புதன், 28 ஜனவரி, 2015

PITHTHAM THELIYA MARUNTHONDRIRUKKUTHU..பித்தந் தெளிய மருந்தொன்றிருக்குது!..



'இலக்கிய வேல்' இதழில் வெளியான என் கட்டுரைகளில் ஒன்று இங்கு உங்கள் பார்வைக்கு....கட்டுரையை வெளியிட்ட, 'இலக்கிய வேல்' மாத இதழுக்கு என் மனமார்ந்த நன்றி!.

பித்தந்தெளிய மருந்...

ராகம் : செஞ்சுருட்டி
தாளம் : ரூபகம்

பல்லவி

பித்தந்தெளிய மருந்தொன்றி ருக்குது 
பேரின்பமன் றுள்ளே 

அநுபல்லவி

மற்ற மருந்துகள் தின்றாலும் உள்ளுக்கு 
வல்லே வல்லோஐயே அடிமை  [பித்தந்] 

சரணம்

பாம்பும்புலியு மெய்ப்பாடுபட்டுத் தேடிப்பார்த்துப் பயிரிட்டது 
பாரளந்த திருமாயனும் வேதனும் பார்த்துக் களித்துண்டு 
பார்வதி யென்றொருசீமாட்டி யதில்பாதியைத் தின்றதுண்டு இன்னும் 
பாதியிருக்கு பறையாநீயும் போய்ப்பாரென்றுத் தாரந்தாருந்தீரும்  [பித்தந்]

பத்துத்திசையும் பரவிடப்படர்ந்தாலும் பார்த்துப் பிடியாரே 
தத்திக்குதிக்குந் தாளங்கள் போடுந்தண்டை சிலம்பு கொஞ்சும் 
தித்திக்குந் தேனோ செங்கரும்போநல்ல சித்தமுடையார்க்கே என் 
சித்தத்தைக் கட்டியிழுக்குது அங்கேசென்றால்போதுங் கண்டால்  தீரும்  [பித்தந்]

ஊரைச்சொன்னாலும் இப்பாவந் தொலையும் ஊழ்வினை யூடறுக்கும் 
பேரைக் கொண்டாடிப் புலம்புகிறார்வெகு பேர்களுக்குப் பிழைப்பு 
சாருநரை திரைதீர்க்கு மருந்து சாதியைப் பாராதுஇன்னம் 
தீராதநோய்கள் படைத்த எனக்குத்தீரும் தீருஐயே அடிமை  [பித்தந்]

இந்தப் பாடலை எழுதியவர், திரு.கோபாலகிருஷ்ண பாரதியார்... தமிழ் கூறும் நல்லுலகில் அவதரித்து, இலக்கியப் பணி ஆற்றிய பெரியோர்களில் முக்கியமானவர் இவர்.. தம் தமிழிசையால் சிவபக்திச் செல்வத்தை வளர்த்த மகான் இவர். 

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகைய்யரின் சமகாலத்தவரான  கோபாலகிருஷ்ண பாரதியார், தஞ்சை மாவட்டம், நரிமணம் என்ற ஊரில் பிறந்தார். நந்தனார் சரித்திரம், காரைக்காலம்மையார் சரித்திரம், நீலகண்ட நாயனார் சரித்திரம், முதலிய பல நூல்களை இயற்றினார். இவற்றுள், நந்தனார் சரித்திரம், ஒரு சங்கீத கதா காலட்சேபமாகவே இன்றளவும் நடத்தப்பட்டு வருகிறது.

இப்போது பாடலைப் பார்க்கலாம்...

'பித்தா பிறைசூடி' என்று சுந்தரர் பெருமான் போற்றித் துதிக்கும் தென்னாடுடைய சிவபிரானின் அடியார்களில் ஒருவரான திருநாளைப் போவார் நாயனாரின் (நந்தனார்) சரித்திரத்தில் வரும் பாடல்களில் ஒன்று இது.. 

பக்தர்கள் அன்பால் இறைவனைப் 'பித்தா' என்று அழைப்பதுண்டு.. ஆனால், இங்கோ, மன்னுயிர்களின் தீராத பித்தம் குறித்தும் அதற்கான மருந்து குறித்தும் அற்புதப் பாடல் தந்திருக்கிறார் கோபாலகிருஷ்ண பாரதியார்..

முதல் வரியைப் பாருங்கள்..

பித்தந் தெளிய மருந்தொன்றிருக்குது..

மன்னுயிர்களுக்கு என்ன விதமான பித்துப் பிடித்திருக்கிறது?!...     'இவ்வுலகம் நிலையானது, இவ்வுலக இன்பமே என்றும் நிலைப்பது' என்று எண்ணி, 'கண்டதே காட்சி, கொண்டதே கோலம்' என்ற நினைப்பில், இறைவனை மறந்து, மனம் போன போக்கில் வாழும் பான்மை, இவ்விடம் 'பித்து' என்ற சொல்லால் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று கொள்ளலாம்.. 

'அரிது அரிது மானிடராதல் அரிது' என்கிறார் ஔவை.. கிடைத்தற்கரிய மானிடப்பிறவி எடுத்ததன் பலனறியாது, இறை நாம மகிமை உணராது வாழ்வது வீணல்லவா?!.. அவ்வாறான மதி மயக்கத்தை தீர்க்கும் மருந்து எது?!.. இறைவன் திருவடி நாடுதலே அதற்கான மருந்து..

 பிறப்பற்ற நிலையே பேரின்பம்..  மன்னுயிர்களின் பேரின்பமாவது இறைவனோடு ஐக்கியமாகும் முக்திப்பேறு பெறுதலே!...இறைவனை நாடி, இடைவிடாது பக்தி செய்வோருக்கே பேரானந்தம் கிட்டும்!....ஆக, இறைவனை நாடுதலே மெய்யான மருந்து.. மற்ற மருந்துகள் எல்லாம்,  உலகப் பற்றாகிய‌ புத்தி மாறாட்டத்தை தீர்க்க வல்லவை அல்ல..

காரிட்ட ஆணவக் கருவறையில் அறிவற்ற
     கண்ணிலாக் குழவியைப்போற்
   கட்டுண் டிருந்தஎமை வெளியில்விட் டல்லலாங்
     காப்பிட் டதற்கிசைந்த
பேரிட்டு மெய்யென்று பேசுபாழ்ம் பொய்யுடல்
     பெலக்கவிளை யமுதமூட்டிப்
   பெரியபுவ னத்தினிடை போக்குவர வுறுகின்ற
     பெரியவிளை யாட்டமைத்திட்
டேரிட்ட தன்சுருதி மொழிதப்பில் நமனைவிட்
     டிடருற உறுக்கி இடர்தீர்த்
   திரவுபக லில்லாத பேரின்ப வீட்டினில்
     இசைந்துதுயில் கொண்மின்என்று
சீரிட்ட உலகன்னை வடிவான எந்தையே
    சித்தாந்த முத்திமுதலே
  சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே
    சின்மயா னந்தகுருவே (தாயுமானவ ஸ்வாமிகள்).

நந்தனார், தம்மிடம் இருக்கும் உலகப் பற்றாகிய பித்தை நீக்கும் மருந்தாகிய எம்பிரானை,  தில்லைக்குச் சென்று தரிசிக்க ஏங்குகிறார்.. தாம் போய் வர,  உத்தரவு தருமாறு வேதியரை வேண்டிப் பாடுகிறார்...

பேரின்பத் திருவுருவாகிய எம்பிரானின் சிறப்புகளை எடுத்துக் கூறி, அத்தகைய பிரானை, 'தில்லை சென்று தரிசித்து வா' என்று தமக்கு உத்தரவு இடுமாறு வேதியரை வேண்டுகிறார்..

எத்தனை அழகுற உரைக்கிறார் பாருங்கள்..

பாம்பும்புலியு மெய்ப்பாடுபட்டுத் தேடிப்பார்த்துப் பயிரிட்டது 
பாரளந்த திருமாயனும் வேதனும் பார்த்துக் களித்துண்டு 
பார்வதி யென்றொருசீமாட்டி யதில்பாதியைத் தின்றதுண்டு இன்னும் 
பாதியிருக்கு பறையாநீயும் போய்ப்பாரென்றுத் தாரந்தாருந்தீரும் 

பாம்பும் புலியும் என்றது பதஞ்சலி முனிவரையும் வியாக்ரபாத மஹரிஷியையும்...ஆதிசேஷன், நடராசப் பெருமானின் திருநடனம் காண வேண்டுமென ஸ்ரீமஹாவிஷ்ணுவிடம் பிரார்த்தித்து, அவரது அருளாணையின் படி கயிலை நாதனை நோக்கித் தவமிருக்க, சிவபிரானும், 'தில்லையில், வியாக்ரபாத மஹரிஷியும், என் திருநடனம் காணத் தவமிருக்கிறார். அங்கே நீயும் சென்று தவமிருப்பாயாக, உரிய நாளில் உங்கள் இருவருக்கும் எமது திருநடனம் காணும் பேறு கிட்டும்' என்றருளினார். ஆகவே, பூவுலகில், அத்ரி முனிவருக்கும், அனுசூயா தேவிக்கும், 'பதஞ்சலி' என்ற திருநாமத்துடன் மகவாக அவதரித்து, தில்லையில் நடராசப் பெருமானின் திருநடனம் காணக் காத்திருந்தார் ஆதிசேஷன்.

'புலிக்கால் முனிவர்' என்று போற்றப்படும் வியாக்ரபாத மஹரிஷி, எம்பெருமான் பூஜைக்காக, மரங்களில் ஏறி பூக்களைப் பறிக்க வேண்டி, புலியின் கால்களையும், விழிகளின் தீட்சண்யத்தையும், சிவபிரானின் அருளால் பெற்றவர்…

ஆதிரைத் திருநாளில், எம்பிரானின் திருநடனக் காட்சியைக் காணும் பேறு பெற்றனர் முனிவர்கள் இருவரும்.

இதையே,'பாம்பும்புலியு மெய்ப்பாடுபட்டுத் தேடிப்பார்த்துப் பயிரிட்டது ' என்றார்.

திருமாலும் பிரமனும் எம்பெருமானது திருவடியையும் திருமுடியையும் தேடிக் கண்டைய முடியாமல் போக, அதன் பின், தம் தனிப்பெருங்கருணையால், எம்பிரான், தம் திருவுரு காட்டி அருளியதை, 'பாரளந்த திருமாயனும் வேதனும் பார்த்துக் களித்துண்டு' என்றார்.

சிவபிரானின் திருவுடலின் சரிபாதி  பார்வதி தேவிக்குரியது.. ஆணும் பெண்ணும் சமம் என்பதை உலகுக்கு உணர்த்த வேண்டி, அர்த்தநாரீஸ்வரத் திருக்கோலத்தில் காட்சி அருளுகின்றனர் அம்மையும் அப்பனும்.. அதையே 'பார்வதி யென்றொருசீமாட்டி யதில்பாதியைத் தின்றதுண்டு ' என்றார். . 'பார்வதி தேவி, இறைவனது இடப்பாகத்தில் எழுந்தருளியிருப்பதால், வலப்பாகம் இறைவனுக்குரியதாகிறது.. அதையே, ' இன்னும் பாதியிருக்கு ' என்றார்..இறைவனது ஒரு பாகத்தை இறைவி ஆட்கொண்டாள். மறுபாகம், பக்தருக்குரியது ('இறைவனோ தொண்டர்தம் உள்ளத்தொடுக்கம்==ஔவை'). ‘அதைத் தரிசிக்க‌  வேண்டுமாயின் ,தில்லையம்பதிக்குச் சென்று இறைவனைக் காண்பாயாக' என்று கூறி, தமக்கு தில்லை செல்ல உத்தரவு தருமாறு வேதியரை வேண்டுகிறார் நந்தனார்.

இறைவன் எல்லா இடத்திலும் நிறைந்தருள்புரிகிறான். ஆயினும், மனதை உள்முகமாகத் திருப்பி, இறைவன் திருவடிகளை இடைவிடாது பற்றிப் பிடித்து, தியானித்து, அகக்கண்ணில் இறைவனது அருட்காட்சி காணும் பேறு பெற்றோர் மிகச் சிலரே.. இதையே,' பத்துத்திசையும் பரவிடப்படர்ந்தாலும் பார்த்துப் பிடியாரே' என்கிறார்..

தில்லையில் திருநடனம் புரிந்த சிவபிரானின் திருவடிகள் தத்திக் குதித்து நடனம் ஆடுகின்றன. அந்தத் திருநடனத்திற்கு, திருவடிகளில் அணிந்திருக்கும் தண்டையும் சிலம்பும் தாளங்கள் போடுகின்றன.. அத்தகைய திருவடிகளை உடைய எம்பிரான், நல்லோர் இதயங்களுக்கு தேனும் செங்கரும்பும் போல இனியவன். யோகமார்க்கத்தில், ஒரு குறிப்பிட்ட நிலையில், இறைவன் திருவடிகளிலிருந்து எழும் சிலம்போசையைக் கேட்கின்றார்கள் யோகிகள்.

ஆடிய பாதம் நின்றாடிய பாதம்
பாடிய வேதங்கள் தேடிய பாதம்
நல்லவர் எல்லாம் நயக்கின்ற பாதம்
நாத முடிவில் நடிக்கின்ற பாதம் (இராமலிங்க அடிகள்)

தில்லைக்குச் சென்று, பொன்னம்பலத்தில், தாம் செய்யும் ஐந்தொழில்களையும் தம் திருநடனத்தின் மூலமாக உலகுக்கு உணர்த்தும் இறைவனது திருவடிகளைக் கண்டால், தம் பிறவிப் பிணி தீரும் என்று உருகிப் பாடுகின்றார் நந்தனார்.

சாகா வரந்தந்த தாரகப் பாதம்
சச்சிதா னந்த சதோதய பாதம்
தேகாதி எல்லாம் சிருட்டிக்கும் பாதம்
திதிமுதல் ஐந்தொழில் செய்கின்ற பாதம் (இராமலிங்க அடிகள்)

'தில்லை' என்ற ஊரின் பெயரைச் சொன்னாலே, நாம் செய்த பாவம் தீரும். ஊழ்வினைத் தொடர் அறுபடும். அத்தகைய சிறப்புமிக்க தில்லையில் திருநடனம் செய்யும் இறைவனது பேரைத் துதித்து, கொண்டாடி, பக்தி மேலீட்டால் புலம்புகிறார்கள் பக்தர்கள்.. ஏனெனில், நரை, திரை முதலானவற்றால்  துன்புறும் மானிடர்களின் பிறவிப் பிணியைத் தீர்க்க உதவும் மருந்து இறைவனது திருவடிகளே!.. இறைவன் முன் எல்லோரும் சமம்..'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பது வள்ளுவர் வாக்கு.. அத்தகைய மருந்து தமக்குக் கிட்டினால், தம் தீராத பிறவிப் பிணி நீங்கும், ஆகவே, தமக்கு தில்லைக்குச் செல்ல உத்தரவு தர வேண்டும் என்று வேண்டுகிறார் நந்தனார்.

இதில், வேதியரிடம் நந்தனார் அடிமையாக ஊழியம் செய்வதைக் குறிக்கும் விதமாக, 'அடிமை' என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், கூர்ந்து கவனித்தால், அது 'எம்பிரானுக்கு அடிமை' என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டிருப்பது புலனாகும்.

இந்தப் பாடலில், புராணக் கருத்துக்கள், இறைத் தத்துவம், பக்தியின் மேன்மை எனப் பலவும் அற்புதமாக இணைத்துத் தரப்பட்டிருக்கிறது.. சிவநெறிச் செல்வரான கோபாலகிருஷ்ண பாரதியாரின் ஆழ்ந்த சிவபக்திக்கொரு சான்றாக இந்தப் பாடலைச் சொல்லலாம்!..

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

2 கருத்துகள்:

  1. பித்தம் தெளிய மருந்தொன்று இருக்குது என்ற பாடல் கோபாலக்ருஷ்ண பாரதி பாடலா !!
    என் அம்மா இந்தப் பாடலைப் பாடுவார்கள்.

    நினைவு இருக்கிறது.

    பதிவில் காணும் கருத்துக்கள் மெய் மறக்கச் செய்கின்றன.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துரை மிகுந்த உற்சாகமளிக்கிறது.. ரொம்ப நன்றி தாத்தா!..

      நீக்கு