புதன், 11 ஜூன், 2014

THIDEER VIRUNTHINARGALAI SAMALIKKA!..திடீர் விருந்தினர்களை சமாளிக்க!


போன பதிவு ரொம்ப சீரியசா ஆகிட்ட மாதிரி எனக்கே ஒரு ஃபீலிங்... அதனால இப்ப கொஞ்சம் லைட்டா பாக்கலாம்..

'வீட்டுக்கு விருந்தாளிங்க வந்தாலே பெரிசு'ன்னு இருக்கற காலத்துல' இப்படியொரு பதிவாங்கறீங்களா... நிஜம் தான்.. ஆனாலும் வந்தா என்ன செய்யறதுன்னு கொஞ்சம் யோசிக்கலான்னு தான்.. ஏன்னா பெரும்பாலான இல்லத்தரசிகள் வேலைக்கும் போறாங்க.. முன்னறிவிப்பில்லாம 'திடும் திடும்'னு வந்து நிக்கற விருந்தாளிகள சமாளிக்கறது நிஜமாவே கொஞ்சம் திணறலான வேலை தான்!..ஆனா, முடியும்னு நினைச்சா, முறையா திட்டமிட்டு வேலை செஞ்சா எதையும் சமாளிக்கலாம் தானே!1.முதல்ல வீட்டு சுத்தத்த பத்தி பாக்கலாம்.. என்னதான் விழுந்து விழுந்து வேலை செஞ்சாலும், சில சமயம், விருந்தாளிகள் வர்றப்ப  தூசி படிஞ்ச டிவி.. துண்டு விரிஞ்ச சோபா, பேப்பர் கலைஞ்ச டீப்பாய் இதெல்லாம் காட்சிப் பொருளா ஆகுது பாருங்க.. இதெல்லாம் கொஞ்சம் ட்ரை பண்ணா சரி பண்ணலாம்.. அதாவது, ஒவ்வொரு நாள் ஒவ்வொரு பொருள் க்ளீன் பண்ற மாதிரி வச்சுக்கிட்டீங்கன்னா பரவாயில்ல. குறிப்பா, வரவேற்பறை அல்லது ஹால், வாரம் ரெண்டு தடவையாவது சுத்தம் பண்ற மாதிரி அட்டவணை போட்டுக்கங்க.. வார இறுதி க்ளீனிங்னு வச்சா, வெளி வேலை ஏதாவது வரும்.. அல்லது நமக்கே கொஞ்சம் சோம்பேறித்தனம் வந்துரும்!.. அது மாதிரி, துண்டு.. இத்யாதில்லாம் சோபால போடவே கூடாதுன்னு கண்டிப்பா ஆர்டர் போட்டுடுங்க.. 

வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும், வீடு முழுக்க ஒரு பார்வை பாக்கற பழக்கம் வச்சுக்குங்க.. குறிப்பா, வரவேற்பறை, சமையலறை எல்லாம்.. இதெல்லாம் கலைஞ்சு இருக்கற பொருட்களை சரி பண்ண உதவுறதோட, வீட்டுல நாம இல்லாத நேரத்துல, என்னெல்லாம் நடந்துருக்குன்னு நமக்கு சொல்லாம சொல்லிரும்!

2. எப்பவும் எக்ஸ்ட்ரா பால் பாக்கெட் ஒண்ணு ஃப்ரிஜ்ஜூல இருக்கற மாதிரி பாத்துக்கங்க..பக்கத்துல கடைகள்  இல்லாத இடத்துல இருந்தீங்கன்னா இது ரொம்பவே முக்கியம்!..

3.ரவை, சேமியா, அவல் மாதிரி சாமான்களை உபயோகிச்சு, ஈஸியா செய்ற ரெசிபிகள கைவசம் வச்சிருங்க.. அவல் உப்புமா, சேமியா கேசரில்லாம் பத்து பதினஞ்சு நிமிஷத்துல செஞ்சிடலாம்..

4.ஸ்நாக்ஸ் ஐட்டம் வீட்டுல வச்சிருந்தா கவலையேயில்ல.. ஆனா வந்தவங்க.. வெளில வாங்கினதெல்லாம் சாப்பிடுவாங்களான்னு கேட்டுட்டு கொடுங்க..

5.கூல்ட்ரிங்க்.. கடைல வாங்குறத விடவும் நாமே தயாரிக்கறது பெட்டர்..லீவு நாள்ல செஞ்சு ஃப்ரிஜ்ஜூல வச்சு, குறைஞ்சது ஒரு வாரம் உபயோகிக்கலாம்.

6. விருந்தினர்களோடு, அவங்க‌ குழந்தைகள் வந்தா கொடுக்கறதுக்கு சாக்லேட், பிஸ்கட் இருக்கணும்!..

ஆச்சா!.. இப்ப விருந்தினர்கள் வந்ததும் முக்கியமா செய்ய வேண்டியது (உங்களுக்குக் கட்டாயம் தெரிஞ்சிருந்தாலும்) என்னென்னன்னு கொஞ்சம் பாக்கலாம்!.

7. விருந்தினர்களுக்கு இன்முகத்தோட வரவேற்பு தாங்க.. டிவிய, கம்ப்யூட்டர அணைங்க.. அவங்களுக்கு நாம முக்கியத்துவம் தர்றோம்ங்கறது மனப்பூர்வமா நாம செய்ற ஒவ்வொரு செயல்லயும் தெரியணும்.. வேண்டா வெறுப்பா செய்றது முகத்துல வெளிப்படையா தெரிஞ்சிடும் பாத்துக்கங்க..

8.  வருந்தினர்களை வரவேற்று, அவங்க அமர்ந்ததும், அவங்களுக்குக் குடிக்க தண்ணீர் தரணும்.. இதுல நிறைய விஷயங்கள் அடங்கி இருக்கு!...(அதுவே ஒரு பெரிய பதிவாயிரும்!)  . ரெண்டு நிமிஷம் அவங்களோட பேசிட்டு,  'இதைக் குடிக்க/சாப்பிட தருகிறேன்'ன்னு சொல்லிட்டு, அவங்க சொல்றத கேளுங்க..கவனம், 'தரவா'ன்னு கேக்கக் கூடாது.. 'தரேன்'ன்னு தான் சொல்லணும்..

9.அவங்க விருப்பத்துக்குத் தகுந்தபடி, உணவு பண்டங்களைத் தாங்க..ஒரு ரெண்டு மூணு தடவை சொல்லிப் பாக்கலாம்.. ரொம்பவும் வற்புறுத்தறதும் தப்பு..

வீட்டுக் குழந்தைகளை அழைச்சு, வந்திருக்கறவங்க யாரு, என்ன உறவுன்னு சொல்லி அறிமுகப்படுத்துவது ரொம்ப முக்கியம்.. குழந்தைகள் வீட்டுக்கு வர்றவங்களை 'வாங்க'ன்னு அழைக்க பழக்கப்படுத்துவது ரொம்பவே முக்கியம்!..

10.பெண்கள் வந்தாங்கன்னா அவங்களயும் உள்ளே கூட்டீட்டுப் போயி, அவங்க கிட்ட பேசிட்டே வேலை செய்யலாம்..கூடுமானவரை அவங்க வேலைல உதவி செய்ய முன்வந்தா நாசூக்கா தவிர்க்கறதே நல்லது.

11. விருந்தினர்கள் கிளம்பும் போது அவங்க வருகைக்கு நன்றி சொல்லுங்க.. திரும்பவும் வந்து கொஞ்சம் கூடுதல் நேரம் இருக்கணுன்னும் சொல்லுங்க.. பெண்களுக்கு தாம்பூலம் தந்து வழியனுப்புவது நல்லது.. நான் எப்பவுமே வெற்றிலை, பூ, ஒண்ணு ரெண்டு கிஃப்ட் ஐட்டங்கள் அல்லது நானே தைச்ச அம்மன் பாவாடை எல்லாம் கைவசம் வச்சிருப்பேன்!!!!..

12.முக்கியமா ஏதாவது விசேஷத்துக்குக் கூப்பிட வந்தாங்கன்னா..விசேஷத்துக்கு நீங்க வர்றதப் பத்தி சொல்லுறதோட நிக்காம, விசேஷம் நல்லபடியா நடக்க உங்க வாழ்த்துக்களையும் பிரார்த்தனைகளையும் தெரிவிங்க..

13. விருந்தினர்கள், ந‌ம் இல்லத்தில் தங்குகிற  திட்டத்தோடு வந்திருந்தாங்கன்னா.. உங்களால முடிஞ்ச வசதிகளைச் செய்து கொடுங்க..  இருப்பதைக் கொண்டு, என்ன முடியுமா அதை சமைங்க!....ஆடம்பரமான வசதிகளை விடவும், ஆத்மார்த்தமா செய்கிற உபசாரங்கள் போதும்..உங்க அன்பான அணுகுமுறை, அவங்க மனசுல உங்களுக்கு ஒரு நிரந்தர இடத்தை ஏற்படுத்தி கொடுக்கும்!!..

நிறைவா ஒண்ணு சொல்லியே ஆகணும்!.. தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களைத் தவிர, நீங்க திடீர் விருந்தாளிகளா ஆஜராகிறதைத் தவிர்க்கப்  பாருங்க‌.. குறைந்த பட்சம் ஒரு போன் கால் செய்து, நாம் வருவதைச் சொல்லி விடுவது பல விதத்திலும் நல்லது!!!!!!

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

8 கருத்துகள்:

 1. அருமையான அழகான மிகவும் பயனுள்ள அறிவுரைகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  //தரவான்னு கேட்கக்கூடாது. தரேன்னுதான் சொல்லணும்//

  மிகவும் ரஸித்தேன். ;)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அருமையான கருத்துரைக்கு மிக்க நன்றி!..

   எல்லாம் சொந்த அனுபவந்தான்... திருமணமான புதிதில்,வீட்டுக்கு வந்த உறவினரிடம் 'காபி தரட்டுமா?!' என்று கேட்கப் போய் வாங்கிக் கட்டிக் கொண்டேன்.. அப்புறம் தான் தெரிந்து கொண்டேன்,'தருகிறேன்' என்று சொல்ல வேண்டும் என்று.

   நீக்கு
 2. நல்ல யோசனைகள்... அன்பான அணுகுமுறை என்றும் தொடர வைக்கும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் ரொம்ப நன்றி டிடி சார்!

   நீக்கு
 3. தினம் சுத்தம் செய்யும் கடமை. வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் சேர்ந்து செய்தால் இல்லறம் நல்லறம் ஆகும். குழந்தைகளை நன்றாகப் பழக்கவேண்டும். சில இடங்களில் நாம் போகும் முன்னரே குழந்தைகளை வெளியே அனுப்பிவிடுவார்கள். அடாவடியாக ஏதாவது பேசிவிடப் போகிறதே என்று பயம். இங்கே. நீங்கள் கொடுத்திருக்கும் குறிப்புகள் அத்தனையும் மணியான யோசனைகள்.தண்ணீர் முதலில் கொடுக்க வேண்டும் என்பதைப் பாட்டி காலத்திலிருந்து சொல்லிக் கேள்வி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் முதல் வருகைக்கும் அருமையான கருத்துரைக்கும் ரொம்ப நன்றி வல்லிம்மா!..ஆமாம்!.. முதலில் தண்ணீர் கொடுப்பதால், அவர்கள் தாகம் தணியும்..சிலர் நம்மீது எதன் காரணமாகவாவது கோபம் கொண்டிருப்பார்கள்.. வேண்டா வெறுப்பாக நம் இல்லம் வர வேண்டிய சந்தர்ப்பமாக இருந்திருக்கும்.. அவர்கள் மனம் ஓரளவு சாந்தப்பட தண்ணீர் தருவது உதவும்.. இன்னும் ஆன்மீகக் காரணங்கள் இருக்கு!..

   நீக்கு
 4. ஆலோசனை பெண்களுக்கு மட்டும் தானா, ஆண்களுக்கு இங்லையா.திடீர் விருந்தினராக நாம் செல்ல நேரும் போது குடிக்கவோ சாப்பிடவோ ஏதாவது கையோடு கொண்டு பொகலாம்.

  முதலில் தண்ணீர் தருவதைப்பற்றிகொஞ்சம் விரிவாக அறிய தாருங்களேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோதரரே!..ஆமாம், ஆண்கள் இல்லத்தில் இருந்தாலும், விருந்தினரை உபசரிப்பது பெண்களின் பங்கு தானே அதிகம் இருக்கிறது.. அதனால் பெண்களுக்கு கொஞ்சம் அதிக ஆலோசனைகள்.. ஆண்களும், இல்லத்தை சுத்தம் செய்வது முதலான செயல்களில் உதவலாம் இல்லையா..

   நீங்கள் சொன்ன யோசனை என்னைப் பொறுத்தவரை சரியென்று தோன்றுகிறது.. நாம் பொதுவாக யார் வீட்டுக்குச் சென்றாலும் ஏதாவது வாங்கித் தான் போகிறோம்.. எனக்குத் தெரிந்தவர் ஒருவர், யார் வீட்டுக்குச் சென்றாலும் பால் பாக்கெட், ஸ்நாக்ஸ் வாங்கிக் கொண்டே செல்வார்..அதனால் அவருக்கு 'பால் பாக்கெட் மாமா' என்றே பெயர் வந்துவிட்டது!...அவர் மறைந்த பின், மிகப் பல உறவினர்கள், இதைக் குறிப்பிட்டதோடு, அது மிக சௌகரியமான நடைமுறை என்றும் சொன்னார்கள். ஆனால், பொதுவாக, விருந்தினர் வாங்கி வருவதை அவருக்கே அளிக்கும் வழக்கம் கடைபிடிக்கப்படுவதில்லை!.. சில இடங்களில் அது கொஞ்சம் சங்கடப்படுத்தக் கூடிய விஷயமாகவும் கருதப்படுகின்றது.. ஏன் என்று தெரியவில்லை!..

   தண்ணீர் விஷயம் பற்றி, சீக்கிரம் பதிவிடுகிறேன்.. தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி!.

   நீக்கு