திங்கள், 13 ஜனவரி, 2014

PONGAL THIRUNAAL SIRAPPU KAVAITHAI..ஞாயிறு போற்றுதும்!..ஞாயிறு போற்றுதும்!!

surya04
இந்தப் பாடலை, திரு.சுப்புத் தாத்தா மிக அருமையாகப் பாடி அளித்திருக்கிறார். அவருக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி!!..



ஒளி தந்து இருள்நீக்கி நலம் தந்து வளம் சேர்க்கும்

ஒப்பிலா கதிரவனை வணங்குவோம்!

 மழை தந்து மண்ணுலகம் மகிழ்வித்து அருள் செய்யும்

பர்ஜன்யன் உன்னடியைப் போற்றுவோம்!

 வானவரைக் காத்தருளும் இந்திரனின் திருவுருவே

வாழ்த்தினோம் வாழ்த்தினோம் அருள்கவே!

வயல்களில் விதைத்ததை விளைவிக்கும் பூஷாவே

வான்மணியே உனைத் தொழுதோம் வருகவே!

மூச்சிலே வரும் காற்று உன்னருட் செயலன்றோ

முழுமுதலே அர்யமான்!!  வணங்கினோம்!

 மூலிகைகள் உள்ளாடும் சக்தியாய் நோய் தீர்க்கும்

த்வஷ்டா உன் தாளிணைகள்  போற்றினோம்!

 பகன் என்ற பெயர் கொண்டு நீ தரும் வெம்மையால்

பாரிலே மன்னுயிர்கள் வாழுமே!

 ஜடராக்னி ரூபத்தில் உயிர்க்குலம் காத்தருளும்

விவஸ்வானின் திருநாமம்  போற்றினோம்!

 வாயுக்கள் வடிவான வளம் தரும் அம்சுமான்

வள்ளலே!..உன்னடியை  வணங்கினோம்!

 எண்ணத்தில் தீமை தனை எரித்திடும் சக்தியே

எமைக் காக்கும் விஷ்ணுவே அருள்கவே!

 இவ்வுலகம் படைத்தருளும் என் தேவே தாதாவெ

இகலோகம் வாழ நலம் தருகவே!

 நீர் வடிவில் உயிர்க்குதவும் வருணனே வாழ்த்தினேன்

நீர் வளம் நிறைய அருள் பொழிகுவாய்!

 நிலையாக மன்னுயிர்கள் வாழவே தவம் புரியும்

நிலவுலக மித்திரா வளம் வழங்குவாய்!


 ஆதித்ய தேவா  நல்ல‌றம் வளர்க்கும் பகலவா

ஆருயிர்கள் காக்கும் எழில் ஞாயிறே!

 அன்பான சூரியனே பண்பாளர் உளம் இருந்து

அகலாமல் வாழ்விக்க வரமருள்!
=====

இந்தப் பாடல், த்வாதச ஆதித்யர்கள் என்று போற்றப்படும் சூரியனின் பன்னிரண்டு திருநாமங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது…சூரியனே அனைத்துத் தேவர்களின் திருவுருவங்கொண்டு உலகைக் காக்கிறான் என்கிறது ‘பவிஷ்ய புராணம்’. பவிஷ்ய புராணத்தில், ஸ்ரீகிருஷ்ணர், தமது புதல்வன் சாம்பனுக்குச் சொல்வதாக வருகிறது இது.

இதன்படி, சூரிய பகவானே, ‘த்வாதச (பன்னிரெண்டு) ஆதித்யர்க’ளாக, பன்னிரெண்டு வடிவங்களை எடுத்துக் கொண்டு, பன்னிரெண்டு வகையான செயல்களைப் புரிகிறார். த்வாதச ஆதித்யர்கள் பின்வருமாறு.

1. தேவர்களைக் காக்கும் இந்திரன். மேகத்தைக் கட்டுப்படுத்துபவர் சூரியபகவான். சிம்ம மாதமாகிய ஆவணி மாதச் சூரியனின் திருநாமமே இந்திரன்.

2. படைக்கும் தொழிலைச் செய்யும் தாதா. இந்த திருநாமம் கொண்ட சூரியன், உயிர்களின் தோற்றத்திற்குக் காரணமான வெம்மையைத் தருபவர். மாதங்களில், இவர் சித்திரை மாதத்திற்கு உரியவராகக் கருதப்படுகிறார்.

3. உலகத்தில் மழையைப் பொழிவிக்கும் பர்ஜன்யன். நீர் நிலைகளில் இருக்கும் நீரை அமுதமென அள்ளி மேகமாக்கித் தருபவர் இவரே!. இவர் பங்குனி மாதத்துக்கு உரியவராகக் கருதப்படுகிறார்.

4. உணவுப்பொருள்களை விளைவித்து அருளும் பூஷா.விதைத்த விதைகள், பூமியில் முளைக்கத் தேவையான அளவு வெப்பத்தை அளிப்பவர் பூஷா. மாசிமாதச் சூரியனே பூஷா.

5. மூலிகைகளின் சக்தியாக இருந்து நோய்களைப் போக்கும் துவஷ்டா. இவர் ஐப்பசி மாதத்திற்கு உரியவராகக் கருதப்படுகிறார். அடைமழை மாதமான ஐப்பசியில், நோய் நொடிகள் அண்டாதிருக்க அருளுபவர் இவரே.

6. மூச்சுக்காற்றை அளித்து உயிர்களை இயங்கச் செய்யும் அர்யமான். ‘வைகாசி வாய் திறக்கும்’ என்று தொடங்கி, வீசும் காற்றின் அளவைக் குறித்துச் சொல்லப்படும் பழமொழிகளை நாம் அறிவோம். மிதமான காற்றுக்குத் தலைவன் அர்யமான். வைகாசி மாதச் சூரியனின் திருநாமம் இதுவே.

7. உயிர்களுக்கு நலம் வழங்கும் பகன். உயிரினங்களின் உடலில் உயிர் தங்கியிருக்க வெம்மை தேவைப்படுகிறது. இந்த வெம்மை இல்லாவிட்டால் உடல் குளிர்ந்துவிடும். அத்தகைய வெம்மையைத் தரும் பகலவனின் திருநாமமே இது. மாதங்களில் இவர் தைமாதச் சூரியனாக அறியப்படுகிறார்.

8. உயிர்களிடத்தில் ஜடராக்னி ரூபத்தில் இருந்து, உண்ணும் உணவின் ஜீரண சக்திக்கும், உடல் வெப்பம் சீராக இருக்கவும் உதவும் விவஸ்வான். எல்லா வகையான அக்னிக்கும் ஆதாரம் இவரே. மாதங்களில் இவர் புரட்டாசி மாதத்துக்குரியவராகக் கருதப்படுகிறார்.

9. தீய எண்ணங்களையும் தீய சக்திகளையும் அழிக்கும் விஷ்ணு. பரம்பொருளின் எங்கும் நிறைத் தன்மையே விஷ்ணு. பகலவனின் பிரகாசம் போல் தீப ஒளி நிறையும் கார்த்திகை மாதத்திற்கான‌ சூரியனே விஷ்ணு என்று அறியப்படுகிறார்.

10. வாயுக்களின் வடிவிலிருந்து உயிர்களுக்கு உதவும் அம்சுமான். இதமான வெப்பம் தருபவரே அம்சுமான். பனி நிறைந்த மார்கழி மாதத்திற்கான சூரியனே அம்சுமான்.

11. நீர் வடிவிலிருந்து உயிர்களுக்கு உதவும் வருணன். ஆடியில் வீசும் பெருங்காற்றுக்கு அதிபதி இவரே. ஆகவே ஆடி மாதச் சூரியனே வருணன் என்று அறியப்படுகிறார்.

12. உயிர்களின் நலனுக்காக, சந்திரபாகா நதிக்கரையில் தவமியற்றும் மித்திரன். கடலரசனின் இயக்கங்களைக் கட்டுப்படுத்தி உயிர்களுக்கு உற்ற தோழனாக விளங்குபவர். சந்திரபகவான் இவராலேயே ஒளி பெறுகிறார். மாதங்களில், ஆனி மாதச் சூரியனே மித்ரன் என்று புகழப்படுகிறார்.

ஞாயிறு போற்றுதும்!..ஞாயிறு போற்றுதும்!!

அன்பர்களுக்கு மனமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!

வல்லமை மின்னிதழின், பொங்கல் சிறப்பிதழில் வெளியான கவிதை:

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி : கூகுள் படங்கள்.

12 கருத்துகள்:

  1. மிகவும் அருமையான பாடல்... ஒவ்வொரு சொற்களின் விளக்கமும் சிறப்பு... பாராட்டுக்கள் அம்மா...

    இனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் நல்வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றி டிடி சார்!!

      நீக்கு
  2. பொங்கல் நல நாள் வாழ்த்துக்கள்.

    உங்கள் கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது.
    சக்கரை பொங்கல் போல்.

    த்வாதச ஆதித்யர்கள் நானும் படித்து இருக்கிறேன்.

    உங்கள் பாடலை நான் ஹிந்தோள ராகத்தில் பாட
    இயன்ற அளவு முயற்சித்து இருக்கிறேன்.

    சற்று நேரத்தில் உங்களுக்கு தொடர்பு அனுப்புகிறேன்.

    ஆல் த பெஸ்ட்
    ஹாப்பி பொங்கல்.


    சுப்பு தாத்தா.
    www.menakasury.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் என் கவிதைகளுக்கு அளித்து வரும் ஆதரவுக்கு என்றென்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்!.. பொங்கலுக்காக ஊருக்குச் சென்றிருந்ததால் இப்போது தான் தாங்கள் பாடியதை பதிவில் இணைக்க முடிந்தது.. தாங்கள் பாடியது மிக அருமையாக இருக்கிறது.. என் மனமார்ந்த நன்றி தாத்தா!..

      நீக்கு
  3. இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!

    வல்லமை மின்னிதழின், பொங்கல் சிறப்பிதழில் வெளியான கவிதைக்கு பாராட்டுக்க்ள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றி அம்மா!

      நீக்கு
  4. https://www.youtube.com/watch?v=SwcTrTW6_uc
    you may pl
    listen to this song here.
    meenachi paatti.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவில் இணைத்து விட்டேன்.. தங்கள் இருவருக்கும் மீண்டும் என் நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்!!..

      நீக்கு
  5. அழகான இனிய கவிதை. வல்லமை மின் இதழில் வெளியானதற்கு என் பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய மகர சங்கராந்தி நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் பாராட்டுக்களுக்கும், நல்வாழ்த்துக்களுக்கும், ஆசிகளுக்கும் என் மனமார்ந்த நன்றி ஐயா!

      நீக்கு
  6. தொகுப்பு பதிவுக்கு பதிவுகளை
    அனுப்பலாமா? எப்படி அனுப்புவது

    அது பற்றிய அறிவிப்பு இல்லையே
    அது குறித்து விளக்கினால் நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போதைக்கு நான் மட்டும் தான் பதிவிடுகிறேன்!!... சகோதரர் தனுசுவுக்கு நானே அழைப்பு விடுத்து கவிதைகள் தொடர்ந்து அனுப்பும்படி கேட்டதால் அவரும் அனுப்புகிறார்..

      பிற பதிவுகளை ஏற்பது குறித்து ஆலோசித்து வருகிறேன்!.. முடிவுகள் எடுக்கப்படும்போது அது பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்படும்!!..மிக்க நன்றி ஐயா!

      நீக்கு