பெண்ணென்றால் கேவலமோ?
பெரும் பாவம் செய்தோமோ!!
மண்ணிலே பிறவியெல்லாம்
பெண்ணின்றிப் பிறந்திடுமோ?
நல்லதொரு சுமை தூக்கி
நாலெட்டு நடக்கு முன்னே
இறக்கி வைக்க இடம் தேடி
இங்குமங்கும் அலைகின்றீர்!!
.
பத்து மாதம் கருச்சுமந்து
படும் பாடு நீர் அறிந்தால்
பாரினிலே பெண்பிறவி
பெருமையென்றே பேசிடுவீர்!!
சூலறிந்த நாள் தொடங்கி
சுகமான சுமையென்றெண்ணி
தன்னுள்ளே உயிர் வளர்க்கும்
தியாக வேள்விக்கு ஈடுண்டோ?
முதல் மூன்று மாதம் வரை
தலை சுற்றும், வயிறு குமட்டும்.
குழம்பு கொதிக்கும் வாசமென்றாலும்.
குடம் குடமாய் வாந்தி வரும்.
புரண்டு படுக்க இயலாது.
பூப் போல நடக்க வேண்டும்.
பூமியின் பொறுமை எல்லாம்
பொன்னுடலில் வர வேண்டும்.
ஐந்து மாதம் நிறைந்து விட்டால்
அணையாத பசித்தீ வாட்டும்
எத்தனை முறை உண்டாலும்
இன்னமும் வயிறு கேட்கும்.
ஆறு மாதம் ஆன பின்னே
அயர்ந்து அமரச் சொல்லும்.
அடி வயிற்றில் குழந்தை முட்டும்
ஆழ்ந்த தூக்கம் தொலைந்து போகும்.
நாலிரண்டு மாதத்திலே
நாலெட்டு நடந்தால் திணறும்.
நீர் கோர்த்து கால் வீங்கும்
நிலவு முகம் பூசணியாகும்.
ஒன்பதாம் மாதம் வந்தால்
உள்ளங்கால் நரம்பு சுண்டும்.
ஓரெட்டு நடக்கும் முன்னே
உடலிலே அயர்ச்சி பொங்கும்.
ஐயிரண்டு மாதத்திலே
அங்கமெல்லாம் வலி பொறுத்து
ஆருயிரின் ஓருறவை
அகம் மகிழத் தருகின்றோம்.
ஆயினும் பெண்ணென்றால்
ஆயிரம் வசையொலிகள்.
அன்பு தரும் உயிரில்லை.
அரங்கேறும் கேவலங்கள்.
அம்மாவும் பெண் தானே!!!
அருமை மகள் பெண் தானே!!!
அன்பு தந்து வாழ்விக்கும்
அருந்துணைவி பெண் தானே!!
பெண்களைத் தொழுது நிதம்
பெருங்கோயில் கட்ட வேண்டாம்
மண்ணிலே வாழ வந்தோம்
வாழ விட்டு, வாழ்ந்திடுவீர்!!.
---பார்வதி இராமச்சந்திரன்------
நன்றி: வல்லமை மின்னிதழ்.
படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.
நிதர்சனத்தை உரைக்கும் ஆதங்க வரிகள்..!
பதிலளிநீக்குதங்களுக்கு என் மனமார்ந்த நன்றி அம்மா!!.
நீக்குஅழகான ஆக்கம். பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குவல்லமையில் வெளிவந்தமைகும் வாழ்த்துக்கள்.
தங்கள் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுதல்களுக்கும் என் மனமார்ந்த நன்றி ஐயா!!
நீக்குஏன் இப்படி வருத்தமாய் இருக்கிறீர்கள்? எல்லோருமே பெண்களை மதிக்காதவர்களா?
பதிலளிநீக்குபெண்ணும்
கண்ணும்
இல்லையென்றால்
மண்ணில் வாழ்வேது? உயிரேது?
////ஏன் இப்படி வருத்தமாய் இருக்கிறீர்கள்? எல்லோருமே பெண்களை மதிக்காதவர்களா? /////
நீக்குஅப்படி அல்ல சகோதரரே!!. பெண்களைக் கண்ணாக மதிப்போரும் இருக்கிறார்கள், வெறும் மண்ணாகக் கருதி மிதிப்போரும் இருக்கிறார்களே!!. அவர்கள் குறித்த ஆதங்கமே இது.
தங்களது ஆழ்ந்த வாசிப்பிற்கு என் நெஞ்சார்ந்த நன்றி!
/// பத்து மாதம் கருச்சுமந்து
பதிலளிநீக்குபடும் பாடு நீர் அறிந்தால்
பாரினிலே பெண்பிறவி
பெருமையென்றே பேசிடுவீர்...!! ///
உணர வேண்டிய வரிகள் பல...
வாழ்த்துக்கள் அம்மா...
தங்கள் வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த நன்றி!!!!
நீக்கு