''நாரசிம்ஹவபு: ஸ்ரீமான்' என்று, ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்திலே பீஷ்மர் துதிக்கிறார் பகவானை!.. பெரியோர்கள் அருளிய பொருளுரையின்படி, சஹஸ்ரநாமத்தின் முதல் மூன்று ஸ்லோகங்கள் மிக உயர்ந்த காயத்ரீ மந்திரத்தின் ஸாரம். அதில், ஸ்ரீ நரசிம்மரே துதிக்கப்படுகிறார்!.... நினைத் த பொழுதில், உடனடியாக எடுத்த அவதாரமென்பது, 'ஸ்ரீநரசிம்மாவதார'த்தின் ஏற்றம்!...
எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய
சிங்கப்பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே?! ( நம்மாழ்வார்).
இதனை, 'பரிவுடன் எடுத்த அவதாரம்' என்பர் பெரியோர்!..
உக்ர ஸ்வரூபனாக எடுத்த அவதாரம் எப்படி பரிவுடன் எடுத்ததாக ஆயிற்று?!!!...பிரஹலாதனைக் காப்பாற்ற வேண்டுமென்பதற்காக என்று மட்டும் சொல்லுதல் கடினம்.. பல்வேறு வகையாகத் துன்பங்கள் தந்தான் ஹிரண்யன் தன் புதல்வனுக்கு..தோன்றாத் துணையாக, அப்போதெல்லாம் கூட இருந்தே ரட்சித்தான் எம்பெருமான்..ஆனால், ஹிரண்யனை முடிக்க வேண்டுமென்கிற போது, அவனுக்கு வரம் கொடுத்த பிரம்மாவின் வாக்கு பொய்க்கக் கூடாதென்ற பரிவாம் அவனுக்கு!.. அது பொய்யாகப் போனால், பின் பெரும் உற்பாதங்கள் விளையும் என்பதாலேயே பகவான், ஹிரண்யன் கேட்ட பிரகாரமே, மனித உடலும் சிம்மத்தின் முகமும் கொண்டு அவதரித்தான்...
நரசிம்ம அவதார நிறைவிலும், எவராலும் எதிர்கொள்ள முடியாத, பகவானின் கோபாக்னியை, 'பிரஹலாத ஸ்துதி' அல்லவோ குளிர்வித்தது!!!!!!....' பகவான் நமக்குச் செய்தவற்றுக்கு, பிரதியாக நம்மால் என்ன செய்ய இயலும்?!..என்று அயர்தல் பக்தனுக்கு இயல்பு.. ஆனால் இங்கோ, பகவான் இவ்விதம் அருள்கிறான் !!!!!!!!.
உந்தையை உன்முன் கொன்று, உடலைப் பிளந்து அளைய,
சிந்தை தளராது, அறம் பிழையாச் செய்கையாய்!
அந்தம் இலா அன்பு என் மேல் வைத்தாய்! அளியத்தாய்!
எந்தை! இனி இதற்குக் கைம்மாறு யாது?" என்றான்.
'"அயிரா இமைப்பினை ஓர் ஆயிரம் கூறு இட்ட
செயிரின் ஒரு பொழுதில், நுந்தையை யாம் சீறி,
உயிர் நேடுவேம்போல், உடல் அளைய, கண்டும்
செயிர் சேரா உள்ளத்தாய்க்கு, என் இனி யாம் செய்கேம்? ( இரணியன் வதைப் படலம்.. கம்ப இராமாயணம்).
உன் தந்தையை, நான் கொன்றும் கூட, என் மேல் முடிவில்லாத பேரன்பு வைத்தாயே!!!.. உனக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்?! என்றருள்கிறான் உலகெலாம் ஈன்ற தந்தை!!!!!!!...
(தொடரும்..).
நண்பர்கள் அனைவருக்கும், என் மனமார்ந்த தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!....
நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!..
அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக