வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

KANNANIN THANGAI...கண்ணனின் தங்கை .....

கோகுலக் கண்ணன் தன் சின்னப் பாதங்கள் பதித்து நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளும் நன்னாள் 'ஸ்ரீஜெயந்தி'. நாடே விழாக்கோலம் பூண்டு, கண்ணன் அவதரித்த பொன்னாளைக் கொண்டாடும் தருணத்தில், சாக்தர்கள், 'யசோதா கர்ப்ப சம்பூதாவாக' அவதரித்த அன்னை ஸ்ரீதுர்க்கையின் திருஅவதார தினமாகவும் கோகுலாஷ்டமியைக் கொண்டாடுகின்றார்கள்.

சாக்தத்தில் தேவியும் ஹரியும் ஒன்றேதான் என்கின்ற தத்துவத்தை புராண ரீதியாகக் கூறும் போது, நாராயணனின் சகோதரி சக்தி என்று கூறுகின்றோம். தசமஹா வித்யா தேவியரே, தசாவதாரம் எடுத்து அசுர சம்ஹாரம் செய்தனர் என்றும் கூறுகிறது சாக்தம். யோகமாயா தேவியான சக்தி, கண்ணனின் வளர்ப்புத் தாயான யசோதைக்கு மகளாக அவதரித்ததால், கண்ணனின் தங்கையாக அறியப்படுகின்றாள்.

சிறையிருந்த வசுதேவர், தேவகி தம்பதியரின் ஏழாவது கர்ப்பத்தில் ஆதிசேஷன் பிரவேசித்தார். ஸ்ரீவிஷ்ணுவின் திருவுளப்படி, யோகமாயையான மஹாமாயையின் செயலால், அந்தக் குழந்தை, வசுதேவரின் முதல் மனைவியாகிய ரோகிணியின் கர்ப்பத்தில் சேர்ந்தது.

கிருஷ்ணாவதாரத்திற்கு முன்பாக, யோகமாயா தேவியை, ஸ்ரீ மஹாவிஷ்ணு, யசோதாவின் கர்ப்பத்தில் பிரவேசிக்குமாறு  கூறினார். வசுதேவரால் மதுராவிற்கு கொண்டு வரப்பட்டவுடன் தேவியின் அவதார நோக்கம் நிறைவேறுமென்றும் திருவாய்மொழிந்தருளினார். 

அவ்வண்ணமே அம்பிகை யசோதாவின் கர்ப்பத்தில் பிரவேசித்தாள். நந்தகோபரின் திருமகளாய் அவதரித்தாள். யோகமாயையின் மாயாசக்தியால் புவனமுழுதும் அந்த இரவில் ஆட்கொள்ளப்பட்டது.

வசுதேவர், கண்ணனை எடுத்துக் கொண்டு கோகுலத்தில் நுழைந்த போது, நள்ளிரவு நேரம். நந்தகோபனின் மனையை அவருக்கு எடுத்துக் காட்டும் முகமாக, சின்னக் குழந்தையாக அவதரித்திருந்த தேவி, மெல்ல அழுதாள். அழுகுரலை வைத்து, இல்லத்தை கண்டுபிடித்த வசுதேவர், திறந்திருந்த கதவுகளைக் கடந்து குழந்தையின் இருப்பிடத்தை அடைந்தார். திரிகுணாத்மிகாவான அம்பிகை, தாதியின் வடிவமும் தாங்கி, சின்னக் கண்ணனை வாங்கிக் கொண்டு, யசோதையின் பெண் குழந்தையை வசுதேவரிடம் சேர்ப்பித்தாள். வசுதேவர் மதுராவை அடைந்தார்.

தேவகிக்கு எட்டாவதாக பெண் குழந்தை பிறந்தது, கம்சனின் காதுகளை எட்டியது. 'ஒரு வேளை இது தேவர்களின் சூழ்ச்சியோ' என்று சந்தேகித்த அவன், பெண் குழந்தையின் கால்களைப் பற்றித் தூக்கி, அதைக் கொல்வதற்காக, கத்தியை ஓங்கினான்.

திடுமெனத் தோன்றிய பேரொளிப் பிரகாசம், சிறையை நிறைத்தது. குழந்தை வடிவம் நீங்கி, சக்ரம், சங்கம், கேடயம், கத்தி, அம்பு, வில், சூலம், தர்ஜனீ(அதட்டும் தோரணையில் ஆட்காட்டி விரல் இருப்பது) என்ற எட்டு மஹாயுதங்கள் விளங்கும் அழகிய திருக்கரங்கள் உடையவளாய், அஷ்டபுஜ மஹா துர்க்கையாகக் காட்சியளித்தாள் அன்னை. மிகுந்த கோபத்துடன், “மூடனே, உன்னைக் கொல்லப் போகிறவன், ஏற்கெனவே அவதரித்து விட்டான், உன் கொடுமைகளை நிறுத்தி, உன்னை  நீ காத்துக் கொள். உன்னை நானே கொன்றிருப்பேன். என் பாதங்களைப் பற்றியதால் விட்டு விட்டேன்” என்று கூறி விட்டு மறைந்தருளினாள். அதன் பின், மருத்கணங்களாகிய தேவர்களால் துதிக்கப்பட்டவளாக, பூமியில் கோயில் கொண்டருளினாள்.

 இவ்வாறு அம்பிகை ஸ்ரீகிருஷ்ணாவதாரத்திற்கு உதவியதற்கு, முன்பொரு முறை வசுதேவர், தம் குலகுருவான கர்கமஹரிஷியின் துணை கொண்டு பராசக்தியை,  பூஜித்ததே காரணம் என்று தேவி பாகவதம், ஸ்காந்த புராணம் போன்றவை தெரிவிக்கின்றன.

ஸ்ரீ துர்கா பிரபாவம், ஸ்ரீகிருஷ்ணருக்கு, மற்றொரு சமயத்திலும் துர்க்கை உதவியதை விவரிக்கின்றது.

சத்ராஜித் என்னும் மன்னன் சூரிய பகவானின் அருளால், 'ஸ்யமந்தகம்' என்னும் ரத்தினம் பெற்றான். அது ஒவ்வொரு நாளும், ஒருவன் தூக்கக் கூடிய சுமை எவ்வளவோ அதைப் போல் எட்டு மடங்கு பொன்னை அளிக்கும். ஸ்ரீகிருஷ்ணர் ஒரு முறை அதைக் கேட்டதற்கு, சத்ராஜித் தர மறுத்து விட்டான். ஒரு நாள் சத்ராஜித்தின் தம்பி ப்ரஸேனன் அதை அணிந்து கொண்டு வேட்டைக்குச் சென்றான். அவனை ஒரு சிங்கம் கொன்றது. அந்த சிங்கத்தை, ஜாம்பவான் என்னும் கரடி வேந்தன் கொன்று, ஸ்யமந்தகத்தை எடுத்துச் சென்றான்.

பிரஸேனனை, ரத்தினத்திற்காக ஸ்ரீகிருஷ்ணர் கொன்றிருக்கக் கூடும் என்ற அபவாதம் பரவியது. இதைச் சகிக்காத ஸ்ரீகிருஷ்ணர், படையுடன் பிரஸேனனைத் தேடிச் சென்றார். காட்டில், இறந்த பிரஸேனனையும், அவனருகில் இருக்கும் சிங்கத்தினையும் கண்டார். அருகிலிருக்கும் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, ஜாம்பவானின் இருப்பிடத்தை அடைந்தார். கரடியரசனான ஜாம்பவானின் குகைக்கு வெளியே யாதவ சேனையை நிறுத்தி விட்டு, தான் மட்டும் உள்ளே சென்றார். அங்கு இருந்த ஸ்யமந்தகத்தைக் கண்டு அதை எடுக்க முயலும் போது, ஜாம்பவானுக்கும் கிருஷ்ணருக்கும் கடும் போர் மூண்டது. 27 நாட்கள் போர் நீடித்தது. இறுதியில், ஜாம்பவானுக்கு, ஸ்ரீராமாவதாரத்தை நினைவுபடுத்தினார் கிருஷ்ணர். ஜாம்பவான் மகிழ்ந்து, ஸ்யமந்தகத்தை அவரிடம் ஒப்படைத்ததோடு, தன் மகள் ஜாம்பவதியையும் மணம் செய்து கொடுத்தான்.

இதற்கிடையில், ஜாம்பவானின் குகைக்குள் கிருஷ்ணர் சென்றதும் வெளியில் காத்திருந்த யாதவ சேனையினர், பன்னிரண்டு நாட்களாகியும் கிருஷ்ணர் திரும்பாததால், அவர் ஏதோ ஆபத்திற்கு உள்ளாகிவிட்டதாகக் கருதிக் கொண்டு, வசுதேவரை அடைந்து விவரம் கூறினர்.

வசுதேவர், துக்கத்தில் மூழ்கினார். அதன் பின் தேவரிஷியான நாரதரின் ஆலோசனைப்படி, ஒன்பது நாட்கள் துர்க்கா தேவியைப் பூஜித்தார். ஒன்பதாவது நாளின் நிறைவில், ஸ்ரீகிருஷ்ணர் ஜாம்பவதியுடனும், ஸ்யமந்தகத்துடனும் துவாரகையை அடைந்தார். 'மஹாமாயா ஸ்வரூபிணியான துர்கா தேவியின் வழிபாடே தன் புதல்வனை உயிருடன் அழைத்து வந்தது' என எண்ணி வசுதேவர் மகிழ்ந்தார். இவ்வாறு துர்கையின் பெருமை, ஸ்ரீதுர்கா பிரபாவத்தில் பேசப்படுகின்றது.

'யோக மாயை' என்றும் 'மஹாமாயை' என்றும் போற்றித் துதிக்கப்படும் ஸ்ரீதுர்க்கை,  முப்பெருந்தேவியரின் ஒருங்கிணைந்த வடிவம் என்று போற்றப்படுகின்றாள்.  

பராசக்தியான‌ அம்பிகை நான்கு வித சக்திகளாக இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. போக சக்தியாக பவானியும், குரோத சக்தியாக காளியும், போர்ச் சக்தியாக துர்க்கையும், புருஷ சக்தியாக விஷ்ணுவும் அருளுகிறார்கள். அதைப் போல், பராசக்தியிடமிருந்து உதித்த பஞ்ச பிரகிருதி சக்திகளுள் அந்தக‌ரணத்திற்கு அதிஷ்டாத்ரி தேவியாக இருப்பவள் துர்க்கா.

'துர்கை' என்ற பதத்தை சாக்த பஞ்சாக்ஷரமாகக் கூறுவதுண்டு (த,உ,ர,க,ஆ என்று பிரிக்கலாம்.   என்ற எழுத்து அசுரர்களின் நாசத்தையும், என்ற எழுத்து விக்ந நாசத்தையும், என்ற எழுத்து ரோக நாசத்தையும் என்ற எழுத்து பாப நாசத்தையும், என்ற எழுத்து பய நாசத்தையும் குறிக்கின்றது.).

ஸ்ரீ துர்கா சப்த ஸ்லோகி, ஸ்ரீ துர்கா ஸூக்தம் முதலான மந்திரங்களின் சக்தி அளவிடற்கரியது.

தேவி அனைத்து விதமான தவிர்க்க முடியாத துக்கங்களிலிருந்தும் தன்னை வணங்குபவரைக் காக்கின்றாள். முடிவில் பிறவிக் கடலினில் இருந்தும் தாண்டுவிக்கின்றாள்.

கோகுலாஷ்டமி தினத்தில், கண்ணனையும், கண்ணனின் தங்கையையும் பூஜித்து மகிழ்வோம்!!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

நன்றி: வல்லமை
 நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!!

6 கருத்துகள்:

  1. கோகுலாஷ்டமியன்று ஸ்ரீகிருஷ்ணனை மட்டும் எல்லோரும் மனதில் நினைக்கும் நேரத்தில், மாறுபாடாக இந்தக்கதையை பதிவாக்கித்தந்த்து மகிழ்ச்சியாக உள்ளது.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது பாராட்டுதல்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் என் பணிவான நன்றிகள் ஐயா!!

      நீக்கு

  2. enriched with so much of intricate details.

    happy to be here.

    subbu thatha.

    பதிலளிநீக்கு
  3. யோக மாயை' என்றும் 'மஹாமாயை' என்றும் போற்றித் துதிக்கப்படும் ஸ்ரீதுர்க்கை, முப்பெருந்தேவியரின் ஒருங்கிணைந்த வடிவம் என்று போற்றப்படுகின்றாள்.

    சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் அன்பான பாராட்டுதல்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள் அம்மா!.

      நீக்கு