புதன், 26 ஜூன், 2013

எண்ணத்தால் வாழ்வு வரும்!!!


நாம் பெத்த ஓவியமே
நடந்து வரும் பூந்தேரே
பூதலத்து ராசாவே
புன்சிரிக்கும் ரோசாவே
எம்மடியில அதிசயமா
வந்துதிச்ச சூரியரே
பொன்னான ஒன் வாழ்வு
கண்ணு முன்ன தோணுதய்யா!!

தங்கத்தால் அரமணையாம்
தகதகக்கும் கோவுரமாம்
கருந்தேக்குக் கதவுகளாம்
கண்மூடா காவலுண்டாம்
கோட்டை மதிலு தாண்டி
கோமகனார் வாசலிலே
காத்திருக்கும் கோடி சனம்
கண்ணார உனைப் பார்க்க‌

வெள்ளியிலே வீதிகளாம்
வீதியெல்லாம் ரத்தினமாம்
முத்து நவரத்தினத்தைக்
கொட்டி அங்கே விப்பாகளாம்
முத்தத்தில் (முற்றத்தில்) முந்நூறு 
முழுப்பவளக் கோலமிட்டு
மாணிக்கம் நிறைப்பாராம்
மகராசன் வருகைக்கு

கண்ணா உன் முகம் பாத்தா
காணாத வாழ்வு வரும்
கங்கை  வீட்டு வாசல் வரும்
கனவெல்லாம் நனவாகும்
கலகலன்னு நீ சிரிச்சா
மளமளன்னு முத்துதிரும்
 தங்கமே நீ நடந்தா..
தங்கத்தேரு ஆடி வரும்.

 எட்டடிக் குடுசக் குள்ள‌ 
ஏந்தான் பொறந்தோமின்னு
என்னைக்கும் நெனக்காதே
எந் தங்க ராசாவே!!
இருளெல்லாம் வெடிஞ்சு வரும் 
ஏழைக்கும் காலம் வரும்
எம் மகனே நீ  நெனைக்கும்
எண்ணத்தால் வாழ்வு வரும்!!!

-பார்வதி இராமச்சந்திரன்.-

நன்றி: வல்லமை மின்னிதழ்.
படம் நன்றி: கூகுள் படங்கள்.
வெற்றி பெறுவோம்!!!

6 கருத்துகள்:

 1. அழகான அருமையான பாடல்... பாராட்டுக்கள்...

  வல்லமை மின்னிதழில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து எழுத, தங்கள் வார்த்தைகள் ஊக்கமளிப்பவையாக இருக்கின்றன.

   நீக்கு
 2. தாயை விலை கொடுத்து வாங்கமுடியாது என்பார்கள். என்னைக்கேட்டால் தாயின் தாலாட்டுக்கு விலையே கொடுக்க முடியாது. அந்த தாலாட்டை கவிதையாய் சகோதரி பார்வதி அவர்கள் தந்தது மிக்க சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் மனம் திறந்த பாராட்டுதல்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகள் சகோதரரே!!!

   நீக்கு
 3. எண்ணம் போல் வாழ்வு தரும் அருமையான தாலாட்டு ..பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் பாராட்டுக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி அம்மா!

   நீக்கு