புதன், 2 ஏப்ரல், 2014

ANNAIYE ARUL POZHIYA VAA!...அன்னையே அருள் பொழிய வா!..


அன்னையருள் பொங்கி வரும் அன்பதிலே தங்கி வரும்.
மன்னுயிர்கள் ஈன்றெடுத்து வாழ வைக்கும் பதம் அருளும்



பொன்னுலக வாழ்வருளும் புவி மீதில் அமைதி தரும்
இன்னருளின் மழை பொழிய இணையில்லா வாழ்வு வரும்.

தஞ்சமென்று வந்தவர்க்கு அன்னையவள் அமுதமடி!
வஞ்சனைகள் வந்தடையா  உள்ளமதில் அரசியடி!
கெஞ்சியவள் பதம் கேட்க, வந்தருளும் சக்தியடி!
கொஞ்சுகின்ற கிளியேந்தி நின்றிருக்கும் அழகுக்கொடி!

கவிமலர்கள் சொரிந்தவர் தம் கண்களிலே நின்றிருப்பாள்
கசிந்துருகும் அடியவர் தம் கருத்தினிலே நிறைந்திருப்பாள்
கலை பலவும் அவள் அருளே! புகழனைத்தும் அவள் செயலே!
கனிகளிலே சுவையவளே! பனிமலையில் வாழ்பவளே!!

பொற்பதங்கள் நடமாடும் சிற்சபையோன் துணைவியடி!
கற்பகமாய் வரமருளும் கருணைமிகு விழிகளடி!
வெற்பரசன் பெற்ற பேறு பேருலக நன்மையடி!
சொற்கடந்த பதமருளும் சொந்தமுள்ள சோதியடி!

கட்டித் தங்கம் என் மீனாள் காத்தருள்வாள் போற்றிடுவோம்!
தட்டிடாமல் அருள் சுரப்பாள் தாள் பணிந்து வணங்கிடுவோம்!
கொட்டிடுவாள் மழை போல தன் கருணை ஏத்திடுவோம்!
எட்டு வைத்து வந்திடுவாள்! எம் குறையைத் தீர்த்திடுவாள்!

(வசந்த நவராத்திரி சிறப்புப் பதிவு)...

பாடலை சாவேரி ராகத்தில் அருமையாகப் பாடி வலையேற்றிய உயர்திரு.சுப்புத் தாத்தாவுக்கு என் மனமார்ந்த நன்றி!!. பாடலைக் கேட்க, கீழே சொடுக்கவும்.

https://www.youtube.com/watch?v=NOlHsuoRhhM

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

4 கருத்துகள்:

  1. சிறப்புப் பதிவு வெகு சிறப்பு அம்மா...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. http://kuviyalgal.blogspot.com/2014/04/annaiye-arul-pozhiya-vaa.html
    listen please your excellent rendition
    in raag saaveri.
    subbu thatha.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றியும் வணக்கமும் தாத்தா.. மிக அருமையாகப் பாடி அளித்திருக்கிறீர்கள்.. பதிவில் சேர்த்து விட்டேன்..மீண்டும் தங்களுக்கு என் நன்றி.

      நீக்கு