'இலக்கிய வேல்' இதழில் வெளிவந்த என் கட்டுரை இது!.. இங்கே உங்கள் பார்வைக்காக...இதனை வெளியிட்ட 'இலக்கிய வேல்' மாத இதழுக்கு என் மனமார்ந்த நன்றி!.
'ஊத்துக்காடு வேங்கடகவி' என்று புகழ்பெற்ற, மகான் ஊத்துக்காடு வேங்கடசுப்பையர், அற்புதமான பல பாடல்களை இயற்றியவர்..இவரது காலம், கி.பி.1700 முதல் 1765 வரை என்று கணிக்கிறார்கள்.
சிறு வயது முதலே, இசை, நாடகம் முதலியவற்றில் ஆர்வமும் திறமையும் இருந்தாலும், அவருக்கு சரியான குரு அமையவில்லை..தம் ஊரிலிருந்த கிருஷ்ணர் கோயிலில், இறைவன் சன்னிதி முன்பாக அமர்ந்து, தானாகவே பாடத் தொடங்கினார்..அப்போது ஸ்ரீ கிருஷ்ணர் அவர் முன்பு தோன்றி அனுக்கிரகித்தார்..
வேங்கடகவிக்குப் பார்வைக் குறைபாடு இருந்ததாகவும், கண்ணன் அவர் முன் தோன்றிய பின்னர், அவர் வேறெதையும் காண விரும்பாமல், கண்ணனின் காற்சலங்கை ஒலியைக் கேட்டே, ஸ்ரீ கிருஷ்ணரின் நடனத்துக்கு ஏற்பவே அவர் கிருதிகளை இயற்றியதாகவும் சொல்கிறார்கள்...ஆகவே அவரது கிருதிகளின் வரிகள் ஜதிகளுக்கேற்ப அமைந்திருப்பதைப் பார்க்கலாம்..
இப்போது அவர் எழுதிய பாடலொன்றின் சொல்லழகையும் பொருளழகையும் நாம் பார்த்து, நாம் ஆனந்திக்கலாம்.
குழலூதி மனமெல்லாம் கொள்ளைகொண்ட பின்னும்
குறை ஏதும் எனக்கேதடி சகியே
(குழலூதி)
அழகான மயிலாடவும் - மிக மிக
அழகான மயிலாடவும்
காற்றில் அசைந்தாடும் கொடிபோலவும்
அகமகிழ்ந்து இலகும் நிலவொளி தனிலே
தனைமறந்து புள்ளினம் கூவ
அசைந்தாடி மிக இசைந்தோடி வரும்
நலம் காண ஒரு மனம் நாட
தகுமிது என ஒரு பதம் பாட
தகிட ததிமி என நடமாட
கன்று பசுவினமும் நின்று புடைசூழ
என்றும் மலரும் முக இறைவன் கனிவோடு
(குழலூதி)
மகர குண்டலம் ஆடவும் - அதற்கேற்ப
மகுடம் ஒளி வீசவும்
மிகவும் எழில் ஆகவும் - காற்றில்
மிளிரும் துகில் ஆடவும்
(அகமகிழ்ந்து இலகும் நிலவொளி தனிலே...)
(குழலூதி மனமெல்லாம்...)
இந்தப் பாடல் நாயகி பாவத்தில் பாடப்பட்டதாகக் கொள்ளலாம்..'சகியே!!' என தோழி ஒருத்தி, தன் தோழியை அழைத்து, கண்ணன் குழலூதி, தன் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட விதம் பற்றிச் சொல்லுகிறாள்..
நம் கண் முன் அழகான காட்சி விரிகிறது...
பிருந்தாவனம்!!....அங்கே ஒரு அழகிய,தெய்வீகத் திருக்காட்சி!!.....
கோபாலன் குழலூதிக் கொண்டிருக்கிறான்.!!!!!!!..
கண்ணனின் குழலூதுவது யாருக்காக?!!..நமக்காகவல்லவா!.. பவசாகரத்தில் தத்தளிக்கும் நம்மைக் கரையேற்றும் பொருட்டல்லவோ கோபாலன் குழலூதுகிறான். வேணுகானத்தின் சிறப்பை, ஆழ்வார்களும் ஆசாரியர்களும் பரக்கப் பேசியுள்ளார்கள்..
முன் நரசிங்கமது ஆகி அவுணன்
முக்கியத்தை முடிப்பான் மூவுலகில்
மன்னர் அஞ்சும் மதுசூதனன் வாயிற்
குழலின் ஓசை செவியைப் பற்றி வாங்க
நன் நரம்பு உடைய தும்புருவோடு
நாரதனும் தம் தம் வீணை மறந்து
கின்னர மிதுனங்களும் தம் தம்
கின்னரம் தொடுகிலோம் என்றனரே(பெரியாழ்வார் திருமொழி)..
வேணு, வம்ஸீ, முரளி ஆகிய மூன்று வகைப் புல்லாங்குழல்களின் வழியாக, ஸ்ரீ கிருஷ்ணர், தம் கானாம்ருதத்தைப் பொழிவதாக, புராணங்கள் கூறுகின்றன.
ஸ்ரீகிருஷ்ணரின் வம்ஸீ வகைப் புல்லாங்குழலுக்கு மஹாநந்தா அல்லது சம்மோஹினி என்று பெயர். புவனமுழுதையும் வசப்படுத்தும் ஸ்ரீகிருஷ்ணரின் புல்லாங்குழல் ஓசையே அனைத்து வேத மந்திரங்களுக்கும் மூலமாகத் திகழ்கிறது.
அத்தகைய குழலோசையினால் மனமெல்லாம் கொள்ளை கொண்டான் கண்ணன் என்கிறாள் நாயகி...இங்கு 'மனமெல்லாம்' என்று சொல்லியிருப்பது ஆழ்ந்து பொருள் கொள்ளத் தக்கது.. மனதை மட்டுமல்லாது, ஆன்மாவையுமல்லவா ஸ்வீகரித்து தன்னோடு இருத்திக் கொண்டான் கோபாலன்!!!!.. மானிடப் பிறவி எடுத்ததன் பயனல்லவோ கிடைத்து விட்டது!!!....இதன் பின்னே குறையேது?!!....
இப்போது, கண்ணன் குழலூதும் போது, தோன்றும் காட்சிகளை விவரிக்கிறாள் நாயகி!..
கண்ணனின் குழலோசையைக் கேட்டு, அழகான மயில் ஆடுகிறதாம்..மயில், மேகத்தைக் கண்டால் ஆடும்!..கார்மேக வண்ணனான கண்ணனின் குழலோசை, மயிலை ஆட்டுவிக்கிறது..கண்ணனின் கருணையில் விளைந்த கானாம்ருதத்தால் நம் மனமும் ஆனந்தித்து ஆடுகிறது..
கொடி, காற்றில் அசைந்தாடுகிறதா?!..இல்லை.. கண்ணனின் குழலோசை கேட்டு, மகிழ்ந்தல்லவா அசைகிறது!!...
இதை வேறொரு விதமாகவும் கொள்ளலாம்!.. கொடி,காற்றினால் அசைந்தாடுகிறது!.. கொடி அசைந்தாட, காற்று காரணமாவது போல், கண்ணனின் குழலோசை, நாம் நம் பிறவிப் பயன் அடையக் காரணமாகிறது!.. அதற்காகவன்றோ குழலூதுகிறான்!..
தண்ணிய நிலவொளியில், கண்ணனின் குழலோசையைக் கேட்ட பறவைக் கூட்டங்கள், தம்மை மறந்த நிலையில் ஆனந்தத்தால் குரலெடுத்துக் கூவுகின்றன...
இவ்விதம் கண்ணன், குழலூதும் நலம்(பாங்கு)ஒன்றே காணத்தகும் என்றுணர்ந்து, அதைக் கண்டோர் அனைவரும் மகிழ்ந்து, ஆனந்தத்தால் ஆடுகின்றனர்.. பசுக்கூட்டம் கண்ணனைச் சூழ்ந்து கொண்டு, அவன் கானாம்ருதத்தினால் வசமிழந்து நிற்கிறது!..
கோபாலன், ஆநிரைகளை மட்டுமல்ல, நம் ஆன்மாக்களையுமல்லவா மேய்த்துக் கரையேற்றுகிறான்!!...'பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது' என்பது ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரின் திருமொழியல்லவா!!...தன் குழலோசையால் அகிலத்தையே வசப்படுத்திவிட்டான் அந்த கோவிந்தன்!!...
என்றும் மலர்ந்த முகத்தினை உடையவன் கண்ணன்.. இருமைகள் தொடாதவனல்லவா இறைவன்!... அவனுக்கு விருப்பு வெறுப்பு ஏது?!.'சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை ஒத்திருக்கும் முகம்' என்கிறார் கம்பர்..ஆகவே, 'என்றும் மலரும் முக இறைவன் கனிவோடு' என்கிறாள் நாயகி!..கனிவோடு, நம் மீது கொண்ட கருணையால் குழலூதுகிறான் கோபாலன்!!...
இப்போது, கண்ணனின் திருவுருவம் குறித்துச் சொல்கிறாள் நாயகி!.. கண்ணன் குழலூதும் போது, அவன் திருச்செவிகளில் அணிந்திருக்கும் மகர குண்டலங்கள் அழகுற அசைந்தாடுகின்றன. அவனது உன்னதமான மணிமகுடம் ஒளி வீசுகிறது!..அவன் அணிந்திருக்கும் ஒளிவீசும், மென்மையான (துகில்) பட்டாடைகள் காற்றில் அழகுற அசைந்து ஆடுகின்றன.. மிக எழிலான காட்சி இது!.. இதை விட அழகு வேறு ஏது?!!...அழகு என்ற சொல்லின் பொருளெல்லாம் மீறிய காட்சியல்லவோ இது?!!...
முதலில் பிருந்தாவனம், கண்ணன் குழலூதும் பாங்கு, அங்கு இருக்கும் அனைத்துயிரினமும் கண்ணன் இசையால் வசப்படுதல், நிறைவாக கண்ணனின் திருவடிவம் என்று காட்சிப்படுத்துகிறாள் நாயகி!...
இவ்விதம் தண்ணிய நிலவொளியில், என்றும் மலர்ந்த முகத்தினனாக, கண்ணன் குழலூதும் அழகைக் காண்பதல்லவோ கண்கள் பெற்ற பயன்!!...இவ்வாறு சொல்வதன் மூலம், முப்போதும் இறைவனின் திருவடிவை, உள்ளத்தில் இருத்துதலே நம் கடன் என்று சொல்லாமல் சொல்கிறாள் நாயகி!..
இவ்விதம் தண்ணிய நிலவொளியில், என்றும் மலர்ந்த முகத்தினனாக, கண்ணன் குழலூதும் அழகைக் காண்பதல்லவோ கண்கள் பெற்ற பயன்!!...இவ்வாறு சொல்வதன் மூலம், முப்போதும் இறைவனின் திருவடிவை, உள்ளத்தில் இருத்துதலே நம் கடன் என்று சொல்லாமல் சொல்கிறாள் நாயகி!..
இப்படி, கோபாலன் குழலூதி, தன்னை பிறவிப் பயன் அடையச் செய்தான் என்று நாயகி பாடுவதாகப் பாடுகிறார் மகான் வேங்கடகவி!.. தன்னையே நாயகியாகக் கருதிக் கொண்டு, கசிந்துருகிப் பாடுகிறார்!இதைப் பாடும் போது, நம் மனமும் ஆனந்தப் பரவசம் எய்துகிறது!.. நம் மீதும், கண்ணன் கருணையைப் பொழிவான் என்ற உறுதி ஏற்படுகிறது!.. மனக்கண் முன், பிருந்தாவனக் காட்சியை ஓவியமாகத் தீட்டி, நம்மை பக்திப் பரவசத்தில் ஆழ்த்தும் இந்த அற்புதப் பாடலை பாடி, பக்தி செய்வோம் வாருங்கள்!..
நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!..
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்..
படங்களுக்கு நன்றி: கூகுள் படங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக