திங்கள், 4 ஆகஸ்ட், 2014

MUNNOOR SOTHTHU!...முன்னோர் சொத்து!.


அன்பர்களுக்கு வணக்கம்!..

இன்றைய தினம், வல்லமை இணைய இதழில், இந்த வாரத்துக்கான‌ வல்லமையாளராகத் தேர்வு செய்யப்பட்டிருக்காங்க திருமதி. காமாட்சி அவர்கள்.. 80 வயது கடந்து, மிக அருமையான விஷயங்களை அற்புதமாகச் சொல்லும் இவரது எழுத்து நடை எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகி விட்டது..இவரது வலைப்பூவிற்கு இங்கு சொடுக்குங்கள்!.

இவரது வலைப்பூவில், 'அன்னையர் தினத்தை' ஒட்டிய இவரது பதிவுகள் யாவும் அருமை.. அது எனக்கும் என் தாத்தா, பாட்டியின் நினைவை வரவழைத்து விட்டது.. 'முன்னோர் சொத்து' என்று பெயரிட்டிருக்கிறேனில்லையா!..நம் முன்னோர் சொத்து, பணம் காசு மட்டுமல்ல.. அவர்கள் நமக்குச் சொல்லிச் சென்ற புத்திமதிகள், நடைமுறைப்படுத்திக் காட்டிய பழக்கவழக்கங்கள், தெய்வபக்தி, முக்கியமாக, நொறுங்கிப் போன சமயங்களிலும் அதீத விவேகத்துடன் மீண்டெழுந்தது, எந்தச் சமயத்திலும் தெய்வத்தைக் குற்றம் சொல்லாத பண்பு, இன்னும்..இன்னும் எத்தனை எத்தனையோ விஷயங்கள் அவர்கள் நமக்குத் தந்து விட்டுப் போன சொத்து தான் என்பது என் அபிப்பிராயம்..

கொஞ்சம் கொஞ்சமாக, சமயம் கிடைக்கும் போதெல்லாம், தொடர் போல பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்..

இந்தப் பதிவில் என் சித்திப் பாட்டியைப் பற்றிப் பார்க்கலாம்.. நான் பிறந்தது, பெரிய கூட்டுக் குடும்பத்தில். அண்ணன், தம்பியான என் இரு தாத்தாக்களும் சேர்ந்து இருந்த குடும்பம் அது.. பிற்காலத்தில், இட வசதிக்காக, அடுத்தடுத்த வீடுகளுக்கு குடிபெயர்ந்த போதும், குடும்ப விழாக்கள், பண்டிகைகள், இருகுடும்பத்தாராலும் ஒன்றாகவே நடத்தப் பெற்றன... குடும்பத்தில் மூத்தவரான என் தாத்தா, பாட்டி, சின்னத்தாத்தா எல்லாரும் காலகதியான பிறகு, குடும்ப விழாக்கள், என் திருமணம் உட்பட, என் சித்திப் பாட்டியின் மேற்பார்வையிலேயே நடந்தன.

பாட்டியின் பெயர் பர்வதம்.. ஆனால் அவர் செய்யும் பொங்கல் ருசியினால், நாங்கள் அவருக்கு இட்ட பெயர்  'பொங்கப் பாட்டி'!.

அவர் வாய் மொழி மூலமும், பிறர் மூலமுமாக, எனக்குக் கேட்கக் கிடைத்த அவர் வாழ்க்கை, எனக்கு மிகப் பெரிய உந்து சக்தி.. கஷ்டம் என்ற வார்த்தையின் ஒவ்வொரு அக்ஷரமுமே அவரது வாழ்க்கை போலத் தோன்றும்.. ஆயினும் படிப்பறிவில்லாத அவரது விவேகம், வாழ்க்கையை எதிர்கொண்ட விதம் எல்லாம் அப்பப்பா!!...எழுத்தில் வடிக்க முடியாதவை!.

வறுமையான குடும்பத்தில் பிறந்தவருக்கு, வாழ்க்கைப்பட்ட இடம் கஷ்டமில்லாமல் அமைந்ததெனினும், அந்தக் கால குடும்பச் சூழலில், மாளாத வீட்டு வேலைகள், பிறந்தகத்துக் குறைவினால், உறவினரின் கடுகடுப்புகள், இரு ஆண்குழந்தைகளின் மரணம், எஞ்சிய மூன்று குழந்தைகளின் வளர்ப்பில் நேர்ந்த சிரமங்கள் என்று அவர் எதிர்கொண்ட பிரச்னைகள் பற்றிச் சொல்ல ஆரம்பித்தால், பெரிய நாவலே ஆகும்.. ஆனாலும் அவரது சரள சுபாவமும், எதையும் சுலபமாக எடுத்துக் கொண்டு, அயராமல் செயலாற்றும் திறனும் இன்றும் நான் நினைத்து வியப்பவை!.

சாம்பிளுக்கு ஒன்று..

நாத்தனார்களுக்கு அன்றைய காலத்தில் இருந்த இடமும் மதிப்பும் அபாரமானவை.. பாட்டிக்கு மூன்று நாத்தனார்கள்.. வீட்டோடு ஒரு புக்ககத்து அத்தை வேறே!.. பாட்டியின் வயதான காலத்திலும், நாத்தனார்கள் வீட்டுக்கு வந்தால், மிக நல்ல வரவேற்புதான். இந்த இடத்தில் சிலருக்கு, 'இதில் என்ன இருக்கு?' என்று தோன்றலாம்.. வீட்டுப் பெண்கள் வந்தால் உபசரிக்க வேண்டிய முறையே தனி... அந்தக் காலத்தில், பெண்கள் வந்தால், எத்தனை கஷ்டமிருந்தாலும், மூன்று வேளையும் விருந்திட வேண்டும். பணப்புழக்கம் அவ்வளவாக இராத அந்தக் காலத்தில் இது பெரிய விஷயம்.  எண்ணை குளியல் செய்ய வைத்து, பிடித்த உணவு வகைகள பார்த்துப் பார்த்து பரிமாறுவார்கள்.. அவர்கள் குழந்தைகளுக்குத் தான் முன்னுரிமை எல்லாவற்றிலும்....ஊருக்குப் போகும் போது 'தந்து விடும்' சாமான்கள் தனி லிஸ்ட்!.. அப்பளம், வடாம், வற்றல், அரிசி, பருப்பு மூட்டைகள், பக்ஷண வகைகள், மாப்பிள்ளை, பெண், குழந்தைகளுக்கு புது டிரஸ், கைப் பணம் என்று குறையில்லாது தந்து அனுப்புவார்கள்.. புகுந்த வீட்டில் நிறைய சாமான்களோடு போய் இறங்கினால் தான் நமக்கு மரியாதை என்ற எண்ணம் உண்டு.

வயதான போதும், பாட்டி, நாத்தனார்கள் வந்தால் எழுந்து நிற்பாள். அவர்கள் உட்கார்ந்ததும் தான் உட்காருவாள். என்ன காரமான வார்த்தை அவர்களிடமிருந்து வந்தாலும் , 'அதில்ல அம்மங்காரே..' என்று சாந்தமாக பதிலுரைப்பாள். மரியாதை செய்வதையும் குறைக்க மாட்டாள்.

ஒரு தடவை நான் பாட்டியிடம். 'இவங்க எல்லாம் ஒரு காலத்தில் உன்னைப் படுத்தினாங்க தான.. இப்பத் தான் தாத்தாவே போயாச்சே!..இவங்களுக்கு ஏன் இன்னமும் பயப்படணும்?' என,

'பயமில்லேடி பொண்ணே.. கடமை.. தாத்தா போனா என்ன?..உறவு போச்சோ?!..நம்ம ஆத்துக்காரருக்கு சின்ன வயசில உடம்பு கிடம்பு சரியில்லாம போயிருக்கும். இவா கிட்ட இருந்து கவனிச்சு சிசுரூஷை செஞ்சிருப்பா..இப்படி எத்தனையோ உறவுக்காரா கிட்ட இருந்து காப்பாத்தி வளத்ததால தான, அவா வளந்து நிமு(மிர்)ந்து நம்ம கழுத்துல தாலி கட்டினா?!.. அந்த நன்றி வேண்டாமோ?!' என்று நீளமாக லெக்சர் கொடுத்தார்..(இன்னைக்கு  நாட்டு நிலவரத்த‌  நினைக்காதீங்க ப்ளீஸ்..)

தீபாவளியானால், டின் டினாக பக்ஷணங்கள் செய்து விநியோகிக்கும் பாட்டி, அன்று தான் மட்டும் புதுசு உடுத்த மாட்டார்.. காரணம் கேட்டால், 'காரியம் இருக்கு பாரு.. எல்லாம் முடிஞ்சது கட்டிக்கிறேன்' என்று சொல்லிவிடுவார்.. இதன் காரணம் வருத்தமானது. அவரது ஆண் குழந்தைகளுள் ஒன்று, ஒரு வயதாயிருக்கும் போது, தீபாவளியன்று மறைந்து விட்டதாம். இது எனக்கு பின்னாளில் என் அம்மா சொல்லித் தான் தெரியும்.. 

உடம்பு  முடிந்தவரை, அதிகாலை  மூன்றரை மணிக்கே எழுந்து, குளித்து,  ஸ்லோகங்கள் சொல்லியபடி சமைத்து, வருவோர் போவாருக்கு எல்லாம் வயிறு வாடாமல் உணவளித்து, பண்டிகை பருவங்களை சலிக்காமல் கொண்டாடி, என்று வாழ்ந்தவர்.. இன்று யோசிக்கும் போது, இன்று நான் கொண்டிருக்கும் நல்ல பழக்க வழக்கங்களில் பல அவர் அறிவுரையிலேயே உண்டானது என்று புரிகிறது..பத்து வயதிலேயே என் சொந்தப் பாட்டி மறைந்ததால், சித்திப் பாட்டி மிக அருமையாக அந்த இடத்தை இட்டு நிரப்பியிருப்பது புரிகிறது..

ஒவ்வொரு கஷ்டம் வரும் போதும், 'படைச்சவன் என்ன பண்ணுவான்?!..பாவம் நம்மளது தானே!' என்பார்.. இப்போது யோசிக்கிறேன்.. என்ன ஆழமான வார்த்தை அது.. இப்போதும் தோன்றாத் துணையாக அவர் அருகிருப்பது போலவே உணர்கிறேன்.. அவரது தயாரிப்பில் சுவை சேர்ந்த பலகாரங்களை நான் சமைக்கும் போது அவர் கிட்ட இருந்து சொல்லித் தருவது போலவே தோன்றுகிறது..

ரொம்ப நீளமாகி விட்டது என்று நினைக்கிறேன்.. விரைவில் மீண்டும் சந்திப்போம்!..

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

6 கருத்துகள்:

 1. , 'படைச்சவன் என்ன பண்ணுவான்?!..பாவம் நம்மளது தானே!'
  ஆழ்மான வார்த்தை..

  வல்லமையாள்ருக்கு வாழ்த்துகள்.!

  பதிலளிநீக்கு
 2. படைத்தவன் என்ன பண்ணுவான் பாவம் நம்மளதுதானே? இது வயதானகாலத்தில் உள்ள யாவருக்கும் பொருத்தமான மொழி என்று தோன்றுகிறது.

  என்னைப்பற்றி சிலாகித்து எழுதியிருக்கிறீர்கள். மிக்க நன்றி. ஸ்ரீமதி இராஜராஜேஸ்வரிக்கும் நன்றி.
  உங்கள் பாட்டியின் கதையும் ஆரம்பமே அருமை. தொடருங்கள்.
  அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் முதல் வருகைக்கும் அன்புக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றி!.. அற்புதமான எழுத்து தங்களுடையது.. உங்கள் ஆசிகளையும் வழிகாட்டுதலையும் எப்போதும் வேண்டுகிறேன்..

   நீக்கு
 3. நொருங்கிப்போன சமயத்திலும் தெய்வத்தை குற்றம் சொல்லக்கூடாது என்ற முதியோர்களின் அறிவுரையாய் வந்த தாங்களின் கருத்து எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

  பதிலளிநீக்கு