வெள்ளி, 18 ஜூலை, 2014

PAADI UNAI THOZHUTHEN PARINTHENAKKU ARULE!..பாடி உனைத் தொழுதேன் பரிந்தெனக்கு அருளே!

ஆடி வெள்ளியில் அன்னையைப் போற்றுவோம்!

நாடி தினந்துதிக்கும் அன்பர் மனத்தினுள்ளே
ஆடி வரும் அழகே அண்டம் நிறை ஒளியே!
கோடி வினை அறுக்கும் ஞானப் பெருங்கனலே!
பாடி உனைத் தொழுதேன் பரிந்தெனக்கு அருளே!

கண்ணின் மணி நீயே! கருணைக் கடல் நீயே!
பெண்ணின் வடிவாகி பேணும் சுடர் நீயே!
மண்ணும் விண்ணுமாகி மலரும் எழில் நீயே!
எண்ணில் உருவானாய் எந்தன் துணை நீயே!அண்டம் முழுதானாய் ஆதிக்கும் தாயானாய்!
கண்டம் கறுத்தானின் ஒரு பாகம் நீயானாய்!
சண்டையிடும் மனதை சன்னதியில் நிறுத்திடுவாய்!
கொண்ட குறை தீர்ப்பாய் குவலயத்தின் மாதரசே!

நாவில் உன் நாமம் நாளும் கமழ்ந்திடவே
வாவா வென அழைத்தேன் வந்து வரமருளே
சாவா நிலையதனை வேண்டேன் சந்ததமும்
மூவா மருந்துன்னை துதித்திடவே பிறந்திடுவேன்

நற்றாய் நீயென்று நாளும் நினைத் தொழுது
பொற்றா  மரைக் குளத்தில் மூழ்கித் தவமியற்றி
வற்றா உன்னருளை வேண்டித் தினந் துதித்தேன்
சற்றேனும் மனமிரங்காய் மதுரை வளர் கோகிலமே!

மாளா முன் வினையால் மதியிழந்தேன் மஹாமாயே! 
தாளா துயரடைந்தேன் தஞ்சம் என உனையடைந்தேன்
மூளா கனல் மூட்டி முன்வினையை சுட்டெரிப்பாய்
வாளா விருப்பதென்ன வையகத்தின் நாயகியே

('மின் தமிழ்' குழுமத்தில் ஆடி ரதம் ஆரம்பமாகி விட்டது.. அதற்காகவும், ஆடி வெள்ளியை முன்னிட்டும் எழுதிய கவிதை).


நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

4 கருத்துகள்: