புதன், 27 பிப்ரவரி, 2013

தனுசுவின் கவிதைகள்....ஓர் இரவு

Image courtesy...google images.

அனைத்து மத கடவுள்களும்
கருவறையில் அடைக்கப்பட்டன
இரவைக் கண்ட பயத்தில்!

"பொன்னான ஆட்சி"யை
"புண்ணாக்கு ஆட்சி' என
பறைசாற்றின
இரவு நேர தெருவிளக்குகள்!

கலைக் கோயிலாய்
தரிசனம் தந்துக்கொண்டு இருந்தன
இரவில் தாழிட்ட வீட்டுக்குள்
தொலைக்காட்சி!

காதல் சந்திப்பில்
இட்டு பெரும்
முத்தத்தின் சப்தத்தை
இரவுக்கு கானிக்கையாக்கிக் கொண்டு இருந்தன
ஒரு காதல் ஜோடி!

ஊழலை ஒழிக்க
இரவுக்கூட்டத்தில்
பாடுபட்டுக்கொண்டு இருந்தார்
வெட்டி முழங்கும் அரசியல்வாதி!

போதையின் உச்சத்தில்
கால்களில் பின்னல் போட்டு
இரவிடம் இல்லத்துக்கு
வழி கேட்கும் குடிமகன்!

நடு இரவில்
ஊளையில்
ஊர் பீதி
உண்டாக்கிக் கொண்டிருந்தன
தெரு நாய்கள்!

தாபத்தின் உணர்வை
அழும் குழந்தையின் குரலில்
தெரிவித்தது வீட்டுப்பூனை!

வராது எனத் தெரிந்திருந்தும்
நிலவுக்காக
வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்
ஒரு ப்ரியன்!

ஒவ்வொருவரும்
ஒவ்வொன்றும்
அந்த இரவைத் துணையாக்கிக்கொண்டிருக்க
தன் துணை யாருமின்றி
மெழுகைப்போல்
கரைந்துக்கொண்டு
அதிகாலையில் மறையத் துவங்கியது
என்றும் போல் அன்றைய இரவும்.

-தனுசு-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக