செவ்வாய், 19 மார்ச், 2013

தனுசுவின் கவிதைகள்....தலைமை இனம்! (ஆங் சான் சு கி)


போற்றிப்பாட ஒரு கவி போதுமா?
இந்த 
மண்ணினம் வணங்கும் 
பெண்ணிவளைப் போற்றிப்பாட 
இந்த 
ஒரு கவிதை போதுமா? 


பெண்ணும் பெண்ணின் மனம் சார்ந்த இடமும்
ஐந்திணைக்கு அடுத்து ஆறாம் திணை!
மற்ற 
ஐந்திணையும் கண்டு மலைக்கும்
இவளின் 
தினவெடுத்த மனதினை! .


பொறுப்பாள் 
புழுவென எண்ண‌ வேண்டாம்!
பொங்கி எழுந்தால் 
பூகம்பம் மறக்க வேண்டாம்!


அவளின்
அந்த மனமே கனிவு தரும் அருமருந்து!
அதே நேரம்
அவள் இனத்தின் கண்ணில் நீர் கசிந்தால்
அவளே
வெடிக்கும் வெடி மருந்து!


நாணயம் போன்று இவளுக்கும்
ஒரு பக்கம் பூ போன்றது நாண‌ம்!
மறுபக்கமோ 
அது 
போர் வெல்லும் அரசாளும் தலை எனும் ஞானம்!


இவளின் 
ஓர் தீர்மானம் 
பூமியின் வட்டப்பாதையை மாற்றும்!
இவளின்
ஓர் முடிவு 
அஹிம்சை போர் வெல்வதில்
அந்த மஹாத்மாவையே 
பின்னுக்குத் தள்ளி முதலிடம் ஏற்றும்!


உயிர் கொண்டு பிறந்ததெல்லாம்
உயிர் என்று சொன்னால்
உயிர் கொடுக்கும் 
இந்த உயிரை என்னவென்று சொல்ல?

பெண்ணடிமை காலம் முடிந்து
இனி
பெண்ணுக்குஅடிமை இந்தக் காலம் 
என்பதின் விதையாகி 
வெடித்து செடியாகி 
முளைத்து மரமாகி நிற்கும் 
இந்த 
வீரமகளை போற்றிப்பாட 
இந்த 
ஒரு கவிஞன் போதுமா?
இந்த 
ஒரு கவிதை போதுமா

-தனுசு-

1 கருத்து:

  1. மிக அழகாக என் கவிதையை வெளியிட்ட சகோதரி பார்வதி அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு