வெள்ளி, 29 மார்ச், 2013

KASI YATHRA. PART 3, பிரயாகையில் முதல் நாள்...(காசி யாத்திரை...பகுதி 3)

சென்ற பதிவின் தொடர்ச்சி......

அலகாபாத் சென்ற நேரம் அதிகாலை 4 மணி. எங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நபர், கிட்டத்தட்ட 19, 20 வயது தானிருக்கும், ரயில்வே ஸ்டேஷனிலிருந்து எங்களை நாங்கள் தங்க வேண்டிய இடத்துக்கு அழைத்துச் சென்றார். ஒரு வேனில் கிட்டத்தட்ட புளிமூட்டை போல் பதினைந்து பேர் அடைந்து கொண்டு செல்ல வேண்டியிருந்தது.  வழியெங்கும் ஒரே இருட்டு. இருந்த கொஞ்சம் மங்கலான வெளிச்சத்தில், ஊர்  மிகப் பழையதாகத் தோற்றமளித்தது.


எங்களை அழைத்துச் சென்ற நபர், அன்று நாங்கள் செய்ய வேண்டியவை, சென்று பார்க்கப் போகும் இடங்கள் என வழியில் எல்லாம் சொல்லிக் கொண்டே வந்தார். 

போனதும், குளித்துத் தயாராகி விட வேண்டும். தங்கும் இடத்திலேயே சங்கல்பம் செய்து வைப்பார்கள். பின், போகும் வழியில் இருக்கும் இரண்டொரு கோவில்களைப் பார்த்து, அதன் பின் திரிவேணி சங்கமம் போக வேண்டும். இது தான் நிகழ்ச்சி நிரல். திரிவேணி சங்கமத்திலிருந்து வரும்போது ஈர உடைகளுடன் வருவதால் வரும் போது (ஈரத்துடன்) கோவில் சென்று தரிசனம் செய்யக் கூடாது. ஆகவே போகும் போதே தரிசனம் முடித்து விட வேண்டும் என்றார்.

மேலும் ஒரு முக்கியமான விஷயம். காசியிலிருந்து வருபவர்கள் கங்கைச் செம்பு ஒன்று  எல்லோருக்கும் வாங்கி வருவார்கள். ஆனால் அது காசியில் வாங்குவதல்ல. பிரயாகையிலேயே பித்தளைச் செம்புகள் விற்கும் கடைகள் உண்டு. திரிவேணி சங்கமம் போவதற்கு முன்பே, கடைக்குப் போய் செம்புகள் எந்தெந்த அளவில், எண்ணிக்கையில் வேண்டும் என்று தீர்மானித்து, செலக்ட் செய்து வைக்கலாம். அங்கேயே பெரிய ப்ளாஸ்டிக் கேன்கள் தருவார்கள். நம்முடனேயே எடுத்துச் சென்று, திரிவேணி சங்கமத்தில் குளித்ததும், அங்கேயே கேன்களில் நீர் எடுத்து வர வேண்டும். வரும் வழியில் கடையில் கொடுத்து விட்டால், நாம் தங்கும் இடம் வந்து, நம் வேலைகளை முடித்து விட்டு திரும்பும் நேரத்தில், செம்புகளில் நீர் ஊற்றி சீல் செய்து தயாராய் வைத்திருப்பார்கள். பணம் கொடுத்து விட்டு வாங்கிக் கொள்ளலாம். காசியில் விற்கும் செம்புகள் இங்கிருந்து தான்  போகின்றன என்றார்கள். பிரயாகைத் தீர்த்தம் தான் காசிச் செம்புகளில் உள்ளதாம்.

இது தெரிந்ததும் எனக்கு மிகப் பெரிய ஆச்சரியமாகிவிட்டது. இது எனக்குப் புதிய தகவலாக இருந்தது.

திடீரென்று, எங்களை அழைத்துச் சென்ற நபர்,  'முண்டம், பிண்டம், தண்டம்' என்றார். 'எதுக்குத் திட்டுறார்?' என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில், விளக்கமாக, பிரயாகையில் முண்டனம்(மொட்டை அடித்தல்) விசேஷம், ஆண்களுக்கு மட்டுமே இது பொருந்தும், இயன்றவர்கள் முடியிறக்கினால் மிக மிக நல்லது என்றார். காசியில் தண்டம்(பிரம்பால் தலையில் ஆசீர்வாதம் வாங்குதல், இதைக் காலபைரவர் கோவிலில் செய்வார்கள்),  கயாவில் பிண்டம் கொடுத்தல் ஆகியன வழக்கம் என்றார்.

இதற்குள் நாங்கள் தங்க வேண்டிய இடம் வந்து விட்டது. ஒவ்வொரு க்ரூப்பிற்கும் ஒவ்வொரு அறை. ரொம்ப சின்னது. நாங்கள் கொண்டு வந்த பெட்டிகளை அடுக்கியது போக, இருவர் மட்டுமே உட்கார இடமிருந்தது. மடமடவென குளித்துத் தயாரானோம். பொதுவில் இருந்த குளியலறைகளை, வாசலில் எங்களில் ஒருவர் காவலிருந்து டக் டக்கென இடம் பிடிக்க, வேலை முடிந்தது.

'காபி வேண்டுமா?' என்று கேட்டுக் கொண்டே ஒருவர் வந்தார். 'சர்க்கரை எவ்வளவு போட வேண்டும்?, பால் எத்தனை பேருக்கு?' எல்லாம் விசாரித்துக் கொண்டார். சீக்கிரமே காபியும் வந்தது. சின்ன சின்ன டம்ளர்களில். விலை? மூச்... அதையெல்லாம் கேட்கக் கூடாது.

இதெல்லாம் முடிந்ததும், முன் ஹாலில் வந்திருந்த அனைவரையும் வரிசையாக உட்கார வைத்தார்கள். தம்பதிகளில், ஆண்கள் அமர, பெண்கள்  நிற்க வேண்டும். ஒவ்வொருவர் முன்னும் ஒரு கோலம் இருந்தது. கோலத்தின் மேல் ஒரு முறத்தில், மஞ்சள், குங்குமம், கண்ணாடி, சீப்பு, ரவிக்கைத் துணி, வெற்றிலை பாக்கு எல்லாம் இருந்தது. இராமேசுவரத்திலிருந்து கொண்டு வந்திருக்கும் 'வேணி மாதவரை' அங்கே பக்கத்தில் வைத்துக் கொள்ளச் சொன்னார்கள்.

முதலில்,திரிவேணி சங்கம ஸ்நானத்திற்கு சங்கல்பம் செய்தார்கள். 'உங்கள் சக்திக்குத் தகுந்தபடி தானங்கள் முதல் தக்ஷிணைகள் வரை செய்ய வேண்டும்' என்று சொல்லி விட்டு, கூடவே'சக்தியைக் குறைத்துச் சொல்லி, எல்லாம் செய்தால் பலன் போய் விடும்' என்றும் பயமுறுத்தினார்கள். சங்கல்பம் முடிந்ததும், அங்கேயே மேல் மாடியில் வசிக்கும் சுமங்கலிகளுக்கு, முறத்தில் இருக்கும் வெற்றிலை பாக்கு உள்ளிட்ட மங்கலப் பொருட்களைத் தரச் சொன்னார்கள். அங்கு மூன்று சுமங்கலிகளே இருந்தார்கள். அவர்களுக்கே எல்லாரையும் தரச் சொன்னார்கள்(கிட்டத்தட்ட பதினைந்து தம்பதிகள் இருந்தார்கள்). ஒருவர், 'அவர்களுக்கே எல்லாவற்றையும் தருவதற்குப் பதிலாக, மூன்றை மட்டும் கொடுத்து விட்டு, மற்ற தாம்பூலங்களைஎங்களுக்குள் யாருக்கேனும் தருகிறோம்' என்று சொன்னதற்கு அங்கிருப்பவர்கள் சம்மதிக்கவில்லை.

ஸ்நானத்திற்கான‌ சங்கல்பம் செய்து முடிந்ததும், யாரெல்லாம் முடியிறக்குகிறார்களோ அவர்களுக்கான சங்கல்பம் நடந்தது. அப்புறம் வேணிதானத்திற்கான சங்கல்பம் செய்து விதிமுறைகளையும் சொன்னார்கள். வேணிதானத்திற்கான சங்கல்பத்தை பெண்கள் சொல்லும் போது கிட்டத்தட்ட அனைவருமே சிரித்தார்கள். ஏனென்றால் சங்கல்பம் அப்படிப்பட்டது. அது அடுத்த பதிவில்....(தொடரும்)

சிவனருளால்,
வெற்றி பெறுவோம்!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

5 கருத்துகள்:



  1. முண்டம் தண்டம் பிண்டம் என்ற சொற்தொடருக்கு வேறு பொருள் என்று தான் கேள்விப்பட்டு இருக்கிறேன்.

    காசிக்கு செல்பவர்கள், கங்கையில் நீராடுபவர்கள், காசி விச்வனாதரை தரிசிப்பவர்கள் , இவர்கள் எல்லோருமே
    ஒரு பயத்தின் அடிப்படையில் இந்த கைட் சொல்வதெல்லாம் செய்வதற்கு உந்தப்படுகிறார்கள். இந்த கைடு எனச்
    சொல்லப்படும் ப்ரோக்கர்கள் காசிக்கு வருபவர்களை என்னவெல்லாம் ப்ரைன் வாஷ் செய்து பணம் பிடுங்க முடியுமோ
    அத்தனையும் செய்கிறார்கள். இவர்கள் பிடியிலிருந்து யாத்ரீகள் மீளுவது சாத்தியம் என்றே தோன்றவில்லை.

    நிற்க. காசிக்கு சென்றால் ஏதேனும் ஒன்றை விடவேண்டும் என்ற அறிவுரை உள்ளது. தான், தனது என்ற எண்ணங்களை விட்டு ஒழிக்கவேண்டும். முண்டம் என்ற சொல்லின் பின்னணியில் தன்னிடம் உள்ளவற்றை தியாகம் செய்வது, துறப்பது என்று பொருள் கொண்டால், இல்லற தர்மம் முடிந்த பின்னே, வான பிரஸ்த நிலையில், யாத்திரையை துவங்கி, கால் நடையாக காசி செல்லும் அந்தக் காலத்து மக்கள் காசியிலே சன்யாச ஆச்ரமத்தை மேற்கொண்டார்கள் என்பதால் முண்டம் என்ற சொல்.

    சன்யாசம் என்று ஏற்றுகொண்டுவிட்டால், தனக்கொரு துணை என்பது ஒரு தண்டம் தான். ஒரு கோல் அல்லது குச்சி தான். வேறு எவர் துணையையும் எதிர்பார்க்க கூடாது. எதிர்பார்த்து செயல்படுவது சன்யாசிகள் தர்மம் அல்ல.

    பிண்டம் என்பது இந்த சன்யாசத்தை ஏற்றுக்கொண்ட மக்கள் தனக்கு ஈயப்படும் பிக்ஷையை மட்டுமே சாப்பிடவேண்டும். அதற்கு மேல் ஆசைப்படக்கூடாது. உண்ணவும் கூடாது.

    என்னுடைய அன்டர்ஸ்டான்டிங்கிலே இதுதான் முண்டம், தண்டம் பிண்டம் .

    மற்றதெல்லாம் நமது பிலீஃப். அந்த பிலீஃபின் அடிப்படை பயமாக இருக்கும்போது அவர்கள் சொல்வதையெல்லாம்
    என்ன அதனின் அடிப்படை என்று புரியாமலே செய்யவேண்டிய நிர்ப்பந்தம்.

    நான் கங்கையில் குளித்து இருக்கிறேன்ப். ஹரித்வாருக்கு சென்று இருக்கிறேன். மானசரோவருக்கு சென்றிருக்கிறேன். ஆயினும் காசிக்கு சென்றதில்லை. யாராவது துணை இருப்பின் செல்ல ஆசை. இருந்தாலும் இந்த ஆசை ஏன் இருக்கிறது ?இந்த ஆசையையும் ஏன் த்யாஜ்யம் செய்ய முடியவில்லை என்றும் புரியவில்லை.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் தங்களது மிக நீண்ட, அற்புதக் கருத்துக்களைத் தாங்கிய கருத்துரைக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

      தாங்கள் கூறிய கருத்துக்கள் யாவும் என்னைப் பொறுத்தவரை மிக மிகச் சரியே. அந்தக் காலத்தில் இல்லறக் கடமைகளை முடித்த பின்பே காசியாத்திரை மேற்கொள்வார்கள் என நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். அவ்வாறு செல்பவர்களில் நிறையப் பேர் அங்கேயே தங்கியும் விடுவார்களாம்.

      கைடுகள் பற்றி தாங்கள் சொன்னதும் சரியே. எங்கும் கமிஷன் மயமாகவே இருந்தது. உண்மையில் யாத்திரை என்றதும் அமைதியாக நிறைவேற்ற வேண்டுமென்பது போய், எங்கே என்ன கேட்பார்களோ என்ற பயத்துடனேயே இருக்க வேண்டியிருந்தது. இதையெல்லாம் வெளியில் சொன்னால் தப்பு என்ற எண்ணத்துடனேயே நிறையப் பேர் இருக்கிறார்கள். உள்ளதை உள்ளபடி சொல்ல வேண்டுமென்பதே என் ஆசை. ஓரளவு, மனதைத் தயார் படுத்திக் கொண்டு சென்றால் சமாளிக்கலாம் என்பதே என் எண்ணம்.

      காசியில் விஸ்வநாதர் சன்னதி தரும் மன அமைதி அலாதியானது என்பது என் அனுபவம். சுற்றிலும் விரும்பத்தகாத சம்பவங்கள் இருந்த போதும் அவர் தரும் அமைதி அற்புதமானது. மானிடப் பிறவியின் பயன் அது என்றே தோன்றும். தாங்கள் சமயம் கிடைக்கும் போது காசி செல்ல வேண்டுகிறேன் தாத்தா. மிக மிக நன்றி.

      நீக்கு
    2. பிரும்மச்சாரி, க்ருஹஸ்தன், வானப்ரஸ்தன் ஆகியோருக்கும் தண்டம் உண்டு. இக்காலத்தில் அவ்வழக்கம் பரம வைதீகமான ஒரு சிலர் தவிர பிறரிடம் எடுபட்டுப் போய் விட்டது.
      தவறிருந்தால் சகோதரி திருத்தவும்.

      புவனேஷ்

      நீக்கு
  2. அருமையாக நகைச்சுவை கலந்து எழுதியுள்ளீர்கள்.

    நாங்கள் திரிவேணி ஸ்நானம் செய்தது, கங்கைச்சொம்பு சீல வைத்து வாங்கிவந்தது எல்லாம் நினைவுக்கு வந்தது.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்>

    பதிலளிநீக்கு
  3. நன்றாக நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள்.

    நாங்கள் திரிவேணி ஸ்நானம் போட்டில் சென்று செய்தது, அங்கிருந்தே நீர் கொண்டு வந்து கங்கைச்சொம்புகளில் அடைத்து சீல் போட்டு வந்தது எல்லம் நினைவுக்கு வந்தது.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு