|| ஓம் நமோ பகவதே வாசுதேவாய : ||
ஸ்ரீமந் நாராயணீயத்தின் பெருமை எழுத்தில் வடிக்கத் தரமன்று. 'மோக்ஷ மந்திரம்' என்று புகழப்படும் மகிமை வாய்ந்த நூலான இது, ஸ்ரீ சுகப்பிரம்ம ரிஷியின் மறு அவதாரமாகப் போற்றப்பட்ட, ஸ்ரீ நாராயணபட்டத்திரியினால் இயற்றியருளப்பட்டது. 'ஸ்ரீமத் பாகவத ஸாரம்' என்று போற்றப்படும் இந்த நூல், ஒரு 'ஸர்வ ரோக நிவாரணி'யாகும். பட்டத்திரி, வாத நோயால் அவதியுற்றபோது, ஒரு ஜோதிடர் மூலமாக, ஸ்ரீ குருவாயூரப்பனின் மகிமைகளை விளக்கும் நூலை இயற்றினால் தன் நோய் நீங்கும் என அறிந்து, குருவாயூர்க் கோவிலில் அமர்ந்து, தினந்தோறும் பத்து ஸ்லோகம் (ஒரு தசகம்) வீதம், இந்த நூலை எழுதினார். இதை முடித்ததும், குருவாயூரப்பனின் பெருங்கருணையால் அவர் நோயும் நீங்கியது. இந்த நூலில் மொத்தம், நூறு தசகங்கள் அமைந்துள்ளன. கொடுத்து வைத்தவர்களே இந்நூலைப் படிக்க இயலும் என்று கூறப்படுகிறது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள, ஸ்ரீ க்ருஷ்ணாவதார வைபவம்,ஸ்ரீமந் நாராயணீயத்தில் 38 வது தசகமாக இருக்கிறது. பட்டத்திரி, ஸ்ரீமந் நாராயணனின் ஒவ்வொரு வைபவத்தையும்,லீலையையும் ஸ்ரீ குருவாயூரப்பனிடம் விண்ணப்பித்து, 'நீ அப்படிச் செய்தாயா?' என்று வினவ, ஸ்வாமியும், 'ஆமாம்' என்று ஒப்புதல் அளித்தார். சில லீலைகளை அவர் கண்முன் மீண்டும் நிகழ்த்திக் காட்டியதோடு, முடிவில், தனது வைகுண்டத் திருக்கோலத்தையும் காட்டியருளினார். ஆகவே, இந்நூல் முழுவதும், ஸ்ரீ குருவாயூரப்பனிடம் விண்ணப்பிக்கும் நடையிலேயே இயற்றப்பட்டுள்ளது.
இந்தக் கிருஷ்ணாவதார வைபவத்தை, அனுதினமும், ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மாவை மனமார நினைத்துத் துதித்துப் பாராயணம் செய்ய, குழந்தை பேறு கிட்டும். பாராயண முடிவில் பாலில் சர்க்கரையிட்டு நிவேதனம் செய்து, ஒரு துளிப் பாலை, ஸ்ரீ க்ருஷ்ண விக்கிரகத்தின் திருவாயில் தொட்டு வைத்துப் பின் பருக வேண்டும். ஒவ்வொரு தசகம் பாராயணம் செய்து முடிந்ததும் 21 முறை "நாராயண, நாராயண" என்று பக்தியுடன் உச்சரிக்க வேண்டும்.
அனைத்தும் ஸ்ரீ க்ருஷ்ணருக்கே அர்ப்பணம்.
ப்ராப்தே ப்ரதீப்த பவதங்க நிரீயமாணை:
காந்தி வ்ரஜைரிவ கநாகந மண்டலை: த்யாம்
ஆவ்ருண்வதீ விருருசே கில வர்ஷவேலா
"ஹே குருவாயூரப்பா, ஆனந்த மயமான வடிவுடையவனே!!, நீ அவதாரம் செய்யத் திருவுளம் கொண்டிருந்த நேரம் வந்த போது, வானம் முழுவதும் மழை மேகங்களால் மூடப்பட்டு இருந்தது. உனது நீல நிறமான திருமேனி நிறத்தைப் போலவே அந்த மேகங்கள் இருந்தன".
ஆசாஸிதாப்தி விவசேஷூ ச ஸஜ்ஜ நேஷூ
நைசாகர: உதயவிதௌ நிசி மத்யமாயாம்
க்லேசாபஹஸ்த்ரிஜகதாம் த்வம் இஹ ஆவிராஸீ:
ஹே, குருவாயூரப்பனே!!, மழை பொழிந்து எல்லா திசைகளும் குளிர்ந்து இருந்தது. நல்லோர். தம் எண்ணம் அனைத்தும் கைகூடுவதால் மகிழ்ந்திருந்தனர். இம்மாதிரியான மிக உன்னதமான நேரத்தில், நடு இரவில், சந்திரன் வானில் உதயமாகும் போது, இவ்வுலகில் உள்ள துன்பங்களை நீக்குபவனாக, ஸ்ரீ கிருஷ்ணனாக, நீ திருஅவதாரம் செய்தாய் அல்லவா?
3. பால்ய ஸ்ப்ருசாபி வபுஷா ததுஷா விபூதி:
உத்யத் க்ரீட கடகாங்கத ஹார பாஸா
சங்காரி வாரிஜ கதா பரிபாஸிதேந
மேகாஸிதேந பரிலேஸித ஸூதிகேஹே
"ஹே க்ருஷ்ணா!, நீ திருஅவதாரம் செய்த போது, குழந்தையாக இருந்த போதிலும், ஒளிவீசும் மணிமகுடம் தரித்தவனாக, தங்க கடகங்கள்(வளையல்கள்), தோள்வளை, ஹாரம் ஆகியவை விளங்க, சங்கு, சக்கரம், கதை, தாமரை மலர் ஆகியவற்றை தரித்த நீல மேக சியாமள வண்ணனாக இருந்தாய் அல்லவா?".
4.வக்ஷ:ஸ்த்தலீ ஸூகநிலீந விலாஸி லக்ஷ்மீ
மந்தாக்ஷ லக்ஷித கடாக்ஷ விமோக்ஷ பேதை:
தந்மந்திரஸ்ய கல கம்ஸ க்ருதாம் அலக்ஷ்மீம்
உந்மார்ஜயந்நிவ விரேஜித வாஸூதேவ
"ஹே க்ருஷ்ணா, திருமகளாகிய ஸ்ரீ மஹாலக்ஷ்மி, உனது திருமார்பில் மிகவும் சுகமாக அமர்ந்திருந்தாள். அவளது கடைக் கண் பார்வை இருள் சூழ்ந்த அந்தச் சிறைக்கூடத்தின் மேல் பட்டது. அதனால், அங்கு இதுவரை கம்ஸனின் கொடுங்கோன்மை காரணமாக ஏற்பட்டிருந்த அவலக்ஷ்மியின் ஆதிக்கம் அகன்றது. இப்படியாக, நீ அவதாரம் செய்த போது, மங்களகரமான சூழ்நிலை நிலவியது. நீ மங்களகரமாக இருந்தாய்".
தூரஸ்திதம் வபுருதீக்ஷ்ய நிஜேக்ஷணாப்யாம்
ஆனந்த பாஷ்ப புலகோத்கம கத்கதார்த்ர:
துஷ்டாவ த்ருஷ்டி மகரந்த ரஸம் பவந்தம்
"க்ருஷ்ணா!!, மஹா ஞானிகளான, முனிவர்கள் மனதாலும் அறிய முடியாத உனது திருமேனியை, வஸூதேவர் தன் கண்களால் காணும் பாக்கியத்தை அடைந்தார். அதன் காரணமாக, விழிகளில் ஆனந்தக் கண்ணீர் பெருக, மயிர்கூச்செறிய, நெஞ்சம் உருக, மிகுந்த அன்புடன் மகரந்த ரஸம் போன்றிருந்த உன்னைத் துதித்துத் தொழுதார்".
நிர்லூ நிதாத்ர ஸமநேத்ர கலாவிலாஸிந்
கேதாந பாகுரு க்ருபாகுருபி: கடாக்ஷை:
இத்யாதி தேந முதிதேந சிரம் நுதோ ஆபூ:
"தேவனே!, பரமபுருஷனே!, துன்பக் கொடிகளை அறுக்கும் வாள் போன்றவனே!, அனைத்துயிரையும் ஆள்பவனே!, உனது லீலைகளால் போற்றப்படக்கூடியவனே!, கருணை மிகுந்த உனது கடைக்கண் பார்வையினால், என் துன்பங்களை போக்கியருள்வாய்! " என்று நெடுநேரம் வஸூதேவர் உன்னைத் துதித்துத் தொழுதார்".
ஸ்தோத்ரை ரபிஷ்டுத குண:கருணாலயஸ்த்வம்
ப்ராசீநஜந்ம யுகலம் ப்ரதிபோத்ய தாப்யாம்
மாதுர்கிரா ததித மாநுஷ பால வேஷம்
"ஹே குருவாயூரப்பா!!, ஆனந்தக் கண்ணீரால் நனைந்த கொடி போல, உனது தாய் தேவகியும் உன்னைத் துதித்தாள். நீ, உனது தாய், தந்தையருக்கு, அவர்களது முந்தைய இரு பிறவிகளைப் பற்றிக் கூறினாய். (வஸூதேவரும், தேவகியும், முற்பிறவியில் தமது தவப்பலனாக, ஸ்ரீமந் நாராயணனை மூன்று பிறவிகளில் மைந்தனாகப் பெறும் பேறு பெற்றனர். அவர்களது முந்தைய இரு பிறவிகள், ப்ருச்நி + ஸூதபஸ், காச்யபர் + அதிதி). கருணைக் கடலான நீ, உனது தாய் உன்னிடம் வேண்டியவுடன், மானிடக் குழந்தையாக திருவுருக் கொண்டாய்".
8.த்வத் ப்ரேரிதஸ்ததநு நந்த தநூஜயா தே
வ்யத்யாஸ மாரசயிதும் ஸ ஹி சூரஸூநு:
த்வாம் ஹஸ்தயோரதித சித்த விதார்யம் ஆர்யை:
அம்போருஹஸ்த கலஹம்ஸ கிசோர ரம்யம்
"க்ருஷ்ணா!, அதன் பின், நீ வஸூதேவரை, உன்னை நந்தகோபரின் இல்லத்தில் சேர்ப்பிக்கும்படி பணித்தாய். உடனே, யோகிகளும் தங்கள் மனதில் வைத்துப் போற்றப்பட வேண்டியவரான வஸூதேவர், தாமரை மலரில் உறங்கும் அழகிய அன்னக் குஞ்சு போன்ற உன்னைத் தன் திருக்கரங்களில் ஏந்திக் கொண்டார்".
9.ஜாதா ததா பசுபஸத்மநி யோகநித்ரா
நித்ரா விமுத்ரிதம் அதாக்ருத பௌரலோகம்
த்வத் ப்ரேரணாத் கிமிவ சித்ரமசேதநைர்யத்
த்வாரை: ஸ்வயம் வ்யகடி ஸங்கடிதை: ஸூகாடம்
"க்ருஷ்ணா, உன்னுடைய திருவுள்ளப்படி, யோகமாயா தேவி, யசோதாதேவியின் கர்ப்பத்தில் ப்ரவேசித்து, கோகுலத்தில், திருஅவதாரம் செய்தருளியிருந்தாள். அங்குள்ள அனைவரும், அவள் சக்தியினால் உறங்கவைக்கப்பட்டிருந்தனர். கம்சனின் சிறைக்கதவுகளின் பூட்டுக்கள் தாமாகவே கழன்று, கதவுகள் தாமாகவே திறந்ததாமே!! என்ன வியப்பு!!".
10. சேஷேண பூரிபணவாரித வாரிணா அத
ஸ்வைரம் ப்ரதர்சிதபதோ மணிதீபிதேன
த்வாம் தாரயந் ஸ கலு தந்யதம: ப்ரதஸ்த்தே
ஸ: அயம் த்வம் ஈச மம நாசய ரோகவேகாந்
"குருவாயூரப்பா, அளவில்லாத புண்ணியவானான வஸூதேவர், உன்னை எடுத்துக் கொண்டு கோகுலத்திற்கு புறப்பட்டார். பெருமழை பொழிந்த அந்த நேரத்தில், ஆதிசேஷன் தன் படங்களை விரித்து உயர்த்தி, உனக்குக் குடை போல் பிடித்து, வஸூதேவருக்குத் தன் மாணிக்கம் மூலமாக செல்லும் வழியையும் காண்பித்தான். உன்னைத் தொடர்ந்தும் வந்தான். இப்படிப்பட்ட மகிமைகளை உடைய நீ என் பிணிகளை நீக்க வேண்டும்". ("நாராயண, நாராயண").
வெற்றி பெறுவோம்!!!
Quoting from Dheepam:
பதிலளிநீக்குஅஸ்மின் ப்ராத்மன் நனுபாத்மா கல்பே
த்வமித்தம் உத்தாபித பத்மயோனி
அநந்தபூமா மம ரோகராசிம்
நிருந்த்தி வாதாலய வாஸ விஷ்ணோ
- ஸ்ரீமத் நாராயணீயம்
பொருள்: பரமாத்மாவாக எங்கும் நிறைந்திருக்கும் ஸ்ரீகுருவாயூரப்பா! பத்ம கல்பத்தில் பிரம்மதேவனைத் தோற்றுவித்தவனும், அளவற்ற மகிமையுடையவனுமான நீ, எனது எல்லா வியாதிகளையும் நீக்கி ஆரோக்கியம் அருள வேண்டும்.
ஒரு சமயம் பக்தர் ஒருவர், காஞ்சி ஸ்ரீமகாபெரியவாளை நமஸ்கரித்து கண்ணீர் பெருக நின்றார். பெரியவா அவரைப் பார்த்து, என்ன ரொம்ப வலிக்கிறதா?” என்று கருணையுடன் கேட்டார். பிறகு, மேற்கண்ட ஸ்லோகத்தை எழுதிக் கொள்ளச் சொல்லி, தினமும் நூற்றி எட்டு தடவை இதைச் சொல், கவலைப்படாதே” என்று ஆறுதல் கூறி அனுப்பினார்.
ஆறு மாதங்கள் கழித்து, அந்த பக்தர் மீண்டும் கண்ணீர் மல்க, பெரியவாளை தரிசித்து சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.
நன்னாயிட்டியே” என்றார், அந்தக் கலியுக தெய்வம். அந்த பக்தர், ஆமாம் நன்னாயிட்டேன். மருந்து எதுவும் வேண்டாம் என்று டாக்டர்கள் சொல்லி விட்டார்கள்” என்றார் அவர்.
அந்த பக்தருக்கு வந்திருந்தது புற்று நோய். பகவானை நம்பி பிரார்த்தித்தால், நிச்சயம் பலனுண்டு என்பதை, இதன் மூலம் மீண்டும் நமக்கு உணர்த்தியிருக்கிறார் மகா பெரியவர்.
நான் இந்த ஸ்லோகத்தை எழுதி, எனக்குத் தெரிந்த யாருக்கேனும் (இப்போதுதான் இந்த நோய் அதிகமாகக் காணப்படுகிறதே) புற்றுநோய் என்று தெரிந்தால், அவர்களுக்குக் கொடுத்து, பெரியவா சொன்னதைக் கூறுகிறேன்.
- கலா மூர்த்தி, சென்னை
நன்றி – தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)
//Bhuvaneshwar said...
பதிலளிநீக்குQuoting from Dheepam://
தங்கள் வருகைக்கும், மேலதிகத் தகவல்களுக்கும் மிக்க நன்றி. தாங்கள் குறிப்பிட்ட நிகழ்வை நானும் படித்திருக்கிறேன். எடுத்துச் சொன்ன மேன்மைக்கு நன்றி.