வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

THIRUMAGAL EZHUNTHARULGA!.....திருமகள் எழுந்தருள்க!!!....


இன்று (8/8/2014) வரலக்ஷ்மி விரதம்!.

மதிமுகம் ஒளிர்ந்திட மறைகளும் துதித்திட மங்கை எழுந்தருள்க!
கதியுனை நம்பினேன் கருணையை தந்திட கமலி எழுந்தருள்க!

விதியினை மாற்றிடும் திருவடி வேண்டினேன் தேவி எழுந்தருள்க!
பதிதிரு மார்பினை அகலா தேவி என் பக்கத்தில் எழுந்தருள்க!

திருவுரு காட்டியே தீமைகள் போக்கியே திருமகள் எழுந்தருள்க!
ஒருவுரு நீயேன உணர்ந்திடும் அடியவர் உள்ளத்தில் எழுந்தருள்க!
கருவுரு வாகின நாள்முதல் தாயாய் காப்பவள் எழுந்தருள்க!
அருவுரு வாகவே அண்டத்தைக் காப்பவள் அகத்தில் எழுந்தருள்க!

பொன்னிலும் பூவிலும் பொலிவிலும் நிறைபவள் என்னிலும் எழுந்தருள்க!
உன்னையே துதித்திட்டேன் உயர்நலம் காத்திட உடனே எழுந்தருள்க!
இன்சொல்லில் மகிழ்பவள் இனிமையைத் தருபவள் இங்கே எழுந்தருள்க!
தன்னலம் நினையார் தனமெல்லாம் பெறவே தாயே எழுந்தருள்க!

தீபத்தில் ஒளியினில் தினம் வரும் லக்ஷ்மி திசையெல்லாம் எழுந்தருள்க!
தூபத்தின் மணத்தினில் துலங்கிடும் தேவி துணையே எழுந்தருள்க!
கோபத்தை மாற்றியே குணத்தினை நல்கிட குலமகள் எழுந்தருள்க!
பாபத்தை போக்கியே பழவினை அறுத்திடும் பார்க்கவி எழுந்தருள்க!

பாற்கடல் தந்திட்ட பத்மையும் நீயே பாவினில் எழுந்தருள்க!
போற்றியே துதித்தோம் பொன்மகளே நீ பொலிவுடன் எழுந்தருள்க!
ஏற்றிடுவோம் நல் தீபங்கள் எங்கும் இல்லம் எழுந்தருள்க்!
மாற்றிடுவாய் எம் விதியையும் அம்மா!.. மலர்மகள் எழுந்தருள்க!.

நல்லன நினைத்து நாளும் உயர்வோம்!

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.

படத்துக்கு நன்றி: கூகுள் படங்கள்.

8 கருத்துகள்:

 1. தாங்கள் தேர்ந்தெடுத்துக் கொடுத்துள்ள அம்பாள் படம் வெகு அழகு. எழுந்தருள்க ! பாடலும் அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 2. எழுந்தருளும் திருமகள் மனம் நிரைவு பெற வைத்தாள்.பாராட்டுக்கள்.!

  பதிலளிநீக்கு
 3. பாடலும்,படமும் மிக்க அழகு. அருமையாக ிருக்கு அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பாகக் கருத்துரைத்ததற்கு ரொம்ப நன்றிம்மா!...சமயம் கிடைக்கும் போது, என் இன்னொரு வலைப்பூவுக்கும் (www.aalosanai.blogspot.com) வருகை தாருங்கள்.

   நீக்கு