செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

NAIMISARANYAM...நைமிசாரண்யத்தில் அற்புத அனுபவம்.......

சில மாதங்களுக்கு முன் எங்கள் குடும்பத்தினருக்கு, இறையருளால் காசியாத்திரை மேற்கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போது எங்களுக்கு ஏற்பட்ட ஒரு அற்புத அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்தக் கட்டுரை , 'ஞான ஆலயம்' மாத இதழில் வெளிவந்தது. 'ஞான ஆலயம்' இதழுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.  ருத்ராவர்த்தில் புகைப்படம் எடுக்க ஏனோ அனுமதிக்கவில்லை.  நைமிசாரண்யத்தில் பார்க்க வேண்டிய இடங்கள் குறித்த பட்டியலை படமாக எடுத்து பிரசுரித்திருக்கிறேன். ருத்ராவர்த்(Rudravarth) பற்றிய குறிப்பு கீழே இருக்கிறது.

புனித யாத்திரையில் அற்புத அனுபவம்:

எங்கள் குடும்பத்தினர்,  காசி யாத்திரை  சென்ற போது, நைமிசாரண்யம் என்னும் மஹா புண்ணிய க்ஷேத்திரத்தைத் தரிசிக்கும் வாய்ப்புக் கிடைக்கப் பெற்றோம்.

நைமிசாரண்யத்தில், நாம் பார்க்க வேண்டிய பல இடங்கள் உள்ளன. அதில் ஒன்று 'ருத்ராவர்த்' என்னும் இடம். இது ஊருக்கு வெளியே பன்னிரண்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சிவபெருமான் அருள் நிறைந்துள்ள இந்த இடம், மிக எளிமையாக, அமைதியாக இருக்கிறது.

முன்பே இங்கு சென்று வந்திருந்த நண்பர் ஒருவர், இங்கு கிடைக்கும் அற்புத அனுபவத்தைக் கூறி, 'தவறாது சென்று வாருங்கள்' என்று தெரிவித்திருந்ததால் இந்த இடத்திற்குச் சென்றோம். இல்லையேல் இது பற்றித் தெரியாது போயிருக்கும். நைமிசாரண்யத்திலிருந்து ஆட்டோ அல்லது மினி வேன்கள் இந்த இடத்திற்குச் செல்லுகின்றன. சற்றே பெரிய வாகனங்கள் செல்லுவது கடினம்.

நாங்களும் ஒரு மினி வேன் மூலம் இந்த இடத்தைச் சென்றடைந்தோம். இந்த இடத்தை அடைந்ததும், அருகில் இருந்த ஒரு கடையில், ஒரு தட்டில், வில்வம், பூ, வாழைப்பழம், ஊதுபத்தி முதலானவை விற்கிறார்கள். அவைகளை வாங்கிக் கொண்டோம்.

அங்கே, ஒரு சிறு கோவிலில், சிவபெருமான் சன்னதி இருக்கிறது. தரையில் இருக்கும் ஆவுடையார், அதன் மேல் சிறு லிங்க வடிவம் அமைந்த சன்னதி அது. அங்கே ஒரு சாது இருந்தார். எங்களைக் கண்டதும், அருகே இருந்த ஒரு சிறு குளத்திற்கு அழைத்துச் சென்றார். தண்ணீர் சற்றுக் கலங்கலாக உள்ள ஒரு சிறு குளம் அது. படிகளில் இறங்கிச் சென்றோம்எங்கள் கைகளில் இருந்த தட்டுக்களிலிருந்த வில்வ தளங்களை மொத்தமாக வாங்கி,  எங்களிடம் காண்பித்து, சிவனை வேண்டி குளத்தில் இட்டார்.

என்ன ஆச்சரியம்!!!, வில்வ இலைகள், குளத்தின் மேலே மிதக்காது, உள்ளே சென்று விட்டன. அடுத்த ஆச்சரியம் சில கணங்களில் நிகழ்ந்தது. எங்கள் கைகளில் இருந்த வாழைப்பழங்களை வாங்கி, தோலை உரித்து, ஒவ்வொருவராகக் குளத்தின் உள்ளே போடச் சொன்னார். நாங்களும் செய்தோம்.
Devadeveswar temple, Naimisaranyam
முழு வாழைப்பழம், குளத்தின் உள்ளே போட்டதும், சற்று மூழ்கி, உடனே சட்டென்று, திரும்பி மேலே எழும்பி செங்குத்தாக மிதந்து வந்தது. துளி அழுக்கு இல்லாமல், பளிங்கு போல்!!!. ஆச்சரியத்தில் எங்களுக்கு வாய் மூட வில்லை.

சிவப்பிரசாதம் என்று பக்தியுடன் அந்த சாது அவற்றை எடுத்து வழங்கினார். நாங்களும் சாப்பிட்டோம். பிறகே சிவன் சன்னதிக்கு அழைத்துச் சென்றார். ஒரு செம்பில் குளத்து நீரை எடுத்து வந்து அபிஷேகம் செய்து, கையோடு கொண்டு வந்திருந்த வில்வதளங்கள் மற்றும் பூக்களால் அர்ச்சித்து, ஊதுபத்தி காண்பித்து வழிபட்டோம் (அங்கு நாமே செய்யலாம்). அருகில், நாகர், பகளாமுகி தேவி ஆகியோரின் சன்னதிகளும் தனிக்கோவிலாக அமைந்துள்ளன. அவற்றையும் தரிசித்தோம்

பிறகு அந்த சாது கூறினார். சிவனருள் இருப்பவர்களுக்கு மட்டுமே, பழம் இவ்வாறு மேலேழும்பி வருமாம்நாங்கள் இறையருளை எண்ணி மெய்சிலிர்த்தோம்தட்டுக்களை  திரும்பக் கொண்டு கொடுக்கும் போது, கடைக்காரரும், 'பழம் மிதந்ததா?' என்று கேட்டார். சிலருக்கு அவ்வாறு மிதக்காதாம். 'இறையருள் இருந்தால்தான் இந்த இடம்  வரவே முடியும். இதைப் பற்றித் தெரிந்தவர்கள் மிகக் குறைவு. அப்படியும் சிலருக்கு பழம் உள்ளே போய்விடும்' என்றார்.

சிவனருளை எண்ணி, எங்களில் சிலருக்கு ஆனந்தக் கண்ணீரே வந்து விட்டது.  வணங்கியபடி ஊர் திரும்பினோம். நைமிசாரண்யம் செல்லும் வாய்ப்பு கிடைக்கப் பெறுபவர்கள், தவறாது இந்த இடத்தைத் தரிசிக்குமாறு,தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

வெற்றி பெறுவோம்!!!

4 கருத்துகள்:

  1. சிவனருளை எண்ணி, எங்களில் சிலருக்கு ஆனந்தக் கண்ணீரே வந்து விட்டது. அற்புத அனுபவம்..

    பதிலளிநீக்கு
  2. 18 புராணங்களும் நைமிசாரண்யத்தில் முனிவர்களால் எழுதப்பெற்றவை. திருப்பூவணப் புராணத்தை நான் ஆய்வு செய்தபோது அது நைமிசாரய்ணத்தில் இயற்றப்பட்ட பிரமகைவர்த்த புராணத்தின் தமிழாக்கம் எனத்தெரிந்து கொண்டேன். மேலும் “நேமி“ என்றால் சங்கரம் என்றும், ஆரண்யம் என்றால் காடு என்றும் பொருள். எனவே “நேமிசாரண்யம்“ என்றால் வட்டவடிவிலான காடு என்று பொருள். இங்கு வட்டவிலான தீர்த்தம் ஒன்று உள்ளதென்றும், மகாவிஷ்ணுவின் ஆலயம் உள்ளதென்றும் அறிந்து கொண்டேன்.

    தங்களால் அங்குள்ள சிவன் கோயில் பற்றிய விவரம் அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். சிவபெருமானின் அருட்பிரசாதம் தங்களுக்குக் கிடைத்தது பூர்வபுண்ணியமே யாகும்.

    சிவனருள் நம் அனைவருக்கும் சித்திப்பதாகுக.

    அன்பன்
    கி.காளைராசன்

    நைமிசாரணியச் சருக்கம்
    26 பொன்னலந்திகழ்ந்தோங்கிய பூவணக்காதை
    தன்னை நான்மறைச்சவுநகாதியமுநிகணங்க
    டுன்னுமாதவச் சூதனை வினவிய சூழ
    னன்னிலம் புகழ்நைமிசவணிசில நவில்வாம்
    27 காரின்மல்கியகந்தரந்தந்த காட்சியினாற்
    சீரிணங்கிய சென்னியிற் றிங்கண் மேவுதலா
    லேரிணங்கிய மாதவர்க்கின் பமீகையினா
    னாரிபாகனை நிகர்ப்பது நைமிசாரணியம்
    28 சீரிணங்குறச் சேணிவந்தோங்கலாற் செய்ய
    வாரிணங்குநன்மலர்க் கொடிமருவு கண்ர்றலா
    லேரிணங்கிய வெண்ணரும்புட் கணண்ர்தலா
    னாரணன்றனை யொத்ததுநைமிசாரணியம்
    29 நான்முகங்களுநான்மறைநவிற்றுதலானு
    நான்முகந்தருநாயகி நண்ர்தலானு
    நான்முகங்களுநன்குறப்படைத்திடலானு
    நான்முகன்றனை யொத்தது நைமிசாரணியம்
    30 பன்னுநான்மறைபயில்பவர் பன்னசாலைகளு
    மன்னுகின்ற வட்டாங்கயோகத்தர்வாழிடமு
    மின்னருட்கர்ற்றிரண்டற நிற்பவரிடமு
    நன்னலம்பெற நிறைந்தது நைமிசாரணியம்
    31 வண்ணமேவியபூந்தவிசேந்தியவள்ள
    லெண்ணிலாதவர்பிறப்புடனிறப்பெலாந்தங்கள்
    கண்ணினாற்கண்டுகழிந்தபல்காலங்கள் கடந்தோர்
    நண்ணிமாதவம்பயில்வது நைமிசாரணியம்
    32 காலனாணையுங்காமனதாணையுங்கஞ்ச
    மேலயன்றிருவாணையுமேகவண்ணஞ்சேர்
    கோலமாயவன் குலவிய வாணையுமாக
    நாலுநண்ணரிதாயது நைமிசாரணியம்
    33 பிரமசர்யம் வானப்பிரத்தம் மெழில் பிறங்கு
    மரியநான்மறையறைந்திடுமதிவணாச்சிரமம்
    பரவுகின்றனயாவையும் பற்றாத்துறந்த
    லுரியவாச்சிரமங்கணான் குடையதவ்வனமே
    34 புகழ்வினீடுவெண்பூதிசாதனம் புனைமெய்யர்
    திகழ்செழுங்கதிரெறித்திடு செஞ்சடாமகுடர்
    மகிழ்சிறந்தநல்வற்கலையுடையினர்மாறா
    திகழ்தலின்றியே நாடொறுமிருந்தவமிழைப்போர்
    35 எண்ணருந்திறலோர் புகழிருபிறப்பாளர்
    நண்ர்முப்பொழுதருச்சனைபுரியுநான்மறையோ
    ரண்ணலுண்மகிழைவகைவேள்விகளமைப்போர்
    கண்ர்தற்கருமங்கமாறுங்கரைகண்டோர்
    36 ஒருமைசேர்ந்த மெய்யுணர்வினரிருவினையொழிந்தோ
    ரருமைமும்மலர்நாற்கரணந்தனையயர்த்தோர்
    வெருவுமைம்புலப்பகைஞரை வென்றருள்வீரர்
    கருதுறாதவெண்ணெண்பெருங்கலைக்கடல்கடந்தோர்
    37 சூழ்ந்தவல்வினைத்தொடர்படுகின்ற தொல்பவத்தைப்
    போழ்ந்தஞானவாட்படையினர் புரிமுந்நூன்மார்பர்
    தாழ்ந்தநல்லுறிதாங்குகுண்டிகைத் தடக்கையர்
    வாழ்ந்தவைதிகசைவர்வாழ்நைமிசவனமே
    38 பகைகடீர்ந்திடும் பன்னகவயிரியும்பாம்பு
    மகிழ்வினோங்கிடும் வாலுளையரியொடுமதமா
    மிகுவிலங்கினம் விரும்பியோர் துறையுணீரருந்தி
    யிகலதின்றியேயின்புறமருவுமெஞ்ஞான்றும்

    வேறு
    39 காமாதிகள் விட்டேற்குநர் தண்டோரொருசாரார்
    பூமாலை களாற் பூசனை புரிவோரொருசாரா
    ரோமாதிகளுக்காவனகொணர்வோரொருசாரார்
    பாமாண்புறவே பாடுநராடுநரொருசாரார்
    40 யாகாதிகடருமங்களிழைப்போரொரு சாரார்
    யோகாதிகள் கருமங்களுழப் போரொரு சாரார்
    சாகாமூலபலந்தருகிற்பவரொருசாரார்
    மாகாமந்தனை மாற்றிமகிழ்ந்தோரொரு சாரார்
    41 வேதாகமநூன்மேதகவோதுநரொருசாரா
    ராதாரத்தினடுக்கையறிந்தோரொருசாரார்
    நாதாந்தந்தனை நாடிநவிற்றுநரொருசாரா
    ரோதாவுண்மைப் பொருளையுணர்ந்தோரொருசாரார்

    வேறு
    42 உந்தியாரழன்மூளநற்சுழுமுனைதிறந்ததினூடுபோய்
    விந்துவாரமுதம்பொழிந்து மெய்விழிசெழுந்துளிவீசவே
    யந்தமாதியிலாத செந்தழலண்ட கோளகை மண்டவே
    நந்தஞான சுதோதயந்தனை நண்ர்கின்றனர் சிலரரோ
    43 தீதினற்றிரி புண்டரத்தொடு செய்ய கண்டிகை மெய்யினர்
    காதல்கூர் தருகா மனம் பதுகனவினுந் தெறல் காண்கிலா
    ரோதுநற்சுகதுக்கம் வெம்பகையுறவு நன்றொடு தீதிலா
    ராதியந்தமிலாதவன்றனையன் பினான் மிக நம்பினோர்
    44 நாக்கினான் மறைபோற்று வோரிவர் நண்ர்சாலை கண்முன்னரே
    மூக்கினாற் பிணி முகமெடுத்தென முள்ளெயிற்றரவள்ளவே
    யாக்குநற்பகுவாய்கள் கக்கிடு மலகில் செம்மணியிலகறான்
    றூக்கு சோதி விளக்கினுக்கிணை சொல்லலாமலதில்லையே
    45 நித்தமாதவரைத்தினந்தொறு நீங்கிடாதருளோங்கநற்
    பத்தியான்மிகு பன்னகத் தொடு பல்பொறிப்புலி சேர்தறான்
    சித்திமுத்திகள் சேரநல்குறுதில்லையம்பலவெல்லைசார்ந்
    தத்தனாடலருட்கணாடிடவிருதபோதனரமர்தல் போன்ம்
    46 தூய மாதவமே பயின்றிடு சுத்தர் நித்தர் சுகோதயர்
    நேயநீடநு போகமல்லது நெஞ்சின் வேறு நினைக்கிலார்
    மேயநைமிசகானகந்தனின் மேன்மையாவர்விளம்புவா
    ராயிரம் பகுவாயனந்தனுநாவிசைத்திடலாவதோ

    நைமிசாரணியச் சருக்க முற்றியது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றி!!!. தங்களால் நைமிசாரண்ய சருக்கம் படிக்கும் பாக்கியம் பெற்றேன்!!!.. நேரமிருக்கும் போது என் மற்றொரு வலைப்பூவுக்கும்(www.aalosanai.blogspot.in) வருகை தர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்..

      நீக்கு