்றது தான்.. டிவிய மறந்துட்டு இருக்கப் பாருங்க. சிறப்புத் திரைப்படம் எப்படியும் ஓரிரண்டு வாரங்கள்ல 'ரெண்டாவது ரவுண்ட்' வரத்தான் போகுது. அப்ப பாருங்க.. விளம்பரத் தொல்லையும் குறைச்சலா இருக்கும்!..   

நண்பர்களோட,  உறவினர்களோட பொழுதைக் கழிங்க..பெரியவங்கள தேடிப் போயாவது ஆசீர்வாதம் வாங்குங்க!.. குடும்பத்தினரோட உக்காந்து, சந்தோஷமா பேசுங்க!.. இதோட விளைவு  எவ்வளவு சந்தோஷம் தரும்னு அனுபவமே உணர்த்தும்!..

5. பண்டிகைகள் நிம்மதிக்கும் சந்தோஷத்துக்கும் தான். இதுக்கு வெடி வைக்கற எதுவும் வேண்டாமே!.. பழைய விஷயங்களை குத்திக் காட்டி பேசுவது ('உங்கப்பா தலை தீபாவளிக்கு எடுத்துக் குடுத்தாரு பாரு அழுக மாங்கா கலருல ஷர்ட்டு!', 'உங்கம்மா இருக்கற வரைக்கும் ஒரு பட்டுப் புடவை வாங்க முடிஞ்சுதா.. எல்லாம் பெரிசு பெரிசா பூப்போட்டு நைலக்ஸ் புடவை!!' இப்படி..), பக்கத்து வீட்டுக்காரர் அல்லது காரி, உறவினர்களது  உடைகள், மற்ற விஷயங்களோடு ஒப்பிடுதல், 'யானைக் கரு' வைத்து,  பரிசுப் பொருட்களில் பழி வாங்குதல் ( 'போன தீபாவளிக்கு ஒங்க தங்கச்சி காட்டன் பிளவுஸ் பிட் தான் வச்சிக் குடுத்தா அதனால நானும் இந்த வாட்டி அதத்தான் செய்வேன்!..') எல்லாம் வேண்டாமே!.. இதனால் ஒரு லாபமும் கிடைப்பதில்லை. மாறாக நாம் தான் நிம்மதி இழக்கிறோம்.. அடுத்தவர் மீது காட்டும் பொறாமை, கோபம் எல்லாம் முதலில் நம்மை காயப்படுத்தி விட்டுத்தான் அவரிடம் செல்கின்றன என்பதை உணர்ந்தால் எவ்வளவு நன்மை!..

6. பண்டிகை தினங்களில் கொஞ்ச நேரமாவது குடும்பத்தினருடன் இறைவழிபாட்டுக்கு ஒதுக்குங்க..

7. தீபாவளியை இனிமையாக, சந்தோஷமாக, நிறைவாக கொண்டாடி மகிழுங்கள்!.. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!..

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

1 கருத்து: