வணக்கம் நண்பர்களே!!...நீண்ட நாள் ஆச்சு சந்திச்சு!!.. நலமா இருக்கீங்கன்னே நினைக்கிறேன்..
தமிழ் வாசல் குழுமத்துல, 'விலங்குகள்' ங்கற தலைப்புல வந்த இழையில், விலங்குகள் சம்பந்தப்பட்ட இலக்கிய நிகழ்வுகளைப் பகிர்ந்திருந்தோம்.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விலங்கு.., ஆசான் ஜீவ்ஸால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.. கீதாம்மா, 'மீன்' பத்தி ரொம்பவே அற்புதமாக எழுதியிருந்தாங்க... எனக்கு 'சிம்மம்' கிடைச்சுது... திரு. தமிழ்த்தேனீ அவர்கள், 'மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு' என்று தொடங்குமாறு சொல்லியிருந்தார்.. அவ்விதமே தொடங்கிய தொடர் பதிவின் பகுதிகளை இங்கே பகிர்கிறேன்!..
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு...பகுதி...1.
' மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு போதருமாப் போலே நீ பூவைப் பூவண்ணா!!!!!...' என்று ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார், சர்வ லோக ரக்ஷகனான பரமாத்மாவை, தான் அருளிச் செய்த திருப்பாவையில் புகழ்ந்து கொண்டாடுகிறாள்..
( மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்துஉறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து வேரி
மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துஉதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போருமா போலேநீ பூவைப்பூ வண்ணாஉன்
கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனத்துஇருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய். (திருப்பாவை)).
எப்படிப் புறப்பட்டு வந்தருள வேண்டுமாம் கண்ணன்?!..மழைக்கா லம் முடிந்த பின்னர், அதுவரையில் குகையினுள் உறங்கிய 'சீரிய சிங்கம்' , உறக்கம் கலைந்து எழுந்து, பகைவரை நடுநடுங்கச் செய்யும் கர்ஜனையுடன், கம்பீரமாகப் புறப்பட்டு வெளியில் வருவதைப் போல வரவேண்டுமாம்!!!...அவ்விதம் வந்த எம்பெருமான், 'சீரிய சிங்காதனத்தில்' அமர்ந்து அருள வேண்டுகிறாள் கோதை நாச்சியார். (திருப்பாவை உபநிஷத் பிரவாஹம் என்பார்கள் பெரியோர்.. இவ்விதம் கோதை நாச்சியார் அருளுவதற்கு, பல்வேறு சூக்ஷ்மார்த்தங்கள் இருந்தாலும், இங்கு நேரிடைப் பொருளே கொள்ளப்பட்டு இருக்கிறது...).
ஸ்ரீ நரசிம்மன், ஹிரண்யனுக்கு, 'சிம்ம சொப்பனமாக' விளங்கினான்.. ஆனால், பக்தர்களுக்கு காருண்ய மயமானவன். வரப்ரசாதி!. ஸ்ரீநரசிம்மரின் இவ்விரண்டு கல்யாண குணங்களையும், மேற்கண்ட, 'மாரி மலைமுழஞ்சில்' பாசுரத்தில் ஒருங்கே பிரசாதிக்கிறாள் கோதை நாச்சியார்.. .... 'தீ விழித்து' என்று கோபாக்னியைக் கக்கும் திருவிழிகள், கருணையால் நிரம்பினாலல்லவோ, 'கோப்புடைய சீரிய சிங்கா சனத்துஇருந்து யாம்வந்த காரியம் ஆராய்ந்து அருள' இயலும்!!!!..
விலங்குகளில், 'ராஜா' என்று சிறப்பிக்கப்படும் சிம்மத்தின் கம்பீரமும் நடையழகும் பெரும் சிறப்பு வாய்ந்தவை.. ஆண்டாள் நாச்சியார் 'மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு' வருமாறு கோருவதை, நம்மைப் போன்ற சாமான்யர்களுக்கும் அருளுவதற்கா கவே, அரங்கமா நகருளான், வைகுண்ட ஏகாதசி (திருமொழி) திருநாட்களி ன் போது, குகையிலிருந்து வெளிவரும் சிம்மத்தைப் போலவே, துவாரபாலகர்கள் வாசல் வழியே, சிம்மகதியிலே புறப்பட்டு வருகிறான். அரங்கன் வரும் அழகைக் காணக் கண் கோடி வேண்டும்... யோக மார்க்கத்தில் இது பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததென்று சொல்லப்படுகிறது.....
ஸ்ரீ நரசிம்ம வைபவத்தை, இங்கே சற்று தியானிக்கலாம்!.
பக்த சிரேஷ்டனான, பிரஹலாதனுக்கு அருள வேண்டி, மனித உடலுடனும், சிங்க முகத்துடனும் தோன்றிய, பகவானின் நரசிம்மாவதாரத்தின் ஏற்றத்தைச் சொல்லி முடிக்க, ஒரு ஜன்மா போதாது!.. ப்ரிய பக்தனின், உறுதியான வாக்கியத்தை மெய்ப்பிக்க வேண்டி, ஹிரண்யன் காட்டிய ஒரு தூணில் மட்டுமல்லாது, அனைத்துத் தூண்களிலும் ஆவிர்ப்பவித்தானாம் பரமாத்மா..ஸர்வக்ஞனாக இருந்த போதிலும், எந்தத் தூணை ஹிரண்யன் அடிப்பான் என்று தெரிந்த போதிலும், திடீரென வேறொரு தூணைத் தட்டினால், குழந்தை என்ன செய்வான்?!.. என்று எண்ணியே எங்கும் நிறைந்தவன், எல்லாத் தூண்களிலும் திருவுருக் கொண்டானாம்!!!!!.. பக்த வத்ஸலன், பக்தர்களிடம் கொண்டிருக்கும் வாத்ஸல்யம் அத்தகையது!..
( தொடரும்...).
நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!..
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக