சனி, 23 ஜூன், 2012

மஹாகவி பாரதியின் 'கண்ணன் பிறப்பு'




மஹாகவி பாரதியார்,பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி எழுதிய பல கவிதைகளுள் ஒன்றான 'கண்ணன் பிறப்பு' கவிதையை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.


கண்ணன் பிறந்தான்-எங்கள்
கண்ணன் பிறந்தான்-இந்தக்
காற்றதை யெட்டுத் திசையிலுங் கூறிடும்.


தின்ன முடையான்-மணி
வண்ண முடையான்-உயர்
தேவர் தலைவன் புவிமிசைத் தோன்றினன்


பண்ணை யிசைப்பீர்-நெஞ்சிற்
புண்ணை யொரிப்பீர்-இந்தப்
பாரினிலே துயர் நீங்கிடும் என்றிதை




எண்ணிடைக் கொள்வீர்-நன்கு
கண்ணை விழிப்பீர்-இனி
ஏதுங் குறைவில்லை;வேதம் துணையுண்டு,(கண்ணன் பிறந்தான்)


அக்கினி வந்தான்-அவன்
திக்கை வளைத்தான்-புவி
யாரிருட் பொய்மைக் கலியை மடித்தனன்


துக்கங் கெடுத்தான்-சுரர்
ஒக்கலும் வந்தார்-சுடர்ச்
சூரியன்,இந்திரன்,வாயு,மருத்துக்கள்




மிக்க திரளாய்-சுரர்
இக்கணந் தன்னில்-இங்கு
மேவி நிறைந்தனர்;பாவி யசுரர்கள்


பொக்கென வீழ்ந்தார்,-உயிர்
கக்கி முடிந்தார்-கடல்
போல ஒலிக்குது வேதம் புவிமிசை(கண்ணன் பிறந்தான்)


சங்கரன் வந்தான்-இங்கு
மங்கல மென்றான்-நல்ல
சந்திரன் வந்தின் னமுதைப் பொழிந்தனன்




பங்க மொன் றில்லை-ஒளி
மங்குவ தில்லை-இந்தப்
பாரின்கண் முன்பு வானத்திலே நின்று

கங்கையும் வந்தாள்-கலை
மங்கையும் வந்தாள்-இன்பக்
காளி பராசக்தி அன்புட னெய்தினள்

செங்கம லத்தாள்-எழில்
பொங்கு முகத்தாள்-திருத்
தேவியும் வந்து சிறப்புற நின்றனள்.(கண்ணன் பிறந்தான்)


வெற்றி பெறுவோம்!!!

2 கருத்துகள்: