இந்தப் பாடலை, உயர்திரு.சுப்புத்தாத்தாவின் குரலில் கேட்க கீழ்க்கண்ட காணொளியைச் சொடுக்கவும்... மிக அருமையாக, அழகாகப் பாடி அளித்திருக்கிறார். உயர்திரு.சுப்புத்தாத்தாவுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள், பணிவான நமஸ்காரங்கள்.
பொன்னார் மேனியன் அண்ணாமலையான்
பொன்னடி போற்றித் தொழுதேத்தும் திருநாள்!!.
கண்ணுதற் கடவுளின் கழலிணை தொழுது
கார்த்திகை தீபம் காணும் ஒரு நன்னாள்!!.
விண்ணையும் மண்ணையும் படைத்ததொரு பரமன்
விண் கடந்து மண் கடந்து நின்றதொரு நன்னாள்!!.
வியந்ததனை திருமாலும் பிரம்மனும் போற்றி
விருப்போடு பூசைகள் செய்ததும் இன்னாள்!!.
முதலில்லா முடிவில்லா முக்கண்ண தேவன்
மூவுலகம் நிறைந்தொளிரும் சோதியான தின்னாள்!!.
முதலான பரமனை முனிவரும் அமரரும்
முக்தியைத் தரவேண்டித் தொழுததும் இன்னாள்!!.
கிரிவலம் செய்திட பவ வினை தீரும்
கிரியே சிவமாகித் தோன்றியதும் இன்னாள்!!.
சித்தரும் பக்தரும் முக்தரும் தொழுதே
சிவ சிவ என்றே செபித்திடும் நன்னாள்!!.
உண்ணாமலையம்மை உகந்தருளும் திருத்தலம்!!.
அண்ணாமலையாரின் அருளுறையும் திருத்தலம்!!.
கண்ணான யோகியர் கனிந்தருளும் திருத்தலம்!!.
அண்ணாமலை மகிமை சொன்னாலும் தீருமோ!!.
அண்ணாமலை தீபம் காண்பதும் பேறு!.
அண்ணாமலை என்றே சொல்வதும் பேறு!!.
அண்ணாமலை நினைக்க முக்தியே சேரும்!.
அண்ணாமலையானின் அடிதொழுது போற்றுவோம்!!
அன்பர்கள் அனைவருக்கும் திருக்கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள்!!
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்
நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்