திங்கள், 21 ஜூலை, 2014

YENTHA NAALUM POTTRIDUVEN!!......எந்த நாளும் போற்றிடுவேன்!

சொந்தமென்று வந்தவர்க்கும் சிந்தையிலே வைத்தவர்க்கும்
சந்ததமும் உந்தன் பதம் தந்தருளும் கந்த குகா!

முந்தி வரும் நொந்த வினை பந்தகற்றி, பரிந்தருளும்
செந்தில்வளர் விந்தையுனை எந்தநாளும் போற்றிடுவேன்!

வேலை எடுத்தேவி வினை தீர்க்குமொரு குருபரனே!
கோல மயில்மீது வரும்  சண்முகனே சரவணனே!
பாலவடி வானதொரு பூரணமே! அரன் மகனே!
மூலமுழுதாகி வரும் முத்தமிழே! அருள்குகனே!

ஆறு படை வீடு கொண்ட அந்தமில்லா பொன்னெழிலே!
மாறு கொண்ட சூரன் வலி வாங்கியருள் தண்ணருளே!
ஏறு முகமான ஒரு வாழ்வருள்வாய் பைந்தமிழே!
வேறு கதி யாதெமக்கு பொழிந்திடுவாய் உன்னருளே!

சொற்றமிழால் நித்தநித்தம் பாடி வரும் அடியவரின்
பற்றறுத்து பதமருளி, சித்தமெல்லாம் அருள்நிறைத்து
முற்றுணர்ந்த ஞானியரின் நிலையதனை கூட்டுவிப்பாய்!
வெற்றி மயில் மீதமர்ந்து வெற்புறையும்  விண்ணரசே!!

தேவர் சேனை வெல்ல ஒரு வேலெடுத்து போர் புரிந்தாய்!
தேவசேனை மனம் மகிழ மணம் புரிந்து அருள் சுரந்தாய்!
தேவ தேவ உன்னை நித்தம் போற்றிடவே வாழ்வளித்தாய்!
தேவர் மூவர் யாவருக்கும் ஒரு தலைவ! பணிந்திடுவேன்! 

துள்ளி வரும் வேலழகும் தண்டையொலி பதமழகும்
வள்ளி மனம் கொண்டருளும் கந்தனவன் வடிவழகும்
அள்ளி வரும் அருளழகும் ஆனந்தப் பொழிலழகும்
தள்ளி விடும் வினையதைனை! தளிரடிகள் போற்றுவமே!


ஆடி கிருத்திகையை ஒட்டி, 'மின் தமிழி'ல் 'ஆடி ரத'த்தில் இழுக்கவென எழுதிய பாடல்!!..

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

6 கருத்துகள்: