ஞாயிறு, 29 டிசம்பர், 2013

MINI STORIES...MITHAI VIYABAARI..சின்னஞ் சிறு கதைகள்...மிட்டாய் வியாபாரி!!


'இவ்வுலக வாழ்க்கையில் நம் கடமைகளைப் பற்றில்லாமல் செய்வதே கர்ம  யோகம்' என்று நமக்கு அறிவிக்காத மஹான்களில்லை.. கீதாசார்யன் கீதையில் அருளிய கர்ம யோகத்தின் சிறப்பை விவரிக்க வார்த்தைகள் போதாது.. 

அதீதமாக ஒரு விஷயத்தின் மீது பற்று வைக்கும் போது அது நமக்கு ஏற்படுத்தும் விளைவுகளை நாம் அறிந்தோமில்லை அல்லது அறிந்தாலும் அதைப் பெரிதுபடுத்துவதில்லை..

ஒரு மிட்டாய் வியாபாரி, தன் பிள்ளைகள் மீது வைத்த பற்று, அவனை மேன்மேலும் கீழான பிறவிகளுக்கு எடுத்துச் சென்ற இந்தக் கதையை, நம்மில் பலர் அறிந்திருந்தாலும், அறியாத சிலருக்காக மீண்டும் கொடுக்கிறேன்..

ஒரு ஊரில் ஒரு மிட்டாய் வியாபாரி வாழ்ந்து வந்தான். அவனுக்கு நான்கு மகன்கள்.. மிகுந்த இரக்க சுபாவமுடைய அவன், மிகவும் நேர்மையான முறையில் வாழ்க்கை நடத்தி வந்தான்.

அந்த ஊருக்கு ஒரு துறவி வந்தார். அவர் கடும் தபஸ்வி. பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறையே ஒரு குறிப்பிட்ட நாளில் உணவு உண்பார். அதையும் அவர் யாரிடமும் யாசிக்க மாட்டார். யாரேனும் அவருக்கு பிக்ஷையிட வேண்டும். அன்று பொழுது சாய்வதற்குள் பிக்ஷையிடாவிட்டால், மீண்டும் பன்னிரண்டு வருடங்கள் கழித்து தான் உணவு.

துறவி, உணவு உண்ணும் நாள் அது. அன்று யாரும் அவருக்குப் பிக்ஷையிடவில்லை. பொழுது சாயும் நேரமும் வந்து விட்டது..

மிட்டாய் வியாபாரி, அந்தத் துறவிகயைக் கண்டான். அன்போடு தன் கடைக்கு அழைத்து வந்து, பழங்கள், இனிப்புகள் அளித்து வணங்கினான். தன் மனைவி, மகன்களையும் அழைத்து, துறவியை வணங்கச் செய்தான். துறவி மிக மகிழ்ந்தார்.

துறவி,வியாபாரியிடம், 'மகனே, நான் உனக்கு என் தவ வலிமையால் 'வீடு பேறு(மோக்ஷம்) தர இயலும்.. ஆகவே என்னோடு வா!!' என்றார்.

வியாபாரி, 'இல்லை ஸ்வாமி, என் மகன்கள் மிகவும் சிறியவர்களாக இருக்கிறார்கள். இவர்களை நான் தக்க வயது வரை வளர்க்க வேண்டும்.. அதன் பின்பு தான் இதைப் பற்றியெல்லாம் யோசிக்க இயலும்.. ஆகவே சிறிது காலம் கழித்து வாருங்கள்!!' என்றான்.

துறவி ஒப்புக் கொண்டார். சிறிது காலம் கழித்துச் சென்றார். பார்த்தால், வியாபாரியின் கடையில் வேறொருவர் இருந்தார். வியாபாரி, மரணமடைந்து விட்டதாகவும், கடையை அவரிடம் விற்று விட்டதாகவும்,அவர் குடும்பத்தினர் சிறியதொரு நிலத்தில் விவசாயம் செய்து கஷ்ட ஜீவனம் செய்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார் அவர்.

துறவி, தன் தவ வலிமையால், வியாபாரி, ஒரு எருதாகப் பிறந்து, தன் மகன்களின் முன்னேற்றத்துக்காக, நிலத்தில் அரும்பாடுபட்டு உழைத்து வருவதை அறிந்து கொண்டார் அவர்.

துறவி, வியாபாரியின் மகன்களிடம் சென்று, தான் அவரது தந்தையின் நண்பன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.  அவர்களும், வியாபாரியின் மனைவியும் அவரை அறிந்து கொண்டு வணங்கினர். துறவி, வியாபாரியின் மகன்களிடம் நிலத்தில் உழுது கொண்டிருந்த எருதைப் பார்க்க அனுமதி கோரிப் பெற்றார்.

நேராக எருதிடம் சென்று, தன் கமண்டலத்தில் இருந்த புனித நீரைத் தெளித்தார். எருதுக்கு, பூர்வ ஜென்ம நினைவும் பேசும் சக்தியும் வந்தது. மீண்டும் தன்னோடு வரும்படி அழைத்தார் துறவி. பாசத்தினால் அறிவை இழந்திருந்த வியாபாரியோ, இம்முறையும் மறுத்தான். தன் பிள்ளைகள் நல்ல நிலைக்கு வந்ததும் வருவதாக வாக்குறுதி அளித்தான். மீண்டும் சிறிது காலம் கழித்து வருமாறு கோரினான்.

துறவி, கொடுத்த வாக்கைக் காக்க சில காலம் கழித்து, மீண்டும் வந்தார். இம்முறை எருதும் இல்லை.. வியாபாரியின் மகன்களின் நிலை மிக மோசமாக இருந்தது.

அவர்கள் துறவியை அடையாளம் கண்டு கொண்டனர்.

'இவர் ஒவ்வொரு முறை வரும் போதும் துரதிருஷ்டம் தொடர்ந்து வருகிறது.. முதன் முறை இவர் வந்த கொஞ்ச நாளில் அப்பா இறந்தார்.. இரண்டாம் முறை இவர் வந்த கொஞ்ச நாளில் தான் எருது உயிரை விட்டது..கஷ்டங்கள் இரட்டிப்பாயின' என்று சொல்லிக் கொண்டு, துறவியை அடிக்கவே வந்து விட்டனர்.

துறவி அவர்களை அமைதிப்படுத்தினார். தன் தவ வலிமையால், வியாபாரி இருக்கும் இடத்தை அறிந்தார். வியாபாரி, உயிரோடு இருந்த போது, தான் சேர்த்து வைத்த செல்வத்தை எல்லாம் பொற்காசுகளாக பானைகளில் இட்டு, வீட்டில் மூலையில் புதைத்து வைத்து இருந்தான்.  இப்போதும் அவன் தன் பிள்ளைப் பாசத்தால், அந்தப் பானைகளைக் காக்கும் பாம்பாகப் பிறந்திருந்தான்!!..

தன் தவ வலிமையால், இம்முறை மானசீகமாக, வியாபாரியிடம் பேசினார் துறவி..வியாபாரியிடம் பிள்ளைப் பாசம் நீங்கவேயில்லை!!.. அவன் 'இந்தச் செல்வத்தைக் காத்து தன் மகன்களிடம் ஒப்புவிக்கும் வரை, தன்னால் வர இயலாது' என்றான்.

துறவி, ஒரு முடிவுக்கு வந்தவராக, வியாபாரியின் மகன்களை அழைத்தார். வீட்டின் ஒரு குறிப்பிட்ட மூலையைத் தோண்டுமாறும், அப்போது அங்கிருந்து வெளிவரும் பாம்பை அடித்துக் கொன்றால், அவர்கள் கஷ்டங்கள் நீங்குமென்றும் குறிப்பிட்டார்.

மகன்களும், துறவி சொன்னவண்ணம் செய்தனர். மூலையத் தோண்டியபோது, பொற்காசுகள் மின்னிய பானைகளையும், காவல் காக்கும் பாம்பையும் கண்டனர். பாம்பை அடித்துக் கொன்று பொற்காசுகளைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டனர். துறவியை மகிழ்ந்து வணங்கினர்.

வியாபாரிக்கு மகன்களிடம் அடிபட்டதால், பிள்ளைப் பாசம் விலகியது.. துறவியுடன் சென்ற அவன் உயிர்,  பிறவா நிலையை அடைந்தது.

இக்கதை, பற்றினால் ஏற்படும் விளைவுகளையும்,நல்லோருடன் சேர்ந்திருத்தலாகிய  சத்சங்கத்தின் பெருமையையும் ஒரு சேரச் சொல்கிறது...

'ஒரு  துறவி, பாம்பை அடிக்குமாறு சொல்லலாமா?!!' என்பவர்களுக்காக ஒரு வார்த்தை.. கடவுள் நமக்கு வழங்கும் கஷ்டங்கள் எல்லாம் நம்மைப் பக்குவப்படுத்தி உயர்நிலைக்கு எடுத்துச்  செல்ல.. அதைப் போல, துறவி 
செய்ததும் வியாபாரியின் பற்றை விலக்கி, அவனுக்கு நற்கதி அளிக்க. 

வாக்குத் தவறாத அந்தத் துறவி, இதை வியாபாரிக்குச் செய்யும் நற்செயலாகவே கருதிச் செய்தார்.

மானிடப் பிறவி கிடைத்தற்கரியது. துறவி, முதல் முறை வந்த போது வியாபாரியின் முடிவு காலம் அருகிலிருப்பதை உணர்ந்தே அவனை மோக்ஷத்திற்கு அழைத்திருக்க வேண்டும். அவனுக்கு அது புரியாமல் போகவே மேலும் இரு கீழான பிறவிகள் எடுக்க நேர்ந்தது. சத்சங்கத்தின் மகிமை, இறுதியில் அவனுக்கு நற்பேறு பெற்றுத் தந்தது..

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.(குறள்)

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

8 கருத்துகள்:

  1. இந்தக்கதை மிக அருமையாக உள்ளது. நான் இதுவரை கேள்விப்படாத கதையாகவும் உள்ளது.

    புத்ர பாசம் + பந்தங்களால் மூழ்கித்தவிக்கும் நமக்கு நற்கதி கிடைக்கும் வழியை குரு ஒருவர் காட்டினாலும் கூட, நம்மால் இந்த உலகத்தின் பந்த பாசங்களை உடனே விட்டுவிட முடிவது இல்லை என்பதும் மிகவும் யதார்த்தமானதோர் விஷயம் தான்.

    இதுபோன்றதோர் நீதிக்கதையைப் படித்ததும் தான், உலகத்தில் பாசமாவது பந்தமாவது என்ற உண்மையே புரிய வருகிறது. ஸத் ஸங்கம் என்பது மிகவும் அவசியமே என்பதும் உணர முடிகிறது.

    அருமையான படைப்புக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊக்கமளிக்கும் கருத்துரை தந்தமைக்கு மனமார்ந்த நன்றி ஐயா!

      நீக்கு
  2. கதை அருமை... குறளோடு சொன்னது மேலும் அருமை...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றி டிடி சார்!

      நீக்கு
  3. உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே என்பதில் , கற்றலை ஒதுக்கிவிட்டு பிள்ளை என்றே வாழ்த்துவிட்டார்.

    இக்கதை பற்றையும், அத்னால் உண்டாகும் விளைவுகளையும் வழக்கம் போல் நேர்த்தியாக எழுதிய சகோதரி அவர்களுக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் பாராட்டுக்களுக்கு என் உளமார்ந்த நன்றி சகோதரரே!!..

      நீக்கு
  4. அலங்காரச் சொற்கள் இல்லாமல் நேரடியாகக் கூறிய நீதிக்கதை அருமை.

    பதிலளிநீக்கு
  5. இனிப்பை சாப்பிடுவதில்லை என்பதினால் (சர்கரை வியாதி அல்ல)
    இந்த பதிவில் மிட்டாய் என்றதும் முதலில் வேகமாக scroll செய்தேன்

    நீதியை சொல்லும் கதை
    நிறைவான செய்தி தந்த கதை..

    கதை என்பதினால் எந்த
    கருத்து சொன்னாலும் ஏற்றுக் கொள்கிறோம்

    பதிலளிநீக்கு