புதன், 29 மே, 2013

நீ வரு நாளப் பாத்திருக்கேன்.......கொதிக்கிற வெயிலிலே கூலி வேல நாம்பாத்து

கொண்டார காச கேட்டு கன்னத்துல அடிக்கிறியே

வடி கஞ்சி கடங்கேட்டு வாங்கிக் குடிச்சுப்புட்டு

ஒம் பிள்ள படுத்திருக்கே  ஒனக்கிது தா(ன்)  தெரியலயா?


பச்ச புள்ள மடியிருத்தி பால் கொடுக்குற வேளையிலே

எச்சி துப்பி அடிக்கிறியே எட்டி நீயும் மிதிக்கிறியே

கத்தி  கதறி அலறுகிற கைப்பிள்ள முகம் பாத்து

குத்தி மனச‌ பிடுங்குதய்யா எ வயிறு கொதிக்குதய்யா


நாலு வருச முன்ன நா வாழ்ந்த பவுச கண்டு

நாலூரு சீம எல்லா(ம்) நாம் போனா மதிப்பாக‌

நாம் பொறந்த ஊருலயும் நாம் புகுந்த வூட்டிலயும்

எம் போல வாழணுன்னு எப்பவுந் தா வாழ்த்துவாக‌


எரிஞ்ச கண்ணு பட்டு எம் பொழப்பு போச்சுதய்யா

எங்கிருந்தோ வந்த குடி எங்குடியக் கெடுத்ததய்யா

எட்டூரு விட்டெறியும் எ ராசா பேரு சொன்னா

பட்டுன்னு தள்ளி வுட்டுப் பாத்திருச்சே இந்தக் குடி!!


எம்புட்டோ சொன்னேனே!! என்ன நீயும் மதிக்கலயே

எதுத்துக் கேட்டாக்க ஒன் மனசு சகிக்கலையே

மந்திரிச்ச கோழி போல, மறுக்கா மறுக்கா நீயும்

சந்தியிலே கள்ளுக் கட போறதயும் நிறுத்தலையே


பத்திரமா பொட்டியில வச்ச நக போச்சுதய்யா

பத்திரத்த வச்சதுல பழய வீடு போனதய்யா

சத்திரத்த கட்டி வச்சு தருமஞ் செஞ்ச பரம்பரய‌

புத்தியில்லா மனுசெ ‘குடி’, கொக்கரிச்சு தின்னதய்யா


வெறுப்பு மீறிப் போய் வெசங் குடிச்சுப் போகலான்னு

வெவரங் கெட்டுப் போய் ஒரு நேரம் மயங்கிப் புட்டேன்

வெனயம் இல்லாத எம் பிஞ்சுக மொகம் பாத்து

வாழ்ந்து தே  பாப்போம்னு வீராப்பா நெனைச்சுப் புட்டேன்


இனிமேட்டும் ஒ(ன்) அடி தாங்க என்னால முடியாது

இனி பொறுத்துப் போனாக்கா ஒரு நாளும் விடியாது

ஒங் குடியும் குடுத்தனமும்  ஒரு கூட்டா சேராது

ஒன் நெனப்பு மாறலென்னா ஒறவிருக்க ஏலாது


எப்பத் தா(ன்) குடிக்காம இங்கிருக்க‌ நீ வரியோ,

தப்பாம அது வரக்கும் தவிப்போட  காத்திருக்கேன்

பாழாப் போற குடி பாதகத்த தொலைச்சுப் புட்டு

வாழ்வு வேணுமுன்னு நீ வரு நாளப் பாத்திருக்கேன்.


நட்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

வெற்றி பெறுவோம்!!!

நன்றி: வல்லமை மின்னிதழ்
படங்கள் நன்றி:கூகுள் படங்கள்.

7 கருத்துகள்:

 1. பலரின் நிலையும் இப்படித்தான்... என்றைக்கு தான் அவர்களுக்கெல்லாம் விடிவு காலம் வரப்போகிறது என்று ஏக்கமாகத் தான் இருக்கிறது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம். நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் என் மனமார்ந்த நன்றி.

   நீக்கு
 2. மனசு கனத்துப்போச்சு. இதயம் வெடிச்சு போச்சு.


  சுப்பு தாத்தா.
  www.subbuthatha.blogspot.in

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன செஞ்சா இந்த நெலம மாறுமுன்னு நெஞ்சு ஏங்கலாச்சு!!!. மிக்க நன்றி தாத்தா!!!.

   நீக்கு
 3. வல்லமை மின்னிதழ் வெளியீட்டுக்கு பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு

 4. இந்த மௌடீகம் சங்ககாலத்திலேயே இருந்து தொலைத்திருக்கிறது.
  கலித்தொகையில் குறிஞ்சிக்கலியில் ஒரு பாடலில், தலைவி தோழிக்கு சொல்கிறாள்: "...... அவன் தந்த தலைமாலையை பிறர் அறியாது எனது பொன் கரையிட்ட நீலச்சிற்றாடைக்குள் மறைத்தேனடி. கள் குடித்த ஒருவன் தன பெற்றோர் முன் வர எங்ஙனம் நாணி அஞ்சி ஒழிவானோ அது போல நானும் எனது நட்றாயின் முன் செல்ல நாணினேன்" என்பாள். அந்தக்காலத்தில் பரத்தைமை ஊடலுக்கு பெரும் காரணமாக இருந்திருக்கிறது என்பதை அகத்துறைப் பாடல்கள் வாயில் அறிகிறோம். இன்று அதனுடன் கூட்டுச்சேர்ந்து இந்த பொல்லாத குடியும் இருக்கிறது போலும். வேதனை.

  +++++

  புவனேஷ்

  பதிலளிநீக்கு