திங்கள், 9 மே, 2016

MOORI NIMIRNTHU MUZHANGI PURAPPATTTU.. PART...3...மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு...பகுதி..3.​


பகவான், இவ்வுலகில் நமக்காக என்னதான் செய்யவில்லை?!... தன் குழந்தைகள், தன்னை மட்டுமே நாடி, தன்னிடம் வந்து சேருவார்கள் என ஒவ்வொரு கணமும் காத்திருக்கிறான்!!!!... சங்கதத்தில் ஒரு ஸ்லோகம் உண்டு..
சாஸ்த்ரம் பூரிகுணஸ்வரூபமதயே ஸ்வாராதனார்த்தம் வபு:
தத் த்யானாய மனஸ்ச புத்திமனகாம் க்ஷேத்ரம் ச தீர்த்தான்யபி |
தத்த்வான்யப்யுபதேஷ்டும் உத்தமகுரூன் தத்வா அனுக்ருஹ்ணாதி ய:
ஸம்ஸாரே ததபி ப்ரமேய யதி கிம் குர்வீத ஸர்வேச்வர: ||

இதன் பொருள், சுருக்கமாக....பகவானின் ஸ்வரூபத்தை அறிந்து கொள்ள சாஸ்திரத்தையும், அவரை பூஜிக்க சரீரத்தையும், அவரை தியானிக்க மனதையும், செய்த பாபங்கள் விலக புண்ணிய தீர்த்தங்கள், க்ஷேத்திரங்களையும், தத்துவார்த்தங்களை உபதேசிக்க ஆசார்யர்களையும் பகவான் நமக்குக் கொடுத்த போதிலும், இதில் மனதைத் திருப்பாமல், உலகியலிலேயே சதா உழன்று கொண்டிருந்தோமானால், அவன்   என்ன தான் செய்யட்டும்???.

ஆக, பகவான்,  நாம் அவனை அடைய வேண்டும் என்பதற்காகத் தந்தவற்றை, துர்விநியோகம் செய்தால், என்னவாகும் என்பதற்கு   உதாரணமாக ஹிரண்யனையும், பகவான் தந்தவற்றை, முறையாக, அவன் காட்டிய வழியில் பயன்படுத்தினால், எத்தகைய உத்தமமான கதி கிடைக்கும் என்பதற்கு உதாரணமாக‌  பிரஹலாதனையும் நாம் பார்க்கலாம்..

உத்தம பக்தன் பிரஹலாதன்..அவனது பக்தி அசஞ்சலமானது..ஸ்ரீமத் பாகவதத்தில், 'பிரஹலாத ஸ்துதி', பக்தர்களால் போற்றிக் கொண்டாடப்படுகிறது...

நரசிங்கப் பெருமான், ஹிரண்ய வதம் நிறைவடைந்ததும், பிரஹலாதனைப் பார்த்து, 'இஷ்டமான வரங்களைக் கேள்' என்றதும், பிரஹலாதன் பதில், இவ்விதம் வருகிறது!!!!!

'எவன் தங்களிடம், தன் ஆசைகளின் பூர்த்தியை வேண்டுகிறானோ அவன் பக்தனல்லன். அவன் வியாபாரியே!.. நான் ஆசையற்ற உமது பக்தன். நீரும் ஒன்றும் வேண்டாதவர். நம்மிடையில் வேறுவிதமான பயனுக்கு இடமில்லை..'.

பிரஹலாதனின் மறுமொழி மிக அற்புதமாக வெளிவருகிறது கம்பரின் கைவண்ணத்திலும்!!

“‘முன்பு பெறப் பெற்ற பேறோ முடிவு இல்லை;
பின்பு பெறும் பேறும் உண்டோ? பெறுவேனேல்
என்பு பெறாத இழிபிறவி எய்திடினும்
அன்பு பெறும் பேறு அடியேற்கு அருள் “ என்றான்.!!!

நரசிங்கப்பெருமான், பிரஹலாதனை, தன் மடி மீது அமர்த்தி, பட்டாபிஷேகம் செய்ததாலேயே, இன்றளவும் அரசர்கள், அமர்ந்து கோலோச்சும் இருக்கைக்கு, 'சிம்மாசனம், சிங்காசனம்' என்றெல்லாம் பெயர் ஏற்பட்டது என்கிறார்கள்.. சிங்காதனத்தின் இரு புறமும், சிங்க உருவங்கள் செதுக்கப்பட்டிருக்கும்.நரசிங்கப் பெருமானைத் தொழுவோருக்கு அசாத்தியமானதென்பதேயில்லை!.. பிரஹலாத வரதப்ரியன், பக்தர்களுக்கு இரங்கும் கருணா சமுத்திரம்...

உன்னைச் சிந்தைசெய்துசெய்துன்நெடுமாமொழியிசைபாடியாடிஎன்
முன்னைத்தீவினைகள்முழுவேரரிந்தனன்யான்,
உன்னைச்சிந்தையினாலிகழ்ந்த இரணியன் அகல்மார்வங்கீண்ட,என்
முன்னைகோளரியே, முடியாததென்னெனக்கே?..( நம்மாழ்வார்).

ஸ்ரீநரசிம்ம வைபவம், எத்தனை விவரித்தாலும் விவரித்துக் கொண்டே இருக்கத் தோன்றும் பெருமை வாய்ந்தது.....அளவில்லாத ஆனந்தமே அது!..

அண்ணனுக்குப் பின், தங்கை அல்லவா?!..சிம்மவாஹினியான ஸ்ரீ துர்க்கையின் வைபவத்தையும், சிம்ம வாஹனத்தின் சிறப்பையும் அடுத்த பகுதியில் பார்க்கலாம்...  

(தொடரும்..).

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக