வியாழன், 2 ஆகஸ்ட், 2012

யார் ஏதும் செய்யாமல் இருக்கிறார்?


  
என்னைப்பாருங்கள்
என்னை அழைப்பது எப்படி தெரியுமா?

நான்
தெண்டச்சோறாம்!

வீட்டுக்கு உபயோகமில்லாமல்
இருப்பதால்
நான் தெண்டச்சோறாம்!

வீட்டுக்கு பாரமாக இருக்கும்
கிழடு கட்டையாம் என்
தாத்தா பாட்டியும்
தெண்டச்சோறாம்!

உழவுக்கு போகாமல்
வண்டியும் இழுக்காமல்
லாயத்தில் கட்டப்பட்டிருக்கும்
காளைமாடும்
தெண்டச்சோறாம்!

வயிறை வளர்க்கும்
உயிர்கள் இருந்தென்ன? செத்தென்ன?
இது
எங்களுக்கான விமர்சனம்.

சிரிப்புத்தான் வருகிறது.
வீட்டுக்கும் நாட்டுக்கும்
முன் எழுத்தை தவிர
வேறு என்ன
வித்தியாசம் இருக்கிறது?

நானாவது
ஊர் பிரதிநிதியை தேர்ந்தெடுக்க
வாக்கை பதிவு செய்கிறேன்!
அந்த பிரதிநிதி
எங்களை
பார்க்ககூட வருவதில்லை!

என் தாத்தா பாட்டியாவது
பெயர் சொல்ல
சந்ததியை தந்துள்ளார்கள்!

உழவு மாடு
சாண‌மாவது தருகிறது!

ஊரைப் பிரதிபலிக்கும்
ஊர் பிரதிநிதியும்
நாட்டை பிரதிபலிக்கும்
நாயகனும்
என்னைப்போலவும்
கிழடு கட்டை போலவும்
லாயத்தில் இருக்கும் மாட்டை போலவும்
எதையாவது செய்திருக்கிறார்களா?
உபயோகமில்லாமல் தானே இருக்கிறார்கள்?

இப்போது சொல்லுங்கள்.
என்
குடும்பத்தாருக்கு விளக்குங்கள்.
யார்
ஏதும் செய்யாமல் இருக்கிறார்?
யார்
தெண்டச்சோறு?.

-தனுசு-

3 கருத்துகள்:

  1. தெண்டச் சோறு மாத்திரமா?
    திருட்டுச் சோறும் அல்லாவா! அது..

    கூட்டம் கூட்டமாகக் கூடி
    கொள்ளை யடிப்பது கோடி
    கொள்கை யெனப் பொய்கள் பலக்கூறி
    எல்லையில்லா வளம்கொழிக்க உழைப்போமென
    உறுதி மொழிகளும் தந்தார்களந்தப் பேடி!

    வீடும் நாடும் ஒன்றே என்றால் அதில்
    வாழும் யாவரும் உடன்பிறந்தவரன்றோ
    இருப்பவனெல்லாம் ஈசுவரன் பிள்ளை
    ஏழையோ எடுப்பார் கைபிள்ளை!

    அனைத்தையும் அறிவான் படைத்தான்
    ஆயினும் அடுத்து அவனது சபையினில்
    ஆவது யாதென்று தானறிவரோ!
    கலியுகம் காலொன்றில் நடக்கிறதாம்
    விடியும் வரை காத்திருப்போம்!

    தங்களின் கவிதைவரிகள் என்னையும்
    தாக்கிப் போகிறது.... நன்றிகள் கவிஞரே!

    பதிலளிநீக்கு
  2. எனது கவிதையை வெளியிட்ட சகோதரி பார்வதி அவர்களுக்கு நன்றிகள்.

    ஜி ஆலாசியம் said...////கொள்ளை யடிப்பது கோடி
    ...............உறுதி மொழிகளும் தந்தார்களந்தப் பேடி///////

    !நன்றி ஆலாசியம்.

    தெண்டச்சோறை விட உப்பும் புளிப்பும் தூக்கலாக இருக்கும் திருட்டுச்சோறு அருமை,அருமை தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  3. தாங்கள் முகப்பில் எழுதியுள்ள சுவாமி யுக்தேல்வர் கிரியின் quote ஆங்கில Version தேவை.. எனது மெயில் ksksnath@gmail.com Phone 9360207819 அனுப்புங்கள்... நன்றி

    பதிலளிநீக்கு