ஞாயிறு, 21 ஜூலை, 2013

தனுசுவின் கவிதைகள்....பக்கவாத்தியம்


என்னை ஆள்வது என் மனம்
என் மனதை ஆள்வது?....

ஒரு நாள் சந்தோஷம்
மறு நாள் கோபம்
ஒரு நாள் இனிப்பு
மறு நாள் கசப்பு
ஏனிது?.....

உலகமெனும் நாடக மேடையில்
நடிக்க வந்த 
நடிகர்களில் நானும் ஒருவன்
இது
ஷேக்ஸ்பியர் சொன்ன உண்மை
நான் சொல்வதும் உண்மை

என் நடிப்பு ஒளிர
என் நாடகம் மிளிர
நான் என்ன செய்ய?

பக்கவாத்தியம் இல்லாத கச்சேரி களைகட்டுவதில்லை
பக்குவப்படாத மனதில் இனிமையில்லை
கண்ணாரக் கண்டுவிட்டேன்
இனி என்ன செய்ய?

வணக்கம்
வந்தனம்
நலமா
சுகமா
இந்த வார்த்தையெனும் வாத்தியங்களை 
முதலில் நானே இசைத்து
புன்னகைத்தால்
அன்றெல்லாம் 
அடியேனுக்கு அத்தனை இடத்திலும் ஆனந்தம்
அரசனாக பொழுது கழியும்

இந்த பக்கவாத்தியதிற்கு
பக்கவாதம் வந்தால்
அன்றெல்லாம் கசந்து
தனிமை உணர்வில்
ஆண்டியாகி பொழுது கழியும்

நான்
அரசனா
ஆண்டியா 
யாராக வாழ? 

மண்ணில் பிறக்கும் மனிதன்
மண்ணையே சொந்தமாக்கி
இறுதியில்
மண்ணுக்கே சொந்தமாகும் போது
தன்னையே உணர்வது போல்...

என்னுள் எழும் மிருகம்
என்னையே சொந்தமாக்கி
இறுதியில்
என்னையே அழிக்கும் போது
என்னை நான் உணர்ந்து ஆவதென்ன?

மிருதங்கத்தை இசைத்து
மிருகத்தை எரித்து
கடத்தை இசைத்து
கனலை அழித்து
வாழ்ந்திட குறைந்து போவதென்ன?

யாரும்
என்னை நேசித்திருக்க
பக்குவப்பட்ட மனமாய்
பக்கவாத்தியம் வாசித்திருந்து
களைகட்டும் கச்சேரியை
காலமெல்லாம் கேட்கப்போகிறேன்
நீங்களும் ஒரு முறை
கேட்டுப்பாருங்களேன்.

-தனுசு-
படங்கள் நன்றி: கூகுள் படங்கள்.

3 கருத்துகள்:

 1. அருமையான பக்கவாத்ய்மே ஒருவ்ருக்கொருவர் இனிமையான இன்பம் தர வல்லது..

  பதிவு நல்லாயிருக்கு. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 2. சிந்திக்க வேண்டிய... உணர வேண்டிய கேள்விகள் நன்று.. நன்றி...

  பதிலளிநீக்கு
 3. வை.கோபாலகிருஷ்ணன்; பதிவு நல்லாயிருக்கு. பாராட்டுக்கள்.///

  பாராட்டுக்கு மிக்க நன்றிகள் மதிப்பிற்குரிய வை.கோ அவர்களே.

  திண்டுக்கல் தனபாலன்; சிந்திக்க வேண்டிய... உணர வேண்டிய கேள்விகள் நன்று.. நன்றி...///

  பாராட்டுக்கு மிக்க நன்றிகள் தனபால் அவர்களே.

  பதிலளிநீக்கு