எழுதுகோல் எடுத்து
எத்தனை நாளானது
என்னுள்
ஏனிந்த அமைதி?
சிறகடித்துப் பறந்த
என்
சிந்தனையில்
ஏனிந்த அசதி?
மனதில்
ஏனிந்த மந்தம்?
கற்பூரம் போல்
கண்டால் பற்றிக்கொள்ளும்
கற்பனை
எங்கே போனது
ஏனிந்த வறட்சி?
ஓடிக்களித்த வீரன்
அள்ளிக்குடிக்கும் நீர் போல்
கவிதை பாடித்தீர்த்த எனக்கு
இன்று
ஏனில்லை தாகம்!
நீலக்கடலும்
கோலமயிலும்
தாமரையும்
தடாகமும்
வீரமும்
பெருமையும்
வைத்த பந்தியில் விருந்துண்ட எனக்கு
இன்று
ஏனில்லை பசி!
தென் பட்டதெல்லாம்
பண்பாடத் தூண்டிய கண்களில்
இன்று
ஏனிந்த தூக்கம்!
அல்லது
என்னுள் ஏதும் துக்கமா?
வெண்ணிலவின்
குளிரொளி கொட்டி
என்னை ஸ்பரிசிக்கும் போதெல்லாம்
புத்துணர்வு பூத்துக்குலுங்கும்
கவிதை பாடச்சொல்லி என்னை உலுக்கும்
ஆனால் இன்று
அந்த
நீல வானம்
நீர் மேகத்திடம் மாட்டிக்கொண்டது!
வெள்ளி நிலா
வெளிவரமுடியாமல் சிக்கிக்கொண்டது!
பருவகால மாற்றம்
எனக்கு பழக்கப்பட்டும்
விரக்தி மட்டும் விலகவில்லை!
இனிமை கொடுத்த மழை
இன்று
இம்சை கொடுக்கிறது
ஆனந்த மழை
இன்று
ஆத்திரம் தருகிறது
தனிமை உலாவில்
தனி உலகம் ஆட்சிசெய்த எனக்கு
மழைக்காலம்
நீசக்காலமோ?
ஓடும் நதியை
புலரும் பொழுதை
மலரும் பூவை
ஓங்கு கவிபாட
என்று முடியும்
இந்த மழைத் தூறும் கார்காலம்.
வெண்ணிலவே....
உன்
வெளிச்சம் பட்டு
என் மந்தம் விலக
என்று விடியும்
உந்தன் குளிர் தூறும் காலம்.
-தனுசு-
வார்த்தைகளின் விரக்தி அது
பதிலளிநீக்குவிடுதலையடையா தன்னை எண்ணி!
பூக்க துடிக்கும் காம்புகள்
புதிய இலைகளின் மறைவில்
எழுத துடிக்கும் விரல்கள்
இடர்படும் வார்த்தைகளுக்கு இடையில்
சொல்லத் துடிக்கும் மனசு
தொடங்கும் இடம் தெரியாமலே
கூடிய மேகங்கள் அவை
அவை கொட்டிடும் மழைகள்
இன்றைய மப்பும் மந்தாரமும்
இன்னும் சிலநாட்களில் போய்விடும்
விடுதலைக்கு அணி வகுக்கும்
வார்த்தைகளின் வேள்விக்குத் தூரமில்லை
பொறுத்திருங்கள் கவிஞரே கவிப்
பூமகள் பொழுதோடு வருவாள்!
கவிதையால் கவிபாடச் செய்தீர். நன்றிகள் கவிஞரே!
ஜி ஆலாசியம் said...
பதிலளிநீக்குவார்த்தைகளின் விரக்தி அது
விடுதலைய..............///////
ஓவியமாய் ஒரு கவிதை வடிவில் அழகிய பின்னூட்டம் என் என்னங்களை அப்படியே பிரதிபலிக்கிறது,
மிக்க நன்றி ஆலாசியம்.
ஜி ஆலாசியம் said...
பதிலளிநீக்கு........பூக்க துடிக்கும் காம்புகள்
புதிய இலைகளின் மறைவில்...../////
அழகான பின்னூட்டம்
ஒரு கவிதை வடிவில்.
"பூ மகள் வருவாள்" என
நண்பர் விதைக்கிறார்
ஒரு விதை அதன் முடிவில்.
வரவேண்டியே காத்திருக்கிறேன்
தாப தாகங்கள் தீர்த்துக்கொள்ள.
மிக்க நன்றிகள் நண்பரே.