வெள்ளி, 18 அக்டோபர், 2013

NAVARATHIRI KAVITHAIGAL.. PART 9... நவராத்திரி கவிதைகள்... பகுதி..9 ஆரத்தி எடுப்போம்!!


பாடலை, கீழ்க்கண்ட லிங்கில், உயர்திரு.சுப்பு தாத்தாவின் குரலில் கேட்டு மகிழலாம். மத்யமாவதி ராகத்தில் அருமையாகப் பாடியிருக்கிறார். அவருக்கு என் உளமார்ந்த நன்றிகள்..
 
பல்லவி:
முத்து பச்சை கெம்பு ரத்ன பவள ஆரத்தி..
முழுமுதலே  உனக்கெடுப்போம் தீப ஆரத்தி..(முத்து)

அனுபல்லவி:

இரு தீபம் நெய்யில் ஏற்றி இலங்கு மஞ்சள் நீரும் இட்டு
இரு வினைகள்  தீர்ந்திடவே  எடுத்திடுவோம் ஆரத்தி..(முத்து)

சரணம்;
1.தேவி மஹா துர்க்கையளும் திருநிறைந்த மலர்மகளும்
கலை அருளும் வாணியளும் கொலுவிருக்கும்  நாளிதுவே
புவி மிசையில் மன்னுயிர்கள் புகழோடும் நிறைவோடும்
பொங்கும் அன்பு நலத்தோடும்  வாழ வேண்டும் தேவியரே!!  (முத்து)

2.பைரவியே பார்க்கவியே பாரதியே போற்றிடுவோம்!!
பாரினிலே ஒளி நிறைய ஏற்றிடுவோம் ஆரத்தி!
மங்களங்கள்  பாடிடுவோம் மனம் மகிழ்ந்து வாழ்த்திடுவோம்!!
மறுவருடம் வர வேண்டி எடுத்திடுவோம் ஆரத்தி!!  (முத்து)

இந்த வருட நவராத்திரி கவிதைகள் இனிதே நிறைவுற்றன..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!
படத்துக்கு நன்றி; கூகுள் படங்கள்..

வியாழன், 17 அக்டோபர், 2013

NAVARATHIRI KAVITHAIGAL.. PART 8.. நவராத்திரி கவிதைகள்..8.. பிராம்மி!!

 

சப்தமாதர்களின் முதலாவது தேவியான 'பிராம்மி' தேவியைக் குறித்த பாடல்...

ஆக்கும் தொழில் செய்யும் அன்பன் நாவில் உறைபவளே
அகிலம் முழுதும் உயிர்கள் படைக்கும் சக்தி தருபவளே
பிரம்ம தேவன் சக்தி பிராம்மி எனும் என் தாயே
பிள்ளை வரம் தந்தே பெரு மகிழ்ச்சி தருவாயே

நான்கு திருமுகங்கள், நான்கு திருக்கரங்கள் கொண்டு
நாளும் அன்னமதில் நடை பழகி வருபவளே
நலமருள் ஜபமாலை, கமண்டலமும் தரிப்பவளே
நல்லோர்க் கப‌யம் தந்து வரம் பலவும் தருபவளே

அம்பிகை திருமுகத்தில் தோன்றி வந்த பிரம்மாணி
அழகாய் பீதாம்பரம் அணிந்தருளும் ஜடாதாரணி
அன்னை உன் பெருமை சொல்ல சொல்ல இனிமையம்மா
அடியாள் அறியேனே அன்பு செய்து அருள்வாயம்மா

மான் தோல் தரித்து வந்து மா ஞானம் தருபவளே
மறதி நீக்குகின்ற மஹா சக்தி தேவியளே
மன்னுயிர் காக்கும் மாதா மண்டலத்தைக் காப்பவளே
மலரடி தொழுதேனே  மனக் குறைக‌ள்  தீர்ப்பாயே!!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்..

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

NAVARATHIRI KAVITHAIGAL.. PART 7..நவராத்திரி கவிதைகள்.. பகுதி 7 ..ஸ்ரீ மாஹேஸ்வரி

சப்த மாதர்களுள் ஒருவரான ஸ்ரீமாஹேஸ்வரி தேவியைக் குறித்த பாடல்...

ருத்ரனின் சக்தியே ருத்ராணி தேவியே
ரிஷபத்தின் மீதிருந்தருள் தரும் சூலியே
ரௌத்ரி, மகேசி, மாஹேஸ்வரி மாயே
ர‌க்ஷித்தருள்வாயே நானும் உன் சேயே

வெள்ளைக் கலையுடுத்தி வந்தருளும் தாயே
வடகிழக்கு திக்கின் அதிபதியும் நீயே
கரம் நான்கில் சூலம், மான், மழு, கபாலம்
கனிந்தருளும் விழி மூன்றும் கொண்டவள் நீயே

கற்றைச் சடைமுடியில் சந்திரன் துலங்க
பற்றை அழித்தருளும் புன்னகை இலங்க‌
இற்றை பொழுதினிலே எழுந்து நீ வருவாய்
 ஒற்றை வழிப் பிறவி நோயதனைத் தீர்ப்பாய்

பக்தர் தம் மனத்திருக்கும் உக்ரமதை நீக்கி
பல நலனும் தரும் சாந்தம் உள்ளமதில் தேக்கி
பனி நிகர் குணமளித்து பல கலையும் அருள்வாய்
பார் புகழும் வாழ்வளித்து பதமலரும்  தருவாய்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்..

புதன், 16 அக்டோபர், 2013

NAVARATHIRI KAVITHAIGAL. PART 5, நவராத்திரி கவிதைகள்.. பகுதி 5. திருமகளே வளமருள்க...

பொன்னும் மணியும் தந்திடுவாய் நீ
பொலிவும் புகழும் தந்திடுவாய்.
எண்ணில் இன்பம் தந்திடுவாய் நீ
ஏழ்மை விலகச் செய்திடுவாய்.

விண்ணும் மண்ணும் தினந்தொழுமே நீ
விழியசைத்தால் வரும் பொன்னகரே!
வீரம் தானம் தவமெல்லாம் நீ
விரும்பும் மனிதர் அடைவாரே!.

அருளது அமுதெனப் பெருக்கிடுவாய் நீ
பொருளது நிறைந்திட அருளிடுவாய்!
அகமதில் இலங்கிடும் நல்லொளியே நீ
சுகத்தினைத் தந்திடும் வெண்மதியே!

அலைமக‌ள் திருமகள் மலர்மகளே நீ
அழகுக்கு அழகெனத் திகழ்பவளே!
பவத்தினை தீர்த்திடும் பொன்னொளியே நீ
நவத்தினைத் தாண்டிய நல்லழகே!

ஆதியும்  அந்தமும் உன்னடியே நீ
ஆனந்த சொரூபிணி அம்பிகையே!
இன்னருள் தந்திடும் பொன்மயிலே நீ
சொன்னதும் வந்திடும் நவநிதியே!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்..

செவ்வாய், 15 அக்டோபர், 2013

NAVARATHIRI KAVITHAIGAL.. PART 6, நவராத்திரி கவிதைகள்.. பகுதி 6, கும்பிடுறோம் மாரியம்மா!!!

'சக்தி ரதம்' இழுக்க வந்த ஒரு கிராமியப் பாடல்...



இந்தப் பாடலை, உயர்திரு.சுப்பு தாத்தா மிக அருமையாக, கிராமிய மெட்டில் பாடி, அவருடைய வலைப்பதிவில் வெளியிட்டிருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த நன்றி. பாடலைக் கேட்க, கீழ்க்கண்ட  காணொளியைச்  சொடுக்கவும்..

 


 தன் வலைப்பூவிலும், இந்தப் பாடலை வெளியிட்டிருக்கிறார் தாத்தா... அந்த லிங்கைக் கீழே கொடுத்திருக்கேன்.


மாரி மாகாளி மதுர காளி அங்காளி!!
மானங் கூரையாக ஆட்சி செய்யும் வெக்காளி!!
 எந்திருச்சு வாருமம்மா எங்க மொகம் பாருமம்மா!!
கும்பிடுறோம் மாரியம்மா கொறைகள நீ தீருமம்மா!!

வேம்பே ஆடையம்மா வேல் விழியே வாருமம்மா!!
பாம்பும் குடை பிடிக்க பாக்கியவதி பாருமம்மா!!
பம்பையது ஒலிக்குதம்மா உடுக்க சத்தம் ஓங்குதம்மா!!
கம்பங் கூழ் காச்சி வச்சோம் காத்தாயி வாருமம்மா!!

தட்டுல பழங்க வச்சோம் தார் தாரா வாழ(ழை) வச்சோம்!!
தாம்பாளம் நெறைய பூவும் தங்க மஞ்சளுஞ் சேர்ந்து வச்சோம்!!
குங்குமத்துக் காரியே நீ கொலுவிருக்க வாருமம்மா!!
பொங்கலிட்டு படையலிட்டோம் புள்ளகளக் காருமம்மா!!

எலுமிச்சம் பழ மால எங்க ஊரு வெத்திலையும்!!
எட்டுக் கச புதுச் சேல வாங்கி வச்சோம் பத்தலையா?!!
ஏழ சனம் பாட வந்தோம் எங்க கொற தீருமம்மா!!
எட்டு வச்சு வாருமம்மா பொட்டழகி பாருமம்மா!!

 மொளைப்பாரி எடுத்து வந்தோம்  மான மழ பொழிய வேணும்!!
மாவிளக்கு ஏத்தி வச்சோம் மக்க பசி தீர வேணும்!!
தீச்சட்டி ஏந்தி வந்தோம் தீமைகள போக்கிடம்மா!!
பூ மிதிச்சு  வந்தோமம்மா பூச வச்சோம் ஏத்துக்கம்மா!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.