திங்கள், 3 மார்ச், 2014

FREEZER MAHATHMIYAM...ஃப்ரீஸர் மஹாத்மியம்!


அன்பு நண்பர்களுக்கெல்லாம் வணக்கம்!..

'அம்மி' பதிவுக்குக் கிடைச்ச வரவேற்பு, கொஞ்ச நஞ்சமில்லை!.. அம்மியைப் புகழ்ந்து ஒரு கும்மிப் பாட்டு எழுதலாமாங்கற அளவுக்கு ஆயிருச்சு!.. ஆதரவளித்த எல்லோருக்கும் ரொம்ப நன்றி!...

இந்தப் பதிவுலயும் சுயபுராணந்தான் வருது!.. பெரிய மனசு பண்ணி, படிச்சு வச்சிருங்க மக்களே!..



ரெண்டு நாளு முன்னாடி ஒரு வீட்டுக்கு, பூஜைக்குப் போயிருந்தேன்... அந்த வீட்டுல வயசான தம்பதி இருக்காங்க.. அவங்க ரெண்டு பேரு மட்டுந்தான்.. அதனால உதவி ஒத்தாசை பண்ணலான்னுட்டு சீக்கிரமே போயிட்டேன்...

வேலையெல்லாம் நடந்துட்டு இருந்துச்சு!. அந்த வீட்டுப் பாட்டி, என்னை ஃப்ரீஸரைத் திறந்து ஒரு பொருள எடுக்கச் சொன்னாங்க.. 

'இதென்னா பிரமாதம்'னுட்டு, திறக்கப் போனா, வரவே மாட்டேங்குது திறக்க.. ஐஸ் ஜாஸ்தியாயி இறுகிப் போச்சான்னு பாத்தா அப்படியொண்ணுமில்ல.. இழூஊஊஊஊஊஊஊத்து திறந்தேன் ( நல்ல வேள டோர் ஒடையல)..பாத்தாங்காட்டியும் ஒரு மினி பஜாரே உள்ளார வச்சிருந்தாங்க.. ஒரு பிரபல கம்பெனியோட ரெடிமிக்ஸூங்க எல்லாத்துக்கும் டீலர்ஷிப் வாங்கீருப்பாங்களோன்னு தோணுற அளவுக்கு எல்லா வெரைட்டியும் உள்ளாற இருந்துச்சு.. எல்லாம் பாதிப் பாதியா, ரப்பர் பேண்ட் போட்டு சுருட்டி வச்சிருந்தாங்க.. 

இத்தோட, தேங்கா மூடி ரெண்டு, பால் பவுடர் பாக்கெட்டு, ஐஸ்க்ரீம், வெண்ணை, மிஞ்சிப் போன கூட்டுப் பேஸ்ட்டு, நறுக்கின முருங்கைக்கா, பீன்ஸ் இத்யாதி..இன்னும் இன்னும் என்னவெல்லாமோ.. 'என்னையுங் கொண்டு ஏப்பமும் விடும்'னுட்டு இருந்துச்சு ஃப்ரீஸர்.

இவங்க வீட்டுல மட்டுமில்லீங்க.. நெறையப் பேரு வீட்டுல இதான் நெலம..

நானு அட்வைஸ் பண்ற அளவுக்கெல்லாம் பெரியாளு இல்ல.. ஆனாலும் கொஞ்ம் யோசிக்கலாம்ல..ஃப்ரீஸர் இருக்குன்றதுக்காக, எக்கச்சக்கமா ஐட்டம் ஸ்டோர் பண்றது சரியான திட்டமிடுதலுக்கு அடையாளம் இல்லீங்க..

ரெடிமிக்ஸூங்க வாங்கறத கூடுமானவரை தவிர்த்தீங்கன்னா அது உங்க பர்ஸூக்கும், உடம்புக்கும் நல்லது.. ஆனா இத ஃபாலோ பண்றவங்க ரொம்ப கம்மி..

அதனால ரெண்டொரு ஐடியா (மட்டும்) சொல்லிக்கிறேன்..

1.. தேவையான அளவுல வாங்குங்க.. 'ஒரு கிலோ புளியோதரைப் பொடி வாங்கினா ஒரு சீப்பு இலவசம்'னு போட்டாக்க, முண்டியடிச்சிப் போயி வாங்காதீங்க..

அடிக்கடி உபயோகிக்கப்படும்னாலோ அல்லது ட்ராவல் பண்ற டைம்லயோ ரெடிமிக்ஸூங்க வாங்குங்க..வருஷத்துக்கொருதரம் பாவ்பாஜி பண்றதுக்கு அரை கிலோ பாவ்பாஜி மசாலா வாங்கி ஃப்ரீஸர்ல தூங்க வைக்கறது தப்பு...இப்பல்லாம் சின்ன சின்ன பாக்கெட்ல கூட ரெடிமிக்ஸூங்க கிடைக்குது.. தேவையானத மட்டும் வாங்கினீங்கன்னா பாக்கெட்ட சுருட்டி ஃப்ரீஸர்ல போட்டு மறந்து போறத தவிர்க்கலாம்..

2.ஃப்ரீஸர்ல, மிஞ்சிப் போன தேங்காத் துவையல், நாள் பட்ட ஐஸ்க்ரீம், இதெல்லாம் இருக்கறது நல்லதில்ல.. உடனடியா உபயோகிக்க முடியுதா பாருங்க. இல்லன்னா அப்ப்ப க்ளியர் பண்றது பெட்டர்... கூடுமானவரை பதினைந்து நாளைக்கு மேல் எந்த ஒரு ஐட்டமும் ஸ்டோர் பண்றத தவிர்த்துடுங்க. ஏன்னா, ஃப்ரீஸர அடிக்கடி திறக்கற பழக்கமில்லன்னா அதுக்குள்ள என்ன இருக்குங்கறதே மறந்து போயிடும்..

3.பாக்கெட் பிரிச்ச மாவு வகைகள வச்சீங்கன்னா சீக்கிரமே எடுத்து உபயோகிக்கப் பாருங்க.. என்னதான் ஃப்ரீஸர்ல வச்சாலும் எல்லா ஐட்டத்துக்கும் ஒரு காலாவதி டேட் இருக்குது பாருங்க..

4.சில பேருங்க கிட்ட ஒரு பழக்கம் இருக்குது.. பத்திரிகைகள்ல வர்ற 'திடீர் சமையல்' குறிப்பப் படிச்சுட்டு, எக்கச்சக்கத்துக்கு, புளி பேஸ்ட், திடீர் மோர்க்குழம்பு பொடி, திடீர் கூட்டுப் பொடி, திடீர் கொள்ளுப் பொடி எல்லாம் அரச்சு, டப்பா அல்லது கன்சீல்ட் கவர்ல போட்டு ஃப்ரீஸர் தலைல கட்டுறது..

இதெல்லாம்  அவசரத்துக்கு சமையல் செய்ற சூழல் அதிகமா அமையற‌வங்க, சுயம்பாகம் செய்ற இளைஞர்கள் எல்லாம் சரியான அளவுல செய்து பயன்படுத்தலாம்.. மத்தவங்க, எப்பவுமே இதையே கைல எடுக்கறது அவ்வளவா சரி வராது.. என்ன இருந்தாலும் அப்பப்ப செய்து சுவைக்கிற டேஸ்ட்டு தனிதான்..

எனக்குத் தெரிஞ்சு ஒரு அம்மா, ஒரு வண்டி புளிபேஸ்ட்டு செஞ்சு ஃப்ரீஸர்ல வைச்சுட்டு, டெய்லி புளி  ஊறவைச்சு கரைப்பாங்க.. கேட்டதுக்கு, 'புளி பேஸ்ட்டு' அவசரத்துக்குத் தான்.. தினப்படி சமையலுக்கு இப்படித் தான் செய்வேன்னாங்க.. அப்ப அளவக் குறைக்கலாம்ல..

சரி..அப்ப என்னதான் ஃப்ரீஸர்ல வைக்கலாம்?

ஐஸ் ட்ரே, சீசனில்லாத காய்கறிகள சின்னதா கட் பண்ணி ஸ்டோர் பண்ணலாம்... வேக வைத்த, வைக்காத முளை கட்டிய பருப்பு வகைகள், பாக்கெட் பிரிக்காத மாவு வகைகள் இதெல்லாம் வைக்கலாம்.. ஆனா இதையெல்லாம் மாசக் கணக்குல வைக்காம, சீக்கிரமே உபயோகத்துக்கு எடுக்கற மாதிரி பாத்துக்குங்க...தேங்க உடைச்சு, மூடியை உள்ளே வச்சு, நாலு நாளக்குள்ள எடுத்தா,ஓடும் பருப்பும் தனியா கழண்டு வ‌ந்து, யூஸ் பண்ண ஈஸி. வேக வைத்த தானியங்கள், பருப்பு வகைகள், ஒரு வாரத்துக்குள்ள உபயோகிச்சா டேஸ்ட் பிரச்னை ஆகாது..முளை கட்டினத பத்து நாள் வைக்கலாம்..பாக்கெட்டுங்கள ஒரு மாசத்துக்குள்ள எடுங்க..என்னது!.. தேவையிருக்காதா.. அப்புறம் ஏன் வாங்குறீங்க? ... வெலை வாசி ஏறிடுமா?..  சரிதான். அப்ப அதுலயே ஸ்டோர் பண்ணி மறந்திட்டா, எக்ஸ்பைரி டேட் பயமுறுத்துமே என்ன செய்வீங்க?

சமைச்ச உணவுங்கள ஃப்ரீஸர்ல வைச்சாலும் சீக்கிரமே உபயோகிக்கறது நல்லது.. 

'அளவுக்கு மீறினால்' பழமொழிய எப்பவும் நினைவுல வைங்க.. அது ஃப்ரீஸருக்கும் பொருந்தும்!...

ஆட்டோ டீஃப்ராஸ்ட் இல்லாத ஃப்ரிஜ்ஜ கரெக்ட் இன்டர்வெல்ல,  ஐஸ் கட்டி தேங்காம டீஃப்ராஸ்ட் பண்ணி வச்சிக்கங்க.. முக்கியமா, ஃப்ரீஸர செக் பண்ணி, க்ளீன் பண்றத அடிக்கடி இல்லன்னாலும் பதினஞ்சு நாளைக்கு ஒரு முறையாவது செஞ்சீங்கன்னா ரொம்ப நல்லது... ஃப்ரீஸருக்கும் உங்க ஹெல்த்துக்கும்...

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்..

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

6 கருத்துகள்:

  1. மனதில் ப்ரீஸ் செய்து வைத்துக்கொள்ளவேண்டிய குறிப்புகள் அனைத்தும் பயனுல்ளவை.பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  2. கதை, கவிதை, கட்டுரைகளுக்கு அடுத்து வீட்டுக்குறிப்புகள் வகையில் வந்த பதிவு உங்களை ஒரு பெண் தமிழ்வாணன் என்பதாக காட்டுகிறது தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப நன்றி சகோதரரே!..ஆமா என்ன ஆச்சு!..இப்பக் கூட நினைத்தேன், கொஞ்ச நாட்களாக இணையப் பக்கம் தங்களைக் காணோமே என்று!.. பணிச்சுமையென்று நினைக்கிறேன்!..மீண்டும் பார்த்ததில் சந்தோஷமோ சந்தோஷம் எனக்கு!!!

      நீக்கு