செவ்வாய், 24 ஜூன், 2014

MINI STORIES.. SATRE GAVANIYUNGAL!......சின்னஞ்சிறு கதைகள்..சற்றே கவனியுங்கள்!!...


 அன்பார்ந்த நண்பர்களுக்கு வணக்கம்!!.. 

இந்தப் பதிவுல, சின்னஞ்சிறு கதை ஒண்ணு பாக்கலாம்! (ரொம்ப நாளாச்சே!)....சரத் புதிதாக வேலையில் சேர்ந்து பதினைந்து நாட்களாகியிருந்தன.... கம்பெனியின்  குளிரூட்டப்பட்ட அறைகள் ஒவ்வொன்றையும் பார்க்கவே அவனுக்கு சில நாட்களானது.. முதல் சில நாட்கள்,  ஆபீஸில், எது, எந்த இடத்தில் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளவே சரியாக இருந்தது..

 ஆபீஸில்  சில அறைகளின் கதவுகள், தானியங்கி முறையில் பூட்டிக் கொள்ளும் அமைப்பில் இருந்தன.. ஆயினும்  அவற்றில் சில, பழுதுபட்டிருந்தன...யாரேனும் உள்ளே இருக்கும் போது, கதவுகள் சார்த்திக் கொண்டால், வெளியிலிருந்து யாரேனும் வந்து திறக்க உதவ வேண்டும்!.. 

அன்று சரத்துக்கு வேலை முடிய சற்று நேரமாகிவிட்டது... ஆபீஸில் பெரும்பாலானவர்கள், வேலை முடிந்து சென்று விட்டிருந்தனர்.. இருந்த ஒரு சிலரும்,  கிளம்பிக் கொண்டிருந்தனர்.

சரத், வேலையை முடித்த பிறகு, ஆவணங்களை பத்திரப்படுத்த வேண்டி, அறைக்குள் சென்றான்.. அவசரத்தில், 'ஸ்டாப்பர்' போட்டு கதவை நிறுத்த மறந்ததின் பயன், கதவு 'படீரெ'ன மூடிக்கொண்டு விட்டது!..

பயந்து போனான் சரத்..அறையினுள் தொலைபேசியுமில்லை.. சரத்தின் கைபேசி அறைக்கு வெளியே, சரத்தின்  மேஜை மேல் இருந்தது!.. 

 அந்த அறையில் ஜன்னல்களில்லாததால், சத்தம் வெளியே கேட்க வழியுமில்லை.. ஆகவே, சரத், பல முறை கத்தியும், கதவைத் திறக்க முயற்சி செய்தும் யாரும் உதவிக்கு வரவில்லை!..

ஆபீஸ் காலியாகி விட்டது!.. சரத் கத்திக் கத்தி மயக்க நிலைக்கே வந்து விட்டான்!.. மூச்சுத் திணறுவது போல் இருந்தது!...'கடவுளே!.. என் முடிவு இப்படியா?!' என்று வாய் விட்டு அழ ஆரம்பித்தான்!.. பயமும் சோர்வும் மேலிட, அவன் மயங்கிச் சரியும் நேரத்தில், அறைக் கதவு திறந்து கொண்டது!!!..

ஆச்சரியமும் திகைப்பும் ஒருங்கே சேர, அறைக் கதவைத் திறந்தவரை நன்றியுடன் நோக்கினான் சரத்!.. கதவைத் திறந்தது,  ஆபீஸின்  செக்யூரிட்டி(காவலர்)களில் ஒருவர்.. அவரை தினமும் வாசலில் பார்த்திருக்கிறான் சரத்!..

அவனை மெல்ல வெளியே அழைத்து வந்து, ஆசுவாசப்படுத்தி, குடிக்க நீர் தந்து அமைதிப்படுத்தினார் அவர்...சரத்தின் மனமும் விழிகளும் நன்றியால் நிரம்பின..

கிளம்பும் முன்பு, அவரிடம் மெல்ல விசாரித்தான்.. 

'நான் இவ்வளவு கத்தியும் யார் காதிலும் விழவில்லையே?!..உங்கள் காதில் மட்டும் எப்படி?!!'..

'என் காதிலும் விழவில்லைதான்..ஆனால், இந்த ஆபீஸில், என்னை ஒரு பொருளாக, ஏவிய வேலையச் செய்கிற ஜடமாகப் பார்க்கிறவர்கள் தான் அதிகம்.. என்னையும் மதித்து, நீங்கள் தான், ஒவ்வொரு நாளும் ஆபீஸில் நுழையும் போது 'குட் மார்னிங்' சொல்வீர்கள்.. அதே போல், போகும் போதும் 'பை' சொல்லிக் கொண்டு செல்வீர்கள்..  இன்றும் அது போல், காலையில்  உங்கள் 'குட் மார்னிங்' கேட்டேன்.. ஆனால், நேரமாகியும், உங்கள் 'பை' கேட்காமல் போகவே, நீங்கள் இன்னும் கிளம்பவில்லை என்று ஊகித்தேன். எதற்கும், நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டி, ஒவ்வொரு அறையாகப் பார்த்துக் கொண்டு வந்தேன்.. இந்த அறையின் பூட்டு பழுதுபட்டிருப்பது தெரியும்...கதவு சார்த்தியிருக்கவே, திறந்து பார்க்கலாம் என்று பார்த்தேன்..நீங்கள் இருந்தீர்கள்!!' என்றார்.

ஒரு 'குட்மார்னிங்'கும், ஒரு 'பை' யும் ஒரு உயிரைக் காப்பாற்றி இருக்கிறது பாருங்கள்.. உங்களைச் சுற்றிலும் சற்றே கவனியுங்கள்.. இந்த மனித மனம், அங்கீகாரத்திற்காகத் தானே பெரும்பாலும் ஏங்குகிறது.. 'நாம் கவனிக்கப்படுகிறோம், மதிக்கப்படுகிறோம்' என்ற நினைப்பே, ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு தன்னம்பிக்கை தீபத்தை ஏற்றி வைக்கிறது..

சக மனிதர்களிடம் சிந்தும் ஒரு புன்னகை, நம் வாழ்வின் போக்கையே மாற்றி விடும் வல்லமை மிக்கது!..எத்தனை வேலைகளிலிருந்தாலென்ன...நேரம் கழித்து வீட்டுக்கு வரும் மகன் கேட்கும் 'சாப்பிட்டாயா அம்மா' வில், தாய், அன்று முழுவதும் வேலை செய்த களைப்பை மறக்கிறாள்.. மனைவி செய்யும் உதவிக்கு நன்றி சொல்லும் போது, அவள் தான் மதிக்கப்படுவதை உணர்கிறாள்.. அன்பைப் பொழிந்து அதற்கு ஈடு செய்கிறாள்..இன்னும் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்..

கொஞ்சம் அக்கம்பக்கமும் பாருங்கள்.. சின்ன புன்சிரிப்பு.. ஒரு வரியிலேனும் விசாரிப்பு!!.. ஆஹா!.. மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்!..

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்..

3 கருத்துகள்:

 1. /// சக மனிதர்களிடம் சிந்தும் ஒரு புன்னகை, நம் வாழ்வின் போக்கையே மாற்றி விடும் வல்லமை மிக்கது ///

  கண்டிப்பாக... பல முறை அனுபவித்துள்ளேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி டிடி சார்!..

   நீக்கு
 2. சின்னக்கதையில் பெரிய விஷயம்."ஹாய் என்று சொல்லி சிரி" என்று பொருள் கொள்ளும் படியான கொரியன் பழமொழி ஒன்று என் கொரியன் நண்பர் ஒருவர் அடிக்கடி உபயோகிப்பார்.

  ஹாய், சிரி என்ற இந்த ிரண்டு ஈரெழுத்து மந்திரத்தை சக மனிதரிடம் உச்சரித்தாலே நாம் எதையும் சுலபமாக வெல்லலாம்.

  நல்ல கதையை தந்தமைக்கு பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு