ஞாயிறு, 25 மே, 2014

THANTHAIKULAMEE.. ORU SALUTE UNGALUKKU!..தந்தைக்குலமே... ஒரு சல்யூட் உங்களுக்கு!..


ஆகவே மக்களே!.. கோடை விடுமுறை முடிச்சு நான் வந்தே ஆச்!..கொளுத்துகிற வெயிலும் கொஞ்சம் மழையுமாய் மதுரை மதுரமா இருந்தது எப்பவும் போல.. மீனாட்சி திருக்கல்யாணம், கள்ளழகர் தரிசனம் எல்லாம் திவ்யமாய் ஆச்சு!..

எப்பவும் போல ஊர் மக்கள், 'எப்படி இருக்கே?.. எப்ப வந்தே?..இளைச்சு(???)ப் போய்ட்டியே (இது..இது...இதனால தான் எனக்கு மதுரை எப்பவுமே பிடிக்கும்!!), இப்படியாப்பட்ட விசாரிப்புகள், உபசரணைகள் அப்படின்னு ரொம்ப சந்தோஷமாப் போச்சு விடுமுறை!.. 

இந்த விடுமுறைல நான் பார்த்த, என்னைப் பாதித்த விஷயங்கள் நிறைய.. ஒண்ணொண்ணாப் பகிர்ந்துக்கறேன்..

முதல்ல இன்னைக்குத் தேதிக்கு சிந்தனைப் போக்குல வந்திருக்கற ஒரு மாற்றம்!.. இது என்னை ரொம்பவே யோசிக்க வச்சதால முதல்ல  வருது..அந்தக் காலத்துல இருந்து, (இருங்க.. ஓடீறப்படாது.. வர்றேன்ல..முக்கியமா தந்தைக்குலம் வெயிட்டீஸ்!!) இப்ப வரைக்கும் பொண்ணாப் பொறந்தாலே கஷ்டமோ கஷ்டம்.. பிறந்ததுலருந்து கடைசி வரைக்கும் எப்பவுமே பிரச்னை தான்.. ரிடையர்மெண்டே இல்லாத இல்ல அலுவல்கள்...எத்தனை செஞ்சாலும் யாராலும் மதிக்கப்படாத வாழ்க்கைமுறைன்னு எத்தனையோ பேர் எத்தனையோ விதங்கள்ல பெண்களின் சோகங்கள் பற்றிச் சொல்லிடாங்க.. சொல்லிட்டே இருக்காங்க இல்லையா..

இது பத்தி, பழைய காலத்துப் படம் 'சித்தி' ல 'காலமிது காலமிது'ன்னு ஒரு பாட்டுக் கூட வரும்!... உங்களுக்குத் தெரிஞ்சிருக்கலாம்... தெரியாதவங்களுக்காக  காணொளி பாத்துரலாம்..


இதுல இருந்து கொஞ்சம் மாறுதலான ஒரு சிந்தனைப் போக்கு இப்ப உருவாகியிருக்கு!..பெண் சம்பந்தமான கொடுமைகள் மத்ததெல்லாம் அதிகரிச்சிருக்குன்னு ஒத்துக்கிட்டாலும், அமைதியா, சமூகத்துக்கு நல்ல குடிமகனா, மனைவிக்கு உண்மையா வாழற பெரும்பாலான ஆண்களை மட்டும் இதுக்கு உதாரணமா எடுத்துக்கலாம்..

பீடிகை போதும்.. இப்ப மேட்டர்!.. ஒரு நாள், தெருவுல  நாலஞ்சு (டீன் ஏஜ்) வயசுப் பசங்க கூடிப் பேசி சிரிச்சிட்டிருந்தாங்க.. யாரையும் கிண்டல் பண்ணல..நிமிர்ந்து கூடப் பாக்கல.. மாடிப்படில உட்கார்ந்து, அவங்களுக்குள்ள‌ எதையோ பேசி உரக்க சிரிச்சிட்டே இருந்தாங்க..

அந்தப் பக்கம் போன பலருக்கு, அவங்க சத்தம் போடறது வித்தியாசமா பட்டிருக்கலாம்.. பக்கத்து மாநகராட்சி வண்டில குடிநீர் பிடிச்சிட்டிருந்த பெண்களின் பேச்சு இப்படி இருந்தது..

'ஆத்தி.. என்னா சிரிப்பு!.. கொஞ்சம் அமைதியா பேசுனாத்தே என்னாவாம்!.. இந்தக் காலத்துப் பசங்களே இப்படித்தே இருக்காக'

'ஏ.. என்னா சொல்லுற நீயி!.. பாவம் பசங்க.. இந்த வயசுல தே சிரிக்க முடியும்.. நாளக்கி வேல வெட்டிக்கி போயாச்சுன்னா எங்குட்டு இதெல்லா.. ஒரு கல்யாணங் கெட்டீட்டாகன்னா பொண்டாட்டியும் ஆத்தாக்காரியும் ஆளுக்கொரு பக்கமா புடுச்சு புடுங்கீருவாக... புள்ள குட்டி ஆயிருச்சுன்னா அதுகள வேற கவனீக்கணு.. அதுகளும் அது வேணு, இது வேணுன்னு புடுங்கி எடுக்கும்.. வயசாயி,ஒரு வளியா எல்லாத்தயு வளத்து நிமுத்தி வேல, வெட்டி, கலியாணங் காட்ச்சின்னு முடிச்சுப்புட்டு நிம்மதியா ஒக்காரலான்னா ஒடம்பு முடியாமப் போயிருது.. தல எளுத்து செரியில்லாம‌, ஊட்டுக்காரி முந்திக்கிட்டான்னா, மருமக கிட்ட சாகற வரக்கும் இம்சைப்படணு.. எங்குட்டு சிரிக்க பாவம்.. சிரிச்சிட்டுப் போகுதுக!..'

எப்படி?!!

முதலில் கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தாலும், கொஞ்சம் சிந்தித்தால் உண்மை தான் என்று தோன்றுகிறது..பெண்களுக்கு மட்டும் தான் பிரச்னைகளா?!.. சம்பாதித்த காசு ஒன்றைக்கூட தனக்கென்று எண்ணாமல், குடும்பத்திற்கு, பெற்றவர்களுக்கு, பிள்ளைகளுக்கு, மனைவிக்கு, சகோதர சகோதரிகளுக்கு, என்று தந்து விட்டு, இன்றும் எளிமையாக வாழும் நிஜ 'வாழ்நாள் சாதனையாளர்கள்' நம்மிடையே இருக்கிறார்களே!.. உங்கள் அருகில், உங்கள் தாத்தா, தந்தை, மாமனார், மூத்த சகோதரர், ஏன் நீங்களே கூட ஆலமரமாக இருந்து நிழல் பரப்பி இருக்கலாம்.. 

இன்றும் கூட அலுவலகத்தில் 'இன்க்ரிமெண்ட்' வந்தால்  'குழந்தைங்க பேரில் ஆர்.டி போடலாமா?' என்று யோசிக்கும் ஆண்களே அதிகம்!..

திருமணமே செய்து கொள்ளாமல், குடும்பத்தைக் காத்த எத்தனையோ ஆண்கள்  உண்டு தானே நம் சமூகத்தில்!..

வெளிநாடுகளில் வேலைக்குப் போய், குடும்பத்தின் வாழ்வுக்கென, தம் சுகங்களை எத்தனை ஆண்கள் தியாகம் செய்கிறார்கள்!

வாயைத் திறக்காமல், தான் செய்த, செய்யும் தியாகங்களைப் பற்றிய பிரக்ஞையே இல்லாமல், அடுத்தவருக்கேனும் அது இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கூட இல்லாமல், 'நம் கடமையைத் தானே செய்தோம்..செய்கிறோம்' என்ற உணர்வுடன் வளைய வரும் ஆண்மக்களால் தானே இவ்வுலகம், நம் குடும்ப அமைப்பு எல்லாம் வாழ்கிறது!.. 

ஆகவே தந்தைக்குலமே... ஒரு சல்யூட் உங்களுக்கு!..(இந்த மாதிரி பதிவெல்லாம் 'ஆண்கள் தின'த்துக்குத் தான் போடணுமான்ன.. எப்பவும் போடலாம்!)

இது பத்தி உங்க கருத்துக்களையும் பகிர்ந்துகிட்டீங்கன்னா சந்தோஷப்படுவேன்!

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

6 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. நிஜம் தான் டிடி சார்!.. ஆனா ஒருத்தர் பங்கு அதிகம் வெளிப்படுத்தப்படலையோங்கற ஆதங்கம் தான் இந்தப் பதிவு!.. மிக்க நன்றி தங்களுக்கு!

   நீக்கு
 2. நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!

  அருமையான ஆக்கம்..

  பதிலளிநீக்கு
 3. எங்கே காணவில்லையே என நினைத்தேன். கோடை துவங்கதுமே எங்கெங்கே போகலாம் என ஒரு கட்டுரை, கோடை முடிந்ததும் அனுபவ கட்டுரை. தாங்களின் பனியை சரியாக செய்கிறீர்கள்.

  நானும் ஒரு தந்தை என்பதால் என்னவோ எனக்காகவே எழுதியது போல் இருக்கிறது.

  சமயத்தில் நினைத்துக் கொள்வது தான் பிறந்தது சரி ஏன் வளர்ந்தோம் எல்லாமே பாரமா தெரியுதே என்பதாக, மனைவியையும் பிள்ளையையும் நினைக்கும் போது அந்த பாரம் இலகுவாகிவிடும். அதிலும் பெண் பிள்ளையாக இருந்தால் தூசிக்கு சமமாகி விடுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரொம்ப அழகாகச் சொல்லிட்டீங்க சகோதரரே!.. சந்தோஷமாக இருக்கிறது.... மிக்க நன்றி!

   நீக்கு