திங்கள், 17 ஜூன், 2013

நாம் பெத்த ராசா....


தவமாத் தவமிருந்து
தருமராசர் நோம்பிருந்து
பூமிதி தா(ன்) மிதிச்சி
பூச்சட்டி கையேந்தி
பலநாள் பொறுத்திருந்து
பாதகத்தி பெத்த மகெ(மகன்).
பெத்தவ மொகம் பாக்க‌
எப்பத்தா வருவானோ?

 பொன்னேதுங் கேக்கலையே
பொடவ கூட கேக்கலையே
கண்ணால ஒரு வாட்டி
பாக்கத்தான் துடிக்கிறேனே
பணங்காசு கேக்கலயே
பழய சோறுங் கேக்கலயே
 பாவி மவ‌ ஒம் மொகத்த‌
பாக்க நெதம் தவிக்கிறேனே

அரக்கஞ்சி நாங் குடுச்சு
அருமயா வளத்தெடுத்தே
பூவடிச்சா நோகுமுன்னு
பொத்திப் பொத்தி பாத்திருந்தே
ஒன்னப் பிரிஞ்சிருக்கும்
ஒரு காலம் வருமின்னு
ஒரு நாளும் நெனக்கலயே
ஒரு பேருஞ் சொல்லலையே
  
பணங்காசு வந்துப்புட்டா
பழசெல்லா மறந்திருமா
புதுசாக ஒறவு வந்து
புத்தியத்தா கெடுத்திருமா
ஆத்தாவ வேண்டான்னு
 அரமனசா நீ நெனச்சிரலாம்
அரும மகெ(ன்) வேண்டான்னு
எ ஆவி கூட நெனக்காதே

கண்ணீரு மழ கொட்ட‌
காத்திருக்கே எம் மகனே
புண்ணியமாப் போகுமப்பு
பூ மொகத்தக் காட்டிப்புடு
போக் காலம் வந்து நா
போன தடம் மறயுமுன்ன‌
பூ லோக மகராசா
பெத்த என்ன பாத்துப்புடு.

சமீபத்தில் ஒரு கிராமத்தில், தன் வாழ்வின் இறுதியை நெருங்கும் ஒரு ஏழைத்தாய், தன் மகன் வந்து பார்ப்பதில்லை என மனம் உருகும் வண்ணம் அழுததைக் கண்டேன். ஆதரவற்ற அன்னையர் எத்தனையோ பேர்...   அவ்வாறு ஆதரவற்று இருப்போரைக் கண்டால், ஒன்றிரண்டு ஆறுதல் வார்த்தைகளேனும் சொல்வோம் நண்பர்களே!!!!


அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

வெற்றி பெறுவோம்!!

நன்றி: வல்லமை மின்னிதழ்.
படத்துக்கு நன்றி:கூகுள் படங்கள்.

6 கருத்துகள்:

 1. அருமையான படைப்பு.

  அந்தத்தாயின் சோகம் நம் மனதையே வருத்துவதாக உள்ளது.;(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது பாராட்டுதல்களுக்கும் கருத்துரைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ஐயா!!

   நீக்கு