செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

சுதந்திர கீதம்

 

பாரத தேசத்து ராஜாக்களாய்
எங்களை
ஆக்கிய
சிவப்பு ரோஜாக்களே...
நாங்கள் பட்டம் சூடிக்கொண்ட
இந்த சுதந்திர நாளில்
உங்களுக்கும்
மிச்சமிருக்கும் மகாத்மாக்களுக்கும்
வீர வணக்கம் செலுத்துகிறோம்!

நீங்கள்
யாவரும் ஜனித்திருக்காவிட்டால்
நாங்கள் இன்னும்
அடிமை வம்சமாகவே இருந்திருப்போம்!

அடிமை அறுபட
சுதந்திரம் துளிர் விட
சிதைந்த உயிர்
சரிந்த உடல்
எத்தனை! எத்தனை!!
இந்த ரத்த சரித்திரம் எழுத
யுத்த மரணம் எத்தனை!
இருந்தும்
"விடுதலையே சரணம்" மட்டும் ஒலித்தது
அத்தனை! அத்தனை!!

காந்தியும்
நேருவும்
செய்தது கொஞ்சமா!
கட்டபொம்மன் திப்புசுல்தான்
இவர்களுக்கு
இணை ஏதும் மிஞ்சுமா?

பரங்கியர் தலை உருள
பாரதி பாடிய பாடல் ஏற்றியது தீ!
நேதாஜி எழுப்பிய
குரலில்
சூடானது செங்குருதி!!

செக்கிழுத்து மடிந்து
மக்கிப்போன தவசி!
எங்கள் சொக்கத்தங்கம் வா.உ.சி!
தடியடிபட்டு
உயிர் விட்ட அமரன்!
எங்கள் கொடி காத்த குமரன்!

வாஞ்சி நாதனின்
நாத நோக்கம் சொல்ல வேண்டுமா?
வஞ்சி ஜான்சி ராணியின்
நெஞ்சுரம் வெல்லமுடியுமா?

பகத்சிங்கின்
பாரத பக்தி படிக்கவா?
இன்னும்
விட்டுப்போன மற்ற சிங்கங்களின்
சரணத்தில் பூ உதிர்க்கவா?

இத்தனை மாமனிதர்
இல்லையெனில்
நமக்கு இல்லை இந்த மணிமகுடம்!
அவர்கள் மூச்சுக்காற்றில்
நிறைந்திருந்த அந்த தாரகமந்திரம்!
அதனையே
இன்றும் குரெலெடுத்து சொல்வோம்
வந்தேமாதரம்!
-தனுசு-

வெற்றி பெறுவோம்!!!

3 கருத்துகள்:

  1. வீரரகளைப்பற்றி எழுத தனுசுவைத் தவிர வேறு யாரால் முடியும்?வில்லும்(தனுசும்) அம்பும் போர் வீரரகளின் ஆயுதங்கள். ஆனால் காந்திஜியின் தொண்டர்களோ வில்லேர் உழவர்கள் அல்ல. சொல்லேர் உழவர்களே.எனவேதான் நமது வில்லாளன் தனுசுவும் அன்பான‌ சொல்லம்பு எய்கிறார். வாழ்க தனுசுக் கவிஞரும் அவர்தம் கவிதையும்.

    பதிலளிநீக்கு
  2. எனது கவிதையை வெளியிட்ட சகோதரி பார்வதி அவர்களுக்கு மிக்க நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. kmr.krishnan said...வீரரகளைப்பற்றி எழுத தனுசுவைத் தவிர வேறு யாரால் முடியும்?வில்லும்(தனுசும்) அம்பும் போர் வீரரகளின் ஆயுதங்கள். ஆனால் காந்திஜியின் தொண்டர்களோ வில்லேர் உழவர்கள் அல்ல. சொல்லேர் உழவர்களே.......

    தாங்கள் ஒரு காந்தியவாதி. அப்பேற்பட்டவரின் வாயால் சுதந்திர தின கவிதைக்கு பாராட்டு பெற்றது காந்திஜியின் வாயாலேயே பெற்ற பாராட்டவாகவே நினைகிறேன்.

    நன்றி கிருஷ்னன் சார்.

    பதிலளிநீக்கு