வியாழன், 11 செப்டம்பர், 2014

PAATTUKKORU BARATHI!....பாட்டுக்கொரு பாரதி!...


இன்று பாரதியார் நினைவு நாள்!.. மின் தமிழ் கூகுள் குழுமத்தில் இன்று நான் எழுதிய இரங்கற்பா உங்கள் பார்வைக்காக!...

பாரதத்தாய் பலகாலம் பொறுத்துத் தவமிருந்து
வாராத மாமணியா பெத்தெடுத்த புத்திரரே!
கூரான வார்த்த கொண்டு குடி காக்க வந்தவரே!
ஊரான ஊர் பாக்க  ஓடி நீயும் போனதென்ன!


சாட்டையா வந்து நின்னு சாடுதய்யா ஒம் பாட்டு!
வேட்டைக்கு வந்து நின்ன வெள்ளையன வெரட்டிருச்சு!
கோட்டைக்கு ராசாவா பொறந்தாலும்  ஒசத்தியில்ல‌!
பாட்டுக்கு  ராசா நீ!..பறிகொடுத்து நின்னோமே!

தாவாரம் வந்து நின்னா தாங்காத பாவமுன்னு
ஏவாரம் பேசுனத எதுத்து கேட்டு அரவணைச்ச‌
பூவாரம் சூட்டி ஒரு பொழுதேனும் பார்க்கலையே!
சேதாரம் வந்துருச்சே  பாவி சனம் எங்க போவோம்!

முண்டாசு கட்டிக்கிட்டு முறுக்கி வுட்ட மீசையோட‌
கண்டாலே கோடி சனம் கவலையெல்லாம் மறந்திருமே!
கொண்டாடும் நாளிருக்கு கோமகனே ஒன்னக் காணோம்!
துண்டான மனசெல்லாம் துயரச் சும அழுத்துதய்யா!.

குயிலுங் கிளியு வந்து கூடி நின்னு அழுவுதய்யா!
குருவியுங் காக்கையு இனமென்னு புலம்புதய்யா!
அருவி போல ஒம் பாட்டு!.. அத வுடவும் ஒம் பேச்சு!.
ஒரு தொணையா நீயிருந்த ஒன்ன வுட்டு இருப்பதெங்கே!.

வாழுகிற நாள் முழுசும் வறுமையில துடிச்சதென்ன‌!
பாழுமிந்த ஒலகம் ஒன்ன தள்ளி வச்சு பார்த்ததென்ன‌!
ஆழமான சமுத்திரத்த போலழுதோம் கேக்கலையோ!
கோழ (ழை) கூட‌ வீரனாக குரல் கொடுத்த மகராசா!.

தங்கு தடை இல்லாம கவித‌ சொன்ன கோமகன‌
கங்கு வந்து சுட்டதென்ன கலங்கி நாங்க‌ நிற்பதென்ன‌!
தங்க ராசா ஒங்கதய முடிச்சமுன்னு எமனிருக்கான்!
எங்க குலம் உள்ளவர எங்க நெஞ்சில் நீயிருப்ப!.
-----பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

7 கருத்துகள்:

  1. பாட்டுக்கொரு புலவர் பாரதி பற்றி அருமையான ஆக்கம்..பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. மிக்க அழகான புனைவு. நீயும் கவிதாயினியோ. ஸந்தோஷமாயிருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப நன்றி அம்மா!.. கவிதாயினி என்றெல்லாம் சொல்வதில்லை.. அம்பிகை கருணையில் எழுதுகிறேன் அம்மா!....

      நீக்கு
  3. அருமையான கவிதை..வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு